Technology

இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் மற்றும் செமிகண்டக்டர் துறையின் இலக்குகளை அடைய ஒருங்கிணைந்த அணுகுமுறை

Posted On: 23 SEP 2026 11:38AM

இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் மற்றும் செமிகண்டக்டர் துறை ஒரு புதிய வரலாற்றுப் பரிணாமத்தை எட்டியுள்ளது. பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்த்து, உற்பத்தித் திறன் தொடர்ந்து விரிவாக்கப்படுவது, உலகளாவிய முன்னணி நிறுவனங்கள் இந்தியாவில் தங்களின் தொழிலை விரிவுபடுத்துவது ஆகியவற்றின் மூலம், இத்துறை முன்னெப்போதும் இல்லாத வகையில் துரிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்த உற்பத்திச் சூழல் வேகமாக விரிவடைந்து வரும் நிலையில், தொழில்துறை அமைப்புகளுக்கிடையே வலுவான, ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தை தொழில்துறை வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அடுத்த கட்ட வளர்ச்சியை ஒரே ஒரு துறை மட்டுமே முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதே தொழில்துறையினர் விடுக்கும் முக்கியச் செய்தியாகும். செமிகண்டக்டர்கள், மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, உதிரிபாகங்கள், மூலப்பொருட்கள், வடிவமைப்பு, பேக்கேஜிங், பயன்பாட்டுச் சாதனங்கள் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாக மாறி வருகின்றன. எனவே, எதிர்கால வளர்ச்சியானது வெறும் தொழில்நுட்பத் திறன்கள், நவீன உள்கட்டமைப்பை மட்டுமே சார்ந்திராமல், தொழில்துறையினர் இணைந்து செயல்படும் கூட்டுத் திறனையும் சார்ந்தே உள்ளது.

செமிகான் இந்தியா 2026 மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற ‘இந்தியாவின் தேசிய செயல்திட்டத்தை முன்னெடுக்கும் தொழில்துறைக் கூட்டமைப்புகள்’ என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் இந்த ஒருங்கிணைந்த செயல்பாட்டின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்திய செமிகண்டக்டர் இயக்கத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு அமிதேஷ் குமார் சின்ஹா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், முன்னணி தொழில்துறை கூட்டமைப்புகளின் மூத்த பிரதிநிதிகள் பங்கேற்று, ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு இந்தியாவின் செமிகண்டக்டர், மின்னணுப் பொருட்கள் துறையின் இலக்குகளை எவ்வாறு விரைவுபடுத்தும் என்பது குறித்து விரிவாக விவாதித்தனர். பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கங்கள் தனித்தனியாகச் செயல்பட்டாலும், இந்தியாவின் மின்னணுப் பொருட்கள், செமிகண்டக்டர் துறையை சர்வதேச அளவில் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவது என்ற பொதுவான இலக்கை நோக்கியே அனைவரும் பயணிப்பதற்கான, தொழில்துறையின் ஒருங்கிணைந்த அணுகுமுறை குறித்த ஒருமித்த கருத்து இக்கூட்டத்தில் உருவானது.

தொழில்நுட்பத் துறைகளுக்கிடையேயான வளர்ந்து வரும் ஒருங்கிணைப்பு குறித்து இக்குழு விவாதத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. செமி அமைப்பின் தலைமைச் செயல் அதிகாரி திரு அஜித் மனோச்சா, இந்திய செல்லுலார் எலக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் தலைவர் திரு பங்கஜ் மோஹிந்த்ரூ, எல்சினா பொது இயக்குநர் திரு ராஜூ கோயல், மைத் தலைமை இயக்குநர் கர்னல் சுஹைல் ஜைதி, செமி இந்தியாவின் தலைவர் திரு அசோக் சாந்தக் ஆகியோர் இக்குழுவில் பங்கேற்றனர். இன்றைய காலகட்டத்தில் மைக்ரோசிப்கள் தனித்து இயங்காமல் பல்வேறு சாதனங்கள், அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலமே மதிப்பு வாய்ந்தவையாக மாறுகின்றன. நவீன சிப் உற்பத்தித் தொழில்நுட்பம் அதற்கான துணைப் பொருட்கள், உபகரணங்களை நம்பியுள்ளதுடன், உற்பத்தித் துறையானது பேக்கேஜிங், சோதனை, திறன்கள் ஆகியவற்றை முழுமையாகச் சார்ந்துள்ளது. இவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடையதாக இருப்பதன் மூலம், மதிப்புச் சங்கிலி முழுவதும் வலுவான பிணைப்பும், முறையான கூட்டுறவும் அவசியமாகிறது.

மாநாடுகள், தனிப்பட்ட நிகழ்வுகளைத் தாண்டி தொடர்ச்சியான தொழில்துறைத் தொடர்புகளைக் கொண்டிருக்கவேண்டியதன் அவசியம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ச்சியான கலந்துரையாடல்களுக்கும், பல்வேறு சங்கங்களிடையே ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கவும், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் கூட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் ஒரு நிரந்தர சமூகக் கட்டமைப்பை உருவாக்குவது குறித்து தொழில்துறைத் தலைவர்கள் பரிசீலித்தனர். தற்போதுள்ள பிரத்யேக சங்கங்களின் தனித்துவமான பணிகளை மாற்றுவதற்காக அல்லாமல், அவற்றை மேலும் வலுப்படுத்தும் வகையில், துறை சார்ந்த பொதுவான பிரச்சனைகளில் அனைவரும் இணைந்து பணியாற்ற ஒரு பொதுவான தளத்தை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். உற்பத்தி ஆலைகளை நிறுவுவதோடு மட்டுமல்லாமல், ஒரு முழுமையான செமிகண்டக்டர் உற்பத்திச் சூழலை உருவாக்குவதை நோக்கி இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை நகர்ந்து வருவதால், இத்தகைய நிறுவன ஒத்துழைப்பு ஒரு வியூக ரீதியான தேவையாக உருவெடுத்துள்ளது.

வடிவமைப்பு, உற்பத்தி, பேக்கேஜிங், மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, தொழில்நுட்பத் தீர்வுகள் ஆகியவை இணைந்து வலுவான, மீள்திறன் கொண்ட உற்பத்திச் சூழலை உருவாக்கும், சிலிக்கான் முதல் அமைப்புகள் வரை என்ற பார்வையை உறுதிப்படுத்தும் விதமாக இக்கலந்துரையாடல் அமைந்தது. இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி இலக்குகளை முன்னெடுப்பதில் மூலதன முதலீடுகள், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு இணையாகத் துறைசார் ஒத்துழைப்பும் அடுத்த கட்ட வளர்ச்சியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருக்கும் என்று பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டனர். இந்த உத்வேகத்திற்குச் சான்றாக, செமிகான் இந்தியா 2026 நிகழ்வில் சுமார் 300 சர்வதேச நிறுவனங்கள் உட்பட 600-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு, இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் மற்றும் செமிகண்டக்டர் உற்பத்திச்சூழல் மீதான உலகளாவிய நம்பிக்கையை தெரிவித்தனர். மேலும் 52 நாடுகளின் பிரதிநிதித்துவம், 6 சர்வதேச அரங்குகள், 12 மாநில அரங்குகள், 40,000 பார்வையாளர்கள், 150-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில் உற்பத்தி, வடிவமைப்பு, பேக்கேஜிங், செயற்கை நுண்ணறிவு, ஆராய்ச்சி & மேம்பாடு, தளவாடங்கள், திறன் மேம்பாடு ஆகிய துறைகளில் 56 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், முக்கியத் திட்டங்களும் அறிவிக்கப்பட்டன.

இந்த மாற்றத்தில் மத்திய அரசின் தொடர் ஆதரவு மிக முக்கியப் பங்கு வகித்து வருகிறது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள், இந்திய செமிகண்டக்டர் இயக்கம் போன்ற முன்முயற்சிகள் மூலம் உள்நாட்டுத் திறன்கள் மேம்படுத்தப்பட்டு, வலுவான உற்பத்தி சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது. செமிகான் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு இதுவரை 12 செமிகண்டக்டர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளதுடன், 2026-ம் ஆண்டு செப்டம்பர் நிலவரப்படி 5 வணிக ரீதியிலான செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகள் வெற்றிகரமாகத் தங்களின் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளன. இவை அனைத்தும் இந்தியாவின் செமிகண்டக்டர் பயணம் என்பது தொழிற்சாலைகளை அமைப்பதோடு நின்றுவிடாமல், தொழில்துறை நிறுவனங்கள், அதிநவீனத் தொழில்நுட்பங்களை ஒன்றிணைக்கும் பாலமாகத் திகழ்வதை உறுதிப்படுத்துகின்றன. இத்தகைய பரஸ்பர கூட்டுறவே செமிகண்டக்டர் துறையில் நாட்டின் அடுத்த கட்ட வளர்ச்சியின் அடித்தளமாகத் திகழ்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=160102&ModuleId=2&reg=3&lang=1

****

TV/PD

(Features ID: 160239) आगंतुक पटल : 33
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Bengali , Assamese , Kannada , Malayalam