Infrastructure

தூய்மை இந்தியா இயக்கம்: குப்பைக் கிடங்குகளை அகற்றி, நிலங்களை மீட்டெடுத்தல்

3.66 கோடி மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றம்

Posted On: 21 SEP 2026 5:11PM

நகர்ப்புற இந்தியாவின் தூய்மையான ஒவ்வொரு தெருவுக்குப் பின்பும், நகரங்களில் உருவாகும் கழிவுகளை நிர்வகிக்கும் உள்கட்டமைப்பு, பல்வேறு அமைப்புகளின் தொடர் செயல்பாடுகள் உள்ளன. வீடுகள், சந்தைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்கள் ஆகியவற்றிலிருந்து நகரங்களில் பெருமளவு கழிவுகள் உருவாகின்றன. இவற்றில் பெரும்பாலானவை குப்பைக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, காலப்போக்கில் அவை கழிவுக் குவியல்களாக மாறுகின்றன. இந்த சவாலை எதிர்கொள்ளும் வகையில், நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் (SBM-U) 2014 அக்டோபரில் தொடங்கப்பட்டது.

கடந்த 12 ஆண்டுகளில், நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் (SBM-U) அடிப்படை தூய்மை வசதிகளைக் கடந்து பல்வேறு உள்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. தற்போது நகர்ப்புறக் கழிவுகளை முறையாக நிர்வகித்து, மக்கள் வசிக்கவும், பணியாற்றவும் ஏற்ற சிறந்த இடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது. 2021 அக்டோபரில் தொடங்கப்பட்ட நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் (SBM-U) 2.0-ன் கீழ், நாடு முழுவதும் உள்ள நகரங்கள் பழைய குப்பைக் கிடங்குகளை பயனுள்ள, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை கொண்ட இடங்களாக மாற்றி வருகின்றன. 2025-ம் ஆண்டில் 3.66 கோடி மெட்ரிக் டன் கழிவுகள் மறுசீரமைக்கப்பட்டிருப்பதன் மூலம் வெளிப்படுகிறது. 29 மாநிலங்களைச் சேர்ந்த 459 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் குப்பைக் கிடங்குகளை முழுமையாக மறுசீரமைத்துள்ளன. இந்த இயக்கத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ‘குப்பைக் கிடங்குகள் இல்லாமை இலக்கு’ முன்முயற்சி, மாநிலங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள குப்பைக் கிடங்குகளை அறிவியல் முறையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மறுசீரமைப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் நகரில், ஒருகாலத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் நகராட்சி கழிவுகள் மலைபோல் குவிந்து கிடந்தன. 7 ஆண்டுகளாக அந்த இடம் நகரின் முக்கிய கழிவுகளை அகற்றும் பகுதியாக பயன்படுத்தப்பட்டது. கழிவுகள் தொடர்ந்து குவிந்ததால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதுடன், அருகில் வசித்த மக்களுக்கும் அசௌகரியமான சூழல் ஏற்பட்டது. அந்த இடத்தில் உயிரியல் முறையில் அறிவியல் அடிப்படையிலான கழிவு மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் குவிந்திருந்த கழிவிலிருந்து பெறப்படும் எரிபொருள், மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள், பயன்பாடற்ற பொருட்கள் எனப் பிரிக்கப்பட்டன. படிப்படியாக, கழிவுகள் குவிந்திருந்த மலைப்பகுதி மீட்டெடுக்கப்பட்ட நிலமாக மாறியது.

படம் 1. கோரக்பூரில் உள்ள குப்பைக்கிடங்கு

இந்த மாற்றம் குவிந்திருந்த கழிவுகளை அகற்றுவதோடு முடிவடையவில்லை. முழுமையான 40 ஏக்கர் பரப்பும் ‘கழிவிலிருந்து செல்வம்’ ராப்தி சுற்றுச்சூழல் பூங்காவாக உருவாக்கப்பட்டது. இந்த இடத்தில் பசுமையான புல்வெளிகள், நடைப்பயிற்சிக்கான பாதைகள், ஓட்டப்பயிற்சி பாதைகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளி உடற்பயிற்சிக் கூடம், யோகா பகுதி, சூரிய மின்விளக்குகள், நீர் பாதுகாப்புக் கட்டமைப்புகள் ஆகியவை பொதுமக்களின் பயன்பாட்டை விரிவுபடுத்தியுள்ளன. உணவு வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவுப் பொருட்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு அமைப்புகள், வளங்களை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகின்றன. இந்தப் பூங்கா உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. பெண்கள் தலைமையிலான ‘சக்தி கி ரசோய்’ சுயஉதவிக் குழு இங்குள்ள உணவகத்தை நடத்தி வருகிறது. தற்போது இந்தப் பூங்காவுக்கு தினமும் சுமார் 500 பேர் வருகை தருகின்றனர். ஒருகாலத்தில், குவிந்திருந்த கழிவுகளால் அடையாளப்படுத்தப்பட்ட இடம், இன்று பொழுதுபோக்கு, சமூகத்தின் நல்வாழ்வுக்கான பொது இடமாக மாறியுள்ளது.

தேசிய தலைநகர் பிராந்தியத்தில், இதே போன்ற மற்றொரு பெரிய கழிவுக் குவியல் படிப்படியாக குறைந்து வருகிறது. சுமார் 70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள பல்ஸ்வா குப்பைக் கிடங்கில், ஒருகாலத்தில் பெருமளவு கழிவுகள் குவிந்திருந்தன. 2022 ஜூலை முதல் இங்கு உயிரி முறையில் கழிவுகள் அகற்றுவதற்கான பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

படம் 2. பல்ஸ்வாவில் உள்ள குப்பைக் கிடங்கு

2025 செப்டம்பரில் நாடு முழுவதும் நடைபெற்ற தூய்மையே சேவை இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி பல்ஸ்வாவில் நடைபெற்றது. அதன் பின்னர் இந்தப் பகுதியின் கழிவு மறுசீரமைப்புப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. 2025 நவம்பரில் குப்பைக் கிடங்கு மறுசீரமைப்பு விரைவாக்கத் திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் எஞ்சியுள்ள குப்பைக் கிடங்குகளின் மறுசீரமைப்புப் பணிகளை விரைவுபடுத்தும் வகையில், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் பல்ஸ்வாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2026 மே மாதத்திற்குள் இந்தப் பகுதியின் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு மீட்டெடுக்கப்பட்டது. 2026 ஜூலை 31-ம் தேதி நிலவரப்படி, 99.07 லட்சம் மெட்ரிக் டன் பழைய கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.

மகாராஷ்டிராவின் நாக்பூரில், பந்தேவாடி குப்பைக் கிடங்கு தற்போது கழிவு மேலாண்மை மையமாக மாற்றப்பட்டு வருகிறது. 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும், வேகமாக வளர்ந்து வரும் நகரமான நாக்பூரில் வீடுகள், சந்தைகள், நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பெருமளவு கழிவுகள் உருவாகின்றன. இவற்றில் கணிசமான பகுதி பந்தேவாடி குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டதால், காலப்போக்கில் அது மிகப்பெரிய கழிவுக் குவியலாக மாறியது.

படம் 3. பந்தேவாடி குப்பை கிடங்கு

திறந்தவெளியில் கழிவுகளைக் கொட்டும் நடைமுறையிலிருந்து அறிவியல் அடிப்படையிலான கழிவு மேலாண்மைக்கு இந்நகரம் மாறியது. கழிவுகள் தோண்டி எடுக்கப்பட்டு, முறையாக வகைப்படுத்தப்பட்டு, 10 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. இதன் மூலம் கழிவுகள் கொட்டப்பட்டிருந்த நகர்ப்புற நிலப்பரப்பின் கணிசமான பகுதி மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் நிலத்தை மீட்டெடுப்பதுடன் நிறைவடையவில்லை. தற்போது இந்த இடம் ஒருங்கிணைந்த நகராட்சி திடக்கழிவு மேலாண்மை மையமாக செயல்படுகிறது. இங்கு பல்வேறு பொருட்கள் மீட்டெடுக்கப்படுகின்றன. கழிவுகள் உரமாக்கப்படுகின்றன. கழிவுகளிலிருந்து எரிபொருளும் தயாரிக்கப்படுகிறது. நவீன இயந்திரங்கள் மூலம் கழிவுகள் கையாளப்படுகின்றன. நிகழ்நேர கண்காணிப்பு, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. மாசுக் கட்டுப்பாடு, கழிவுநீர் கசிவு சுத்திகரிப்பு ஆகியவை சுற்றுப்புறத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. இத்தகைய நடவடிக்கைகளால், சுற்றுப்புற பகுதிகளில் காற்று, நீர், மண் தரம் மேம்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் உடல்நலத்திலும் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. உரமாக்கும் ஆலைகள், பதப்படுத்தும் அலகுகள், கட்டுமான மற்றும் கட்டட இடிபாடுகளின் கழிவு மேலாண்மை அமைப்புகள் ஆகியவையும் நகரில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு கழிவு இனி சுமையாக பார்க்கப்படுவதில்லை; மீட்டெடுக்கக்கூடிய வளமாக பார்க்கப்படுகிறது.

கர்நாடகாவின் ராய்ச்சூரில், யகலஸ்புரா குப்பைக் கிடங்கின் 35 ஏக்கர் நிலப்பரப்பு, அறிவியல் முறையில் கழிவுகள் அகற்றும் நடவடிக்கையின் மூலம் மாற்றமடைந்து வருகிறது. சுமார் 62,252 மெட்ரிக் டன் கழிவுகள் பதப்படுத்தப்பட்டு, கிட்டத்தட்ட 22 ஏக்கர் நகர்ப்புற நிலம் மீட்டெடுக்கப்பட்டுள்ளது.

படம் 4. யகலஸ்புரா குப்பைக் கிடங்கு

மீட்டெடுக்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதி நிலையான பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் சுமார் 5 முதல் 7 ஏக்கர் பரப்பளவில் மியாவாக்கி வனம் உருவாக்கப்பட்டுள்ளது. குப்பைக் கிடங்காக இருந்த நிலப்பரப்பை செழிப்பான, சுற்றுச்சூழல் வளம் மிக்க பகுதியாக மாற்ற முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. பசுமைப் பரப்பை விரிவுபடுத்தவும், உயிரினப் பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும், மண்ணை மீட்டெடுக்கவும் சுமார் 60,000 மூங்கில் கன்றுகள், உள்ளூர் தாவரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. 2026 ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினத்தன்று இந்த மரக்கன்று நடும் பணி தொடங்கப்பட்டது. ‘நச்சுக் கழிவிலிருந்து சுற்றுச்சூழல் வளம்’ என்ற கருத்தின் அடிப்படையில் யகலஸ்புரா மாற்றமடைந்துள்ளது. மீட்டெடுக்கப்பட்ட குப்பைக் கிடங்கு நிலத்தை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்கும், நிலையான நகர்ப்புற வளர்ச்சிக்கும் பயன்படுத்த முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

தூய்மைப் பணியைக் கடந்த மக்கள் இயக்கம்

மீட்டெடுக்கப்பட்ட குப்பைக் கிடங்கு என்பது வெறும் நிலத்தை மீட்டெடுத்தல் என்ற அளவிலான நடவடிக்கை மட்டுமல்ல. நகரங்களில் உருவாகும் கழிவுகளை நிர்வகிப்பதில் ஏற்பட்டுவரும் அணுகுமுறை மாற்றத்தையும் இது பிரதிபலிக்கிறது. கோரக்பூர், தில்லி, நாக்பூர், ராய்ச்சூர் ஆகிய நகரங்களில் ஒரே மாதிரியான மாற்றம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நிலங்களில் மலை போலக் குவிந்து கிடக்கும் குப்பைகள் தோண்டி எடுக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய நிலமாக மாற்றப்படுகின்றன.

இத்தகைய பணிகளை இயந்திரங்களும் பதப்படுத்தும் ஆலைகளும் மட்டுமே தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியாது. நகர்ப்புற திடக்கழிவு மேலாண்மை செயல்திட்டங்கள், நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இணையதளத்தில் பணிகள் கண்காணிக்கப்படுதல், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் தூய்மைக் கணக்கெடுப்பு ஆகிய பணிகள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்கின்றன. உள்கட்டமைப்பு, நிறுவன அமைப்புகள் ஆகியவை இணைந்து செயல்படும்போது, ஒருமுறை மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணி நீடித்த செயல்முறையாக மாறுகிறது. நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கம் (SBM-U), தூய்மையை மையமாகக் கொண்டு தொடங்கப்பட்டாலும், தற்போது அதனைக் கடந்து நகரங்களின் நிலப்பரப்பை மீட்டெடுத்தல், சுற்றுச்சூழலை மீட்டெடுத்தல், மக்கள் வசிக்கும், பணியாற்றும் வகையில் தூய்மையான பொது இடங்களை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கி விரிவடைந்துள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=160060&ModuleId=2&reg=3&lang=1

 

****

TV/PD

(Features ID: 160238) आगंतुक पटल : 19
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Kannada