Rural Prosperity
தூய்மையை மக்கள் இயக்கமாக மாற்றிய தூய்மை இந்தியா இயக்கம்
10 கோடி தனிநபர் கழிப்பறைகள் கட்டப்பட்டு சாதனை
Posted On:
20 SEP 2026 11:58AM
தூய்மையான கிராமங்கள் என்பது நாடு முழுவதும் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டிய, வளர்ச்சி சார்ந்த அம்சமாக இருந்து வந்தது. 2014-ல் தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டபோது, தூய்மைக்கான வசதிகள் 39 சதவீத அளவுக்கே இருந்தது. 2019-க்குள் கிராமப்புற இந்தியா 100 சதவீத தூய்மை வசதியை எட்டியது. 2014 முதல் 2019 வரை 36 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 10.28 கோடிக்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 2019-ல் கிராமப்புற இந்தியா ‘திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்தல் இல்லாத பகுதியாக’ அறிவிக்கப்பட்டது. இதனால், இந்தியாவின் தூய்மை நிலை புதிய கட்டத்தை எட்டியது. வீடுகளில் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துவதில் இருந்த கவனம், தூய்மை நடைமுறைகளை நிலைத்திருக்கச் செய்வது, கிராம அளவில் கழிவுகள் மேலாண்மை ஆகியவற்றை நோக்கி விரிவடைந்தது. இதுவே கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் இரண்டாவது கட்டத்தின் முக்கிய நோக்கமாக அமைந்தது.

தற்போது இதன் தாக்கம் இந்தியாவின் கிராமங்களில் தெளிவாகத் தெரிகிறது. திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்தல் இல்லாத கிராமங்கள் தங்களது நிலையைத் தொடர்ந்து பராமரிப்பதுடன், திடக் கழிவு, திரவக் கழிவு மேலாண்மையையும் செயல்படுத்தி தூய்மையைப் பராமரிக்கின்றன. இக்கிராமங்கள் முன்னேற்றத்தின் அடிப்படையில் மூன்று நிலைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. 17 செப்டம்பர் 2026 நிலவரப்படி, இந்தியாவில் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்தல் இல்லாத 5.69 லட்சம் கிராமங்கள் உள்ளன. இதில் 5.25 லட்சம் கிராமங்கள் முன்மாதிரி நிலையை எட்டியுள்ளன. மேலும் 5.38 லட்சம் கிராமங்களில் திடக் கழிவு மேலாண்மை வசதிகளும், 5.65 லட்சம் கிராமங்களில் திரவக் கழிவு மேலாண்மை அமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 582 மாவட்டங்களில் 1,314 கோபர்தன் உயிரி எரிவாயு உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

தூய்மை என்பது கட்டமைப்புகளை உருவாக்குவதுடன் நின்றுவிடுவதில்லை. கழிப்பறைகளைப் பயன்படுத்துதல், பராமரித்தல், கழிவுகளை முறையாக அகற்றுதல், ஈரக் கழிவுகளை உரக்குழிகள் அல்லது உயிரி எரிவாயு ஆலைகள் மூலம் மேலாண்மை செய்தல், கைகளைச் சுத்தமாகக் கழுவுதல், பாதுகாப்பான குடிநீர் சேமிப்புக் கட்டமைப்பு, பொது இடங்களில் குப்பை கொட்டுதல், எச்சில் துப்புதல் ஆகியவற்றைத் தவிர்த்தல் போன்ற அன்றாட நடைமுறைகளில் பொதுமக்கள் தங்களது கடமைகளை அறிதல் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த மாற்றத்தில் பெண்கள் முக்கிய பங்காற்றி வருகின்றனர். சுகாதாரம், பாதுகாப்பு, கண்ணியம் ஆகியவற்றுடன் தூய்மை நேரடியாகத் தொடர்புடையதால், பெண்கள் பயனாளிகளாக மட்டுமின்றி சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும் உருவெடுத்துள்ளனர். தூய்மை இந்தியா இயக்கத்தின் வழிகாட்டுதல்கள் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. சுயஉதவிக் குழுக்கள் மூலம் வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கழிப்பறைப் பயன்பாட்டை ஊக்குவித்தல், தூய்மையை உறுதி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேற்கு வங்கத்தின் ஹவுராவில் கங்கை நதியை ஒட்டிய 18 கிராமப் பஞ்சாயத்துகளில் சுயஉதவிக் குழுக்கள் 18 நாட்களில் 9.32 டன் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துள்ளன. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூரில் மகளிர் சுயஉதவிக் குழு வள மீட்பு மையத்தை நிர்வகித்து, வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளை ஈரக் கழிவு, உலர் கழிவு எனப் பிரித்து, ஈரக் கழிவை மண்புழு உரமாக மாற்றி வருகின்றனர்.


பள்ளிகளும் தூய்மை நடைமுறைகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் முக்கிய மையங்களாக விளங்குகின்றன. குழந்தைகள் பள்ளிகளில் கற்றுக்கொள்ளும் சுகாதாரம், தூய்மை, கழிவு மேலாண்மை தொடர்பான பழக்கங்களை வீடுகளிலும் சமூகத்திலும் பின்பற்றுகின்றனர். ஜார்க்கண்டில் பள்ளியொன்றில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குக்கு தடை விதித்து, கழிவுநீரை மேலாண்மை செய்வதற்காக குழி அமைத்துள்ளது. தூய்மையே சேவை 2026 இயக்கத்தில் மாணவர்கள், இளைஞர்கள் நடத்தை மாற்றத்தின் மையமாக முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.

கிராமப் பஞ்சாயத்துகளும் இந்த மக்கள் இயக்கத்தின் முக்கிய அமைப்புகளாக உள்ளன. கிராம அளவிலான தூய்மை நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்துதல், சமூகப் பங்கேற்பை அதிகரித்தல், சுகாதார நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திறன் மேம்பாடு ஆகிய பொறுப்புகளை அவை ஏற்கின்றன. ஹரியானாவின் கட்லி கிராமப் பஞ்சாயத்து சமூகப் பங்கேற்பு மூலம் திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்தல் இல்லாத முன் மாதிரி நிலையை எட்டியுள்ளது. அங்கு வடிகால் அமைப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, கோபர்தன் உயிரி எரிவாயு ஆலைகள் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.

மக்கள் பங்கேற்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் தூய்மையே சேவை இயக்கம் 2017-ல் தொடங்கப்பட்டது. 2025-ம் ஆண்டு தூய்மையே சேவை இயக்கத்தில் 18.06 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். நடப்பாண்டில் இவ்வியக்கம் செப்டம்பர் 17 அன்று தொடங்கியுள்ளது. இதன் கீழ், அக்டோபர் 1-ம் தேதியன்று “ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்றாக” என்ற கருத்தின் கீழ் மக்கள் கூட்டாக ஒன்றிணைந்து தூய்மைப் பணிகளில் ஈடுபட உள்ளனர். அக்டோபர் 2 அன்று கிராமங்களில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள், தூய்மை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.
தூய்மை நடவடிக்கைகள் புதிய வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குகின்றன. மத்தியப் பிரதேசத்தின் பேதுலில் பபிதா துர்வே கழிவு சேகரிக்கும் மின்சார ரிக்ஷாவை இயக்கி, மாவட்டத்தின் முதல் பெண் மின்சார ரிக்ஷா கழிவு சேகரிப்பாளராக உருவெடுத்துள்ளார். மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் கழிப்பறை கட்டுமானத்துக்கான பயிற்சி பெற்ற கொத்தனார்களுக்கான தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து 2 பயிற்சி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, சுமார் 2,400 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் வேதன்சாவில் தினமும் 200 கிலோலிட்டர் கழிவுநீர் சுத்திகரிக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட நீரானது பாசனம், நிலத்தடி நீர் செறிவூட்டலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பஞ்சாயத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.2.5 லட்சம் வருவாய் கிடைக்கிறது.
கிராமப்புற தூய்மை நடவடிக்கைகளின் இறுதி இலக்கு, நிலையான நடத்தை மாற்றமும், சமூகப் பொறுப்புணர்வும் ஆகும். ‘திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்தல் இல்லாத கிராமம்’ என்ற நிலையைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதுடன், திடக் கழிவு, திரவக் கழிவுகளை முறையாக மேலாண்மை செய்து சுற்றுச்சூழலை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். இந்தியாவின் தூய்மைப் பயணம் வசதிகளை உருவாக்குவதிலிருந்து பயன்பாட்டுக்கும், பயன்பாட்டிலிருந்து நிலைத்தன்மைக்கும் முன்னேறியுள்ளது. மக்களால் அன்றாடம் கடைபிடிக்கப்படும் நடைமுறையாக தூய்மை மாறும்போதுதான் இந்த மாற்றம் நிலையானதாக அமையும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=160045&ModuleId=2®=3&lang=1
****
TV/PD
(Features ID: 160237)
आगंतुक पटल : 39
Provide suggestions / comments