• Sitemap
Farmer's Welfare

பாரம்பரிய வளத்திலிருந்து தொழில்முனைவு வரை

அரசின் நடவடிக்கைகளால் புத்துயிர் பெறும் மூங்கில் சார்ந்த தொழில்கள்

Posted On: 12 SEP 2026 11:07AM

சந்தையில் ஒரு மூங்கில் பை சாதாரணப் பொருளாகத் தோன்றலாம். ஆனால், அதன் பயணம் ஒரு சிறிய கிராமப்புறத் தொழிலில் இருந்து தேசிய அளவிலான கொள்கை வரை நீளும் கதையை எடுத்துரைக்கிறது. குருகிராமில் நடைபெற்ற சாரஸ் ஆஜீவிகா மேளா 2026-ல் அசாமைச் சேர்ந்த சகோதரி விஷாகா தயாரித்த மூங்கில் பைகள் இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கின. 2014-ம் ஆண்டு சுயஉதவிக் குழுவில் இணைந்த அவர், புதிய வடிவமைப்புகளை அறிமுகப்படுத்தி தனது மாமனாரின் மூங்கில் கைவினைத் தொழிலுக்கு புத்துயிர் அளித்தார். அரசின் ஆதரவு, கண்காட்சிகள் மூலம் அவருக்கான சந்தை வாய்ப்புகள் விரிவடைந்தன. 2025-ம் ஆண்டு இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்ற அவரது மூங்கில் தயாரிப்புகள் ரூ.2 லட்சம் அளவுக்கு விற்பனையாகின. பாரம்பரியக் கைவினைத்தொழில் வளர்ந்து வரும் தொழிலாக மாற முடியும் என்பதை அவரது பயணம் எடுத்துக்காட்டுகிறது.

தலைமுறை தலைமுறையாக பல்வேறு சமூகங்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்துடன் மூங்கில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. ஆனால், பழைய சட்ட விதிமுறை ஒன்று அதன் முழுமையான பொருளாதாரத் திறனை கட்டுப்படுத்தி வந்தது. பிரிட்டிஷ் ஆட்சிக் கால சட்டத்தின் கீழ், மூங்கில் ஒரு மரமாக வகைப்படுத்தப்பட்டிருந்ததால், அதனை வெட்டி எடுத்துச் செல்வது மூங்கிலைச் சார்ந்து வாழ்ந்த மக்களுக்கு தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தியது. 2017-ம் ஆண்டு மத்திய அரசு ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டு, இந்த வகைப்பாட்டிலிருந்து மூங்கிலை நீக்கியது. இதன் மூலம் காடுகளுக்கான விதிமுறைகளிலிருந்து மூங்கில் விடுவிக்கப்பட்டது. தொலைநோக்குப் பார்வையுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சீர்திருத்தம் மூங்கில் துறையில் புதுமை, தொழில்முனைவு, மதிப்புக்கூட்டல் ஆகியவற்றுக்கு புதிய வாய்ப்புகளைத் திறந்தது. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் வேலைவாய்ப்பு, தொழில், புதுமை ஆகியவற்றை மூங்கில் உருவாக்கி வருவதன் மூலம் இந்த நடவடிக்கையின் முக்கியத்துவம் தற்போது தெளிவாகத் தெரிகிறது.

சிக்கிமின் காங்டாக்கில் செயல்பட்டு வரும் ஆடை வடிவமைப்பாளரும், புதுமையாளருமான சிமி ஓங்மு பூட்டியாவின் லாக்ஸ்டால் டிசைன் ஸ்டுடியோ இதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். பெண்கள் தலைமையில் இயங்கும் இந்த உற்பத்தி நிறுவனம் மூங்கில் கைவினைப்பொருட்கள், அகர்பத்திகள், மரச்சாமான்கள், அலங்காரப் பொருட்கள் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கிறது. இங்கு மூங்கில் பாரம்பரியக் கைவினைத் தொழிலைக் கடந்து நவீன வடிவமைப்பு, தொழில்முனைவுக்கான வளமாக மாறியுள்ளது. சிமியின் கதை, நாடு முழுவதும் உருவாகி வரும் பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகும். திரிபுராவில் பிஜாய் சூத்ரதார் நவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூங்கில் பொருட்களின் உற்பத்தியை மேம்படுத்தியுள்ளார். நாகாலாந்தின் திமாபூர் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த சுயஉதவிக் குழுக்கள் மூங்கில் சார்ந்த உணவுப் பொருட்களுக்கு மதிப்புக்கூட்டும் பணியில் ஈடுபட்டுள்ளன. அங்கு கோரோலோ கிரியேட்டிவ் கிராஃப்ட்ஸ் போன்ற உள்ளூர் நிறுவனங்கள் மரச்சாமான்கள், கைவினைப் பொருட்களை தயாரித்து வருகின்றன. மிசோரமின் மாமித் மாவட்டத்தில் மூங்கில் திசு வளர்ப்பு, பாலிஹவுஸ் மேலாண்மை மூலம் அறிவியல் ரீதியான சாகுபடியை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மூங்கில் துறை மேலும் பல்வேறு பயன்பாடுகள், புதுமைகள், மதிப்புக்கூட்டப்பட்ட தயாரிப்புகளை நோக்கி முன்னேறி வருவதை இந்த முன்னேற்றங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இத்தகைய பெரிய அளவிலான மாற்றத்தை திறமையான கைவினைக்கலைஞர்களால் மட்டும் உருவாக்க முடியாது. தொழில்நுட்பம், பதனப்படுத்தும் வசதிகள், பயிற்சி, வலுவான சந்தைத் தொடர்புகள் ஆகியவையும் அவசியம். இங்குதான் அரசின் ஆதரவு முக்கியத்துவம் பெறுகிறது. தேசிய மூங்கில் இயக்கம், மூங்கில் விவசாயிகள், உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்களுக்கான சாகுபடி, பதனப்படுத்துதல், சந்தை அணுகல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. தரமான நடவுப் பொருட்களை வழங்கும் நாற்றங்கால்களுக்கும் இது ஆதரவளிக்கிறது.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த விஜய் படிதார்-ன் கதை இதன் தாக்கத்தை விவசாயம் சார்ந்த அளவில் விளக்குகிறது. 2019-ம் ஆண்டு பாரம்பரிய விவசாயத்தில் தொடர்ந்து சந்தித்த இழப்புகளால் அவர் மூங்கில் சாகுபடிக்கு மாறினார். மூங்கில் இயக்கத்தின் ஆதரவுடன் சுமார் 4,000 மூங்கில் கன்றுகளை நடவு செய்தார். 2 ஆண்டுகளுக்குள் மூங்கில் கம்புகளை விற்பனை செய்ததன் மூலம் சுமார் ரூ.75,000 வருவாய் ஈட்டினார். மூங்கில் சாகுபடியுடன் மிளகாய், குடைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றையும் ஊடுபயிராகச் சாகுபடி செய்ய முடிந்தது. மூங்கில் ஒரு பயிராக மட்டுமல்லாமல் நீண்டகால வாழ்வாதாரமாகவும் இருக்க முடியும் என்பதை அவரது அனுபவம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

வடகிழக்கு தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் அணுகல் மையமான நெக்டார் (NECTAR), வணிக ரீதியான பல்வேறு பயன்பாடுகளுக்கு மூங்கில் தொழில்நுட்பங்களை ஆதரித்து வருகிறது. உணவு, வேளாண் பதனப்படுத்துதல், கட்டுமானப் பொருட்கள், உற்பத்தி இயந்திரங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொழில்துறைப் பொருட்கள் உள்ளிட்ட பல துறைகளில் இந்தத் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் ஆண்டுதோறும் சுமார் 3 கோடி மனித வேலை நாட்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்கியுள்ளன. மூங்கில் பொருட்களின் மதிப்புக்கூட்டல் 10 சதவீதத்திலிருந்து 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

பொறியியல் செயல்முறைகளின் மூலம் தயாரிக்கப்படும் மூங்கில், கட்டுமானத் துறையில் புதிய வாய்ப்புகளை வழங்கி வருகிறது. மூங்கில் இழைகள், துண்டுகள் அல்லது துகள்களை ஒன்றிணைத்து அழுத்துவதன் மூலம் உருவாக்கப்படும் கலப்புப் பொருளாக இது தயாரிக்கப்படுகிறது. புதிய வடிவமைப்புகளைக் கொண்ட மரச்சாமான்கள், பொறியியல் சார்ந்த மூங்கில் தயாரிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று, கட்டிடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், உள்அலங்கார வேலைப்பாடு நிபுணர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதன் விளைவாக பேரிடர் நிவாரணம், மறுவாழ்வுப் பணிகளுக்காக 42 லட்சம் சதுர அடிக்கும் அதிகமான பொறியியல் மூங்கில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சத்தீஸ்கரில் பொறியியல் மூங்கிலைப் பயன்படுத்தி பள்ளிகளில் 576 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 20,000 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். பாரம்பரிய தொழில்துறைப் பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த கட்டுமானத் துறைக்குள் மூங்கில் பயன்பாடு அதிகரித்துள்ளதை இது எடுத்துக்காட்டுகிறது.

மூங்கில் மதிப்புச் சங்கிலி பல்வேறு தயாரிப்புகளைக் கடந்து புதிய திசைகளில் விரிவடைந்து வருகிறது. இந்த வளர்ந்து வரும் மதிப்புச் சங்கிலியில் மகளிர் குழுக்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. மகாராஷ்டிராவின் கட்சிரோலியில் பெண்களின் வாழ்வாதாரத்தை மாற்றியமைத்த மூங்கில் சார்ந்த அகர்பத்தி தொழில் திட்டம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். கட்சிரோலி அகர்பத்தித் திட்டத்தின் கீழ், 2012-ம் ஆண்டு மாவட்டம் முழுவதும் உற்பத்தி மையங்கள் தொடங்கப்பட்டன. 2020-ம் ஆண்டுக்குள் 32 மையங்கள் செயல்பாட்டுக்கு வந்து, சுமார் 1,100 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது. இவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பெண்களாவர். ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதம் சுமார் ரூ.5,000 வருவாய் கிடைத்தது. ஆண்டுக்கு சுமார் 45 முதல் 60 நாட்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்து வந்த நிலையில், இத்திட்டத்தின் மூலம் 225 நாட்களுக்கும் அதிகமாக வேலைவாய்ப்பு கிடைத்தது. வேலைவாய்ப்புகள் வீடுகளுக்கு அருகிலேயே கிடைத்ததுடன், உடல் ரீதியான சிரமமும் குறைந்தது. பெண்கள் புதிய திறன்கள், தன்னம்பிக்கை, தலைமைக்கான வாய்ப்புகளைப் பெற்றனர். இந்த முயற்சி வருமானத்துக்காக காடுகளைச் சார்ந்திருப்பதையும் குறைத்தது.

இத்தகைய வெற்றிக் கதைகள் திறன் மேம்பாடு, பயிற்சி ஆகியவற்றில் அரசின் தொடர்ச்சியான முயற்சிகளால் சாத்தியமாகியுள்ளன. நாக்பூரில் உள்ள மத்திய அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NEERI), 2026 ஜூன் மாதத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்காக மூங்கில் கைவினைப்பொருட்கள் தொடர்பான 5 நாள் பயிற்சித் திட்டத்தை நடத்தியது. “சாம்பல் கழிவு மேடுகளில் வளர்க்கப்படும் மூங்கில் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அதிகாரமளித்தல்” என்ற கருப்பொருளில் இந்தப் பயிற்சி நடைபெற்றது. மூங்கில் அறுவடை, சிகிச்சை, பதனப்படுத்துதல், கைவினைப்பொருட்கள் தயாரித்தல், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உருவாக்குதல், தொழில்முனைவு, பிராண்டிங், சந்தைப்படுத்தல், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றில் நேரடி பயிற்சி வழங்கப்பட்டது. பயன்படுத்தப்பட்ட சாம்பல் கழிவு மேடுகளை உற்பத்தி சார்ந்த நிலப்பரப்புகளாக மாற்றுவதன் மூலம் சுற்றுச்சூழல், சமூகப் பொருளாதாரப் பயன்களை உருவாக்க முடியும் என்பதையும் இந்த முயற்சி எடுத்துக்காட்டியது.

மூங்கில் சார்ந்த கதைகள் தற்போது மக்கள், வாய்ப்புகள், மாற்றம் ஆகியவற்றின் கதைகளாக உருவெடுத்து வருகின்றன. நாடு முழுவதும் மூங்கிலை அடிப்படையாகக் கொண்ட வாழ்வாதாரங்கள், தொழில்கள், நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. எனவே, இந்தியாவின் மூங்கில் சார்ந்த கதைகள், மூங்கில் எவ்வாறு மாற்றமடைய முடியும் என்பதைக் கூறும் கதைகளாக மட்டுமில்லாமல், பாரம்பரிய வளம் தொழில்நுட்பம், தொழில்முனைவு, வாய்ப்புகளுடன் இணைக்கப்படும்போது சமூகங்கள் முன்னேற்றத்தை அடைய முடியும் என்பதை எடுத்துக்காட்டும் கதைகளாகவும் மாறியுள்ளன.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=159961&ModuleId=2&reg=3&lang=1

****

TV/PD

(Features ID: 160218) आगंतुक पटल : 5
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Assamese , Kannada , Malayalam