• Sitemap
Rural Prosperity

பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம்: 20,000 மக்கள் மருந்தகங்கள் மூலம் எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் சுகாதார சேவைகள்

Posted On: 16 SEP 2026 7:05PM

ஒரு குழந்தையை வளர்ப்பதில் ஒட்டுமொத்த சமூகத்தின் பங்களிப்பும் முக்கியமானது. ஒரு குழந்தை பிறக்கும் போது குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகுவதைப் போன்றே, மருத்துவச் செலவுகள், குழந்தைப் பராமரிப்புப் பொருட்களுக்கான செலவுகளும் அதிகரிக்கின்றன. குழந்தைப் பிறப்பு முதல் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பராமரிப்பு, முதியோரைப் பராமரித்தல் வரை மருந்துகள் மட்டுமே குடும்பங்களின் ஒட்டுமொத்த மருத்துவச் செலவாக இருப்பதில்லை. மருந்துகளைத் தாண்டி தினசரித் தேவைக்கான மருத்துவ உபகரணங்கள், சுகாதாரத்திற்கான பொருட்களையும் எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில் பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்களில், அறுவை சிகிச்சை உபகரணங்கள், அத்தியாவசிய சுகாதாரப் பொருட்கள் பொதுமக்களுக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கான டயப்பர்கள், பேபி வைப்ஸ் ஆகியவை மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. 20 வைப்ஸ் கொண்ட ஒரு பாக்கெட் ரூ.45 என்ற குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. இதனுடன் 250 மி.லி பால் புகட்டும் பாட்டில்கள், தாய்ப்பால் எடுக்கும் கருவிகள், வெந்நீர் பைகள், குழந்தைகளுக்கு உணவளிக்கும் குழாய்கள் ஆகியவையும் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன.

குழந்தைப் பிறப்பிற்குப் பின் தாய்மார்களின் உடல்நலனைப் பேண உதவும் வயிற்றுப் பகுதிக்கான பெல்ட்கள், கர்ப்ப காலத்திலும் அதற்குப் பின்னரும் கழுத்து வலிக்கு நிவாரணம் தரும் வகையில் ரூ.525 விலையிலான தலையணைகளும் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கின்றன. வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சுக்குழாய் சுவாசப் பிரச்சனைகளுக்குப் பயன்படும் நெபுலைசர் கருவிகள் ரூ.937.50 என்ற குறைந்த விலையிலும், குழந்தைகளுக்கான நெபுலைசர் முகக்கவசம் ரூ.200-க்கும் வழங்கப்படுகின்றன. சிகிச்சைக்கான உபகரணங்களோடு ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் மருத்துவச் சாதனங்களும் இம்மையங்கள் மூலம் பொதுமக்களைச் சென்றடைகின்றன.

நீரிழிவு நோயாளிகள் வீட்டில் இருந்தபடியே இரத்த சர்க்கரை அளவைக் கண்டறிய உதவும் 25 குளுக்கோமீட்டர் பரிசோதனை பட்டைகள் ரூ.500 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவைக் கணக்கிடும் நாடித்துடிப்பு (பல்ஸ்) ஆக்சிமீட்டர் கருவிகளும் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்கின்றன. வீடுகளில் உள்ள முதியவர்கள், படுக்கையில் உள்ள நோயாளிகளின் சுயமரியாதையையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கும் வகையில், பெரியவர்களுக்கான சிறப்பு டயப்பர்களும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தொடர் மருத்துவப் பராமரிப்பு தேவைப்படும் குடும்பங்களின் மாதாந்திரச் செலவைக் கணிசமாகக் குறைக்க இது பெரிதும் உதவுகிறது.

மக்களின் அன்றாடத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மக்கள் மருந்தகங்களில் சுகாதாரம் சார்ந்த மேலும் பல புதிய பொருட்கள் விற்கப்பட உள்ளன. முழங்கால் மூட்டு ஆதரவுக் கருவிகள், முதியவர்கள் எழுந்து நடப்பதற்கு உதவும் வாக்கர் உபகரணங்கள், நீராவி பிடிக்கும் கருவிகள், கால் பாதங்களை உயர்த்தி வைக்கும் தலையணைகள், கர்ப்பிணிகளுக்கான முதுகு வலி தடுப்பு பெல்ட்கள், கழுத்துப் பட்டை ஆகியவை இதில் அடங்கும். வெறும் மருந்துகளை வழங்குவதோடு நின்றுவிடாமல், மறுவாழ்வு, இயக்கம், துணைக் கருவிகள் என ஒட்டுமொத்த ஆரோக்கியம் சார்ந்த பொருட்களையும் சாமனிய மக்களுக்கு வழங்கி, பிரதமரின் மக்கள் மருந்தகத் திட்டம் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=160014&ModuleId=2&reg=3&lang=1

***

TV/PD 

(Features ID: 160217) आगंतुक पटल : 5
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Bengali , Telugu , Malayalam