Infrastructure
மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்பு: உள்ளூர் நடவடிக்கைகள் முதல் நீர் பாதுகாப்பு வரை
Posted On:
03 SEP 2026 3:14PM
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமூகங்கள் பல நூற்றாண்டுகளாக தங்களின் உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப மழை நீரைச் சேகரித்து, நீர்நிலைகளில் சேமிக்க, பகிர்ந்து கொள்ள பல்வேறு முறைகளை உருவாக்கி வந்துள்ளன. படிக்கிணறுகள், குளங்கள், ஏரிகள், , பாரம்பரிய நீர்ப்பாசன முறைகள் ஆகியவை நீர் பாதுகாப்பு என்பது அனைவரின் பகிரப்பட்ட பொறுப்பு என்ற எளிய புரிதலை வெளிப்படுத்துகின்றன.
அதிகரித்து வரும் மக்கள் தொகை, விரிவடைந்து வரும் வேளாண்மை, வேகமான நகரமயமாக்கல் ஆகியவை நீர் மேலாண்மையை மேலும் சிக்கலானதாக மாற்றியுள்ளன. புதிய தொழில்நுட்பங்கள், உள்கட்டமைப்பு, நிறுவன ரீதியான செயல்முறைகள் ஆகியவை அவசியமாகியுள்ளன. இருப்பினும், நீடித்த நீர் மேலாண்மைக்கு சமூகங்களின் பங்கேற்பு முக்கியமானதாக உள்ளது.

இந்தக் கூட்டு செயல்பாட்டிற்கு ‘மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்பு’ திட்டம் புதிய வடிவத்தை வழங்கியுள்ளது. 2024 செப்டம்பர் 6-ம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், நீர் பாதுகாப்பின் மையத்தில் சமூகங்களின் கூட்டாண்மை, உரிமை உணர்வு ஆகியவற்றை நிலைநிறுத்தியுள்ளது. குறைந்த செலவில் நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர் சேமிப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்குதல், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகளை மீட்டெடுத்தல் ஆகியவற்றில் இத்திட்டம் கவனம் செலுத்துகிறது. அரசு, சமூகங்களின் அணுகுமுறை ஆகியவற்றின் வாயிலாக அறிவியல் பூர்வமான, உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளையும் இத்திட்டம் ஊக்குவிக்கிறது. சமூகங்கள், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு, செலவு ஆகிய 3 அம்சங்கள் இத்திட்டத்திற்கு வழிகாட்டுவதாக உள்ளன.
இந்த அணுகுமுறையின் அடிப்படையில், மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்பு திட்டம் 1.0-ன் கீழ், 2025 மே மாதத்திற்குள் நாடு முழுவதும் 27 லட்சத்துக்கும் அதிகமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர் மட்ட அளவை உயர்த்த இவை அமைக்கப்பட்டன. 2025 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்ட மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்பு திட்டம் 2.0-ன் கீழ், 2026 மே மாதத்திற்குள் 1.5 கோடிக்கும் அதிகமான நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. 2026 ஜூன் மாதத்தில் மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்பு திட்டத்தின் செயல்பாட்டு வரம்பு மேலும் விரிவுபடுத்தப்பட்டது. ஜல் சக்தி திட்டம்: மழைநீர் சேகரிப்பு இயக்கத்துடன் இத்திட்டம் ஒருங்கிணைக்கப்பட்டு, ‘மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்பு திட்டம்: மழைநீர் சேகரிப்பு’ என செயல்படுத்தப்படுகிறது. 2026 செப்டம்பர் 3-ம் தேதி நிலவரப்படி, 1.58 கோடிக்கும் அதிகமாக செயற்கையான நிலத்தடி நீர் செறிவூட்டல் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தேசிய அளவில் நீர் பாதுகாப்பு, ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம்:
ஜல் சக்தி அமைச்சகத்தின் துறைசார் உச்சி மாநாடு 2026 செப்டம்பர் 1 முதல் 2 வரை புதுதில்லியில் நடைபெற்றது. கூட்டுறவு கூட்டாட்சியை வலுப்படுத்துதல், மத்திய - மாநிலங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் நடத்தப்படும் துறைசார் உச்சி மாநாடுகளின் வரிசையில் இது முதலாவது மாநாடாகும். ‘மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்பு திட்டம்: மழைநீர் சேகரிப்பு’ திட்டம், மாநாட்டின் 4 முக்கிய கருப்பொருள்களில் ஒன்றாக இடம்பெற்றது. நீர் உள்கட்டமைப்புத் திட்டங்கள், குடிநீர் அமைப்புகளுக்கான நீராதாரங்களின் நிலைத்தன்மை, ஜல் ஜீவன் இயக்கம் 2.0-ன் கீழ் கிராமப்புற குடிநீர் வழங்கல் நடவடிக்கைகள் ஆகியவையும் முக்கிய கருப்பொருள்களாக இடம்பெற்றன.
மழைநீர் சேகரிப்பில் மக்கள் பங்கேற்பை வலியுறுத்திய பிரதமர் திரு நரேந்திர மோடி, பொதுமக்களிடையே நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தண்ணீர் திருவிழா போன்ற நிகழ்வுகளை ஊக்குவிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் நீர் மேலாண்மை, நிர்வாகம் தொடர்பான அறிவு, திறன் ஆகியவற்றை வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். நடைமுறை கற்றலை மேம்படுத்தவும், வெற்றிகரமான செயல்பாடுகளை பிற பகுதிகளில் பின்பற்றுவதற்கும் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்கும் வகையில் மாநிலங்களுக்கு இடையிலான திட்டமிட்ட களப்பயணங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் பரிந்துரைத்தார். நீர் தொடர்பான தரவுகளை ஒருங்கிணைத்து, முறைப்படுத்தி நிர்வகித்து, ஆய்வு செய்து, பயனுள்ள வகையில் பயன்படுத்தும் வலுவான நீர்த் தரவு நிர்வாகத்தின் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
நீர் நிர்வாகத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்த உச்சி மாநாட்டில் விரிவான விவாதங்கள் நடைபெற்றன. நீர் பாதுகாப்புடன், வளர்ச்சியடைந்த இந்தியா 2047 என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான முக்கிய நடவடிக்கையாக இம்மாநாடு அமைந்தது.
நாடு முழுவதும் இந்தக் கொள்கைகள் உள்ளூர் செயல்பாடுகளாக மாறி வருகின்றன. சமூகங்கள், நிறுவனங்கள் தங்களது பகுதிகளின் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப நீர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சத்தீஸ்கர்: நீர் சேமிப்புக்காக நிலம் ஒதுக்கிய விவசாயிகள்
சத்தீஸ்கரின் கோரியா மாவட்டத்தில் விவசாயிகள் தங்களது சொந்த வேளாண் நிலத்தின் ஒரு பகுதியை நீர் சேமிப்புக்காக ஒதுக்கியுள்ளனர். ஆவா பானி ஜோக்கி இயக்கத்தின் கீழ், விவசாயிகள் தங்களது வேளாண் நிலத்தில் 5 சதவீதத்தை சொந்த விருப்பத்தின் அடிப்படையில் நீர் செறிவூட்டல் குளங்கள், படிநிலை குழிகள் அமைப்பதற்காக ஒதுக்கினர். நீடித்த நீர் மேலாண்மைக்கு மிகப்பெரிய அளவிலான இடமாற்றமோ, அதிக அளவிலான மூலதன முதலீடோ அவசியமில்லை, கூட்டு மனஉறுதியே தேவை என்பதை இந்த மாதிரியான செயல்பாடு எடுத்துக்காட்டுகிறது.

1,260-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த மாதிரியை ஏற்றுக்கொண்டனர். மாவட்டம் முழுவதும் 2,000-க்கும் அதிகமான நீர் ஊற்றுக் குழிகள் உருவாக்கப்பட்டன. பல கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் 3 முதல் 4 மீட்டர் வரை உயர்ந்தது. தொலைதூர பழங்குடியினக் குடியிருப்புகள் 17-ல் நீரூற்றுகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டன. நுண்ணிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் வரைபடம், நிலத்தடி நீரோட்டம் குறித்த மதிப்பீடுகள், தொழில்நுட்ப வழிகாட்டுதல் ஆகியவற்றின் மூலம் அரசு இந்த முயற்சிக்கு ஆதரவளித்தது. விவசாயிகளின் உரிமை உணர்வே இத்திட்டத்தின் மையமாக விளங்கியது.
ஆந்திரப் பிரதேசம்: கிராமங்கள் தங்களது நீர்வளங்களுக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றன
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள முருகும்மி, மரெல்லா, தங்கெல்லா போன்ற கிராமங்கள் ஒரு காலத்தில் குறைந்த மழைப்பொழிவு, குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம், ஆழ்துளைக் கிணறுகள் வற்றிப்போதல் போன்ற சவால்களை எதிர்கொண்டன. இதனால் வேளாண்மையும், மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டது.
மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ், உள்ளூர் அளவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விழிப்புணர்வை ஏற்படுத்த கிராம சபைகள், வீடு வீடாக பிரச்சாரம், பாரம்பரிய நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள், பயிலரங்குகள் நடத்தப்பட்டன. விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள், உள்ளூர் நிறுவனங்கள் ஒன்றிணைந்து நீர் வரவு செலவுத் திட்டமிடல், பயிர்த் திட்டமிடல், நிலத்தடி நீரைப் பகிர்ந்து பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை திட்டமிட்டனர்.

முகட்டுப் பகுதியிலிருந்து பள்ளத்தாக்கு வரையிலான அணுகுமுறையைப் பின்பற்றி, கிராமங்களில் மழைநீரை சேகரித்தல், சேமித்தல், நிலத்தடி நீர் செறிவூட்டல் ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உயரமான முகட்டுப் பகுதிகளில் இருந்து பள்ளத்தாக்கை நோக்கி மழைநீர் பாயும் முறையை அடிப்படையாகக் கொண்டு நீரை நிர்வகிப்பதே இந்த அணுகுமுறையாகும். இதன் மூலம் கீழ்ப்பகுதிகளில் மண், நீர் பாதுகாப்பு வலுப்படுத்தப்படுகிறது.
முருகும்மியில் 71 நீர் பாதுகாப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, மொத்தமாக சுமார் 8.11 லட்சம் கனமீட்டர் நீரை சேமிக்கும் திறன் கிடைத்தது. இதன் மூலம் 264.5 ஹெக்டேர் வேளாண் நிலங்களுக்கு பாதுகாப்பான நீர்ப்பாசனம் கிடைக்கிறது.

மரெல்லாவில் 53 கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, சுமார் 10.04 லட்சம் கனமீட்டர் மொத்த சேமிப்புத் திறன் உருவாக்கப்பட்டது. சமூகக் குளங்கள், நீர்த்தேக்கங்களைப் புதுப்பித்ததன் மூலம் மேலும் சுமார் 5.95 லட்சம் கனமீட்டர் சேமிப்புத் திறன் கிடைத்தது.
தங்கெல்லாவில் 71 கட்டமைப்புகள் அமைக்கப்பட்டு, சுமார் 5.89 லட்சம் கனமீட்டர் மொத்த சேமிப்புத் திறன் உருவாக்கப்பட்டது. பாரம்பரிய நீர்நிலைகளை மீட்டெடுத்ததன் மூலம் சுமார் 3.98 லட்சம் கனமீட்டர் கூடுதல் சேமிப்புத் திறன் மேம்படுத்தப்பட்டது.
இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் சுமார் 5,900 மக்களுக்கு நிலத்தடி நீர் கிடைப்பதை உறுதிசெய்தது. வேளாண்மை, பால் உற்பத்தி சார்ந்த வாழ்வாதாரங்கள் வலுப்பெற்றன. மண்ணின் ஈரப்பதம் மீட்டெடுக்கப்பட்டது. வாழ்வாதார நெருக்கடியால் மக்கள் இடம்பெயர்வது குறைந்துள்ளது.
ஒடிசா: மேற்கூரைகள், குளங்களிலிருந்து நிலத்தடி நீர்மட்டம் வரை
ஒடிசாவில் ‘மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்பு’ திட்டம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், பிற நிறுவனங்களை ஒருங்கிணைக்கிறது. மழை பெய்யும் இடத்திலேயே அதைச் சேகரித்து, நிலத்தடி நீர்த்தேக்கங்களில் செறிவூட்டுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சத்தா திட்டத்தின் மூலம் மேற்கூரைகளில் இருந்து மழைநீர் சேகரிக்கப்படுகிறது. அருவா திட்டத்தின் மூலம் நீர்நிலைகளில் இருந்து நிலத்தடி நீர்த்தேக்கங்களுக்கு நீரைச் செறிவூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த இரு திட்டங்களும் பொது உள்கட்டமைப்பு, உள்ளூர் நீர்நிலைகள், சமூகப் பங்கேற்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து நிலத்தடி நீர் சேமிப்பையும், நீர் பாதுகாப்பையும் வலுப்படுத்துகின்றன.
ஜாஜ்பூர் மாவட்டத்தில் 2022-23 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்தில் அருவா திட்டத்தின் கீழ் 117 நீர் செறிவூட்டல் குழாய்கள் அமைக்கப்பட்டன. சத்தா திட்டத்தின் கீழ் 114 மேற்கூரை மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவப்பட்டன. அரசு நிறுவனங்கள், கல்வி வளாகங்களில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணிகள் கோரை, பிஞ்சார்பூர், பாரி, ரசுல்பூர், தசரத்பூர், ஜாஜ்பூர் உள்ளிட்ட அதிக முன்னுரிமை கொண்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ளன. இதன் மூலம் குடிநீர் விநியோகம் சீரடைந்தது, வேளாண்மையின் மீள்திறன் அதிகரித்தது. குறிப்பாக பெண்கள் வீடுகளுக்குத் தேவையான தண்ணீரைச் சேகரிக்க செலவிடும் நேரமும் குறைந்தது.
இந்த அணுகுமுறை ஜாஜ்பூரைத் தாண்டியும் விரிவடைந்துள்ளது. கட்டாக் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பொது இடங்களில் சத்தா திட்டத்தின் கீழ் 57 மேற்கூரை மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. குளங்கள், நீர்நிலைகளில் அருவா திட்டத்தின் கீழ் 35 நீர் செறிவூட்டல் குழாய்கள் அமைக்கப்பட்டு ஆழமான நிலத்தடி நீர்த்தேக்கங்களைச் செறிவூட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. சுயஉதவிக் குழுக்கள், மாணவர்கள், பஞ்சாயத்து அமைப்புகள் பங்கேற்ற தெருக்கூத்து, கருத்தரங்குகள், பயிலரங்குகள் ஆகியவற்றின் ஆதரவுடன் இப்பணிகள் செயல்படுத்தப்பட்டன.
இதேபோல், கஞ்சாம் மாவட்டத்தின் திகபஹண்டியில் 2020 முதல் 2022 வரையிலான காலத்தில் நிலத்தடி நீர்மட்டம் 1 முதல் 3 மீட்டர் வரை குறைந்தது. அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் அமைக்கப்பட்ட மேற்கூரை மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், மழைநீரை நீர் செறிவூட்டும் ஆழ்துளைக் கிணறுகளுக்கு கொண்டு செல்கின்றன. இத்திட்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்ட பகுதிகளில் பருவமழைக்குப் பிந்தைய நீர்மட்ட மீட்பு மேம்பட்டிருப்பதாக பின்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
நீர் பாதுகாப்புக்காக வளர்ந்து வரும் மக்கள் இயக்கம்
அரசின் அணுகுமுறை நீர் பாதுகாப்புக்கான கட்டமைப்புகளை உருவாக்குவதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. நீர் பாதுகாப்பு குறித்த பொறுப்புணர்வு கொண்ட ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. மக்கள் பங்களிப்பின் மூலம் நீர் சேமிப்புத் திட்டம், நீர் மேலாண்மையில் மக்கள் பங்கேற்பை மையப்படுத்துகிறது. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ற தீர்வுகளை உருவாக்குவதற்காக சமூகங்கள், பஞ்சாயத்துகள், நிறுவனங்கள் ஆகியவற்றை இத்திட்டம் ஒருங்கிணைக்கிறது.
பாரம்பரிய அறிவை அறிவியல் திட்டமிடலுடன் இணைத்தல், உள்ளூர் உரிமை உணர்வை நிறுவன ஆதரவுடன் இணைத்தல், தனிநபர் செயல்பாட்டை கூட்டு விளைவுகளுடன் இணைத்தல் ஆகியவற்றிற்கு இத்திட்டம் விரிவான முக்கியத்துவம் அளிக்கிறது. சேமிக்கப்படும் ஒவ்வொரு துளி நீரும், நிலையான சமூகங்களை உருவாக்கி, இந்தியாவின் நீண்டகால நீர் பாதுகாப்பை வலுப்படுத்தும் மிகப்பெரிய முயற்சியின் ஒரு பகுதியாக மாறுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=159834&ModuleId=2®=3&lang=1
***
TV/PD
(Features ID: 160066)
आगंतुक पटल : 10
Provide suggestions / comments