• Sitemap
Infrastructure

மக்கள் இயக்கமாக மாறும் கங்கை நதி பாதுகாப்பு

Posted On: 01 SEP 2026 5:09PM

கங்கை நதியானது பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் நாகரிகம், கலாச்சாரம், மக்களின் அன்றாட வாழ்க்கை ஆகியவற்றோடு பிணைந்துள்ளது. இது சமூகங்கள் செழித்து வளர ஆதரித்துள்ளது. பல தலைமுறைகளாக பாரம்பரியங்களுக்கு ஊக்கமளித்துள்ளது. காலப்போக்கில் வளர்ந்து வரும் நகரங்கள், மாசுபாடு, திட்டமிடப்படாத நகர்ப்புறமயமாக்கல் ஆகியவை நதியின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தின. இது நதியின் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தையும் மக்களுடனான அதன் உறவையும் வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டியது. எனவே கங்கையை மீட்டெடுப்பதற்கு அதன் தண்ணீரைத் தூய்மைப்படுத்துவதைக் காட்டிலும் பல விஷயங்கள் தேவைப்படுகின்றன. இந்த பரந்த புரிதல் 2014-ல் நமாமி கங்கா திட்டத்தை உருவாக்கியது.

  

இத்திடமானது கங்கை நதிக்கும் அதன் துணை நதிகளுக்குமான ஒருங்கிணைந்த பாதுகாப்பு இயக்கமாகும். இது மாசு தடுப்பு, பாதுகாப்பு, நதி புத்துயிரூட்டல் ஆகிய நடவடிக்கைகளை ஒன்றிணைக்கிறது. கழிவுநீர் சுத்திகரிப்பு, நதிக்கரை மேம்பாடு, காடுகள் வளர்ப்பு போன்ற பணிகளை நமாமி கங்கா திட்டம் விரிவுபடுத்துகிறது. அறிவியல் முறையிலான கண்காணிப்பும் மக்கள் விழிப்புணர்வும் இந்த ஒருங்கிணைந்த முயற்சியை மேலும் வலுப்படுத்துகின்றன. இருப்பினும் நிலையான மாற்றம் என்பது சமூகத்தைச் சார்ந்துள்ளது. இந்த நம்பிக்கையே நமாமி கங்கையின் மக்கள் பங்களிப்பு இயக்கமான ஜன் கங்கா-வுக்கு வழிவகுத்தது. கங்கை பாதுகாப்பின் மையமாக மக்களை முன்னிறுத்துகிறது. இங்குதான் நமாமி கங்கா மக்களின் கதையாக மாறுகிறது. விழிப்புணர்வில் தொடங்கி பங்களிப்புக்கு நகர்ந்து இறுதியில் பொறுப்புணர்வை நோக்கிச் செல்லும் கதையாக இது அமைகிறது.

நதியால் ஒன்றிணைந்தவர்கள்: மக்கள் பங்களிப்பைக் கொண்டாடுதல்

சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட வழிகளில் ஒரு நதியால் மக்களை ஒன்றிணைக்க முடியும். அதன் கரைகள் சமூகங்கள் சந்திக்கும், பங்கேற்கும், தங்களின் பகிரப்பட்ட தொடர்பைக் கொண்டாடும் இடங்களாக மாறுகின்றன. தூய்மைப் பணிகள், மரக்கன்று நடும் இயக்கங்கள், கல்விசார் முன்முயற்சிகள் மூலம் ஜன் கங்கா இத்தகைய வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்தச் செயல்பாடுகள் பாதுகாப்பை தனிப்பட்ட பொறுப்பாக இல்லாமல் கூட்டு நடவடிக்கையாக மாற்றுகின்றன.

நமாமி கங்கை திட்டத்தின் கீழ், மக்கள் பங்கேற்பின் தெளிவான வெளிப்பாடுகளில் ஒன்றாக நதி தூய்மைப் பணிகள் விளங்குகிறது. கங்கை தூய்மை இருவார விழா இந்தச் செய்தியைப் பரப்புவதற்கான முக்கிய தளமாக உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 முதல் 31 வரை நடைபெறும் இந்த இருவார நிகழ்வு, கங்கை நதி பாயும் 5 மாநிலங்களில் ஆயிரக்கணக்கான மக்களைச் சென்றடைகிறது. உத்தராகண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுடன் தேசிய தலைநகர் பிராந்தியமும் கங்கை துணை நதிகளையொட்டிய நகரங்களும் இதில் இடம்பெறுகின்றன. மாணவர்கள், தன்னார்வலர்கள், சமூகக் குழுக்கள் ஆகியோர் ஒருங்கிணைந்து பங்கேற்பதன் மூலம் நதிப் பாதுகாப்பில் மக்களின் ஈடுபாடு வலுப்படுத்தப்படுகிறது.

தில்லியில் யமுனை நதிக்கரையோரம் தொடர்ந்து வாரந்தோறும் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள் இந்த இயக்கத்திற்கு மேலும் வலுசேர்க்கின்றன. இந்தப் பணிகள் நதியின் தூய்மையான பகுதிகளையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளையும் மேம்படுத்துவதற்கு உதவுகின்றன. இத்தகைய முயற்சிகள் அனைத்தும் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நடைபெறும் நடவடிக்கையாக இல்லாமல், நதிப் பாதுகாப்பை வழக்கமான மக்கள் பணியாக மாற்றி வருகின்றன.

நதிகளின் பாதுகாப்பை பராமரிப்பதில் சமூகங்கள் கவனம் செலுத்தத் தொடங்கிய நிலையில், அவர்களது பார்வை நதிக்கரைகளையும் நோக்கி விரிவடைந்துள்ளது. இதனால் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் மக்கள் பங்கேற்பில் மரக்கன்றுகள் நடுதல் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. மரக்கன்றுகள் நதிக்கரைகளை நிலைப்படுத்துவதுடன், மண் அரிப்பைக் குறைக்கவும் உதவுகிறது. இதனால் நதிகளும் அவற்றைச் சுற்றியுள்ள வாழிடங்களும் இயற்கை மாற்றங்களை எதிர்கொள்ளும் திறனைப் பெறுகின்றன.

இதனுடன் இணைந்து, ‘தாயின் பெயரில் ஒரு மரக்கன்று’ இயக்கம் மரக்கன்றுகள் நடும் நடவடிக்கைகளில் மக்களின் பங்களிப்பை மேலும் அதிகரித்துள்ளது. தாய்மார்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் மரக்கன்றுகள் நடுவதற்கு இந்த இயக்கம் மக்களை ஊக்குவிக்கிறது. தனிமனித உணர்வை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான பொறுப்புடன் இது இணைக்கிறது. இந்த வலுவான தொடர்பு தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் ஆகியவற்றை பங்கேற்கத் தூண்டியுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்திலும் இதே உணர்வு வெளிப்படுகிறது. மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு நடவடிக்கைகள், சமூகம் சார்ந்த முன்முயற்சிகள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்கள் பங்கேற்பை இந்த நாள் மேலும் வலுப்படுத்துகிறது.

ஒரு இயக்கத்தின் மதிப்புகள் அடுத்த தலைமுறையைச் சென்றடையும் போது அது மேலும் வலுவடைகிறது. இதனால் ஜன் கங்காவில் இளைஞர்களின் பங்கேற்பு முக்கிய இடம் பெறுகிறது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் சுற்றுச்சூழல் கற்றல், படைப்பாற்றல் வெளிப்பாட்டிற்கான பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. கட்டுரைகள், ஓவியங்கள், சுவரொட்டிகள், கலந்துரையாடல்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் நதிகள் தொடர்பான கருப்பொருட்களை அறிந்து வருகின்றனர்.

நடைமுறை சார்ந்த செயல்பாடுகள் வகுப்பறையில் கற்ற அறிவை நிஜ வாழ்க்கையில் சந்திக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுடன் தொடர்புபடுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகின்றன. பல்கலைக்கழக கங்கை மன்றங்கள் கருத்தரங்குகள், களப் பயணங்கள், தன்னார்வப் பணிகள், சமூகத் தொடர்பு நடவடிக்கைகள் மூலம் இந்தப் பங்கேற்பை விரிவுபடுத்துகின்றன. சுற்றுச்சூழல் மன்றங்கள், தேசிய மாணவர் படை பிரிவுகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மாணவர்கள் தொடர்ந்து பங்கேற்பதற்கான கூடுதல் தளங்களை வழங்குகின்றன. இந்த முயற்சிகள் அனைத்தும் பாடப்புத்தகங்கள், வகுப்பறைகளைக் கடந்து நதிகளைப் பாதுகாப்பதில் உறுதியுடன் செயல்படும் அறிவார்ந்த இளம் தலைமுறையை உருவாக்குகின்றன.

நமாமி கங்கை திட்டம் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் நதிப் பாதுகாப்பை ஒருங்கிணைத்துள்ளது. இதன் மூலம், நதிகளுடனான மக்களின் தொடர்பு ஆண்டு முழுவதும் நீடிக்கிறது. இவற்றில் கங்கை உற்சவம் மக்கள் பங்கேற்புக்கான முன்னணி தளமாக விளங்குகிறது. இந்தியாவின் தேசிய நதியாக கங்கை நதி அங்கீகரிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இது நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஓவியப் போட்டிகள், கலந்துரையாடல்கள் ஆகியவை இடம்பெறுவதன் மூலம் பங்கேற்புக்கும் கருத்துப் பரிமாற்றத்திற்கும் இந்த நிகழ்வு வாய்ப்புகளை உருவாக்குகிறது. தூய்மையே சேவை, சர்வதேச யோகா தினம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளும் மக்கள் பங்கேற்புக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்றன. மக்கள், நதிகள் இடையிலான நீடித்த பண்பாட்டு உறவை இவை மேலும் வலுப்படுத்துகின்றன.

  

விழிப்புணர்வைக் கடந்து நேரடி அனுபவத்தின் மூலம் நதிகளுடனான ஆழமான தொடர்பு உருவாகிறது. நதிப் பாதுகாப்பின் உணர்வை மக்களின் அன்றாட வாழ்க்கைக்குள் கொண்டு வர நமாமி கங்கை திட்டம் பல்வேறு புதுமையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கங்கை நதியில் எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அனைத்து மகளிரும் பங்கேற்ற நதி சாகசப் பயணம் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும். கங்கை நதி உருவாகும் பகுதிகளில் இருந்து கடல் வரை இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. துணிச்சல், ஒருங்கிணைப்பு, சுற்றுச்சூழல் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றை இந்தப் பயணம் வெளிப்படுத்தியது. கங்கை வெறும் இயற்கை வளம் அல்ல என்பதை இது எடுத்துக்காட்டியது. மாணவர்கள், குடியிருப்பாளர்கள், இளம் தன்னார்வலர்களுடன் மேற்கொள்ளப்பட்ட உரையாடல்கள் கருத்துப் பரிமாற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கின.

கங்கை நதிப் படுகை முழுவதும் கங்கை பிரஹரிகள் அடிமட்ட அளவில் பாதுகாப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் அர்ப்பணிப்புள்ள சமூகத் தன்னார்வலர்களாக உருவெடுத்துள்ளனர். சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பொறுப்பான நடைமுறைகளை ஊக்குவித்தல், உள்ளூர் உயிரினப் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல் ஆகிய பணிகளில் அவர்கள் மக்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். கங்கை சேவா தூதர்கள் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்புப் பகுதிகள் என தங்களது தொடர்புப் பணிகளை விரிவுபடுத்தி இந்த முயற்சிகளுக்கு துணைபுரிகின்றனர். விழிப்புணர்வு இயக்கங்கள், உள்ளூர் முன்முயற்சிகள் மூலம் நதிப் பாதுகாப்பை அன்றாட வாழ்க்கைக்கு நெருக்கமாகக் கொண்டு வருகின்றனர். நீர்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல், வாழிடங்களை மீட்டெடுத்தல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பராமரித்தல் ஆகியவை மக்களுக்கும் நதிக்கும் இடையிலான தொடர்பை மேலும் வலுப்படுத்துகின்றன.

  

இந்த தன்னார்வலர் அமைப்புகள் அனைத்தும் மக்கள் பங்கேற்பை வெளிப்படுத்துகின்றன. மக்கள் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மூலம் தகவலறிந்த சமூகங்கள் நதிகளுக்கும் அவற்றைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கும் நீடித்த பாதுகாவலர்களாக மாற முடியும் என்பதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

நதிகள் பாதுகாப்பு கலாச்சாரத்தை உருவாக்குதல்

நதிகள் புத்துயிரூட்டலின் நீடித்த பயன் என்பது ஆரோக்கியமான நதியை உருவாக்குவதில் மட்டும் இல்லை. அதனுடன் மக்களுக்கு உருவாகும் வலுவான உறவிலும் உள்ளது. உள்கட்டமைப்பு நதிகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம். அறிவியல் சார்ந்த தலையீடுகள் சுற்றுச்சூழல் அமைப்புகளை வலுப்படுத்தலாம். தொழில்நுட்பம் கண்காணிப்பு, நிர்வாகத்தை மேம்படுத்தலாம். இருப்பினும், நதிகளின் எதிர்காலத்தைப் பொறியியல் தொழில்நுட்பம் மூலம் மட்டும் உருவாக்க முடியாது. ஜன் கங்கா மூலம் நமாமி கங்கை திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முயற்சியும் ஒரு பெரிய மாற்றத்திற்கான பங்களிப்பாக அமைகிறது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது. இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரு இயக்கம் என்பதையும் கடந்து, மக்கள் பங்கேற்பின் மூலம், கூட்டு நடவடிக்கைகள் நிலையான வளர்ச்சிக்கான அடித்தளமாக மாற முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=159798&ModuleId=2&reg=3&lang=1

****

TV/PD

(Features ID: 160052) आगंतुक पटल : 37
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Telugu , Kannada , Malayalam