Farmer's Welfare

உணவு பதனப்படுத்துதல் கண்காட்சியில் அடித்தட்டு மக்களின் புதுமையான நடவடிக்கைகளைக் கொண்டாடுதல்

இந்தியாவின் சுவைகள் புதிய எல்லைகளைக் கண்டறிதல்

Posted On: 26 AUG 2026 11:43AM

இந்தியா ஹேபிடட் மையத்தில், நாட்டின் சமையற்கலையின் பன்முகத்தன்மையை பறைசாற்றும் தேசிய கண்காட்சி பார்வையாளர்களை வரவேற்றது. இந்த கண்காட்சிக் கூடங்கள் தனித்துவமான, பாரம்பரிய உணவு வகைகளின் தொகுப்பை காட்சிப்படுத்தின. ஒவ்வொரு காட்சியும் அடித்தட்டு அளவிலான தொழில்முனைவோர், பிராந்திய பாரம்பரியத்தின் கதையை எடுத்துரைத்தது.

இந்தத் துடிப்பான சூழலில் மத்திய உணவு பதனப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் சார்பில் 2026 ஆகஸ்ட் 24 முதல் 25 வரை உணவு பதனப்படுத்தும்  சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கண்காட்சி நடைபெற்றது. 25 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்தியாவின் வளமான சமையற்கலை பன்முகத்தன்மையை இந்த கண்காட்சி கொண்டாடியது. சிறு உணவு நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள், தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், வாங்குபவர்களுடன் தொடர்பு கொள்ளவும், புதிய சந்தைகளைக் கண்டறியவும் இந்த நிகழ்வு ஒரு தளமாக அமைந்தது. தினை வகைகள், மசாலாப் பொருட்கள், ஊறுகாய், தின்பண்டங்கள், பானங்கள், மதிப்பு கூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய இந்த கண்காட்சி, உள்ளூர் மூலப்பொருட்களும், பாரம்பரிய அறிவும் இணைந்து, நம்பிக்கைக்குரிய பிராண்டுகளை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்தன.

2020 ஜூன் 29 அன்று தொடங்கப்பட்ட உணவு பதனப்படுத்தும் சிறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டமானது, நிதிசார், தொழில்நுட்ப, வணிக உதவிகள் மூலம் சிறிய அளவிலான உணவு நிறுவனங்களை ஆதரிக்கிறது. தொழில்முனைவோர் புதிய அலகுகளை நிறுவவும், ஏற்கனவே உள்ள நிறுவனங்களை வலுப்படுத்தவும் இத்திட்டம் உதவுகிறது.

 

ஃபராஸின் கதை, நாட்டின் சிறிய அளவிலான உணவு பதனப்படுத்தும்  துறையில் தற்போது நடைபெற்று வரும் பரந்த மாற்றத்தின் ஒரு பகுதியாகும். கண்காட்சியில் ஃபராஸ், ஷீ உணவு நிறுவனக் கூடத்தில் நின்று தாங்கள் பீகாரில் இருந்து வந்த பயணத்தை பெருமையுடன் பகிர்ந்துகொள்வதைப் பார்வையாளர்கள் கவனித்தனர். ஃபராஸைப் பொறுத்தவரை இந்தக் கண்காட்சி, சந்தை என்பதையும் கடந்து, ஒரு சிறிய நிறுவனம் எவ்வளவு தூரம் பயணம் செய்துள்ளது என்பதன் நினைவூட்டலாகும்.

பீகாரின் பிரபலமான மக்கானாவுக்கு நவீன அடையாளத்தை வழங்கும் சிந்தனையுடன், 2021-ல் ஷீ உணவு நிறுவனம் தொடங்கப்பட்டது. மக்கானா கலந்த பிஸ்கட்டுகள், எளிதில் உட்கொள்ளும் சிறிய மக்கானா பாக்கெட்டுகள் உள்ளிட்ட மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுடன் இக்குழு தனது பயணத்தைத் தொடங்கியது. 2021-ல் மத்திய அரசின் திட்டம் இவரின் நிறுவனத்திற்கு குறிப்பிடத்தக்க வகையில் ஊக்கமளித்தது. இது அதன் திறனை வலுப்படுத்தியது. பிராண்ட் கட்டமைப்பை ஆதரித்தது. புதிய வணிக வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறந்தது. வாடிக்கையாளர், வணிகத் தொடர்புகளின் மதிப்புமிக்க ஆதாரமாக இந்த கண்காட்சி மாறி வருகிறது.

இத்திட்டத்தின் தாக்கம் மேலும் விரிவடைந்தது. ஷீ உணவு நிறுவனத்தின் பதனப்படுத்தும்  அலகை மேம்படுத்த இது உதவியது. ஒரு அலகிற்கு ரூ.10 லட்சம் வரை, மொத்த திட்டச் செலவில் 35 சதவீதத்தை வழங்கும் கடனுடன் கூடிய மூலதன மானியத்தின் கீழ், இந்நிறுவனம் தனது ரூ.10 லட்சம் கடனுக்கு ரூ.3 லட்சத்திற்கும் அதிகமான மானியத்தைப் பெற்றது. இந்த ஆதரவு மிகவும் போட்டித்தன்மையுடன் செயல்படவும், செயல்பாடுகளை முறைப்படுத்தவும், வளர்ச்சிக்கான புதிய வழிகளைத் திறக்கவும் உதவியது. இந்த ஆதரவுடன் அவர்கள் சிறந்த இயந்திரங்களை வாங்குவதில் முதலீடு செய்தனர். உற்பத்தி திறனை அதிகரித்தனர். ஒரு நாளைக்கு 100 கிலோவாக இருந்த உற்பத்தியை குறைந்தபட்சம் 1 டன்னாக உயர்த்தினர். இந்த வளர்ச்சி அவர்களின் விற்பனையிலும் பிரதிபலிக்கிறது. 2021-ல் ரூ.2.5 முதல் ரூ.3 லட்சமாக இருந்த ஷீ உணவு நிறுவனத்தின் விற்பனை தற்போது ரூ.14 கோடியைத் தாண்டியுள்ளது. ஃபராஸைப் பொறுத்தவரை இந்த வளர்ச்சி, லட்சியம், ஆதரவு, வேகமாக வடிவம் பெறும் கனவுகள் குறித்த கதையைச் சொல்கின்றன. இந்தியாவின் பரந்த உணவுக் கலாச்சாரத்தில் இத்திட்டம் ஆழமாகச் செல்லும்போது அது செல்லும் ஒவ்வொரு பகுதியிலும் வேறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்துகிறது.

உதய்பூரில் இந்தத் திட்டத்தின் தாக்கம் பாரம்பரியம், இயற்கை, நோக்கம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டு முதல் திரிபல்வேதா நிறுவனம் பழங்குடியினரின் அறிவு, ஆயுர்வேதம் ஆகியவற்றை ஒன்றாக இணைத்துள்ளது. நாவல் பழம் சீசன் ஒவ்வொரு முறையும் இந்த பயணத்திற்கு புதிய ஆற்றலைத் தருகிறது. 3000 முதல் 5000 பழங்குடியினப் பெண்கள் காடுகளுக்குச் சென்று நாவல் பழங்களை சேகரிக்கின்றனர். பின்னர் அவற்றை உணவுப் பதனப்படுத்தும் கருவிகள் இல்லாமல் ஜாமுன் வினிகர், கியூப்கள், கீற்றுகள் போன்ற தனித்துவமான தயாரிப்புகளாக  மாற்றுகின்றனர். இந்தப் பெண்களுக்கு இந்த முயற்சி வருமானத்தை விட மேலானது. இது வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. வாழ்வாதாரத்தை வலுப்படுத்துகிறது. அவர்களின் சமூகங்களுக்கு புதிய வாய்ப்புகளை அளிக்கிறது.

இந்தப் பயணத்திற்கு இத்திட்டம் கூடுதல் ஊக்கம் அளித்தது. நவீன இயந்திரங்கள் செயல்பாடுகளை வலுப்படுத்தின. அதே நேரத்தில், மேம்பட்ட சந்தை அணுகல், திரிபல்வேதாவின் தயாரிப்புகள் முன்பை விட வெகுதூரம் பயணிக்க உதவின. இன்று அமேசான், ஃபிளிப்கார்ட், பிராண்டின் சொந்த வலைதளம் ஆகியவற்றின் மூலம் ஆர்டர்கள் வந்து சேர்கின்றன. இந்தப் பயணம் இந்திய எல்லைகளைக் கடந்து துபாய், அமெரிக்காவில் வசிக்கும் வாடிக்கையாளர்களைச் சென்றடைந்துள்ளது. ராஜஸ்தான் காடுகளுக்கு அப்பால் சிறிய அளவிலான வாடிக்கையாளர்களுடன் தொடங்கியது,  இப்போது உலக அளவில் சென்றடைந்துள்ளது. பாரம்பரியம் வாய்ப்புகளுடன் இணையும்போது, இரண்டும் செழித்து வளரும் என்ற சிந்தனையை இது முன்னெடுத்துச் செல்கிறது.

மகாராஷ்டிராவில் மயூர் ஹண்டேயின் பயணம் மிகக் குறைந்த அளவில் சிறிய அமைப்புடன் ஆனால், பெரிய லட்சியத்துடன் தொடங்கியது. 13 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட சோயா ரிச் நிறுவனம் சோயா, டோபுவுடன் செயல்படுகிறது. சோயாவை பாலாக அரைத்து பின்னர் அது டோபுவாக நொதிக்க வைக்கப்படுகிறது. புதினா, புகைமூட்டப்பட்ட வகைகள் போன்ற பல்வேறு சுவைகளுடன் புதிய தயாரிப்புகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் புதுமைக்கு சரியான இயந்திரங்கள் தேவைப்படுகின்றன. இயந்திரங்களுக்கு முதலீடு தேவைப்படுகிறது. இத்திட்டத்திற்கு முன்பு நிதி ஒரு தடையாக இருந்தது. கடன்கள் கிடைக்காமல் தொழில் விரிவாக்கம் மேலும் தாமதமாகியது.

சோயா ரிச் நிறுவனம், 2021-ல் இத்திட்டத்தில் இணைந்தது. இந்த ஆதரவு பல பகுதிகளை ஒரே நேரத்தில் ஒன்றாகக் கொண்டுவர உதவியது. ரூ.20 லட்சம் மதிப்பிலான தொழில் விரிவாக்கத் திட்டத்திற்காக, அரசுத் திட்டத்தின் கீழ், திட்டச் செலவில் 35 சதவீத மூலதன மானியத்தால் ஆதரிக்கப்படும் வங்கிக் கடனை இந்நிறுவனம் பெற்றுள்ளது. பிராண்டிங்கை வலுப்படுத்தவும், விரிவுபடுத்தவும், வணிகத்தை அரசுத் தளங்களுடன் இணைக்கவும் இயந்திரங்களுக்கு அப்பால் ஆதரவு வழங்கப்பட்டது. ஒரே ஒரு சிறிய அமைப்பாக தொடங்கப்பட்ட சோயா ரிச் நிறுவனம், தற்போது 8 நகரங்களில் இயங்குகிறது. மாதாந்திர விற்பனை சுமார் ரூ.2 லட்சத்தில் இருந்து கிட்டத்தட்ட ரூ.35 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த வெற்றிப் பயணம், சரியான ஆதரவு கிடைத்தால் சிறிய தொடக்கங்கள் கூட தொலைதூரம் பயணிக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

பியூஷ் மோஹந்தியைப் பொறுத்தவரை உணவு பதனப்படுத்துதல் என்பது ஒரு வணிகம் மட்டுமல்ல. அதற்கும் மேலானது. 1995-ல் ஒடிஷாவில் தொடங்கப்பட்ட மலாட்டி உணவுப் பொருட்கள் நிறுவனத்தில் பல்வேறு வகையான தினை வகைகளை கவனமாக சுத்தம் செய்தல், அரைத்தல், பதனப்படுத்துதல், பேக்கேஜிங் செய்தல் ஆகிய செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. பல ஆண்டுகளாக இயந்திரங்கள் பற்றாக்குறையின் காரணமாக இந்நிறுவனம் பொருட்களின் தரத்தை உறுதி செய்வதில் சிக்கல் நீடித்தது. 2024-ல் அரசின் திட்டத்தில் இணைந்தது, புதிய வாய்ப்புகளை அளித்தது. 9 லட்சத்திற்கும் அதிகமான மூலதன மானியத்தின் மூலம் நிறுவனத்தின் வசதியை மேம்படுத்தப்பட்டது. சிறந்த இயந்திரங்கள் வாங்குவதில் முதலீடு செய்ய இது உதவியது.

இதன் பலன் விரைவாக உணரப்பட்டது. நவீன இயந்திரங்கள் தயாரிப்புகளின் தரத்தை உயர்த்தின. விற்பனை சுமார் 40 சதவீதம் அதிகரித்தது. மலாட்டி உணவுப் பொருட்கள் அமேசான், ஃபிளிப்கார்ட் ஆகிய தளங்களில் சந்தைப்படுத்தப்பட்டன. அதே நேரத்தில், வர்த்தகக் கண்காட்சிகளில் பங்கேற்பது புதிய கதவுகளைத் திறந்தது. இது வணிகத் தொடர்பு, அறிவு, மதிப்புமிக்க சந்தை இணைப்புகளைக் கொண்டு வந்தது. விற்பனைப் புள்ளிவிவரங்கள் இயந்திரங்கள் நவீனமயமாக்கல் ஆகியவற்றைக் கடந்து, ஒரு காலத்தில் சாத்தியம் என்பதையும் தாண்டிச் செல்லும் நம்பிக்கையை இது வழங்கியுள்ளது. வலுவான திறன்கள், வளர்ந்து வரும் சந்தை இணைப்புடன், மலாட்டி உணவுப் பொருட்கள் அடுத்த ஆண்டு முதல் ஏற்றுமதிக்கு திட்டமிட்டுள்ளன. இது இந்திய நிலப்பரப்புகளுக்கு அப்பால் பயணிக்கத் தயாராகும் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால பாரம்பரியமாகும்.

இந்தக் கதைகள் உண்மையில், வணிகங்கள் வளர்வதைப் பற்றியது மட்டுமல்ல, கனவுகளைப் பெரிதாக வளர்ப்பதற்கான நம்பிக்கையைப் பற்றியதாகும். இந்தக் கண்காட்சி, அதன் வண்ணங்கள், நறுமணங்கள், சுவைகளுக்கு அப்பால், எப்போதும் நிலைத்திருக்கும் ஒன்றை விட்டுச் சென்றது. அது, ஒரு கனவுக்கு ஒருமுறை வாய்ப்பளிக்கப்பட்டால், அது ஒருவரின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் என்ற நினைவூட்டல் ஆகும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=159710&ModuleId=2&reg=3&lang=1

****

TV/PD

(Features ID: 160035) आगंतुक पटल : 57
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu , Kannada , Malayalam