Economy
தொழில்முனைவோர்களை உருவாக்கும் ஆஸ்பயர் திட்டம்
Posted On:
26 JUN 2026 2:37PM
மேகாலயாவின் மாசின்ராம் பகுதியில் ஒரு மழைக்கால காலையில், திரு பான்ஷைலாங் மர்பானியாங் குன்றுகளைக் கடந்து செல்லும் கார்மேகங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். உலகின் மிக அதிக மழை பொழியும் இந்த இடத்தில் வழக்கம் போல் மழை தடையின்றி பெய்து கொண்டிருந்தது. இருப்பினும், அவரது எண்ணங்களை ஆக்கிரமித்திருந்தது இந்த வானிலை அல்ல; நாட்டின் மிகத் தொலைதூரப் பகுதிகளில் ஒன்றாக உள்ள இந்த இடத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், மழை மிகுதியாக இருக்கும் அளவுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும் போது, தனது எதிர்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்ற பல வருடங்களாக அவரைத் துரத்திய கேள்விதான் அது.
பல ஆண்டுகளாக, திரு மர்பானியாங் தனது நண்பர்களும் அண்டை வீட்டாரும் வேலை தேடி மாசின்ராமை விட்டு வேறு இடங்களுக்குச் செல்வதைக் கவனித்து வந்தார். வளங்கள் குறைவாக இருந்தன, சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்குவது எட்டாக்கனியாகத் தோன்றியது. நிதி நெருக்கடிகள் அந்தக் கனவை மேலும் தூரமாக்கின. இருந்தாலும் அந்த எண்ணம் அவர் மனதை விட்டு நீங்கவில்லை. இப்பகுதியின் செழுமையான விவசாய விளைபொருட்களால் ஈர்க்கப்பட்ட அவர், இந்த உள்ளூர் வளங்களை அடிப்படையாக வைத்தே ஒரு புதிய நிறுவனம் தொடங்க முடியுமா என்று யோசித்தார்.
குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில்முனைவோர் நிறுவனம் வழங்கும் தொழில்முனைவோர் பயிற்சி, திறன் மேம்பாட்டு ஆதரவு பற்றி அவர் அறிந்தபோது அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. இந்த இந்திய தொழில்முனைவோர் நிறுவனம் என்பது குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் புத்தாக்கம், கிராமப்புறத் தொழில்கள், தொழில்முனைவோர் மேம்பாட்டை ஊக்குவிப்பதற்கான ஆஸ்பயர் திட்டத்தின் கீழ் செயல்படும் ஒரு வழிகாட்டி நிறுவனமாகும். இது ஆர்வமுள்ள தொழில்முனைவோர் தங்களின் யோசனைகளை நிறுவனங்களாக மாற்றுவதற்குத் தேவையான திறன்கள், தன்னம்பிக்கை, வணிக அறிவைப் பெற உதவுகிறது.
P1Q5Y8.jpg)
திரு மர்பானியாங்கிற்கு, இந்த பயிற்சி புதிய வாய்ப்புகளை வழங்கியது. தொழில்நுட்ப அறிவு, தொழில்முனைவுத் திறன்களுடன், அவர் உள்ளூரில் கிடைக்கும் வளங்களை பொருளாதார வாய்ப்பாக மாற்றி உணவு பதனப்படுத்தும் நிறுவனம் ஒன்றை தொடங்கினார். முறையான வழிகாட்டுதலுடன் கூடிய ஆதரவும், திறமையும் இருந்தால் எத்தகைய சூழலிலும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதை இது நிரூபித்தது.
சொந்த ஊருக்கு அருகிலேயே வாய்ப்புகளை உருவாக்குதல்
திரு மர்பானியாங்கின் கதை கிராமப்புற இந்தியா முழுவதும் தற்போது நடைபெற்றுவரும் ஒரு பெரிய மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது.
வணிக மேம்பாட்டுச் சேவைகள், தொழில்நுட்ப ஆதரவு, நிறுவன மேம்பாடு ஆகியவற்றுக்கான அணுகல் பெரும்பாலும் சில நகர்ப்புறங்களிலேயே குவிந்துள்ளது. கிராமப்புற இந்தியாவில் திறமையும், வளங்களும் இருந்தபோதிலும், ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு அவர்களின் சிந்தனைகளை நிறுவனங்களாக மாற்றுவதற்குத் தேவையான பயிற்சி, வழிகாட்டுதல், நிறுவன ஆதரவு ஆகியவை பெரும்பாலும் கிடைக்கவில்லை.
இந்த இடைவெளியைக் கண்டறிந்து, கிராமப்புறங்களில் குறிப்பாக, விவசாயம் சார்ந்த துறைகளில் தொழில்முனைவு, வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தை ஊக்குவிப்பதற்காக, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம் 2015-ம் ஆண்டில் ஆஸ்பயர் திட்டத்தைத் தொடங்கியது.
பல ஆண்டுகளாக, மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 2018-ல் வெளியிடப்பட்ட வழிகாட்டு நடைமுறைகள் தொழில் தொடக்க மையக் கட்டமைப்பை வலுப்படுத்தின. 2023-ம் ஆண்டின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வாழ்வாதார உருவாக்கம், நிறுவன மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தின. இன்று, ஆஸ்பயர் திட்டம் வாழ்வாதார தொழில் தொடக்க மையக் (எல்பிஐ) கட்டமைப்பை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இது தனிநபர்கள் திறன் பெறுவதிலிருந்து நிறுவனம் உருவாக்குவதை நோக்கி நகர உதவுகிறது.
பயிற்சி, வழிகாட்டுதல், தொழில் தொடங்குவதற்கான ஆதரவை வழங்குவதன் மூலம், ஆஸ்பயர் திட்டம் விவசாயம் சார்ந்த துறைகளில் ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு வழிகாட்டுவதுடன், குறு, சிறு, நடுத்தர தொழில் துறையின் போட்டித்தன்மையை வலுப்படுத்தி புத்தாக்கத்தையும் ஊக்குவிக்கிறது.
நிறுவனங்களை அமைத்தல்
ஆஸ்பயர் திட்டத்தின் வெற்றியின் மையமாக விளங்குவது அதன் வாழ்வாதார தொழில் தொடக்க மையங்கள் ஆகும். இதன் நோக்கம் வெறும் திறன் மேம்பாடு மட்டுமல்ல, வாழ்வாதாரங்களையும் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கக் கூடிய, சிறு நிறுவனங்களை உருவாக்குவதாகும்.
இந்த தொழில் தொடக்க மையங்கள் நவீன உபகரணங்கள், வணிக வழிகாட்டுதல், தொழில்நுட்ப ஆதரவு ஆகியவற்றை வழங்குகின்றன. தொழில்முனைவோர் தங்களின் நிறுவனங்களைத் தொடங்க பொருட்களின் உருவாக்கம், வர்த்தக முத்திரை, அங்கீகாரம், ஒழுங்குமுறை இணக்கம், சந்தை இணைப்புகள், நிதியுதவி ஆகிய உதவிகள் வழங்கப்படுகின்றன.
ஆஸ்பயர் திட்டத்தின் நிறுவனக் கட்டமைப்பு, தொழில்முனைவோர் தங்களது பயிற்சியை முடித்த பிறகும் நீண்ட காலத்திற்குத் தொடர்ச்சியான ஆதரவைப் பெறுவதை உறுதி செய்கிறது. இத்திட்டம், திட்ட வழிகாட்டுதல் குழு, நியமிக்கப்பட்ட வழிகாட்டி நிறுவனங்கள், வாழ்வாதார தொழில் தொடக்க மையங்களை நடத்தும் நிறுவனங்கள் ஆகிய மூன்று அடுக்கு கட்டமைப்பின் மூலம் செயல்படுகிறது. தொழில் தொடக்க மையங்களைக் கண்டறிதல், திட்டங்களைத் தயாரித்தல், தொழில் தொடங்குவதற்கான திட்டங்களை வடிவமைத்தல், நடவடிக்கைகளை மேம்படுத்துதல், முடிவுகளைக் கண்காணித்தல் ஆகியவற்றில் வழிகாட்டி நிறுவனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்த தொழில் தொடக்க சூழல் அமைப்பு, குவஹாத்தியில் உள்ள இந்திய தொழில்முனைவோர் நிறுவனம், வேளாண் பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், ஜோத்பூர் ஐஐடி போன்ற முதன்மை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நிறுவனங்களை ஒன்றிணைக்கிறது. இந்த மையங்கள் விவசாயத் தொழிலில் தொழில்முனைவோரையும், புத்தாக்க நிறுவனங்களையும் ஊக்குவிக்க நிறுவப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள வாழ்வாதார தொழில் தொடக்க மையங்கள் உணவு பதனப்படுத்துதல், தேன் உற்பத்தி, மூங்கில் பொருட்கள், காளான் வளர்ப்பு, மசாலா பதனப்படுத்துதல், கைவினைப்பொருட்கள், கயிறு பொருட்கள் போன்ற துறைகளில் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து வருகின்றன. இந்த அணுகுமுறையின் முக்கியத்துவம், இந்தியாவின் பொருளாதாரத்தில் மதிப்பு கூட்டப்பட்ட கிராமப்புறத் தொழில்களின் பங்களிப்பில் பிரதிபலிக்கிறது. பல கிராமப்புற சமூகங்களுக்கு, நிறுவன உருவாக்கம் என்பது வருமானம் ஈட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக மட்டுமல்லாமல், பெரிய வணிக நடவடிக்கைகளில் பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது. விவசாயம், உள்ளூர் வளங்களுடன் தொடர்புடைய துறைகளில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம், ஆஸ்பயர் திட்டம் தனிநபர்களை உற்பத்தியைத் தாண்டி, பதனப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றை நோக்கி நகர ஊக்குவிக்கிறது.
இந்தக் கட்டமைப்பு பல ஆண்டுகளாக சீராக விரிவடைந்துள்ளது. 2026 ஜூன் மாத நிலவரப்படி, 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 109 வாழ்வாதார தொழில் தொடக்க மையங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் ஒட்டுமொத்தமாக 1.23 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பயிற்சி அளித்துள்ளன. 2022-23 நிதியாண்டில் முறையான கண்காணிப்பு தொடங்கியதில் இருந்து, ஆஸ்பயர் திட்டத்தின் ஆதரவு பெற்ற தொழில் தொடக்க மையங்கள் நாடு முழுவதும் 1200-க்கும் மேற்பட்ட சிறு நிறுவனங்களைத் தொடங்க வழிவகுத்துள்ளன.
P2FR5N.jpg)
ஆர்வமுள்ள தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தல்
ஆஸ்பயர் திட்டத்தின் வெற்றி, தொழில் தொடக்க மையங்களின் எண்ணிக்கையால் அளவிடப்படுவதில்லை. மாறாக இத்திட்டம் யாருடைய வாழ்க்கையை மாற்ற உதவுகிறது என்பதைப் பொறுத்தே அளவிடப்படுகிறது.
2022-23 நிதியாண்டு முதல், இத்திட்டம் நாடு முழுவதும் 28,500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு தொழில்முனைவுக்கான வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இது நிறுவனங்கள் உருவாக்கத்தில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில், ஆஸ்பயர் திட்டம் 8,700-க்கும் மேற்பட்ட பட்டியலின பயனாளிகள், 9,600-க்கும் மேற்பட்ட பழங்குடியின பயனாளிகள், 17,600-க்கும் அதிகமான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பயனாளிகளை சென்றடைந்துள்ளது.
P3I3O8.jpg)
இந்த எண்கள் வெறும் புள்ளிவிவரங்கள் அல்ல. பல்வேறு சமூக, பொருளாதாரக் குழுக்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆதரவை வழங்குவதன் மூலம், ஆஸ்பயர் திட்டம் நிறுவன உருவாக்கத்தை நாட்டின் பெருநகரங்களில் மட்டும் இல்லாமல் கிராமங்கள், சிறிய நகரங்களுக்கும் கொண்டு சேர்த்துள்ளது. இது பின்தங்கிய சமூகங்களில் வளர்ச்சி, தற்சார்பு, வாழ்வாதார உருவாக்கத்திற்கான ஒரு பாதையாக உருவெடுத்து வருகிறது.
மாசின்ராமிலிருந்து கடமைப் பாதை வரை
பல ஆண்டுகளுக்குப் பிறகு, திரு மர்பானியாங்கின் பயணம் தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றது.
புதுதில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெற்ற 75-வது குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்ட வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பத்து தொழில்முனைவோரில் அவரும் ஒருவர். பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அவர்கள், இந்தியாவின் கிராமங்கள், சிறிய நகரங்கள், தொலைதூரப் பகுதிகளில் இருந்து உருவாகி வரும் ஒரு புதிய தலைமுறை தொழில்முனைவோரை உலகிற்குக் காட்டினர். நாட்டின் மிக முக்கியமான தேசிய நிகழ்வுகளில் ஒன்றில் அவர்கள் பங்கேற்றது தனிப்பட்ட கௌரவம் மட்டுமல்ல. வேலை தேடுபவர்களை வேலை வழங்குபவர்களாகவும், உள்ளூர் லட்சியங்களை செழிப்பான நிறுவனங்களாகவும் மாற்ற உதவும் முன்முயற்சிகளின் வளர்ந்து வரும் வெற்றியையே இது பிரதிபலித்தது.
P4UCX1.jpg)
மாசின்ராமின் மழை பொழியும் மலைகளிலிருந்து கடமைப் பாதைக்கான தூரம் கிலோமீட்டர்களில் அளவிடப்பட்டாலும், நிச்சயமற்ற நிலையிலிருந்து தொழில்முனைவோர் என்ற உயரம் வரையிலான பயணம் வாய்ப்புகளின் மூலம் அளவிடப்படுகிறது. ஆஸ்பயர் திட்டத்தின் மூலம், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களது லட்சியங்களை நிறுவனங்களாக மாற்றுவதற்குத் தேவையான ஆதரவு, திறன்கள், வளங்களைப் பெற்று வருகின்றனர். புதுமைகளை வளர்ப்பதன் மூலமும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலமும், சிந்தனைகள் தொழில் நிறுவனங்களாகவும், திறன்கள் வாழ்வாதாரங்களாகவும், லட்சியங்கள் பொருளாதார வாய்ப்புகளாகவும் மாற்றப்படுகின்றன.
இதன் மூலம், ஆஸ்பயர் திட்டம் நிறுவனங்களை உருவாக்குவதுடன் மட்டுமல்லாமல், சமூகங்களுக்கு அதிகாரமளித்து, வேலைவாய்ப்பை உருவாக்கி, உள்ளடக்கிய, தற்சார்பு இந்தியாவுக்கான பயணத்தில் பங்கேற்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/FeaturesDeatils.aspx?NoteId=159051&ModuleId=2®=3&lang=1
****
SS/PD/KR
(Features ID: 159574)
आगंतुक पटल : 39
Provide suggestions / comments