Economy
இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தில் புதிய பரிணாமத்தை எட்டியுள்ள பெண்களின் பங்களிப்பு
Posted On:
01 MAY 2026 11:26AM
முன்பொரு காலத்தில், இந்தியாவில் பெண்களின் உழைப்பு பெரும்பாலும் கவனிக்கப்படாமலேயே இருந்தது. வீட்டு வேலைகளிலும், குடும்பம் சார்ந்த தொழில்களிலும் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அரிதாகவே கிடைக்கப்பெறும் முறைசாரா பணிகளாகவே அவர்களின் பங்களிப்பு இருந்தது. அவர்களின் பங்களிப்புத் தொடர்ச்சியானதாக இருந்தபோதிலும், அதற்கான அங்கீகாரம் மிகவும் குறைவாகவே இருந்தது.
தற்போது அந்தச் சூழல் மாறிவருகிறது. இது நாட்டின் ஒட்டுமொத்த தொழிலாளர் களத்தையே மாற்றியமைத்து வருகிறது.
இந்த சர்வதேச தொழிலாளர் தினத்தில், இந்தியாவின் தொழிலாளர் சக்தியின் பரிணாமத்தை பெண்களே முன்னின்று செதுக்குகிறார்கள். அவர்கள் அதிக எண்ணிக்கையில் தொழிலாளர் சந்தையில் நுழைந்து, பல்வேறு துறைகள், அமைப்புகள், வளர்ந்து வரும் துறைகளில் தங்களின் பங்களிப்பையும் மறுவரையறை செய்து வருகின்றனர்.
இந்த மாற்றம் புள்ளிவிவரங்களின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. தொழிலாளர் கணக்கெடுப்பின் (பிஎல்எஃப்எஸ்) தரவுகளின்படி, பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு விகிதம் 2017-18-ல் 23.3 சதவீதத்திலிருந்து, 2025-ம் ஆண்டில் 40 சதவீதமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புற இந்தியா இந்த மாற்றத்தில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. இது பெண்கள் அவ்வப்போது பங்களிப்பவர்களாக இல்லாமல், நிலையான பொருளாதார பங்கேற்பாளர்களாக உருவெடுத்துள்ள ஆழமான கட்டமைப்பு மாற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறது. இந்த வளர்ச்சியானது வேலைவாய்ப்பு விரிவாக்கத்தையும், தொழிலாளர் சந்தையில் முறைப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்புகளை நோக்கிய நிலையான நகர்வையும் பிரதிபலிக்கிறது.
முன் எப்போதும் இல்லாத அளவில் இந்தியாவின் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் பெண்கள் இதுவரை தாங்கள் செய்து வந்த வழக்கமான பணிகளைக் கடந்து, தொழில்முனைவோராக உருவெடுத்து வருகின்றனர்.
தீன்தயாள் அந்த்யோதயா திட்டத்தின் கீழ் செயல்படும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம், 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயஉதவிக் குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். நிதி உள்ளடக்கத்திற்கும், சேமிப்பிற்குமான ஒரு வழியாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது குறுதொழில் நிறுவன கட்டமைப்பாக சீரான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இதன் மூலம் பெண்கள் தற்போது, உற்பத்தி முதல் நிர்வாகம், விற்பனை வரை அனைத்து நிலைகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதுடன், பெரும்பாலும் தங்கள் குடும்பத்தில் முதன்மை வருமானம் ஈட்டுபவர்களாகவும் மாறி வருகின்றனர்.

பெண்கள் தலைமையிலான தொழில் நிறுவனங்களை வலுப்படுத்துவதற்கான புதுப்பிக்கப்பட்ட கொள்கை சார்ந்த முன்னெடுப்புகளால் இந்த வேகம் மேலும் அதிகரித்துள்ளது. 'லட்சாதிபதி சகோதரி' போன்ற திட்டங்கள், சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்களின் வருமானத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் ஈட்டும் கோடி கணக்கான பெண் தொழில்முனைவோரை உருவாக்குவதே இதன் இலக்காகும். கடன் வசதி, திறன் மேம்பாடு, சந்தை இணைப்புகளுக்கான விரிவாக்கப்பட்ட வாய்ப்புகள் ஆகியவற்றைக் கொண்டு, வெறும் 'பங்கேற்பு' என்ற நிலையிலிருந்து 'வருமான பாதுகாப்பு' என்ற நிலைக்கு முன்னேறியுள்ளதை இது குறிக்கிறது. இங்கு பெண்கள் வெறுமனே வேலையில் மட்டும் ஈடுபடாமல், மிகவும் வலிமையான வாழ்வாதாரங்களைக் கட்டமைக்கின்றனர்.
அறியப்படாத உழைப்பிலிருந்து, வெளிப்படையான தொழில்முனைவை நோக்கிய இந்த மாற்றம் உள்ளூர் பொருளாதாரத்தை மறுசீரமைத்து வருகிறது.
தொழில்முனைவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் இந்தியாவின் விரிவடைந்து வரும் புத்தொழில் நிறுவனக் கட்டமைப்பிலும் பிரதிபலிக்கிறது. 'புத்தொழில் இந்தியா' திட்டத்தின் கீழ், 2.2 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களுடன் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் மையமாக உருவெடுத்துள்ளது. இவை 23.3 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. குறிப்பாக, இந்த புத்தொழில் நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமானவை குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநரைக் கொண்டுள்ளன. இது புத்தாக்கம் சார்ந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது. நிதி உதவி, தொழில்முனைவோர் ஊக்குவிப்பு ஆதரவு, சாதகமான கொள்கைச் சூழல் ஆகியவற்றால், பெண்கள் தலைமைப் பொறுப்புகளை ஏற்று வருகின்றனர். இது இந்திய பொருளாதாரத்தில் 'பங்கேற்பு' என்பதிலிருந்து 'தொழில்முனைவு' என்பதை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.
அதே நேரத்தில், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் புதிய பாதைகளைத் திறந்து வைத்துள்ளன. 'திறன் இந்தியா இயக்கம்' உள்ளிட்ட அரசின் திறன் மேம்பாட்டு முன்முயற்சிகளின் கீழ், பெண்களுக்கு பல்வேறு துறைகளில் தொழில்துறைக்குத் தேவையான திறன்கள் வழங்கப்படுகின்றன. தொழில்துறை சார்ந்த திறன் மேம்பாட்டிற்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம், வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்தவும், நிலையான, ஆக்கப்பூர்வமான வாழ்வாதாரத்தை நோக்கிய மாற்றத்திற்கும் உதவுகிறது.
இருப்பினும், வாய்ப்புகளைக் கடந்து அளிப்பதோடு, வேலை செய்யும் இடத்தில் பாதுகாப்பும் கண்ணியமும் கிடைப்பது அவசியம்.
சமீபத்திய தொழிலாளர் சீர்திருத்தங்கள் இந்த இடைவெளியைக் குறைக்க முயன்றுள்ளன. 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக ஒருங்கிணைத்தது, ஒழுங்குமுறை கட்டமைப்பை எளிதாக்கியதுடன் பாதுகாப்பையும் விரிவுபடுத்தியுள்ளது. குறைந்தபட்ச ஊதிய அளவு, தொழில்சார் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு தொடர்பான விதிகள் இப்போது முறைசாரா துறைகளில் உள்ளவர்கள் உட்பட தொழிலாளர் வர்க்கத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சீர்திருத்தங்களை வரவேற்றுப் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, "இந்தச் சட்டத் தொகுப்புகள் உலகளாவிய சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச & சரியான நேரத்தில் ஊதியம் வழங்குதல், பாதுகாப்பான பணியிடங்கள், பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் லாபகரமான வாய்ப்புகளை வழங்குவதற்கான வலுவான அடித்தளமாக அமையும்" என்று குறிப்பிட்டார்.
பெண்களைப் பொறுத்தவரை, இது ஒரு முக்கியமான மாற்றத்தைக் குறிக்கிறது. குறைவான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற நிலையில் இருந்து தற்போது அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு முறையான கட்டமைப்பிற்கு அவர்கள் நகர்கின்றனர். இது பாதுகாப்பான, சமமான, கண்ணியமான பணிச் சூழலை உறுதி செய்கிறது.
'இ-ஷ்ரம்' போர்டலில் 31 கோடிக்கும் அதிகமான முறைசாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளதன் மூலம், நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடையச் செய்ய ஒரு விரிவான தேசிய தரவுத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுகளில் விவசாயம், கட்டுமானத்துறையைச் சேர்ந்தவர்களும், பிற முறைசாரா தொழில்களில் ஈடுபடும் பெண் தொழிலாளர்களும் அடங்குவர்.
இந்தியாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் பயனடைவோர் விகிதம் 2015-ல் 19 சதவீதத்திலிருந்து 2025-ல் 64 சதவீதத்திற்கும் மேலாக விரிவடைந்துள்ளது. இது வருங்கால வைப்பு நிதி, காப்பீடு, மருத்துவ வசதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புப் பலன்களைப் பெறுவோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதைப் பிரதிபலிக்கிறது. இந்த விரிவாக்கம் குறிப்பாக முறைசாரா தொழில்களில் ஈடுபட அதிக வாய்ப்புள்ள பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.
இந்த முயற்சிகளின் தாக்கம், இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பின் முக்கிய தூணான தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்தின் கீழ் சுகாதாரச் சேவைகள் வலுப்படுத்தப்படுவதிலும் பிரதிபலிக்கிறது. ஜம்மு-காஷ்மீரின் பட்காமில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட தொழிலாளர் அரசு காப்பீட்டு மருத்துவமனை, 50,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சேவைகளை வழங்குகிறது. இது மருத்துவச் சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவதுடன், தொழிலாளர் நலன் என்ற பரந்த குறிக்கோளை மேலும் வலுப்படுத்தும்.
இங்கு நிகழ்ந்து வருவது மாற்றத்திற்கான ஒரு முன்மாதிரி ஆகும்.
- பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்புத் துறையில் பங்கேற்று வருகின்றனர்.
- அவர்கள் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளிலும் உள்ளூர் தொழில் நிறுவனங்களில் அதிக அளவிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
- திறன் மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் முறைசார் அமைப்புகளுக்கான வாய்ப்புகளை பெண்கள் பெற்று வருகின்றனர்.
- பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் அவர்களின் பங்களிப்பு முன்னெப்போதையும் விட இப்போது தெளிவாகப் புலப்படுகிறது.
அதே நேரத்தில், அதிகரித்து வரும் இந்த பொருளாதாரப் பங்களிப்பு, பிரதிநிதித்துவம், தலைமைத்துவத்திலும் பிரதிபலிக்க தொடங்கியுள்ளது. 'நாரி சக்தி வந்தன் அதினியம்' போன்ற சட்டமியற்றும் நடவடிக்கைகள், முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களின் பங்கை வலுப்படுத்துவதை வலியுறுத்துகிறது.
எனவே, இவ்வாண்டு சர்வதேச தொழிலாளர் தினம் தொழிலாளர்களின் உரிமைகளைப் பற்றி சிந்திக்கும் தருணமாக மட்டுமல்லாமல், தொழிலாளர் சக்தியில் நடைபெற்று வரும் இந்த மாற்றத்தை அங்கீகரிப்பதற்கான தருணமாகவும் திகழ்கிறது. பெண்களின் பங்களிப்பை விரிவாக்கும் வகையில் அமைப்புகள் பரிணாம வளார்ச்சி அடைந்து வரும் நிலையில், உழைப்பு என்பது பாதுகாப்பானதாகவும், கண்ணியமானதாகவும் மற்றும் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருப்பதை உறுதி செய்வதில் தற்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
மாறிவரும் இந்தச் சூழலில், பெண்கள் உழைப்பாளர் வர்க்கத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல், அதன் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் முக்கிய பங்கை வகித்து வருகின்றனர்.
***
SS/PD
(Features ID: 158473)
आगंतुक पटल : 10
Provide suggestions / comments