Infrastructure
ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு: இந்தியாவின் உள்ளூர் பாரம்பரியத்தை ரயில் நிலையங்களுக்குக் கொண்டு வரும் திட்டம்
Posted On:
25 MAR 2026 11:17AM
இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில், உள்ளூர் கைவினைத்திறனை அன்றாடப் பயணங்களின்போது மக்களுக்குத் தெரியப்படுத்தும் ஒரு அமைதியான மாற்றம் நிகழ்ந்து வருகிறது. 2022-23-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்திய ரயில்வேயின் ' ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு' (OSOP - ஓஎஸ்ஓபி) முன்முயற்சியானது, உள்ளூர் கைவினைக்கலைஞர்கள், சுய உதவிக் குழுக்களுக்கு (SHG) சந்தை அணுகலை வழங்கி, நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்கி, பிராந்திய பன்முகத்தன்மையைக் காட்சிப்படுத்துகிறது. இத்திட்டம் பிரத்யேக சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிக்கிறது. இப்போது, 2,000-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் சுமார் 2,326 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு (ஓஎஸ்ஓபி) விற்பனை நிலையங்கள் உள்ளன. இவை உள்ளூர் உற்பத்தியாளர்களை பல லட்சக் கணக்கான பயணிகளிடம் கொண்டு சேர்த்து, 1.32 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்களுக்குப் பயனளிக்கின்றன.
25 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இந்திய ரயில்வேயின் பரந்த அணுகலைப் பயன்படுத்தி, ரயில் நிலையங்களை பிராந்தியப் பொருட்களுக்கான எளிதில் அணுகக்கூடிய சந்தைகளாக மாற்றுகிறது. 19 ரயில் நிலையங்களில் 15 நாட்கள் வெற்றிகரமாக முன்னோட்டம் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, ஓஎஸ்ஓபி திட்டம் கட்டமைக்கப்பட்ட முறையில் விரிவுபடுத்தப்பட்டது. இதில், பரந்த பங்கேற்பை உறுதி செய்வதற்காக, குறைந்த கட்டணத்தில் சுழற்சி முறையில் கடைகள் ஒதுக்கப்பட்டன. ரயில்வே கோட்டங்கள், மாநில முகமைகள், சுய உதவிக் குழுக்கள், குறு, சிறு - நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, சுமூகமான செயல்பாடுகளுக்கும் பரந்த அளவிலான உள்ளடக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
ஓஎஸ்ஓபி திட்டத்தின் கீழ் காட்சிப்படுத்தப்படும் பொருட்கள், ஒவ்வொரு பிராந்தியத்தின் தனித்துவமான அடையாளத்தைப் பிரதிபலிக்கின்றன. தமிழ்நாட்டின் தென்காசி ரயில்வே சந்திப்பில், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட பிரம்புப் பொருட்கள், பழங்குடி மக்களின் திறன்களையும் கைவினைத்திறனையும் எடுத்துக்காட்டி, உள்ளூரில் வேரூன்றிய பாரம்பரியங்களின் மீது கவனத்தை செலுத்துகின்றன. பாட்னா ரயில் நிலையத்தில் உள்ள ஒரு அரங்கில், உலகப் புகழ்பெற்ற மதுபானி ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இது , உள்ளூர் கலைஞர்களுக்கும் கைவினைக்கலைஞர்களுக்கும் இந்தப் பாரம்பரியக் கலையை பரந்த பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல ஒரு தளத்தை வழங்குகிறது.

தென்காசி சந்திப்பு ரயில் நிலையம், தமிழ்நாடு

பீகாரின் பாட்னா ரயில் நிலையத்தில் மதுபானி ஓவியங்கள்
அனைவரையும் உள்ளடக்குவதில் கவனம் செலுத்தி, ஓஎஸ்ஓபி திட்டமானது, கைவினைக்கலைஞர்கள், நெசவாளர்கள், விவசாயிகள், சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு, குறிப்பாக பெண்கள் தலைமையிலான குழுக்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. முறையான சந்தைகளை அணுகுவதில் குறைந்த வாய்ப்பு உள்ளவர்களைக் குறிவைத்து, அவர்களைச் சென்றடைதல், நிறுவன ஒருங்கிணைப்பு மூலம் ஆதரிப்பது ஆகியவற்றின் மூலம், ஓஎஸ்ஓபி திட்டம் அடித்தட்டு சமூகங்கள், தங்களின் பாரம்பரிய வாழ்வாதாரங்களைத் தக்கவைத்துக் கொண்டே, ஒரு பரந்த வாடிக்கையாளர் தளத்துடன் இணைவதற்கு வழிவகை செய்கிறது.
பிராந்திய அடையாளத்தை வெளிக்கொணர்தல்:
ஓஎஸ்ஓபி விற்பனை நிலையங்கள், ஒவ்வொரு மாநிலத்தின் தனித்துவமான கலாச்சார, பொருளாதார அடையாளத்தைப் பிரதிபலிப்பதோடு, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கும் ஆதரவளிக்கும் வகையில், உண்மையான உள்ளூர் தயாரிப்புகளை நினைவுப் பரிசுகளாகப் பயணிகள் வாங்குவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன.
அசன்சோல் ரயில் நிலையம், மேற்கு வங்கம்:

மேற்கு வங்கத்தில் உள்ள அசன்சோல் ரயில் நிலையத்தில், 4-ம் நடைமேடையில் அமைந்துள்ள ஓஎஸ்ஓபி விற்பனை நிலையம், கைத்தறிப் பைகள், கைவினைப் பொருட்கள், தரைவிரிப்புகளைக் காட்சிப்படுத்தி பயணிகளை ஈர்க்கிறது. பயணிகள் பொருட்களைப் பார்த்து வாங்கும் போது, அவர்கள் பொருட்களை மட்டும் எடுத்துச் செல்வதில்லை. அப்பகுதியின் கைவினைத்திறன், கலாச்சார அடையாளத்தின் ஒரு பகுதியையும் தங்களோடு எடுத்துச் செல்கின்றனர்.
மூர் மார்க்கெட் வளாக ரயில் நிலையம், சென்னை:
சென்னை மூர் மார்க்கெட் வளாக ரயில் நிலையத்தில், மாநிலத்தின் வளமான ஜவுளி மரபுகளை எடுத்துக்காட்டும் பருத்தி கைத்தறிப் பொருட்கள் ஒரு கடையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கடைகள், பயணிகள் உண்மையான கைத்தறிப் பொருட்களை வாங்குவதற்கும், உள்ளூர் நெசவாளர்களை ஆதரிப்பதற்கும் வழிவகுக்கின்றன. அருகில் உள்ள ஒரு அத்தர் வாசனைத் திரவியக் கடை, பார்வையாளர்களுக்குப் பாரம்பரிய நறுமணங்களை அறிமுகப்படுத்துகிறது.

இது புலன்சார் அனுபவத்தைக் கலாச்சாரப் பாரம்பரியத்துடன் ஒன்றிணைத்து, உள்ளூர் கைவினைக்கலைஞர்களையும் அவர்களின் கைவினைத்திறனையும் ஆதரிக்கும் அதே வேளையில், பயணிகள் பாரம்பரியத்தை உணர்வதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. தெற்குக் கடற்கரையிலிருந்து கிழக்குப் பகுதி வரை, இந்த முயற்சி உள்ளூர் கைவினைத்திறனை ஒரு பரந்த பார்வையாளர்களுடன் தொடர்ந்து இணைத்து வருகிறது.

பாலங்கீர் ரயில் நிலையம், ஒடிஷா:

ஒடிஷாவின் பாலங்கீர் ரயில் நிலையத்தில், ' ஒரு நிலையம் ஒரு பொருள்' (OSOP- ஓஎஸ்ஓபி) திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு சிறிய பொம்மைக் கடை, உள்ளூர் கைவினைக்கலைஞர்களுக்கும் சுய உதவிக் குழுக்களுக்கும் வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. பல வண்ணமயமான, கையால் செய்யப்பட்ட பஞ்சுப் பொம்மைகளைக் காட்சிப்படுத்தும் இந்தக் கடை, உள்ளூர் சமூகத்தினரின், குறிப்பாக, சுய உதவிக் குழுக்களுடன் தொடர்புடைய பெண்களின் படைப்பாற்றலையும் திறமையையும் பிரதிபலிக்கிறது. இதன்மூலம் அவர்கள் இப்போது தங்கள் தயாரிப்புகளை நேரடியாக ஒரு பரந்த சந்தைக்குக் கொண்டு செல்ல முடிகிறது.
ரயில் நிலையத்திற்குத் தொடர்ச்சியாகப் பயணிகள் வந்து செல்வதால், இந்த விற்பனை நிலையம் மக்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இது கைவினைக்கலைஞர்கள் தங்களது பாரம்பரியக் கைவினைத்திறனைப் பாதுகாத்து, நிலையான வருமானத்தை ஈட்ட உதவுகிறது. இந்த முயற்சி, பிராந்தியக் கைவினைப் பொருட்களை ஊக்குவிப்பது மட்டுமின்றி, அடிமட்ட அளவில் தொழில்முனைவையும் வலுப்படுத்துகிறது. மேலும், உள்ளூர் உற்பத்தியாளர்களைத் தேசிய அளவிலான பார்வையாளர்களுடன் இணைப்பதன் மூலம் 'உள்ளூருக்காகக் குரல் கொடுப்போம்' என்ற தத்துவத்தையும் இது செயல்படுத்துகிறது. மேற்கு நோக்கிச் செல்லச் செல்ல, பொருட்களின் பன்முகத்தன்மை மாறுகிறது. ஆனால் அதன் அடிப்படைத் தாக்கம் மாறாமல் இருந்து, பாரம்பரியத் திறன்களைப் பாதுகாத்துக்கொண்டே கைவினைக்கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.
ஜெய்ப்பூர் சந்திப்பு ரயில் நிலையம், ராஜஸ்தான்:

ஜெய்ப்பூர் சந்திப்பு ரயில் நிலையத்தில் உள்ள ஓஎஸ்ஓபி விற்பனை நிலையம், ராஜஸ்தானின் சங்கனேரி அச்சுத் துணிகளின் உயிரோட்டமான பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கிறது. பயணிகள், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட அந்தத் துணிகளை ரசிக்கும்போது, இந்த அரங்கு அப்பகுதியின் செழுமையான கலைப் பாரம்பரியத்தைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. பாரம்பரியத்தைக் காட்சிப்படுத்துவதைத் தாண்டி, இந்த முயற்சி உள்ளூர் கைவினைக்கலைஞர்களுக்கு ஒரு முக்கிய தளத்தை வழங்குவதோடு, தொன்மையான கைவினைத்திறனைப் பாதுகாத்து, நிலையான வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.
டாட்டாநகர் ரயில் நிலையம், ஜார்க்கண்ட்:

இதேபோல், ஜார்க்கண்டில் உள்ள டாட்டாநகர் ரயில் நிலையத்தில், ஓஎஸ்ஓபி விற்பனை நிலையத்தில் உள்ளூர் கைவினைக்கலைஞர்களால் செய்யப்பட்ட பலதரப்பட்ட கைவினைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. அவர்களில் பலருக்கு, இந்தத் தளம் உள்ளூர் எல்லைகளைத் தாண்டி சந்தை அணுகலை விரிவுபடுத்தி, அவர்களின் படைப்புகள் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைய வழிவகுத்துள்ளது. அரங்கில் நடைபெறும் ஒவ்வொரு உரையாடலும் பாரம்பரியத்திற்கும் வாய்ப்புக்கும் இடையிலான ஒரு இணைப்பாக அமைகிறது.
இந்தியாவின் உள்ளூர் திறமையாளர்களுக்கான ஒரு களம்
ஓஎஸ்ஓபி விற்பனை நிலையங்களின் விரிவடைந்து வரும் கட்டமைப்பு, பொது உள்கட்டமைப்பு எவ்வாறு அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு ஆதரவளிக்க முடியும் என்பதை விளக்குகிறது. உள்ளூர் தயாரிப்புகளை அன்றாடப் போக்குவரத்துக்கான இடங்களில் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்த முயற்சி பாரம்பரியத் திறன்களைப் பாதுகாத்துக்கொண்டே அடித்தள தொழில்முனைவை வலுப்படுத்துகிறது.
மிக முக்கியமாக, ஓஎஸ்ஓபி விற்பனை நிலையங்கள், வழக்கமான பயணங்களை அர்த்தமுள்ளதாக மாற்றுகின்றன. பயணிகள் தாங்கள் வாங்கும் பொருட்களுக்குப் பின்னால் உள்ள கதைகளைத் தெரிந்து கொள்கிறார்கள். அதே நேரத்தில் கைவினைக்கலைஞர்கள் அங்கீகாரத்தையும் பொருளாதார ஸ்திரத்தன்மையையும் பெறுகிறார்கள். இந்தப் பரிமாற்றத்தில், கலாச்சாரம், வர்த்தகம், சமூகம் ஆகியவை சங்கமிக்கும் இடங்களாக ரயில் நிலையங்கள் பரிணமிக்கின்றன. ஓஎஸ்ஓபி விற்பனை நிலையங்கள் தொடர்ந்து விரிவடைந்து வரும் நிலையில், தேசிய தளங்கள் மூலம் உள்ளூர் திறமைகளை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு வலுவான உதாரணமாகத் திகழ்கிறது. இந்தியாவின் வளமான பாரம்பரியம் அதன் பிறப்பிடத்தைத் தாண்டி வெகுதூரம் பயணிப்பதை இது உறுதி செய்கிறது.
***
PD/PLM/PD
(Features ID: 158465)
आगंतुक पटल : 51
Provide suggestions / comments