Social Welfare
பழங்குடியினர் கலைக் கண்காட்சி 2026
பெண் கலைஞர்கள் மரபுகளை முன்னெடுத்துச் செல்கின்றனர்
Posted On:
17 MAR 2026 10:19AM
இந்தியாவின் பழங்குடியினக் கலைப் பாரம்பரியத்தைக் கொண்டாடுதல் :
புது தில்லியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருவிதாங்கூர் அரண்மனை, பழங்குடியினர் கலை விழா 2026 நிகழ்வின்போது, இந்தியாவின் பழங்குடியின பாரம்பரியத்தின் வண்ணம், தாளம், கதைகள் ஆகியவற்றால் உயிர்பெற்றது. 2026 மார்ச் 02 முதல் 13-ம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, நாடு முழுவதிலுமிருந்து 30-க்கும் மேற்பட்ட தனித்துவமான பழங்குடியின கலை வடிவங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 75-க்கும் மேற்பட்ட பழங்குடியின கலைஞர்களையும், ஏறக்குறைய 1,000 கலைப்படைப்புகளையும் ஒன்றிணைத்தது.

பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பான ஃபிக்கி, தேசிய நவீன கலைக்கூடம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழா, பழங்குடியினர் மேம்பாட்டிற்கான அரசின் பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது. பாதிக்கப்படக் கூடிய பழங்குடியினர் மேம்பாட்டுக்கன பிரதமரின் ஜன்மன் திட்டம், பயன்கள் முழுமையடைவதற்கான, தர்தி ஆபா பழங்குடியின கிராம மேம்பாட்டு இயக்கம் (DAJGUA), ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளின் விரிவாக்கம், பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பு (ட்ரைஃபெட் - TRIFED) ஆகியவை மூலம் வலுப்படுத்தப்பட்ட சந்தை இணைப்புகள் போன்ற முன்முயற்சிகள் பழங்குடியினர் கலைக் கண்காட்சியின் முதுகெலும்பாக அமைந்தன.
பழங்குடியினர் கலை விழா, அடையாளப்பூர்வமான கொண்டாட்டத்தைத் தாண்டி, கட்டமைக்கப்பட்ட சந்தைச் சூழல் அமைப்புகளை உருவாக்கியது. இது கலைப் பொருள்கள் சேகரிப்பாளர்கள், கலைக்கூடங்கள், பெருநிறுவனங்கள், வடிவமைப்பு நிறுவனங்கள், மக்கள் ஆகியோருடன் பழங்குடியினக் கைவினைக் கலைஞர்களை நேரடியாக இணைத்தது. இது அவர்களின் படைப்புகளுக்கு நியாயமான மதிப்பை உறுதிசெய்து, கலாச்சாரப் பாரம்பரியத்தை நிலையான வாழ்வாதாரங்களாக மாற்றியது.
இந்தக் கண்காட்சி, இந்தியா முழுவதிலுமிருந்து வந்த பழங்குடியினரின் கலை மரபுகளின் ஒரு துடிப்பான பன்முகத் தன்மையைப் பிரதிபலித்தது. இதில் மகாராஷ்டிராவின் வார்லி, மத்தியப் பிரதேசத்தின் கோண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத்தின் பில், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், ஒடிசாவின் டோக்ரா உலோகக் கைவினைக் கலை, ஜார்க்கண்டின் சோஹ்ராய், தெலங்கானா, ஆந்திரப் பிரதேசத்தின் கோயா கலை, தமிழ்நாட்டின் குரும்பா கலை, ஒடிசாவின் சௌரா ஓவியம், அசாம் - வடகிழக்குப் பகுதியின் போடோ கலை, ஜார்க்கண்ட், சத்தீஸ்கரின் ஓரோன் கலை ஆகியவை இடம்பெற்றிருந்தன. இந்த விழாவில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசத்தின் மந்தனா, பீகார், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரின் கோட்னா, வடகிழக்குப் பகுதியின் மூங்கில் கைவினைப்பொருட்கள் உட்பட பல பழங்குடி மரபுகளும் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தும் சேர்ந்து, இந்தியாவின் குறிப்பிடத்தக்க பிராந்திய பன்முகத்தன்மையையும், இயற்கை, சடங்குகள், கூட்டு நினைவுகள் ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு பகிரப்பட்ட நாகரிகத் தொடர்ச்சியையும் பிரதிபலித்தன.

பண்பாட்டுச் சின்னங்களின் பாதுகாவலர்களான பெண்கள் :
இந்தியாவில் உள்ள பல பழங்குடி சமூகங்களில், காட்சி மரபுகளைப் பேணிப் பாதுகாப்பதில் பெண்கள் நீண்ட காலமாக ஒரு முக்கியப் பங்காற்றி வருகின்றனர். பண்டிகைகளின் போது வீடுகளின் மண் சுவர்களை அலங்கரிப்பது முதல், கலையின் மூலம் இயற்கை, அறுவடை, சடங்குகள் ஆகியவை குறித்த கதைகளை விவரிப்பது வரை, பெண்கள் பண்பாட்டுச் சின்னங்களுக்கும் படைப்பாற்றலுக்கும் பாதுகாவலர்களாகத் திகழ்ந்துள்ளனர்.
பழங்குடியினர் கலைக் காண்காட்சி 2026-ல், இந்தப் பாரம்பரியங்களை தேசிய அளவில் கொண்டு சேர்த்த பல பெண் கலைஞர்களின் படைப்புகள் இடம்பெற்றது. இதன் மூலம், இந்த மரபு புத்துயிர் பெற்றது. அவர்களின் ஓவியங்கள் மூதாதையர்களின் அறிவைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், தற்காலத் தளங்களுக்கு ஏற்றவாறு அதனைக் கொண்டு செல்லும் ஆற்றலையும் அளிக்கின்றன.
இயற்கையில் வேரூன்றிய கலை :
மகாராஷ்டிராவின் அமராவதியைச் சேர்ந்த 38 வயதான வார்லி கலைஞர் சுமித்ரா அஹாகேவைப் பொறுத்தவரை, பழங்குடியினரின் கலை என்பது வெறும் வெளிப்பாட்டு வடிவம் மட்டுமல்ல. அது பழங்குடியின சமூகங்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஆழமான ஆன்மீக உறவின் பிரதிபலிப்பாகும். கிட்டத்தட்ட பதினான்கு ஆண்டுகளாக வார்லி ஓவியம் வரைந்து வரும் இவர், விவசாயம், அறுவடை, நடனம், சமூக நிகழ்வுகள் போன்ற காட்சிகளைச் சித்தரிக்க எளிய வடிவியல் வடிவங்களைப் பயன்படுத்துகிறார்.
"எங்கள் சமூகத்தில், இயற்கை ஒரு தெய்வம் போன்றது. அறுவடை போன்ற பணிகளைத் தொடங்குவதற்கு முன், நாங்கள் முதலில் பிரார்த்தனை செய்து பூமிக்கும் வனத்திற்கும் நன்றியைத் தெரிவிப்போம்." என்று அவர் கூறுகிறார்.

இந்தச் சடங்குகள் பல வார்லி ஓவியங்களில் பிரதிபலிக்கின்றன. அவை பெரும்பாலும் இயற்கை வழிபாடு, சமூக ஒன்றுகூடல்கள், மனிதர்களுக்கும் அவர்களின் சுற்றுச்சூழலுக்கும் இடையிலான நல்லிணக்கத்தைக் கொண்டாடும் விழா, நடனங்கள் போன்ற காட்சிகளை இந்த ஓவியங்கள் சித்தரிக்கின்றன. வெற்றிகரமான அறுவடைக்குப் பிறகு, சமூகம் தனது முதல் விளைச்சலை உள்ளூர் தெய்வங்களுக்குப் படைத்து, இசையுடனும் நடனத்துடனும் ஒன்றாகக் கொண்டாடுகிறது. இந்த மரபுகள் பல ஓவியங்களிலும் இடம்பெறுகின்றன.
பட்டதாரியான சுமித்ரா, தமது கலைப் பயிற்சியுடன், குழந்தைகளுக்குக் கலை, இசை, கதைசொல்லல் ஆகியவை மூலம் அவர்களுக்குக் கலாச்சாரப் பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தி கற்பிக்கிறார். கண்காட்சிகள், கலை விழாக்கள், இணையதளங்கள் ஆகியவை மூலம், அவர் தமது கிராமத்தைத் தாண்டி பரந்த பார்வையாளர்களைச் சென்றடைகிறார். இருப்பினும், அவரது நோக்கம் சமூகக் கலாச்சாரத் தொடர்ச்சியில் ஆழமாக வேரூன்றியுள்ளது.
கோண்ட் பாரம்பரியத்தின் தலைமுறைகள் :
"என் ஓவியங்கள் வழியாக கோண்ட் பர்தான் பாரம்பரியத்தைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்ல உதவ முடிகிறது என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு ஓவியமும் என் மக்களின் பண்பாட்டு அடையாளத்தைப் பிரதிபலிக்கிறது." என்று கோண்ட் ஓவியக் கலைஞரான 55 வயதான நங்குஷியா ஷ்யாம் கூறுகிறார். அவர் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகால கலை அனுபவத்தைக் கொண்டுள்ளார். தமது 18-வது வயதில் ஓவியம் வரையத் தொடங்கிய அவர், தன் குடும்பத்தினருடன் இக்கலையைக் கற்றுக்கொண்டு, பல ஆண்டுகளாகப் படிப்படியாகத் தனது திறமையை வளர்த்துக்கொண்டார்.

விலங்குகள், காடுகள், புராணக் கதைகளுக்கு உயிரூட்டும், துடிப்பான வண்ணங்கள், நுணுக்கமான வடிவங்களுக்காக கோண்ட் ஓவியங்கள் புகழ் பெற்றவை. நங்குஷியாவைப் பொறுத்தவரை, ஓவியம் என்பது ஒரு தனிப்பட்ட பேரார்வமாகவும், ஒரு கலாச்சாரப் பொறுப்பாகவும் விளங்குகிறது.
பழங்குடியினர் கலை விழா போன்ற தளங்கள் மூலம், தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்த கலைஞர்கள் தங்கள் சமூகங்களின் கலாச்சார அடையாளத்தைப் பாதுகாத்துக்கொண்டே, தங்கள் பாரம்பரியத்தை பரந்த பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்த வாய்ப்புகளைப் பெறுகிறார்கள் என்று அவர் கூறினார். நங்குஷியா ஷ்யாமைப் பொறுத்தவரை, கோண்ட் கலைப் பாரம்பரியம் தொடர்ந்து செழித்து வளர்ந்து புதிய தலைமுறையினரைச் சென்றடைவதை உறுதி செய்வதே அவரது பணியின் தெளிவான நோக்கமாக உள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான ஒரு இளம் குரல் :
"பழங்குடியின சமூகத்தினருக்கு, இயற்கையே ஒரு வழிபாட்டு வடிவம் போன்றது. நாம் இயற்கையை மதித்துப் பாதுகாத்தால், அது தொடர்ந்து நமக்குத் வாழ்வாதாரமாக இருந்து, நமது வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் சமநிலையுடனும் வைத்திருக்கும்." என்று ஜார்க்கண்ட் மாநிலம் ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த, 26 வயதான சுதா குமாரி கூறுகிறார். இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு ஊடகமாகக் கலையைப் பயன்படுத்தும் இளம் தலைமுறைப் பழங்குடியினக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்கிறார். அவரது தற்கால ஓவியங்கள், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், 'ஜல், ஜமீன், ஜங்கிள்' — அதாவது 'நீர், நிலம், காடுகள்' என்ற பழங்குடியினரின் தத்துவத்திலிருந்து உத்வேகம் பெறுகின்றன.

இப்போது அவர் ஓவியம், சுவரோவியங்கள், கைவினைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு கலைகளில் ஈடுபட்டுள்ளதோடு, பழங்குடியினரின் வாழ்க்கை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றில் வேரூன்றிய கருப்பொருள்களையும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார்.
பழங்குடியினர் கலை விழாவில் முதல் முறையாகப் பங்கேற்றது ஒரு உத்வேகம் அளிக்கும் அனுபவமாக இருந்தது என்று அவர் கூறினார். இந்தியா முழுவதிலுமிருந்து கலைஞர்கள் தங்களின் தனித்துவமான பாரம்பரியங்களை ஒரே தேசிய தளத்தில் முன்வைப்பதைக் காண்பது, இந்தியாவின் படைப்பாற்றல் மிக்க எதிர்காலத்தில் பழங்குடியினரின் கலைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு என்ற அவரது நம்பிக்கையை வலுப்படுத்தியது.
இந்தியாவின் பழங்குடியினப் பன்முகத்தன்மையின் அடையாளம் :

பழங்குடியினர் கலை விழா ஒரு வழக்கமான கண்காட்சிக்கு அப்பாற்பட்டதாக அமைந்தது. இந்த விழாவில், வடகிழக்குப் பகுதியின் வலுவான பங்கேற்புடன், தற்கால பழங்குடியின கலைஞர்களின் கலை வெளிப்பாடுகளும் கூட்டுப் படைப்புகளும் இடம்பெற்றன.
12 நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 'பழங்குடியினக் கலை மறுமலர்ச்சி - நிலையான எதிர்காலங்கள்', 'தற்காலச் சூழல்களில் பழங்குடியினக் கலை', 'வாழ்வாதாரங்களும் சந்தை இணைப்புகளும்' ஆகிய தலைப்புகளில் குழு விவாதங்கள் இடம்பெற்றன. இது கலைஞர்கள், ஆர்வலர்கள், நிறுவனங்கள், கொள்கை வகுப்பாளர்கள் ஆகியோரைக் கட்டமைக்கப்பட்ட உரையாடல்களுக்குள் ஒன்றிணைத்தது. பங்கேற்புப் பயிலரங்குகள், கதைசொல்லும் அமர்வுகள், நேரடி செயல்விளக்கங்கள் ஆகியவை, பார்வையாளர்களை மரபுகளைத் தொலைவிலிருந்து கவனிப்பதற்குப் பதிலாக, அவற்றுடன் நேரடியாக ஈடுபட அனுமதித்தன.
சிறப்புத் தேவையுடைய நபர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய பயிலரங்குகள், சமூகப் பங்கேற்பை மேலும் விரிவுபடுத்தின. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு மாலையும் பழங்குடி இசை, நடனம் ஆகியவை இடம்பெற்ற தினசரி கலாச்சார நிகழ்ச்சிகள், விழா நடைபெறும் இடத்தை உயிரோட்டமாக்கின.
இந்தியா முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின கலை மாணவர்கள், மூத்த கலைஞர்களுடன் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட செயல்முறை விளக்கங்களிலும் வழிகாட்டுதல் அமர்வுகளிலும் பங்கேற்றுப் பயன் பெற்றனர். இதன் மூலம், பாரம்பரியக் கலை அடுத்த தலைமுறை கலைஞர்களுடன் இணைக்கப்பட்டது.

பழங்குடியினக் கலைக் கண்காட்சி 2026-ன் ஒரு சிறப்பு அம்சம், ‘கும் திட்டம் – படைப்பாற்றலில் வேரூன்றியது’ என்பதாகும். திரிபுராவின் கோக்போரோக் மொழியில் 'கும்' என்றால் ‘ பூ ’ என்று பொருள்படும். இது மலர்தல், வீரியம், முழுமையான படைப்பாற்றல் வெளிப்பாடு ஆகியவற்றைக் குறிக்கிறது. ஒரு பங்கேற்பு அம்சமாக வடிவமைக்கப்பட்ட இதில், பழங்குடிப் பெண் கலைஞர்கள் ஒன்றிணைந்து, வண்ணம், உருவமைப்பு, வாழ்வியல் மரபு ஆகியவற்றின் மூலம் ஒரு பொதுவான காட்சிக் கட்டமைப்பை உயிரோட்டமான கலைப்படைப்பாக மாற்றினர். சர்வதேச மகளிர் தின உணர்வுடன் அமைந்த இந்த அம்சம், பெண்களின் படைப்பாற்றல், தலைமைத்துவம், கலாச்சார நினைவுகள் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியதுடன், பெண்கள் படைக்கும்போது கலாச்சாரம் மலர்கிறது என்பதையும் உறுதிப்படுத்தியது.

பாரம்பரியத்தை எதிர்காலத்திற்கு எடுத்துச் செல்லுதல் :
பழங்குடியினர் கலை விழாவில் பங்கேற்ற பல பெண் கலைஞர்களுக்கு, ஓவியம் என்பது ஒரு தொழில் என்பதை விட மேலானதாக உள்ளது. அது தங்கள் சமூகங்களின் கதைகளைப் பாதுகாக்கும் ஒரு வழியாக அவர்கள் உணர்கிறார்கள். இந்தக் கலைஞர்கள், தனிப்பட்ட நினைவுகளையும் பண்பாட்டு மரபுகளையும், தங்கள் கிராமங்களைத் தாண்டியும் எதிரொலிக்கும் காட்சிப் புனைவுகளாக மாற்றினர்.
திருவிதாங்கூர் அரண்மனையின் அரங்குகள் வண்ணங்களாலும் படைப்பாற்றலாலும் நிறைந்திருக்க, பழங்குடியினர் கலை விழா இந்தியாவின் பூர்வீகக் காட்சி மரபுகளின் ஓர் உயிரோட்டமுள்ள காட்சிக்கூடமாகத் திகழ்ந்தது. இது, பழங்குடியின சமூகங்களின் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, பண்பாட்டுப் பாதுகாப்பு, நிலையான பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியது.
இது, பொருளாதார முன்னேற்றத்தைப் போலவே, பாரம்பரியத்தின் மீதும் கட்டமைக்கப்படும் இலக்கான '2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்தது. விழாவில் பங்கேற்ற பெண் கலைஞர்கள், தங்கள் மரபுகளை ஒவ்வொரு தூரிகை அசைவிலும் முன்னோக்கி எடுத்துச் சென்று, அந்த வாக்குறுதிக்குச் சான்றாகத் திகழ்கின்றனர்.
***
PD/PLM/PD
(Features ID: 158464)
आगंतुक पटल : 33
Provide suggestions / comments