Social Welfare
வண்ணமயமான உலகம் - பழங்குடியினர் கலை விழா 2026-ல் ஒலித்த குரல்கள்
Posted On:
16 MAR 2026 10:44AM
பழங்குடியினர் கலைகள் குறித்த உரையாடல் :

2026 மார்ச் 03 முதல் 13 வரை, புது தில்லியில் உள்ள திருவிதாங்கூர் அரண்மனை வளாகம் விழாக்கோலம் பூண்டது. அந்த வளாகம், உழைக்கும் கலைஞர்கள், பழங்குடி மரபுகளை ஆராயும் பார்வையாளர்கள், இயற்கை நிறமிகளின் மெல்லிய நறுமணம் ஆகியவற்றால் நிறைந்த படைப்பாற்றலுடன் உயிர்ப்புடன் விளங்கியது. இதுவே, மத்திய அரசின் பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தேசிய கலாச்சார நிகழ்வான 'பழங்குடியினர் கலை விழா 2026' ஆகும். இது, நாடு முழுவதிலுமிருந்து 30-க்கும் மேற்பட்ட தனித்துவமான பழங்குடியின கலை மரபுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 75-க்கும் மேற்பட்ட பழங்குடியினக் கலைஞர்களையும் 1,000-க்கும் மேற்பட்ட கலைப் படைப்புகளையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்தது. தேசிய நவீன கலைக்கூடம், இந்திய தொழில் வர்த்தக சம்மேளனமான ஃபிக்கி (FICCI) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, ஒரு கண்காட்சி என்பதை விடவும் மிக மேலானதாக இருந்தது. இந்தக் கலைப்படைப்புகளானது, பழங்குடி கதைகள், புராணங்கள், இயற்கை, சமூக வாழ்க்கை ஆகியவற்றைச் சித்தரித்து, இந்தியாவின் பூர்வீக கலாச்சார பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தின. இது, பாரம்பரிய அறிவு அமைப்புகள் புதிய பார்வையாளர்களை ஈர்த்து, கலைப்படைப்புகள் வாங்குபவர்களை ஒருங்கிணைத்து, பாரம்பரியத்திற்கு தகுதியான அங்கீகாரம் வழங்கும் ஒரு தளமாக அமைந்தது.

கண்காட்சிக்கு அப்பால், பழங்குடியினர் கலை விழாவில், 'பழங்குடியினர் கலை மறுமலர்ச்சியும் நிலையான எதிர்காலமும்', 'தற்கால பழங்குடியினர் கலை', 'வாழ்வாதாரங்கள் - சந்தை இணைப்புகள்' போன்ற கருப்பொருள்களில் குழு விவாதங்கள் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்புப் பயிலரங்குகள், பழங்குடியினர் கலைகள் மூலம் கதை சொல்லுதல், விளக்க உரைகள், நேரடி செயல்விளக்கங்கள் ஆகியவை அடங்கியிருந்தன. இந்தியா முழுவதிலும் இருந்து கலை பயிலும் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவர்களுக்கு, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சுற்றுப்பயணங்கள், மூத்த பழங்குடியின கலைஞர்களுடனான வழிகாட்டுதல் அமர்வுகள், நேரடி விளக்கச் செயல்முறைகளைக் காணும் வாய்ப்பு ஆகியவை வழங்கப்பட்டன.
வார்லி ஓவியம் - பழங்கால மரபுகளின் ஓர் உயிரோட்டமான இணைப்பு :

மதுகர் ராம்பாவ் வாடு தனது எட்டு வயதில் வார்லி ஓவியக்கலையைப் பயிலத் தொடங்கி, கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளாக இக்கலைக்குத் தன்னை அர்ப்பணித்துள்ளார். தற்போது 56 வயதாகும் அவர், ஒரு கலைஞர் மட்டுமல்லாமல், எழுத்தாளர், ஆய்வாளர், பாரம்பரியத்தின் பாதுகாவலரும் ஆவார். வரலாற்றுக்கு முந்தைய குகை ஓவியங்களையும், பழங்காலப் பாறைச் ஓவியங்களையும் வார்லி கலையுடன் இணைக்கும் புலப்படாத தொடர்பை ஆராய்வதும் ஆய்வு செய்வதும் அவரது பேரார்வம்.
மகாராஷ்டிராவின் ஒரு நாட்டுப்புறக் கலை மரபான வார்லி ஓவியம், வார்லி பழங்குடியினரால் பயிற்றுவிக்கப்படுகிறது. கி.பி. 10-ம் நூற்றாண்டு அல்லது புதிய கற்காலத்தில் (கி.மு. 2,500–3,000) வேரூன்றியிருக்க வாய்ப்புள்ள இது, இயற்கையுடனான ஆழமான தொடர்பைப் பிரதிபலிக்கிறது. விவசாயம் அந்தப் பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாக இருப்பதால், இயற்கைக் கூறுகள் அவர்களின் கலையின் மையமாக உள்ளன. பாரம்பரியமாக, கலைஞர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் இயற்கையின் மீதான மரியாதையையும் சித்தரிக்க, பழங்கால குகை ஓவியங்களைப் போலவே, களிமண் சுவர்களையும் ஓவியத் தளங்களாகப் பயன்படுத்துகின்றனர். அரிசிப் பசையிலிருந்து தயாரிக்கப்பட்ட வெள்ளை நிறமியைப் பயன்படுத்தி, அவர்கள் அன்றாட வாழ்வின் சிக்கலான தன்மையை வட்டங்கள், முக்கோணங்கள், சதுரங்கள் போன்ற அடிப்படை வடிவியல் வடிவங்களாகச் சுருக்கி, விவசாயம், வேட்டையாடுதல், கிராம மக்களின் சடங்குகள், உற்சாகமான தர்ப்பா நடனம் போன்ற காட்சிகளைச் சித்தரிக்கின்றனர். ஒவ்வொரு ஓவியமும், சாராம்சத்தில், சமூகத்திற்கும் அது வாழும் இயற்கை உலகத்திற்கும் இடையிலான ஒரு உரையாடலாகும்.

மதுகரைப் பொறுத்தவரை, பழங்குடியினர் கலை விழா போன்ற நிகழ்வுகள் வெறும் கண்காட்சிகள் மட்டுமல். அவை கலாச்சாரத்தைப் பரப்பும் செயல்பாடுகளாகும். பழங்குடியினரின் கலை மரபுகள் தங்களுக்குரிய பார்வையாளர்களை உண்மையாகவே சென்றடைய வேண்டுமானால், இதுபோன்ற விழாக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் அடிக்கடி நடைபெற வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
"இது மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு மிக முக்கியமான தளம்," என்கிறார் அவர். "இது பழங்குடியினர் கலையைப் பற்றி மக்கள் அறிந்துகொள்ள உதவுவதோடு, அத்துறையில் ஈடுபட விரும்பும் இளம் கலைஞர்களையும் ஊக்குவிக்கிறது" என்று அவர் கூறுகிறார். இந்த விழாவில் அவருடைய படைப்புகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வார்லி கலையை முதன்முறையாகக் கண்ட பார்வையாளர்கள் அவருடைய பல ஓவியங்களை வாங்கியுள்ளனர்.
கதைகள் சொல்லும் அம்சங்கள் - ரபா, தமாங் மரபுகள்:
சில கடைகள் தள்ளி, பார்வையாளர்களை முறைத்துப் பார்க்கும் முகங்கள் இருந்தன. அவை உயிருள்ள மனிதர்களுடையவை அல்ல; மாறாக, அவை கடவுள்கள், ஆவிகள், புராண பாத்திரங்களுடையவை. அவை, மேற்கு வங்கத்தின் அலிபுர்துவாரைச் சேர்ந்த 64 வயதான கலைஞர் சாந்தி ராம் ரபாவால் உருவாக்கப்பட்ட ரபா, தமாங் முகமூடி ஓவியக் கலைகள் ஆகும்.

முக்கியமாக அசாம், வட வங்காளத்தின் சில பகுதிகளில் காணப்படும் ரபா பழங்குடியினரிடையே, முகமூடி தயாரித்தல் என்பது நாட்டுப்புற நாடகம், சடங்கு நடனத்திலிருந்து பிரிக்க முடியாத ஒரு தொன்மையான கைவினையாகும். மரம், மூங்கில், சுரைக்காய் அல்லது களிமண்ணில் செதுக்கப்பட்டு, வண்ணமயமான நிறங்களால் தீட்டப்படும் ஒவ்வொரு முகமூடியும், விழாக்களின் போது புராண உருவங்கள், விலங்குகள் அல்லது ஆவிகளைச் சித்தரிக்கின்றன. இமயமலைப் பகுதியின் தமாங் மரபுகளும் இதே போன்ற ஒரு ஆன்மீக இலக்கணத்தைப் பகிர்ந்து கொள்கின்றன. கலைஞர்கள் தெய்வங்களையும் புராணங்களையும் உருவகப்படுத்த முகமூடிகளை அணிகின்றனர். இதன் மூலம் மனிதனுக்கும் தெய்வத்தன்மைக்கும் இடையிலான இடைவெளியை அவர்கள் தகர்க்கின்றனர்.
ரபாவின் கதையை மிகவும் குறிப்பிடத்தக்கதாக ஆக்குவது என்னவென்றால், அவர் இந்தக் கலைக்குத் தனது இளமைப் பருவத்தில் வரவில்லை. மாறாகப் பல ஆண்டு கால ராணுவ சேவைக்குப் பிறகே வந்தார். முகமூடி தயாரிக்கும் கருவிகளைக் கையில் எடுப்பதற்கு முன்பே அவர் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார். தனிப்பட்ட ஆர்வமாகத் தொடங்கிய இது, விரைவிலேயே ஒரு அமைப்பாக மாறியது. பழங்குடியினர் கலை விழாவில், அவர் ஏற்கனவே உணர்ந்ததை அந்தச் சந்தை உறுதி செய்தது. விழாவின் முதல் நாளிலேயே அவர் செய்த பல முகமூடிகள் விற்றுத் தீர்ந்தன.
அவரைப் பொறுத்தவரை, ஒரு முகமூடியை விற்பதை விட, இந்தப் பரிமாற்றம் உணர்த்தும் விஷயமே முதன்மையானது. இந்தக் கதை சொல்லும் மரபுகளைப் புதியவர்களின் பார்வைக்குக் கொண்டு வருவதற்கும், அவற்றை முன்னெடுத்துச் செல்லும் கைவினைக்கலைஞர்கள் மறைந்த பிறகும், கலை மறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கும் கிடைக்கும் ஒரு வாய்ப்பு இது.
கோண்ட் கலை - வடிவமைப்பு, வண்ணம் ஆகியவற்றின் வழியான கதைகள்:

கோண்ட் ஓவியக்கலை, மத்திய இந்தியா முழுவதிலும், குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் உள்ள வீடுகளின் சுவர்களிலும் தரைகளிலும் வேரூன்றியுள்ளது. அங்கு, கோண்ட் சமூகக் கலைஞர்கள் ஒரு காலத்தில் களிமண், கற்கள், பூக்கள், மூலிகைகளிலிருந்து நிறமிகளைக் கலந்து, விலங்குகள், பறவைகள், மரங்கள் ஆகியவற்றை அன்றாட வாழ்வில் வரைந்தனர். இந்தக் கலை வடிவம், சிக்கலான புள்ளிகள், கோடுகளைப் பயன்படுத்தும் அதன் தனித்துவமான நுட்பத்திற்காகப் புகழ்பெற்றது. இது ஓவியங்களுக்கு ஒரு தாளகதியான, கிட்டத்தட்ட இசைத்தன்மையுள்ள இயல்பை அளிக்கிறது. இந்த ஓவியங்கள் வெறும் அலங்கார ஓவியங்கள் அல்ல. மாறாக, அவை நாட்டுப்புறக் கதைகள், சமூக நினைவுகள், வன வாழ்வின் ஆழமான சூழலியல் ஆகியவற்றில் வேரூன்றிய கதையாடல்களாகும்.
மத்தியப் பிரதேசத்தின் கோண்ட் ஓவியம், புவி சார் குறியீடு (GI) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. இது அந்த கலை வடிவத்தின் தனித்துவமான பிராந்திய தோற்றத்திற்கான முறையான அங்கீகாரமாகவும், அந்த ஓவியர்களின் பாரம்பரிய அறிவைப் பாதுகாக்கும் சட்டப் பாதுகாப்பாகவும் உள்ளது.

ஜபானி ஷ்யாம் ஹர்லியின் ஓவியத்தைப் பார்ப்பது என்பது, வண்ணங்களாலும் வடிவங்களாலும் அதிர்வுறும் ஓர் உலகிற்குள் நுழைவதைப் போன்றது. விலங்குகள், பறவைகள், சுவாசிப்பது போல் தோன்றும் மரங்கள் ஆகியவை நிறைந்த ஓர் உலகம் அது. கோண்ட் பிரதான் சமூகத்தைச் சேர்ந்த, போபாலைச் சேர்ந்த இந்த இளம் கலைஞர், தனது தூரிகை வேலைப்பாடுகளில் ஒரு பாரம்பரியத்தையும், ஒரு உயிரோட்டமான மரபையும் ஒருங்கே கொண்டுள்ளார்.
அவர் தனது தந்தை ஜங்கர் சிங் ஷ்யாமால் ஈர்க்கப்பட்டு ஒரு கோண்ட் கலைஞராக ஆனார். விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட அவரது ஓவியங்களில் ஒன்று, முற்றிலும் மாறுபட்ட இயல்புகளைக் கொண்ட இரண்டு நண்பர்களின் கதையைச் சொன்னது. ஒருவர் மென்மையானவர் இரக்க குணம் கொண்டவர். மற்றவர் இருண்ட தாக்கங்களால் வடிவமைக்கப்பட்டவர். இது வண்ணத்திலும் வடிவத்திலும் சித்தரிக்கப்பட்ட ஒரு நீதி போதனைக் கதை. அந்த ஓவியம் ஒரு அமைதியான தத்துவார்த்த வாதத்தை முன்வைக்கிறது. நாம் பழகும் நபர்களே நாம் யாராக மாறுகிறோம் என்பதை வடிவமைக்கிறார்கள். ஜபானியின் கூற்றுப்படி, ஒரு உண்மையான நல்ல நண்பர் கங்கையைப் போன்றவர். ஒவ்வொரு தொடர்பின் மூலமும் நம்மைத் தூய்மைப்படுத்தி, புதிதாக உருவாக்கும் திறன் கொண்டவர்.
பழங்குடி கலை விழா போன்ற தளங்கள், கலையை ஊக்குவிப்பதோடு நின்றுவிடாமல், மக்களுக்கு ஊக்கமளிக்கின்றன என்கிறார் அவர். “ இத்தகைய தளங்கள், நமது சமூகத்தைச் சேர்ந்த அதிகமானோர் முன்வந்து கலையைத் தொடர ஊக்குவிக்கின்றன ” என்று அவர் குறிப்பிடுகிறார். வணிகத்தைப் போலவே இந்த ஊக்கமும் முக்கியமானது என அவர் நம்புகிறார்.
பில் ஓவியம் - புள்ளிகளிலும் வண்ணங்களிலும் சொல்லப்படும் கதைகள் :

இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடி குழுக்களில் ஒன்றான பில் சமூகத்தினரால் பில் ஓவியங்கள் வரையப்படுகின்றன. இந்த ஓவியங்கள், இந்திய துணைக்கண்டத்தின் மிகப் பழமையான கலை மரபுகளில் ஒன்றாகத் திகழும் பெருமையையும் பெற்றுள்ளன. இதன் மிகத் தனித்துவமான அம்சம் உடனடியாகக் கவனத்தை ஈர்க்கிறது. ஒவ்வொரு ஓவியமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுண்ணிய புள்ளிகளால் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒவ்வொன்றும் ஒரு விதை, ஒரு தானியம் அல்லது இயற்கையின் துடிப்பைக் குறிக்கிறது. விலங்குகள், தெய்வங்கள், காடுகள், அன்றாட வாழ்க்கைக் காட்சிகள் இந்தப் புள்ளி ஓவியப் பிரபஞ்சத்திலிருந்து வெளிப்படுகின்றன. பல நூற்றாண்டுகளாக நிலத்தோடு நெருக்கமாக வாழ்ந்ததன் மூலம் உருவான ஒரு பிரபஞ்சவியலில் இந்தக் கலையை இவை நிலைநிறுத்துகின்றன.

மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞரான ராம் சிங் பவோர், பில் ஓவியத்தை முதன்முதலில் எப்போது பார்த்தார் என்பதைத் துல்லியமாக நினைவுகூர்கிறார். அது அவருடைய கிராமத்தில் உள்ள வீடுகளின் சுவர்களில் இருந்தது. அங்கே அந்தக் கலை, இயற்கையாகவே வளர்ந்த ஒன்றைப் போல எப்போதுமே இருந்துவந்தது. தான் பார்த்து வளர்ந்தது, இந்தியாவின் மிகப் பழமையான, இன்றியமையாத பழங்குடிக் கலை மரபுகளில் ஒன்றின் ஒரு பகுதி என்பதை அவர் உணர்ந்துகொள்ளச் சிறிது காலம் பிடித்தது.
தன் கிராமத்தின் சுவரோவியங்களைப் போன்ற படைப்புகளை மூத்த பழங்குடி கலைஞர்கள் தேசியத் தளங்களுக்கு எடுத்துச் செல்வதை ராம் சிங் கண்டபோது, ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. ஏதோ ஒன்று மாறியது. வாழ்நாள் முழுவதும் தன்னுடன் வாழ்ந்த கலை, பரந்த உலகமே காண வேண்டிய ஒன்றாகத் திடீரெனத் தோன்றியது. மேலும், அந்தக் கதையின் ஒரு பகுதியாக இருக்க அவர் முடிவு செய்தார்.
தன் சமூகத்தைச் சேர்ந்த இளம் கலைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன், அவர் தீவிர நோக்கத்துடன் ஓவியம் வரையத் தொடங்கினார். பழங்குடி கலை விழாவில், அவரது படைப்புகளுக்கு வாங்குபவர்கள் கிடைத்தனர். ஆனால், அதைவிட முக்கியமாக, உரையாடல்களும் நிகழ்ந்தன. அவர் இதற்கு முன் சந்தித்திராத மரபுகளைச் சேர்ந்த கலைஞர்கள், சில அரங்குகள் தள்ளியே தங்கள் படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருந்தனர். பிராந்திய, கலாச்சார எல்லைகளைக் கடந்து நிகழ்ந்த அந்தக் கதைப் பரிமாற்றம், அவருக்கு அந்த விழாவின் மிகப்பெரிய வெகுமதிகளில் ஒன்றாக அமைந்தது.
இவ்வளவு பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு விழாவில், ஒவ்வொரு கலந்துரையாடலும் ஒரு கல்விதான். அது மற்ற கலை வடிவங்களை மட்டுமல்லாமல், அவற்றுக்குப் பிறப்பிடமான வாழ்க்கையையும் நிலப்பரப்புகளையும் புரிந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பு என்கிறார் அவர்.

வாழும் மரபுகளைக் கொண்டாடும் ஒரு திருவிழா :
பழங்குடியினர் கலை விழா 2026, நவீன இந்தியாவிற்கு பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய மரபுகளை முன்னெடுத்துச் செல்லும் தலைசிறந்த கலைஞர்களை இந்தியா முழுவதிலுமிருந்து ஒருங்கிணைத்தது.
காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு கலைப்படைப்பும் அழகியல் மதிப்பைத் தாண்டி, ஒரு சமூகத்தின் உலகப் பார்வை, இயற்கையுடனான அதன் உறவு, அதன் தார்மீகக் கதைகள், அதன் நினைவுகள் ஆகியவற்றைத் தன்னுள் கொண்டிருந்தது. இவை பழங்காலச் சின்னங்கள் அல்ல. அவை உயிருள்ள, பரிணமிக்கும் மரபுகள். அவற்றை நடைமுறைப்படுத்தும் கலைஞர்கள், அவை மங்கிப்போகத் தாங்கள் அனுமதிக்கப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
****
PD/PLM/PD
(Features ID: 158463)
आगंतुक पटल : 34
Provide suggestions / comments