• Sitemap
  • Advance Search
Others

ஆஹார் 2026: சர்வதேச உணவு, விருந்தோம்பல் கண்காட்சி

வணிகங்கள் வளர்ந்து, விரிவடைந்து பெருகும் இடமாகத் திகழும் கண்காட்சி

Posted On: 14 MAR 2026 11:09AM

 

2026 மார்ச் 10 முதல் 14 வரை புதுதில்லியின் பாரத் மண்டபத்தில், ஆஹார் - சர்வதேச உணவு விருந்தோம்பல் கண்காட்சியின் 40-வது பதிப்பு நடைபெற்றது. இது உரையாடல்கள், புதிதாகத் தயாரிக்கப்பட்ட காபியின் நறுமணம், புதுமையான உணவுகள் ஆகியவை நிரம்பிய கண்காட்சியாக அமைந்தது. உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம், இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆஹார் கண்காட்சி, உணவு, விருந்தோம்பல் துறைக்கான தெற்காசியாவின் மிக முக்கியமான வணிகங்களுக்கு இடையேயான தளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இந்தக் கண்காட்சியைத் தனித்துவமாக்குவது, பங்கேற்பின் அளவு மட்டுமல்ல. உணவு, விருந்தோம்பல் துறையில் உள்ள வணிகங்கள் வளரவும், விரிவடையவும், பெருகவும் ஒரு நம்பகமான பெயராகவும் ஆதாரமாகவும் இது உருவெடுத்துள்ள விதமும்தான்.

ஆஹார் கண்காட்சியானது, ஹோட்டல்கள், உணவகங்கள், கேட்டரிங் நிறுவனங்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் போன்றோரை ஒன்றிணைத்து, உரையாடல்கள் மூலம் வணிக ஒத்துழைப்பை உருவாக்கும் ஒரு தளத்தை அமைக்கிறது. பல ஆண்டுகளாக, இந்தக் கண்காட்சி ஒரு சுவாரஸ்யமான போக்கைக் கண்டுள்ளது. ஒரு காலத்தில் பார்வையாளர்களாகவோ அல்லது வாங்குபவர்களாகவோ கலந்துகொண்ட பல தொழில்முனைவோர், இப்போது தங்கள் சொந்த பிராண்டுகளுடன் கண்காட்சியாளர்களாகத் திரும்பி வந்துள்ளனர். கண்காட்சியில் தொடர்ச்சியான பங்கேற்பு வணிக நுண்ணறிவுகளை அளித்து, சந்தைத் தொடர்புகளை உருவாக்கி,  இறுதியில் தொழில்முனைவோர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பதை அவர்களின் பயணங்கள் விளக்குகின்றன.

ஆஹார் 2026-ல் இடம்பெற்ற துடிப்பான மாநில அரங்குகளில், பிராந்திய வணிகங்கள் தங்கள் தயாரிப்புகளின் பரவலை விரிவுபடுத்த இந்தத் தளத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றன என்பதை கேரள அரங்கு காட்சிப்படுத்தியது. இதில் பங்கேற்ற நிறுவனங்களில் ஒன்றான ஆர்ஜி ஃபுட்ஸ், கேரளாவின் கோழிக்கோட்டில் 1940- ல் தொடங்கப்பட்டது. சமையல் எண்ணெய்கள் (எள் எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய் எண்ணெய்), அரிசி வகைகள் (பாலக்காடன் வடி மட்டா அரிசி), காலை உணவுப் பொடிகள், பாரம்பரிய கேரள சிற்றுண்டிகள் (உறைந்த உணவுகள் போன்றவை), உடனடி சமையல் விழுதுகள் (இஞ்சி விழுது, இஞ்சி-பூண்டு விழுது, பூண்டு விழுது) உள்ளிட்ட அதன் பன்முகத் தயாரிப்புகளுக்காக அறியப்படும் இந்நிறுவனம், படிப்படியாக பிராந்திய சந்தைகளுக்கு அப்பால் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. இந்த ஆண்டு கண்காட்சியில், இந்நிறுவனம் வாழைக்காய் சிப்ஸ், காரமான கலவைகள், முறுக்கு மற்றும் பிற பாரம்பரிய சுவையான உணவுகள் உள்ளிட்ட கேரள சிற்றுண்டிகளை காட்சிப்படுத்தியது.

கண்காட்சியில் ஆர்ஜி ஃபுட்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியான திரு ஸ்வாகத், ஆஹார் கண்காட்சியில் பங்கேற்றது தங்கள் நிறுவனத்தை தேசிய, சர்வதேச வாடிக்கையாளர்களுடன் இணைக்க உதவியது குறித்து தெளிவாகப் பேசினார்.

"தற்போது ஐரோப்பா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, கத்தார் ஆகிய சந்தைகள் உட்பட 31-க்கும் மேற்பட்ட நாடுகளில் எங்கள் தயாரிப்புகள் கிடைக்கின்றன. கண்காட்சியில் நடந்த கலந்துரையாடல்கள் மூலம், தில்லியில் விநியோகம் செய்வதற்கான வசதிகளை வலுப்படுத்தியதோடு, மூன்று புதிய சர்வதேச சந்தைகளில் விரிவாக்கம் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்பட்டுள்ளது. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜிசிசி) பிராந்தியங்கள் முழுவதும் சமையல் எண்ணெய் துறையில் எங்கள் நிறுவனம் சுமார் 65 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. 450-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களின் ஆதரவுடன் கேரளா முழுவதும் சுமார் 1.5 லட்சம் சில்லறை விற்பனை நிலையங்களைச் சென்றடையும் ஒரு விரிவான விநியோக கட்டமைப்பை எங்கள் நிறுவனம் கொண்டுள்ளது" என்று திரு ஸ்வாகத் குறிப்பிட்டார். மாநில அரசின் மாநில அரங்கு முன்முயற்சி மூலம் அவர்களது பங்கேற்பு உறுதி செய்யப்பட்டு ஆதரவு அளிக்கப்பட்டது. இது மாநிலத்தில் சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களுக்கு இலவச கண்காட்சித் தளத்தை வழங்குகிறது. திரு ஸ்வாகத்தின் கூற்றுப்படி, நிகழ்வுக்கு முன்னதாக இலக்கு சார்ந்த விநியோகஸ்தர்களுடன் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சந்திப்புகள் போன்ற விரிவான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது ஆஹார் கண்காட்சியின் மூலம் வணிக வாய்ப்புகளை அதிகரிக்க அந்த நிறுவனத்திற்கு உதவியுள்ளன.

குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்த திரு. தியான் மேத்தாவும் இதே போன்ற ஒரு வளர்ச்சி அனுபவக் கதையைப் பகிர்ந்து கொண்டார். அவரது நிறுவனமான டிஜிஆர் ஃபுட்ஸ், பேக்கரிகள், மிட்டாய், பால் பண்ணைத் தொழில்களில் பயன்படுத்தப்படும் கேக், ரொட்டிக் கலவைகளை உற்பத்தி செய்கிறது. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக , மேத்தா ஒரு வாடிக்கையாளராக ஆஹார் கண்காட்சியில் கலந்துகொண்டு, விநியோகஸ்தர்களைப் பற்றி ஆராய்ந்தும், தொழில்துறைப் போக்குகளைப் பற்றி அறிந்துகொண்டும் வந்தார். இந்த ஆண்டு, அவர் முதல் முறையாக ஒரு கண்காட்சியாளராகப் பங்கேற்று, தமது சொந்தத் தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியதால், அவருக்கு இது ஒரு மைல்கல்லாக அமைந்தது. தொழில்முனைவோர் தங்கள் சொந்த முயற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு, ஆஹார் சூழல் அமைப்பிலிருந்து எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பதை அவரது பயணம் எடுத்துக் காட்டுகிறது.

இதே போன்ற பயணத்தைப் பகிர்ந்து கொண்ட மற்றொரு தொழில்முனைவோர், சூடான பானங்கள், குளிர் பானங்கள் ஆகியவற்றுக்கான கோப்பைகளைத் தயாரிக்கும் பேக்மோல்ட் நிறுவனத்தின் நிறுவனர் திரு சோபர்பிரீத் சிங் ஆவார். அவரது வணிகம், பெரிய உற்பத்தியாளர்களின் அதிகபட்ச, குறைந்தபட்ச ஆர்டர் தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. இது வளர்ந்து வரும் பிராண்டுகளுக்கு முதன்மையாக ஆதரவளிக்கிறது.

பேக்மோல்ட் நிறுவனம், வழக்கமான பிளாஸ்டிக் பூச்சுக்குப் பதிலாக அக்வா பூச்சு கொண்ட கோப்பைகளைத் தயாரிக்கிறது. இது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஏற்ற, அரசு விதிமுறைகளுக்கு இணக்கமான ஒரு மாற்றுப் பொருளை வழங்குகிறது. நிறுவனம் செயல்படத் தொடங்கிய ஆறே மாதங்களுக்குள், ரிலையன்ஸ் ரீடெய்லின் வைல்ட் பீன் கஃபேஸ், அதானி ஏர்போர்ட்ஸ் போன்ற முக்கிய வாடிக்கையாளர்களிடமிருந்து ஆர்டர்களைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், ஸ்லே காபி போன்ற வளர்ந்து வரும் குளிர்பான பிராண்டுகளுக்கும் பொருட்களை வழங்கி வருகிறது.

பல ஆண்டுகளாக ஒரு வாங்குபவராக ஆஹார் கண்காட்சிக்குச் சென்றது, தொழில்துறையைப் புரிந்துகொள்ளவும் சந்தை இடைவெளிகளைக் கண்டறியவும் தனக்கு உதவியதாக திரு சோபர்பிரீத் சிங் பகிர்ந்துகொண்டார். இந்த அனுபவங்களே இறுதியில் பேக்மோல்டைத் தொடங்க அவரைத் தூண்டியுள்ளன. இந்த ஆண்டுதான் அவர் ஒரு கண்காட்சியாளராக இதில் முதல் முறையாகப் பங்கேற்கிறார்.

வளர்ந்து வரும் தொழில்முனைவோருடன், நெஸ்கஃபே, பேரி காலேபாட், கோ சீஸ், மோர்டே, ஹல்திராம்ஸ், க்ரெமிகா, எம்டிஆர் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய, இந்திய பிராண்டுகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. அவற்றின் அரங்குகள், நேரடி தயாரிப்பு செயல்விளக்கங்கள், சுவைத்துப் பார்க்கும் அமர்வுகள் ஆகியவற்றுடன் பெருந்திரளான மக்களை ஈர்த்தன.

பேரி காலேபாட் அரங்கில், சாக்லேட் தயாரிப்பாளர் செஃப் கோஷ், படைப்பாற்றல் மிக்க சாக்லேட் தயாரிப்புகளையும் கலைநயமிக்க வடிவமைப்புகளையும் காட்சிப்படுத்தினார். இது பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. சமையல் கலை நிறுவனங்கள், விருந்தோம்பல் கல்லூரிகள் ஆகியவற்றைச் சேர்ந்த பல மாணவர்கள், இந்தத் திறன் பற்றி மேலும் அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன், செயல்விளக்கங்களைக் காணவும் சமையல் கலை வல்லுநர்களுடன் உரையாடவும் அங்கு கூடினர்.

சமையல் கலைஞர்களாகவும், விருந்தோம்பல் துறை வல்லுநர்களாகவும் ஆக விரும்புவோருக்கு, ஆஹார் ஒரு மதிப்புமிக்க கற்றல் தளமாக உருவெடுத்துள்ளது. கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு, துறை வல்லுநர்கள், சமையல் கலைஞர்கள், பிராண்ட் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது. மூலப்பொருட்கள், உபகரணங்கள் முதல் பேக்கேஜிங், பிராண்டிங், விநியோகம் வரை, வகுப்பறைக்கு அப்பாற்பட்டு உணவு, விருந்தோம்பல் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த ஒரு நடைமுறைப் புரிதலை இந்த நிகழ்வு அவர்களுக்கு வழங்கியது.

ஆஹார் தனது 40-வது பதிப்பைக் கொண்டாடும் வேளையில் , கண்காட்சி அரங்கிலிருந்து வெளிவரும் அனுபவக் கதைகள், இந்தத் துறைக்கு அதன் நீடித்த முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. சில பங்கேற்பாளர்களுக்கு, இது புதிய விநியோகஸ்தர்களுடன் இணைவதற்கான ஒரு தளமாக உள்ளது. மற்றவர்களுக்கு, இது புதிய சந்தைகளுக்கான கதவைத் திறக்கிறது. ஒரு காலத்தில் பார்வையாளர்களாகவும் வாங்குபவர்களாகவும் அரங்குகளில் வலம் வந்த பல தொழில்முனைவோர், இப்போது கண்காட்சியாளர்களாகத் திரும்பி வருகின்றனர். இது அவர்களின் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இந்த அனுபவங்களின் மூலம், உணவு - விருந்தோம்பல் துறையில் உள்ள வணிகங்கள் ஒன்றிணைந்து, தங்களை இணைத்துக்கொண்டு, வளர்ந்து, விரிவடைவதற்கான ஒரு நம்பகமான தளமாக ஆஹார் தொடர்ந்து விளங்குகிறது

***

PD/PLM/PD

(Features ID: 158367) आगंतुक पटल : 82
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Bengali , Urdu , हिन्दी , Malayalam