• Sitemap
  • Advance Search
Infrastructure

அனைவருக்கும் தண்ணீர், தண்ணீருக்காக அனைத்தும்: மக்கள், ஊராட்சிகள், ஜல் ஜீவன் இயக்கம்

Posted On: 13 MAR 2026 12:01PM

 

பாதுகாப்பான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வதற்கு குழாய்கள், நீரேற்றும் அமைப்புகள், சேமிப்புக் கட்டமைப்புகள் போன்ற உள்கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. எனினும், எஃகு, கான்கிரீட் ஆகியவற்றால் ஆன இந்த கட்டமைகளுக்கு அப்பால், நீர் தொடர்பான அமைப்புகள் மக்களால் நிலைநிறுத்தப்படுகின்றன. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், களப்பணியாளர்கள், சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோர் கிராமப்புற அளவில் ஒன்றிணைந்து, உள்ளூர் நீர் விநியோக அமைப்புகளை இயக்கி, கண்காணித்து, பராமரித்து, கிராமப்புற வீடுகளுக்குப் பாதுகாப்பான குடிநீர் விநியோகத்திற்கு வழிவகை செய்கின்றனர்.

2019 ஆகஸ்ட்-ல் தொடங்கப்பட்ட ஜல் ஜீவன் இயக்கம், அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான, போதுமான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கியபோது, ​​3.23 கோடி கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் இருந்தன. இப்போது 2026 மார்ச் 03 நிலவரப்படி, நாடு முழுவதும் 15.82 கோடிக்கும் அதிகமான கிராமப்புற வீடுகளில் குழாய் மூலம் நீர் விநியோகம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது,  கிராமப்புறங்களில் அனைவருக்கும் குழாய் மூலம் பாதுகாப்பான குடிநீர் வசதியை வழங்குவதில் இந்தியாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. 2026-27-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்த இயக்கத்திற்கு ₹67,670 கோடி ஒதுக்கீடு முன்மொழியப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டம் 2028-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கிராமப்புற குடிநீர் உள்கட்டமைப்பின் இந்த விரைவான விரிவாக்கத்திற்கு, அடிமட்ட அளவில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான தனிநபர்களின் முயற்சிகள் ஆதரவளித்துள்ளன.

கிராமங்கள் முழுவதும் தண்ணீர் கட்டமைப்புகளை மேற்பார்வையிடுபவர்கள், செயல்பாடுகளைக் கண்காணிப்பவர்கள், நீரின் தரத்தைப் பாதுகாப்பவர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்பை இந்த திட்டத்தின் வெற்றிகரமான முயற்சிகள் பிரதிபலிக்கின்றன. இத்தகைய பங்களிப்புகளைக் கொண்டாடுவதற்கும் ஊக்குவிப்பதற்கும், ஜல் மஹோத்சவ் 2026-ன் போது, ​​கிராமப்புற குடிநீர் நிர்வாகத்தை வலுப்படுத்துவதில் சிறந்த முறையில் பங்காற்றிய தனிநபர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகளை வழங்கினார். ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மக்கள் பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையில், இந்த நாடு தழுவிய இயக்கம் 2026 மார்ச் 08 முதல் மார்ச் 22 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்வரும் கதைகள், சில தனிநபர்களின் பயணங்கள், அவர்கள் தங்கள் சமூகங்களில் குடிநீர் சேவைகள் கிடைக்கச் செய்வதில் ஆற்றிவரும் பங்கு குறித்த ஒரு பார்வையை வழங்குகின்றன.

உள்ளூர் பங்கேற்பு மூலம் கிராம தண்ணீர் அமைப்புகளை நிலைநிறுத்துதல்:

உத்தரப் பிரதேசத்தின் சித்திரகூட் மாவட்டத்தில் உள்ள மங்குவார் கிராமப் பஞ்சாயத்தில், கிராமக் குடிநீர் அமைப்பின் செயல்பாடானது, கிராமப்புற உள்கட்டமைப்பைப் பேணுவதில் உள்ளூர் மக்களின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.

கிராமத் தலைவர் ரச்னா தேவியின் தலைமையில், மௌ கிராமப்புற குடிநீர் வழங்கல் திட்டமானது, கிராமத்தில் உள்ள ஏறக்குறைய 1,971 குடியிருப்பாளர்களுக்கு சேவை வழங்கும் வகையில், அனைத்து 340 வீடுகளுக்கும் குழாய் இணைப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்கட்டமைப்பை உருவாக்குவதோடு, இந்த அமைப்பு நீண்ட காலத்திற்குத் தொடர்ந்து திறம்படச் செயல்படுவதை உறுதி செய்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கிராம நீர் விநியோக அமைப்பின் செயல்பாடு, பராமரிப்பிற்கு ஆதரவளிக்கும் வகையில், வீடுகளில் இருந்து மாதந்தோறும் ₹50 பயனர் கட்டணமாக பெறப்படுகிறது. இந்த கிராமம் தற்போது ஒவ்வொரு மாதமும் சுமார் ₹5,275 வசூலிக்கிறது. இது அன்றாட செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது.

கிராம நீர் - சுகாதாரக் குழுவின் வழக்கமான கூட்டங்களில், கட்டணப் பட்டியல், வருவாய் வசூல், சேவை வழங்கல் ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்படுகின்றன. இந்தக் கூட்டங்கள், நீர் விநியோக அமைப்பின் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் கூட்டு மேற்பார்வையையும் உறுதிசெய்ய உதவுகின்றன. மேலும், ரச்னா தேவி இக்குழுவில் பெண்கள், பட்டியல் சமூக உறுப்பினர்களின் பங்கேற்பை ஊக்குவித்து, கிராம அளவில் அனைவரையும் உள்ளடக்கிய நீர் நிர்வாகத்தை வலுப்படுத்தியுள்ளார்.

உயர்ந்த இமயமலைப் பகுதிகளில் நீர் விநியோகத்தை உறுதி செய்தல் :

லடாக்கின் லே மாவட்டத்தில் உள்ள மத்தோ கிராமத்தின் உயரமான மலைப்பகுதியில், நம்பகமான குடிநீர் அமைப்பைப் பராமரிக்க, உள்ளூர் நிறுவனங்கள், களப்பணியாளர்களிடையே தொடர்ச்சியான தொழில்நுட்ப முயற்சியும் ஒருங்கிணைப்பும் தேவைப்படுகிறது.

பொது சுகாதாரப் பொறியியல் பணியாளரான செரிங் டோர்ஜே, கிராமத்தின் குடிநீர் உள்கட்டமைப்பை நிறுவுவதற்கும் பராமரிப்பதற்கும் ஆதரவளிப்பதில் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளார். சவாலான நிலப்பரப்பு, கடுமையான வானிலை ஆகியவற்றில் பணியாற்றிய அவர், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மாதோ கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு பாதுகாப்பான குழாய் நீர் இணைப்புகள் கிடைப்பதை உறுதி செய்வதில் பங்களித்துள்ளார். மேலும், சமூக உறுப்பினர்களின் கூட்டு முயற்சிகளுடன், கிராமத்தில் குடிநீர் சேவைகளின் விரிவாக்கமும் செயல்பாடும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது, கிராமப்புற நீர் திட்டங்களைச் செயல்படுத்துவதில் நிர்வாக, தொழில்நுட்பப் பணியாளர்கள் வகிக்கும் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது.

குஜராத்தில் பெண்கள் நீரின் தரத்தைப் பாதுகாக்கின்றனர்:

குஜராத் மாநிலம், நவசாரி மாவட்டம், காந்தேவி தாலுக்காவில் உள்ள மனேக்போர் கிராமத்தில், கிராம நீர் தரக் குழுவின் தீவிர ஈடுபாட்டின் மூலம் நீர் தரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கிராம நீர் தரக் குழுவின் உறுப்பினரான ஃபால்குனிபென் சஞ்சய்பாய் ரத்தோட் , ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குப் பாதுகாப்பான நீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, களப் பரிசோதனைக் கருவியைப் பயன்படுத்தி குடிநீரைத் தவறாமல் பரிசோதித்து வருகிறார்.

கடந்த மூன்று மாதங்களில், அவர் கிராமத்தின் அனைத்து குடியிருப்புகளிலிருந்தும் மாதிரிகள் சேகரிக்கப்படுவதை உறுதிசெய்து, வீடுகள் அளவில் 19 நீர் மாதிரிகளைப் பரிசோதித்துள்ளார். பரிசோதனையுடன், பாதுகாப்பான குடிநீரைப் பராமரிக்க உதவும் வகையில், நீரின் தரம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும், வீடுகளில் குளோரினேற்றம் செய்தல் போன்ற கிருமி நீக்கப் பழக்கவழக்கங்களும் சமூகத்தில் ஊக்குவிக்கப்படுகின்றன.

மேலும், நீரின் தரப் பரிசோதனை முடிவுகள் சமூகத்தினருடன் பகிரப்படுவதையும் அவர் உறுதி செய்கிறார். நீரின் தரம் குறித்து ஏதேனும் கவலைகள் எழுந்தால், நிறுவப்பட்ட நெறிமுறைகளின்படி ஆய்வகப் பரிசோதனை மூலம் மாதிரிகள் சரிபார்க்கப்படுகின்றன. கிராமப் பஞ்சாயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரான ஃபால்குனிபென், 'புல்கு மஹிலா பச்சத் மண்டல்' என்ற சுய உதவிக் குழுவுடனும் இணைந்துள்ளார். அத்துடன், கிராமத்தில் ஒரு ஆஷாவாகப் பணியாற்றி, பொது சுகாதார விழிப்புணர்வு மற்றும் சமூக அணிதிரட்டலுக்குப் பங்களித்து வருகிறார்.

நீரின் தரக் கண்காணிப்பு, சமூக ஈடுபாடு ஆகியவற்றில் அவர் தன்னை ஈடுபடுத்திக்கொள்வதன் மூலம், கிராமத்தில் பாதுகாப்பான குடிநீர் மேலாண்மையை வலுப்படுத்துவதற்குப் பங்களிக்கிறார்.

சிக்கிமில் தன்னிறைவு நீர் மேலாண்மையை முன்னெடுத்துச் செல்லும் சமூகத் தலைமை:

சிக்கிமில் , இரண்டு பெண் ஊராட்சித் தலைவர்கள், கிராமங்கள் தன்னிறைவு நீர் மேலாண்மையை நோக்கி முன்னேற உதவியுள்ளனர். அரசின் கிராமப்புற குழாய் நீர் வழங்கும் திட்டம் தங்கள் கிராமங்களுக்கு வந்தபோது, ​​ஷேலா சுப்பா, புஷ்பா சிந்துரி ஆகியோர் இந்த முயற்சியில் இணைந்து, குடியிருப்பாளர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றத் தொடங்கினர்.

அவர்கள் தங்கள் கிராமங்கள் முழுவதும் உள்ள வீடுகளுக்கும் வார்டுகளுக்கும் சென்று, பாதுகாப்பான குடிநீரின் முக்கியத்துவத்தையும் சமூகப் பங்கேற்பின் தேவையையும் விளக்கினர். கிராம மக்கள், கலந்துரையாடல்களிலும் திட்டமிடலிலும் ஈடுபட்டதால், சிறந்த குடிநீர் சூழல் அமைப்பைப் பராமரிப்பது குறித்த ஒரு பொதுவான புரிதலை அவர்கள் வளர்த்துக் கொண்டனர். இது, கட்டணங்களைச் செலுத்துவதை எளிதாக்கியதுடன், கிராமங்கள் தங்களின் சொந்த நீர் விநியோக அமைப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவியது.

தரம்டின் வட்டாரத்தின் கீழ் உள்ள ரம்புக் கிராம நீர் விநியோகக் கழகத்தில், கிராம நீர் விநியோக அமைப்பை நிர்வகிப்பதில் பொதுமக்களின் தீவிரப் பங்களிப்பை ஊராட்சத் தலைவர் ஷேலா சுப்பா ஊக்குவித்துள்ளார். வழக்கமான கூட்டங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆகியவை மூலம், கிராம மக்கள் திட்டமிடல், பராமரிப்புப் பணிகள் ஆகியவற்றில் பங்கேற்கின்றனர். இப்போது, அனைத்து வீடுகளுக்கும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கும் குழாய் நீர் இணைப்புகள் உள்ளன. சீரான செயல்பாட்டை உறுதி செய்வதற்கும், விநியோகத்தில் ஏற்படும் எந்தவொரு தடையையும் விரைவாகத் தீர்ப்பதற்கும் சமூகப் பங்களிப்பு உதவுகிறது.

அப்பர் தம்போங் கிராம ஊராட்சித் தலைவர் புஷ்பா சிந்துரி, கிராம நீர் விநியோக அமைப்பின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தியுள்ளார். குடும்பங்கள் தவறாமல் பயனர் கட்டணங்களைச் செலுத்துகின்றன. மேலும் சேகரிக்கப்பட்ட நிதியானது, பராமரிப்பு, பழுதுபார்ப்புகளுக்கு வெளிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது. முறையான நிதி மேலாண்மை, கிடைக்கக்கூடிய வளங்களை திறம்படப் பயன்படுத்துதல், சமூகத்தின் தீவிரப் பங்கேற்பு ஆகியவற்றின் மூலம், இக்கிராமம் ஒரு சிறந்த, பாதுகாப்பான குடிநீர் அமைப்பைப் பராமரிக்க முடிந்துள்ளது.

கிராமங்கள் முழுவதும் குழாய் நீர் அணுகலை விரிவுபடுத்துதல் :

ஜார்க்கண்டின் கஞ்சன்பூர் கிராம ஊராட்சியில், முக்யா பிங்கி ராணாவின் தலைமையில், கிராமப்புற குடிநீர் வசதியை விரிவுபடுத்தும் முயற்சிகள் பல பகுதிகளைச் சென்றடைந்துள்ளன.

அவரது பதவிக்காலத்தில், இந்த ஊராட்சியின் பல குடியிருப்புப் பகுதிகளில் 100 சதவிகிதம் வீட்டுக் குழாய் இணைப்பு வசதி செய்யப்பட்டது. இந்த விரிவாக்கத்தின் மூலம் கஞ்சன்பூர் கிராமத்தில் 670 வீடுகளுக்கும், ஹெத்லாக்கில் 384 வீடுகளுக்கும், கோவிந்த்பூரில் 357 வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது.

இந்தச் சாதனையின் மூலம், இந்தப் ஊரட்சி 'அனைத்து வீடுகளும் குழாய் மூலம் நீர் பெறும் கிராமம்' என அங்கீகரிக்கப்பட்டுள்ளது . இது, இந்தக் கிராமம் முழுவதும் குழாய் மூலம் குடிநீர் சேவைகள் வெற்றிகரமாக விரிவுபடுத்தப்பட்டதைப் பிரதிபலிக்கிறது. மேலும், வீடுகளில் இருந்து தவறாமல் கட்டணம் செலுத்துவதை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பங்களிப்புகள், காலப்போக்கில் நீர் விநியோக அமைப்பின் செயல்பாட்டிற்கும் பராமரிப்பிற்கும் ஆதரவளிக்க உதவுகின்றன.

சமூகப் பங்கேற்பின் மூலம் கிராமப்புற நீர் அமைப்புகளை நிலைநிறுத்துதல் :

லடாக், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, உத்தரப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில முன்னுதாரணமான நடவடிக்கைகள், கிராமப்புற குடிநீர் அமைப்புகளின் செயல்பாடு, உள்கட்டமைப்பு, உள்ளூர் மக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த வலிமையைத் தெளிவாக விளக்குகின்றன. ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்புடன், கிராம ஊராட்சிகள், களப்பணியாளர்கள், மகளிர் குழுக்கள், பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் ஆகியோரின் ஈடுபாடும், கிராம அளவில் இந்த அமைப்புகளின் அன்றாட செயல்பாட்டிற்குப் பங்களிக்கின்றன. இத்தகைய பங்கேற்பின் மூலம், சமூகங்கள் கிராமப்புற நீர் விநியோக உள்கட்டமைப்பின் செயல்பாடு, பராமரிப்பு, கண்காணிப்புக்கு ஆதரவளித்து, நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு குடிநீர் சேவைகள் தொடர்ந்து சென்றடைவதை உறுதிசெய்ய உதவுகின்றன

***

PD/PLM/PD

(Features ID: 158366) आगंतुक पटल : 45
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Bengali , Malayalam