• Sitemap
  • Advance Search
Others

மலரின் சக்தி: இந்தியாவின் கோயில் கழிவால் மாற்றம்

தூய்மை இந்தியா இயக்கத்தால் முன்னெடுக்கப்படும் கோயில் கழிவு மறுசுழற்சி, மலர்களை வேலைவாய்ப்புகளாகவும் நிலைத்தன்மையாகவும் மாற்றி வருகிறது

Posted On: 20 SEP 2024 11:31AM

பரபரப்பான உஜ்ஜைனி நகரில், விடியற்காலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகாலகாலேஸ்வர் கோவிலுக்குச் சென்று, தங்கள் பக்தியை வெளிப்படுத்தும் விதமாக வண்ணமயமான மலர்களைச் சமர்ப்பிக்கின்றனர். பக்தி நிறைந்த இந்த மலர்கள், பெரும்பாலும் துரதிர்ஷ்டவசமாக ஆறுகளில் வீசப்படுகின்றன அல்லது குப்பை மேடுகளில் கொட்டப்படுகின்றன. ஒரு கைப்பிடி மலர்கள் பெரிய தீங்கை ஏற்படுத்தாது என்று பலர் நினைக்கலாம், ஆனால் பூல்.கோ (Phool.co) -வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் நச்சிகேத் குண்ட்லா, வேறுவிதமான ஒரு சித்திரத்தை அளிக்கிறார். "ஒரு தனிநபர் ஆற்றில் மலர்களை வீசும்போது, 'ஒரு கைப்பிடி மலர்களால் என்ன தீங்கு ஏற்பட்டுவிடும்?' என்று நினைக்கிறார். ஆனால் நம்முடையது நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு. எனவே அதன் விளைவைக் கற்பனை செய்து பாருங்கள்," என்று அவர் தெரிவிக்கிறார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் 10-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தொடங்கப்பட்ட இயல்பான தூய்மை, தூய்மை கலாச்சாரம் (4எஸ்) பிரச்சார நோக்கத்துடன் குந்த்லாவின் வார்த்தைகள் ஒத்துப் போகின்றன. 2024, செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடைபெறும் இந்தப் பிரச்சாரம், மகாத்மா காந்தியின் பிறந்தநாளில் வரும் தூய்மை இந்தியா தினத்தை முன்னிட்டு, ஆண்டுதோறும் நடைபெறும் தூய்மையே சேவை பாரம்பரியத்துடன் இணைகிறது. இந்தியா முழுவதும் உள்ள கோயில்களில் இருந்து கிடைக்கும் மலர்க் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் கவனம் செலுத்துவதன் மூலம், இந்தப் பிரச்சாரம் நிலைத்தன்மையை ஏற்றுக்கொண்டு, ஒரு காலத்தில் நிராகரிக்கப்பட்டவற்றை மதிப்புமிக்க வளங்களாக மாற்றுகிறது.

மீண்டும் உஜ்ஜைனிக்கு வருவோம். தினமும் 75,000 முதல் 100,000 பக்தர்கள் வருகை தரும் மகாலகாலேஸ்வர் கோயில், ஒவ்வொரு நாளும் வியக்கத்தக்க வகையில் 5-6 டன் மலர்க் கழிவுகளை உருவாக்குகிறது. இதைச் சமாளிக்க, கோயில் நிர்வாகம் 'புஷ்பாஞ்சலி எக்கனாமிரித்' வாகனங்களை அறிமுகம் செய்தது. இவை மலர்க் கழிவுகளைச் சேகரித்து, ஒரு நாளைக்கு 3 டன் கழிவுகளைப் பதப்படுத்தும் ஆலைக்குக் கொண்டு செல்கின்றன. இந்தக் கழிவுகள் உரம், கட்டிகள் மற்றும் உயிரி எரிபொருட்கள் போன்ற இயற்கை பொருட்களாக மாற்றப்படுகின்றன. சிவ அர்ப்பன் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள், 3 கோடிக்கும் அதிகமான ஊதுபத்திகளையும், பிற சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களையும் உருவாக்கி, இதில் முன்னணியில் உள்ளனர். அவர்களின் முயற்சிகள் கோயிலின் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்க உதவியது மட்டுமின்றி, பலருக்கு நிலையான வேலை வாய்ப்புகளையும் வழங்கியுள்ளன.

தினமும் 40,000 முதல் 100,000 வரை பக்தர்கள் வருவதால், மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலும்  இதேபோன்ற சவாலை எதிர்கொள்கிறது. இங்கு ஒரு நாளைக்கு 120 முதல் 200 கிலோகிராம் வரை மலர் காணிக்கைகள் செலுத்தப்படுகின்றன. இது, 'ஆதிவ் ப்யூர் நேச்சர்' என்ற ஒரு நிலையான வடிவமைப்பு நிறுவனத்தை, கோயிலுடன் இணைந்து பணியாற்றத் தூண்டியது. அவர்கள் வாரத்திற்கு மூன்று முறை கழிவுகளைச் சேகரித்து, அவற்றை சால்வைகள், ஆடைகள் மற்றும் கைத்தறித் துணிகள் போன்ற ஜவுளிகளுக்கான இயற்கை சாயங்களாக மாற்றுகிறார்கள். சாமந்திப் பூக்கள் முதல் தேங்காய் மட்டைகள் வரை பலதரப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, கோயில் கழிவுகள் எவ்வாறு கலை மற்றும் சூழலியல் முயற்சிகளுக்கு உந்துசக்தியாக அமைகின்றன என்பதை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது.

கோயில் கழிவு மறுசுழற்சித் துறையில் முன்னோடியாகத் திகழும், கான்பூரைச் சேர்ந்த பூல்.கோ (Phool.co) நிறுவனம், அயோத்தியா, வாரணாசி, புத்தகயா, பத்ரிநாத் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து ஒவ்வொரு வாரமும் சுமார் 21 டன் மலர்க் கழிவுகளைச் சேகரிக்கிறது. இந்நிறுவனம் இந்தக் கழிவுகளை ஊதுபத்திப் பொருட்களாக மாற்றுவதோடு, 'ஃப்ளெதர்' (Fleather) என்ற புதுமையான தோல் மாற்றீட்டையும் உருவாக்கியுள்ளது. இது பீட்டாவின் (PETA) சிறந்த புத்தாக்க விருது போன்ற பாராட்டுகளையும் பெற்றுள்ளது. நிறுவனத்தின் செயல்பாடுகள் கழிவுகளைக் கட்டுப்படுத்துவதோடு, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் வருங்கால வைப்பு நிதி போன்ற பலன்களைப் பெறும் பெண்களுக்குப் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும் வழங்குகின்றன.

ஐதராபாதில், ஹோலிவேஸ்ட் நிறுவனம், பூக்களை, சோப்புகள், ஊதுபத்திகள் மற்றும் உரங்களாக மாற்றும் ‘ஃப்ளோர்ஜுவினேஷன்’ என்ற செயல்முறை மூலம், பூக்கழிவு சுழற்சியைப் புதுப்பித்து வருகிறது. 40 கோயில்கள் மற்றும் சந்தைப் பகுதிகளில் இருந்து கழிவுகளைச் சேகரிப்பதன் மூலம், வாரத்திற்கு 1,000 கிலோகிராமுக்கும் அதிகமான பூக்கழிவுகள் நீர்நிலைகளையோ அல்லது குப்பைக் கிடங்குகளையோ மாசுபடுத்தாமல் இருப்பதை இந்தப் புத்தொழில் நிறுவனம் உறுதி செய்கிறது.

தலைநகருக்கு அருகே, பூனம் செஹ்ராவத்தின் தில்லியைச் சேர்ந்த புத்தொழில்  நிறுவனமான ஆருஹி, மாதந்தோறும் 15 கோயில்களில் இருந்து 1,000 கிலோகிராமுக்கும் அதிகமான மலர்க் கழிவுகளைப் பதப்படுத்துகிறது. செஹ்ராவத்தின் இந்த நிறுவனம், 3,000-க்கும் அதிகமான பெண்களுக்குச் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை உருவாக்கப் பயிற்சி அளித்து, கணிசமான வருவாய்  ஈட்டி, சமூக மேம்பாட்டையும் ஊக்குவித்துள்ளது.

இந்தியாவின் மலர்க் கழிவுப் புரட்சியின் கதை, கூட்டு முயற்சியின் தாக்கத்திற்கு வலிமையானதொரு  சான்றாக விளங்குகிறது. நாடு முழுவதும், நகரங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் ஒன்றிணைந்து, தூய்மையான, நீடித்த ஓர் எதிர்காலத்தை உருவாக்குகின்றன. இதன் நன்மைகள் பலதரப்பட்டவை—குப்பைக் கிடங்குகள் மற்றும் நீர்வழிகளிலிருந்து கழிவுகள் திசை திருப்பப்பட்டு, ஆரோக்கியமான சூழல் உருவாக்கப்படுகிறது; அதே சமயம், இந்த முயற்சிகள் மூலம் பெண்கள் அர்த்தமுள்ள வேலைவாய்ப்பைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில், புதுமைகளும் செழித்து, வீசியெறியப்பட்ட மலர்களுக்கு ஒரு புதிய வாழ்வை அளிக்கின்றன.

உஜ்ஜைனியின் மகாலகாலேஸ்வரர் கோயில் முதல் மும்பையின் சித்திவிநாயகர் கோயில் வரை, மலர்க் கழிவுகளை மறுசுழற்சி செய்வது என்பது ஒரு சுற்றுச்சூழல் தேவை மட்டுமல்ல, அது கூட்டு முயற்சியின் சக்திக்கு ஓர் சான்றாகவும் விளங்குகிறது. இந்தத் திட்டங்கள் கோயில் கழிவுகளை மதிப்புமிக்க வளங்களாக மாற்றி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, சூழலியல் சமநிலையை வளர்க்கின்றன. இந்தியா தனது நிலைத்தன்மை நோக்கிய பயணத்தைத் தொடரும் வேளையில், 'இயல்பான தூய்மை, தூய்மைக் கலாச்சாரம்' (4எஸ்) போன்ற இயக்கங்கள் இந்த இலக்கை வேகப்படுத்துகின்றன.  நாடு தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை நோக்கி—ஒவ்வொரு மலராக—அர்த்தமுள்ள முன்னேற்றங்களை ஒன்றிணைந்து எடுத்து வருகிறது.

***

SMB/KR

 

(Features ID: 158277) आगंतुक पटल : 21
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English