Others
திருச்சியில் சமூகத்தால் நிர்வகிக்கப்படும் கழிவறைகள் 'தூய்மை இந்தியா இயக்கத்தை' முன்னெடுத்துச் செல்கின்றன
Posted On:
27 SEP 2024 11:58AM
தமிழகத்தின் பரபரப்பான நகரமான திருச்சிராப்பள்ளியின் மையப்பகுதியில், ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அதன் புகழ்பெற்ற கோவில்கள் மற்றும் துடிப்பான தெருக்களுக்கு அப்பால், திருச்சி நகரம் நகர்ப்புற சுகாதாரத் துறையில் ஒரு அமைதியான புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. 'சமூகத்தால் நிர்வகிக்கப்படும் கழிவறைகள்' எனும் ஒரு முன்னோடி மாதிரி, இந்நகரின் குடிசைப்பகுதிகளில் வேரூன்றி, அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு அதிகாரமளித்து, ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இங்குள்ள சூழல், பெரும்பாலும் மோசமான சுகாதாரம் மற்றும் அடிப்படை வசதிகளின்மை ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தப்படும் வழக்கமான குடிசைப்பகுதி வாழ்க்கைச் சூழலுக்கு முற்றிலும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. மாறாக, திருச்சிராப்பள்ளியின் குடிசைப்பகுதிகள் அதிகாரமளித்தல், தூய்மை மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றிற்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன. கடந்த சில ஆண்டுகளில், சுமார் 400 சமூகக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் 150 கழிவறைகள், 'சுகாதாரம் மற்றும் தூய்மைக்கல்வி' குழுக்களாக ஒருங்கிணைக்கப்பட்ட சுயஉதவிக்குழுக்களால் நிர்வகிக்கப்படுகின்றன. உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த பெண்களின் தலைமையில் இயங்கும் இக்குழுக்கள், மிகவும் அவசியமான சுகாதாரக் கட்டமைப்பை வழங்கியதுடன் மட்டுமின்றி, தூய்மை மற்றும் சுயசார்பு கலாச்சாரத்தையும் மக்களிடையே வளர்த்தெடுத்துள்ளன. இம்முறையை உண்மையிலேயே சிறப்பானதாக மாற்றிக்காட்டுவது, இதன் நீண்டகால நிலைத்தன்மையும் நீடித்துழைக்கும் தன்மையுமே ஆகும். இக்கழிவறைகள் வெறும் பயன்பாட்டு வசதிகள் மட்டுமல்ல; அவை நகர்ப்புற ஏழை மக்களின் கண்ணியத்தையும், தங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிப்பதில் அவர்களுக்குள்ள உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கின்றன. கழிவறைகள் முறையாகப் பயன்படுத்தப்படுவதையும் பராமரிக்கப்படுவதையும் உறுதி செய்வதன் மூலம், திருச்சியை 'திறந்தவெளிக் கழிவறை இல்லாத' நகரமாக மாற்றுவதில் சுகாதாரம் மற்றும் தூய்மைக்கல்வி குழுக்கள் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளன.

திருச்சிராப்பள்ளி போன்ற வெற்றிக்கதைகளை முன்னுதாரணமாகக் கொண்டு, இந்தியா தற்போது 'தூய்மை இந்தியா இயக்கத்தின்' 10-வது ஆண்டு நிறைவை, 'இயற்கையின் தூய்மை கலாச்சாரத்தின் தூய்மை' என்னும் புதிய பிரச்சாரத்தைத் தொடங்குவதன் மூலம் கொண்டாடி வருகிறது. 2024 செப்டம்பர் 17 முதல் 2024 அக்டோபர் 2, வரை நடைபெறும் இப்பிரச்சாரம், ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் 'தூய்மையே சேவை' இயக்கத்தின் ஒரு பகுதியாகும்; இது மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தன்று வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படவுள்ள 'தூய்மை இந்தியா தினத்தை' முன்னிட்டு நடத்தப்படுகிறது. சுகாதாரம் மற்றும் தூய்மைத்துறையில் கடந்த பத்தாண்டுகளில் எட்டப்பட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டாடுவதற்காகவும், அதேவேளையில் நிலைத்தன்மை மற்றும் மக்களின் நடைமுறைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்ட புதிய இலக்குகளை முன்னெடுப்பதற்காகவும், இப்பிரச்சாரம் சமூகங்கள், அரசு மற்றும் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கிறது. திருச்சிராப்பள்ளியில் உள்ளது போன்ற சமூகத்தால் இயக்கப்படும் முன்முயற்சிகளிலிருந்து 'இயற்கையின் தூய்மை கலாச்சாரத்தின் தூய்மை' பிரச்சாரம் பெரிதும் உத்வேகம் பெறுகிறது. அங்கு குடிமக்கள், குறிப்பாகப் பெண்கள், சுகாதாரப் புரட்சியில் முன்னணியில் உள்ளனர். உள்ளாட்சி அமைப்புகளின் ஆதரவுடன், இந்தப் பிரச்சாரங்கள் சுகாதாரக் கல்வி, கழிவில்லா நடைமுறைகள் மற்றும் சமூக உரிமை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. திருச்சியில் உள்ள சுகாதாரம் மற்றும் தூய்மைக் கல்வி குழுக்களைப் போலவே, இத்தகைய முயற்சிகள் பெருமிதம் மற்றும் பொறுப்புணர்வை வளர்த்து, சுகாதார உள்கட்டமைப்பு கட்டப்படுவது மட்டுமின்றி, நீண்ட காலத்திற்கு நிலைத்திருப்பதையும் உறுதி செய்கின்றன.

தூய்மை இந்தியா இயக்கம், அதன் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில், இந்தியாவின் சுகாதாரச் சூழலை மாற்றுவதில் மகத்தான வெற்றியை அடைந்துள்ளது. 2024 செப்டம்பர் 26, நிலவரப்படி, தூய்மை இந்தியா இயக்கம் நகர்ப்புற முன்முயற்சியின் கீழ் குறிப்பிடத்தக்க 6,36,826 சமுதாய மற்றும் பொதுக் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதற்கிடையில், கிராமப்புறங்களில் 2,42,072 சமுதாய சுகாதார வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை, முன்பு முறையான கழிவறைகளுக்கு குறைந்த அல்லது வசதியில்லாத எண்ணற்ற தனிநபர்களுக்கு பாதுகாப்பான மற்றும் சுகாதாரமான வசதிகளை வழங்குகின்றன. இந்தப் புள்ளிவிவரங்கள் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமின்றி மேம்பட்ட சுகாதாரத்தால் நேர்மறையாகப் பயனடைந்த மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை அவை பிரதிபலிக்கின்றன. திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில், இந்தக் கழிவறைகள் வெறும் கட்டிடங்கள் மட்டுமின்றி, அவை ஒரு மனநிலை மாற்றத்தின் சின்னங்களாகும். அங்கு தூய்மை என்பது வெறும் அரசு உத்தரவு மட்டுமின்றி அது ஒரு வாழ்க்கை முறையாகும். சுகாதாரம் மற்றும் தூய்மைக்கல்விக் குழுக்களை நிர்வகிக்கும் பெண்களுக்கு, இந்த மாற்றம் மேம்பட்ட ஆரோக்கியத்தையும் சுகாதாரத்தையும் கடந்து, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி, தங்கள் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான இடங்களை உருவாக்கி, தங்கள் சுற்றுப்புற எல்லைகளைத் தாண்டிய ஒரு அதிகார உணர்வை வளர்த்துள்ளது.
சக வயதினரின் ஈடுபாட்டின் மூலம் குழந்தைகள் மாற்றத்தின் தூதுவர்களாக மாறுவது முதல் பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் தலைமைப் பதவிகளைப் பெறுவது வரை, சமூகங்கள் தங்கள் சொந்தத் தூய்மையைப் பொறுப்பேற்கும்போது என்னவெல்லாம் சாத்தியமாகும் என்பதற்கு திருச்சிராப்பள்ளி ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. பரந்த அளவிலான 'இயற்கையின் தூய்மை கலாச்சாரத்தின் தூய்மை' இயக்கமானது, கடந்த பத்தாண்டுகளின் பயன்கள் தக்கவைக்கப்படுவது மட்டுமின்றி, புதிய உச்சத்தை எட்டுவதற்கு விரிவுபடுத்தப்படுவதையும் உறுதிசெய்து, இதுபோன்ற மாதிரிகளை நாடு முழுவதும் மீண்டும் செயல்படுத்த முயல்கிறது. 2024-ல் தூய்மை இந்தியா தினத்தைக் கொண்டாடத் தயாராகும் வேளையில், உண்மையான மாற்றம் சமூகத்திற்குள்ளிருந்தே உருவாகிறது என்பதைத் திருச்சிராப்பள்ளியின் கதை நினைவூட்டுகிறது. தங்கள் சூழலின் பொறுப்பைத் தாங்களே ஏற்றுக்கொள்ளுமாறு தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம், 'தூய்மை இந்தியா இயக்கம்' வெறும் கழிவறைகளைக் கட்டுவதற்கும் மேலான ஒன்றைச் செய்துள்ளது; கண்ணியம், சுகாதாரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மரபாக விட்டுச்செல்லும் வகையில், தொடர்ந்து செழிக்க ஒரு மக்கள் இயக்கத்தையே அது ஏற்படுத்தியுள்ளது.
***
KPV/IR/KPG/KR
(Features ID: 158274)
आगंतुक पटल : 15
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English