• Sitemap
  • Advance Search
Others

இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சி: உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒரு புதிய சகாப்தம்

7% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதக் கணிப்புடன், பொருளாதாரப் புத்தாக்கத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது

Posted On: 16 OCT 2024 6:33PM

கௌடில்ய பொருளாதார மாநாட்டில் நிரம்பியிருந்த அரங்கில், புகழ்பெற்ற இந்திய-அமெரிக்கப் பொருளாதார நிபுணரான ஜகதீஷ் பகவதி, இந்தியாவின் மாற்றத்தின் பிரம்மாண்டத்திற்கு இணையான நம்பிக்கையுடன் பேசினார். அவரது வார்த்தைகள் பெருமிதத்தையும் முன்னேற்றத்தையும் உணர்த்தின: "இந்தியாவின் பொருளாதார நிலை ஒரு முழுமையான மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. முன்பெல்லாம், உலக வங்கி இந்தியாவுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி வந்தது, ஆனால் இப்போது, இந்தியா உலக வங்கிக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறது. நாம் முற்றிலும் ஒரு புதிய சகாப்தத்தை அடைந்துவிட்டோம்." ஒரு காலத்தில் வெளிப்புற வழிகாட்டுதல்களைப் பின்பற்றிய ஒரு பொருளாதாரத்திலிருந்து, இப்போது உலகப் பொருளாதார விவாதத்தை வடிவமைக்கும் ஒன்றாக மாறியுள்ள இந்தியாவின் அசாதாரணப் பயணத்தை அவரது கூற்று கச்சிதமாக உணர்த்துகிறது.

இந்திய வளர்ச்சி குறித்த உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை (IDU), இந்தப் பொருளாதார மாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதுடன், 2024-25 நிதியாண்டில் 7% வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி விகிதத்தையும், எதிர்காலத்திற்கும் இதேபோன்ற சாதகமான கணிப்புகளையும் வழங்கியுள்ளது. மேலும், இந்தியா மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாகத் தொடர்கிறது என்றும், 2022-23 நிதியாண்டில் 7.0% ஆக இருந்த வளர்ச்சி, 2023-24 நிதியாண்டில் ஆண்டுக்கு 8.2% ஆக அதிகரிக்கும் என்றும் அது குறிப்பிட்டது. அதுமட்டுமின்றி, சர்வதேச நிதியத்தின் உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்  தரவுத்தளத்தின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசை கணிசமாக மேம்பட்டு, 2013-14ல் 10-வது பெரிய பொருளாதாரமாக இருந்த நிலையிலிருந்து 2021-22ல் 5-வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளது.

இந்தப் பொருளாதார முன்னேற்றத்துடன், '2005-06 முதல் இந்தியாவில் பன்முக வறுமை' என்ற தலைப்பில் நிதி ஆயோக் வெளியிட்ட அறிக்கை, 2013-14 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்தில் 24.82 கோடி மக்கள் பன்முக வறுமையிலிருந்து மீண்டுள்ளனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இந்தக் காலகட்டத்தில் வறுமையின் அனைத்துப் பரிமாணங்களையும் நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட அரசின் பல்வேறு முயற்சிகளே இந்தக் குறிப்பிடத்தக்க குறைப்புக்குக் காரணமாகும். நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதில் இந்த முயற்சிகள் முக்கியப் பங்காற்றியுள்ளன என்று அந்த அறிக்கை வலியுறுத்துகிறது. மேலும், தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2023-24 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி தற்போதைய சந்தை விலையில் ₹2,11,725 ஆக உள்ளது. இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

கடந்த பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சீர்திருத்தங்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் விளைவாக இந்த நேர்மறையான கண்ணோட்டம் உருவாகியுள்ளது. 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), இந்தியாவின் பொருளாதார மீட்சிக்கு ஒரு முக்கியக் காரணியாக அமைந்தது. இது, பல்வேறு வடிவங்களில் இருந்த மாநில அளவிலான வரிகளை எளிமையாக்கி, நாட்டை ஒரே சந்தையாக ஒருங்கிணைத்தது. இதன் விளைவாக, 2023-24-ல் ஜிஎஸ்டி வசூல் ₹20.18 லட்சம் கோடியாக உயர்ந்தது, இது மாதத்திற்குச் சராசரியாக ₹1.68 லட்சம் கோடியாகும்.

தனது பொருளாதார அடித்தளத்தை இந்தியா வலுப்படுத்தி வரும் நிலையில், சமமான வளர்ச்சிக்கு நிதி உள்ளடக்கம் ஒரு முக்கிய உந்து சக்தியாக உருவெடுத்துள்ளது. ஒரு தசாப்தத்திற்கு முன் தொடங்கப்பட்ட பிரதமரின் மக்கள் வங்கிக் கணக்குத் திட்டம், வங்கி முறைக்கான அணுகலை மாற்றியமைத்துள்ளது. இதன் விளைவாக, அக்டோபர் 2024-க்குள் 53 கோடிக்கும் அதிகமான கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சி, முன்னர் வங்கிச் சேவைகளைப் பெறாமல் இருந்த லட்சக்கணக்கான தனிநபர்களை முறையான நிதி வட்டத்திற்குள் கொண்டு வந்து, சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்தி, பொருளாதார ஏற்றத்தாழ்வைக் குறைத்துள்ளது. ஜிஎஸ்டியுடன் சேர்ந்து, இந்தச் சீர்திருத்தங்கள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் தற்போதைய மாற்றத்திற்கு குறிப்பிடத்தக்க உத்வேகம் அளித்துள்ளன.

2014-ல் அறிமுகப்படுத்தப்பட்ட “இந்தியாவில் உற்பத்தி செய்தல்” முன்முயற்சி, இந்தியாவை ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. விதிமுறைகளை எளிமையாக்கி, தொழில் செய்வதை எளிதாக்குவதன் மூலம், இந்த முன்முயற்சி, சாதனை அளவிலான அந்நிய நேரடி முதலீட்டை (எஃப்டிஐ) ஈர்த்துள்ளது. ஏப்ரல் 2014 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில், இந்தியா 667.41 பில்லியன் டாலர் அந்நிய நேரடி முதலீட்டைப் பெற்றது. இதில், 2021-22 நிதியாண்டில் மட்டும் 84.83 பில்லியன் டாலர் என்ற குறிப்பிடத்தக்க முதலீடு வந்துள்ளது. இந்த முதலீட்டுப் பெருக்கம், தொழில்துறை வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, உலகளாவிய விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தியுள்ளது. ஒரு உற்பத்தி மையமாக இந்தியாவின் வளர்ந்து வரும் ஈர்ப்பு, அதன் பரந்த சந்தை மற்றும் தொழில்முனைவு மனப்பான்மையாலும் வலுப்படுத்தப்படுகிறது.

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (OECD) தலைமைப் பொருளாதார நிபுணரான அல்வாரோ சாண்டோஸ் பெரேரா, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்தக் கருத்தை எதிரொலித்து, “அடுத்த சில தசாப்தங்களில் வலுவான வளர்ச்சி விகிதத்தை அடைவதற்குத் தேவையான அனைத்தும் இந்தியாவிடம் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், பல நாடுகளில் நான் காணாத ஒரு ஆற்றல், தொழில்முனைவு மனப்பான்மை மற்றும் சீர்திருத்த அணுகுமுறை இங்கு உள்ளது,” என்று கூறினார். பெரேராவின் வார்த்தைகள், இந்தியாவின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு உந்துசக்தியாக விளங்கும் லட்சியம், மீள்திறன் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் தனித்துவமான கலவையை வலியுறுத்துகின்றன.

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் உள்கட்டமைப்பு மற்றொரு முக்கியத் தூணாக விளங்குகிறது. பாரத்மாலா பரியோஜனா மற்றும் பிரதமரின் விரைவு  சக்தி போன்ற முதன்மைத் திட்டங்கள் நாட்டின் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் துறைகளை மாற்றியமைத்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில், 24,000 கிலோமீட்டருக்கும் அதிகமான நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு, பயண நேரம் குறைக்கப்பட்டதுடன், பொருளாதார மையங்களுக்கு இடையேயான இணைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள், நாடு முழுவதும் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வேலைவாய்ப்புத் துறையில் முக்கியப் பங்களிப்பாளர்களாகத் திகழ்கின்றன. உள்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம், இந்தியா தனது உள்நாட்டுப் போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், தொடர்ச்சியான பொருளாதார விரிவாக்கத்திற்கும் களம் அமைத்து வருகிறது.

புதுமை சார்ந்த துறையிலும் இந்தியாவின் மாற்றம் தெளிவாகத் தெரிகிறது. 2016-ல் தொடங்கப்பட்ட அடல் புத்தாக்க இயக்கம் (AIM), பள்ளிகளில் 10,000-க்கும் மேற்பட்ட அடல் டிங்கரிங் ஆய்வகங்களை நிறுவி, இளம் திறமையாளர்களை உருவாக்கியுள்ளது. இந்த ஆய்வகங்கள், புதிய தொழில்நுட்பங்களை ஆராயவும், சிக்கல்களைத் தீர்க்கும் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் மாணவர்களை ஊக்குவித்து, எதிர்கால முன்னேற்றங்களுக்கு அடித்தளமிடுகின்றன. புத்தாக்கத்தின் மீதான இந்தக் கவனம், இந்தியாவின் புத்தொழில் சூழலியலின் விரைவான விரிவாக்கத்திற்குப் பங்களித்து, தற்போது உலகின் மூன்றாவது பெரிய சூழலியலாகத் திகழ்கிறது. அக்டோபர் 2024 நிலவரப்படி, இந்தியாவில் 1,50,000-க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை 15 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி, நாட்டின் தொழில்முனைவு ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றன.

"நாம் முற்றிலும் ஒரு புதிய சகாப்தத்தை அடைந்துவிட்டோம்" என ஜகதீஷ் பகவதி குறிப்பிட்டது, உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்தது. 2023-இல், இந்தியா ஜி20 அமைப்பிற்குத் தலைமை வகித்ததன் மூலம், தனது சர்வதேசப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது. "வசுதைவ குடும்பகம்" (உலகமே ஒரு குடும்பம்) என்ற கருப்பொருளின் கீழ், புதுதில்லியில் 18-வது ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டை இந்தியா நடத்தியது. "ஒரே குடும்பம்" என்ற அமர்வின் போது, உக்ரைன் மோதல் உட்பட அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், புதுதில்லி தலைவர்கள் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை பிரதமர் திரு நரேந்திர மோடி அறிவித்தார். இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும். மிகப்பெரிய வல்லரசு நாடுகளிடையே பிளவுகள் ஆழமடைந்து வரும் ஒரு காலகட்டத்தில், இந்தத் தலைமைத்துவம், இந்தியாவின் ராஜதந்திரத் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியதுடன், பன்முகத்தன்மைக்கான அதன் உறுதிப்பாட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தியது.

2030-ஆம் ஆண்டுக்குள் 1,000 பில்லியன் டாலர் சூரிய மின்சக்தி முதலீடுகளைத் திரட்டுவதற்காக, 2015-ஆம் ஆண்டில் பிரான்சுடன் இணைந்து தொடங்கப்பட்ட சர்வதேச சூரிய மின்சக்திக் கூட்டணி (ISA) போன்ற முன்முயற்சிகள் மூலம், நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதில் இந்தியாவும் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. சர்வதேச சூரிய மின்சக்திக்  கூட்டணி மன்றத்தின் ஏழாவது அமர்வு, வரும் நவம்பர் மாதம் புதுதில்லியில் நடைபெறவுள்ளது. இது, உலகளாவிய நிலைத்தன்மை முயற்சிகளில் இந்தியாவின் தலைமைத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முகமையின் (IRENA) 2024 ஆண்டு ஆய்வறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் 1.02 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பது, புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அக்டோபர் 10, 2024 நிலவரப்படி, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 200 ஜிகாவாட்டைத் தாண்டி, 201.45 ஜிகாவாட்டை எட்டியுள்ளது. இது, பசுமையான எதிர்காலம் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை நோக்கிய கணிசமான முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

ஒரு காலத்தில் உலகளாவிய நிறுவனங்களின் ஆலோசனைகளைப் பெற்று வந்த பொருளாதாரம் என்ற நிலையில் இருந்து, தற்போது சர்வதேசப் பொருளாதார உத்திகளை வடிவமைக்கும் பொருளாதாரமாக இந்தியா அடைந்துள்ள வளர்ச்சி, அதன் மீள்திறனுக்கும் லட்சியத்திற்கும் ஒரு குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டாகும். தொடர்ச்சியான சீர்திருத்தங்கள், வலுவான உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில்முனைவு மனப்பான்மையுடன், இந்த நாடு நீண்டகால வளர்ச்சிக்குத் தயாராக உள்ளது. அல்வாரோ சாண்டோஸ் பெரேரா குறிப்பிட்டது போல, சீர்திருத்தங்கள் மீதான  இந்தியாவின் ஆர்வமும், ஆற்றல்மிக்க பொருளாதாரமும் நாட்டைத் தனித்துவமாக்குகின்றன.  மேலும், இந்த மாற்றம் வரும் ஆண்டுகளில் உலகப் பொருளாதார விவாதங்களில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இது உறுதி செய்கிறது.

***

PKV/BR/KR

(Features ID: 158272) आगंतुक पटल : 12
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English