Others
இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம்: 7% மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் மற்றும் 700 பில்லியன் டாலருக்கும் அதிகமான அந்நியச் செலாவணி கையிருப்புடன், இந்தியாவின் பொருளாதாரம் உலக வல்லரசாக மிக விரைவாக வலுப்பெறுகிறது
Posted On:
20 OCT 2024 2:09PM
மும்பையின் பரபரப்பான சந்தை ஒன்றில், விற்பனையாளர்கள் புதிய விளைபொருட்களை விற்றுக்கொண்டிருக்க, வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் கட்டணங்களை அறிவிக்கும் சிறிய, எளிமையான பெட்டிகள்-இந்தி, ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளின் கலவையான, கவரும் வகையிலான அந்த ஒலி சந்தை இரைச்சலுக்கு மேலும் மெருகூட்டுகின்றன. இந்தத் துடிப்புமிக்கக் காட்சி, இயங்கக் கூடிய ஒரு நாடு பொருளாதாரத்தில் சாதனைகளை முறியடித்து, வரும் ஆண்டுகளில் விண்ணை எட்டுமென கணிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற ஹார்வர்ட் பேராசிரியர் லாரி சம்மர்ஸ் கூற்றுப்படி, இந்தியா இதுவரை காணாத ஒரு பொருளாதார மாற்றத்தின் நிலையில் உள்ளது. இன்றிலிருந்து இந்திய சுதந்திரத்தின் 100-வது ஆண்டு நிறைவு வரையிலான காலகட்டத்திற்கு இடையே, இந்தியப் பொருளாதாரம் ஆறு மடங்கு அதிகரிக்குமென்று தான் நம்பிக்கையுடன் உள்ளதாக அவர் கூறுகிறார். மேலும், அடுத்த ஐந்து, 10 ஆண்டுகள், மற்றும் அடுத்த தலைமுறையென வரும் காலங்களில், உலகில் விரைவாக வளரும் முக்கியப் பொருளாதாரமாகத் திகழ்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்பு இந்தியாவிற்கு இருப்பதாக தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
2024 அக்டோபர் நிலவரப்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 701 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன் மூலம் சீனா, ஜப்பான், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பிறகு, 700 பில்லியன் டாலர் என்ற மைல்கல்லை எட்டிய உலகின் நான்காவது நாடாக இந்தியா திகழ்கிறது. இந்த மைல்கல் வெறும் செல்வக் குவியலாக மட்டுமின்றி, உலகளாவிய நிதிசார் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்வதற்கும், தமது வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் தேவைகளுக்கு உறுதுணையாக இருக்கவும், அந்நாட்டிற்கு வளர்ந்து வரும் திறனையும் குறிக்கிறது. 2024 ஜனவரி முதல் தற்போது வரையிலான குறுகிய காலத்தில் மட்டும், இந்தக் கையிருப்புகள் 84 பில்லியன் டாலர் அளவுக்கு அதிகரித்துள்ளன. இந்தக் கையிருப்புகள் ஒரு முக்கியமான பாதுகாப்பு அரணாக இருந்து, உலகில் இந்தியா நம்பிக்கையுடன் செயல்பட வழிவகுக்கின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்த சம்மர்ஸ், தற்போது இந்தியாவிடம் 600 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணி கையிருப்பு உள்ளது. மேலும் இது உலகில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு உதவிகளை வழங்கும் ஒரு நாடாகவும் திகழ்கிறது என்று கூறினார். இதற்குச் சிறந்த உதாரணமாக 'தடுப்பூசி மைத்ரி' போன்ற முன்முயற்சிகளைக் குறிப்பிடலாம். 2024 ஆகஸ்ட் 2, நிலவரப்படி, இந்தத் திட்டத்தின் கீழ் 99 நாடுகளுக்கு 30 கோடிக்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இது சுகாதாரத் துறையில் இந்தியா ஒரு உலகளாவிய தலைமைத்துவமாகத் திகழ்வதை உறுதிப்படுத்துவதுடன், தமது பொருளாதார வலிமையின் வாயிலாக 'மென்மையான அதிகாரத்தைச்' செலுத்தும் இந்தியாவின் திறனையும் விளக்குகிறது. இந்தியாவின் சர்வதேசத் தொடர்பு அதன் வளர்ந்து வரும் உலகளாவிய நிலையின் ஒரு முக்கியக் குறியீடாக இருந்தாலும், உள்நாட்டுச் சூழலும் அதே அளவு நம்பிக்கையளிப்பதாக உள்ளது. உலக வங்கியின் சமீபத்திய இந்திய வளர்ச்சி அறிக்கை, இந்த மாற்றத்தை சுட்டிக்காட்டி, 2024-25 நிதியாண்டில் 7% வலுவான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் ஏற்படும் என்று கணித்துள்ளதுடன், இந்தியாவை விரைவாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் வகையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உள்கட்டமைப்புக்கு வலுவான நிதி ஆதரவைத் தொடர்ந்து வழங்குவதாக அரசு உறுதியளித்துள்ளது. 2024-25 மத்திய பட்ஜெட்டில், மூலதனச் செலவினங்களுக்காக ரூ.11,11,111 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதத்திற்குச் சமமாகும்.
இது, 2020-21-ல் மேற்கொள்ளப்பட்ட ரூ.4.1 லட்சம் கோடி மூலதனச் செலவினத்தை விட கணிசமான அதிகரிப்பாகும். இது, நிதி ஒருங்கிணைப்பு மற்றும் பிற முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே வேளையில், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசின் மேலான கவனத்தை வெளிப்படுத்துகிறது.
இந்த உள்கட்டமைப்பு ஆதரவானது, வணிகங்களையும் தொழில்முனைவோரையும் ஈர்ப்பதற்கு உகந்த, நிலையான சூழலை உருவாக்குவதன் மூலம் வலுப்படுத்தப்படுகிறது. 2014-ல் 'மேக் இன் இந்தியா' முன்முயற்சி தொடங்கப்பட்டது, நாட்டை ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்துவதற்கான ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. இந்திய உற்பத்தியின் வலிமைக்கு ஒரு சான்றாக விளங்கும் வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் முதலாவது உள்நாட்டு மித அதிவேக ரயில்களாகும். அவை நவீன, அதிநவீன பயண அனுபவங்களை வழங்குவதோடு, 102 ரயில் சேவைகள் மூலம் மேம்பட்ட ரயில் தொழில்நுட்பத்தில் நாட்டின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்துகின்றன.
இந்தியாவின் உற்பத்தித் துறை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது; உள்நாட்டுச் சந்தையில் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் 99.2 சதவீதத்தை உற்பத்தி செய்வதன் மூலம், உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. 2023-24-ம் நிதியாண்டில், இந்தியாவின் மொபைல் தொலைபேசி ஏற்றுமதி சுமார் ரூ. 1.2 லட்சம் கோடியைத் தொட்டது; இது 2014-15 நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 77 மடங்கு என்ற வியக்கத்தக்க வளர்ச்சியைப் பிரதிபலிக்கிறது. மேலும், 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடியாக அதிகரித்தது. இதில் பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ரூ.21,000 கோடியைக் கடந்து, 90-க்கும் அதிகமான நாடுகளைச் சென்றடைந்துள்ளது. இந்தச் சாதனைகளுக்கு வலுசேர்க்கும் வகையில், 2023-24-ம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருட்களின் ஏற்றுமதி 437.06 பில்லியன் டாலரை எட்டியது. இது உலக வர்த்தகத்தில் இந்தியாவின் விரிவடைந்து வரும் பங்கைத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
நாட்டின் தொழில் வளர்ச்சி அதன் ஏற்றுமதித் திறன்களை முன்னெடுத்துச் செல்லும் அதே வேளையில், இந்தியாவின் டிஜிட்டல் மாற்றமும் அதன் பொருளாதாரப் பரிணாம வளர்ச்சியில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' முன்முயற்சி, நாட்டை டிஜிட்டல் முறையில் வலுவூட்டப்பட்ட ஒரு சமூகமாக மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். இதுவரை இல்லாத அளவிலான இணைப்பு வசதிக்கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கும் ஒரு அடித்தளத்தை அமைத்தது. பிரதமரின் விவசாயி கௌரவ நிதி' போன்ற திட்டங்களின் வாயிலாக, தற்போது 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணத்தைப் பெறுகின்றனர். கனடா, பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளின் மொத்த மக்கள் தொகையையும் விட இது அதிகமாகும். இந்த முன்முயற்சி கிராமப்புறப் பொருளாதாரங்களை மாற்றியமைத்ததுடன், 137 கோடி ஆதார் எண்களின் வாயிலாக ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு டிஜிட்டல் அடையாளத்தையும் வழங்கியுள்ளது.
இந்த டிஜிட்டல் முன்முயற்சியின் மிகச்சிறந்த வெற்றிகளில் ஒன்றாக, 'ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம்' (யுபிஐ) திகழ்கிறது. இது இந்தியர்கள் பணம் செலுத்தும் முறையை முற்றிலுமாக மாற்றியமைத்த ஒரு புரட்சிகரமான கட்டண முறையாகும். யுபிஐ வாயிலான பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை, 2017-18-ம் நிதியாண்டில் 92 கோடி என்ற அளவிலிருந்து, 2023-24-ம் நிதியாண்டில் 13,000 கோடிக்கும் அதிகமான பரிமாற்றங்களாகப் பன்மடங்கு அதிகரித்தது. இது 129 சதவீத கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தைக் குறிக்கிறது. தற்போது டிஜிட்டல் கட்டணங்களுக்கான உலகளாவிய அளவுகோலாக யுபிஐ மாறியுள்ள நிலையில், இந்தியாவின் டிஜிட்டல் மாற்றம் உலக நாடுகள் பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது.
இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் டிஜிட்டல் முன்முயற்சிகளின் வெற்றியை அனைவரும் காண்கின்றனர். 2014, 2020-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், உலக வங்கியின் 'எளிதாக வர்த்தகம் செய்வது' என்ற பொருளின் தரவரிசையில் இந்தியா 142-வது இடத்திலிருந்து 63-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இது நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒழுங்குமுறைச் சீர்திருத்தங்களின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது. இந்த முன்னேற்றம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரித்து, இந்தியாவை உலகின் முன்னணி முதலீட்டு இடமாக மாற்றியுள்ளது.
இந்தியப் பொருளாதாரம் மென்மேலும் வளர, அதன் சர்வதேச நிலையும் உயர்கிறது. 2023-ல், இந்தியா தமது முதலாவது தலைமைத்துவத்தின் கீழ் ஜி20 தலைவர்கள் உச்சிமாநாட்டை நடத்தியது. இது உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கிய அதன் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். உலகெங்கிலும் உள்ள நாடுகளிலிருந்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
புதுதில்லி தலைவர்கள் பிரகடனத்தை ஏற்றுக்கொள்வது என்பதுடன் நிகழ்வு நிறைவடைந்தது. இது பன்முகத்தன்மைக்கான இந்தியாவின் அர்ப்பணிப்பையும், சிக்கலான உலகளாவிய பிரச்சினைகளைக் கையாளும் அதன் திறனையும் வெளிப்படுத்துகிறது.
இறுதியாக, இந்தியாவின் பொருளாதார முக்கியத்துவத்திற்கான எழுச்சிக்கு உத்திசார்ந்த சீர்திருத்தங்கள், தொலைநோக்குக் கொள்கைகள், அதன் மக்களின் மீள்திறன் ஆகியவை உந்துசக்தியாக உள்ளன. அந்நியச் செலாவணிக் கையிருப்பு விரைவாக அதிகரிப்பது, டிஜிட்டல் உள்கட்டமைப்பு விரிவடைவது, நேரடி வெளிநாட்டு முதலீடு அதிகரிப்பது ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இந்தியாவின் சுதந்திர நூற்றாண்டு விழாவிற்குள் ஆறு மடங்கு வளர்ச்சி ஏற்படும் என்ற லேரி சம்மர்ஸின் கணிப்பு மிகைப்படுத்தப்பட்டதாக இருக்காது.
இந்தப் பயணம் வெறும் எண்களை மட்டும் குறிக்காமல், இது மும்பையின் பரபரப்பான தெருக்களிலிருந்து உலகளாவிய மன்றங்களாக ஒரு வலுவான மாற்றத்தைக் குறிக்கிறது. வரும் பத்தாண்டுகளில் உலகப் பொருளாதாரத்தில் இந்தியா மிகவும் பிரகாசமான இடமாகத் திகழக்கூடும்.
***
PKV/IR/KPG/KR
(Features ID: 158270)
आगंतुक पटल : 15
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English