Others
வங்காள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது
Posted On:
04 OCT 2024 6:16PM
இந்தியாவின் மிக முக்கியமான மொழிகளில் ஒன்றான வங்காள மொழி, துணைக்கண்டத்தின் பண்பாடு மற்றும் மொழியியல் வரலாற்றில் ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் அறிஞர்களின் ஒரு வளமான பாரம்பரியத்தை வங்காள மொழி வளர்த்தெடுத்துள்ளது. இவர்கள் வங்காளத்தின் பண்பாட்டு அடையாளத்தை மட்டுமல்ல, இந்தியாவின் தேசிய உணர்வையும் வடிவமைத்துள்ளனர். சமஸ்கிருத இதிகாசங்களின் தொடக்ககால மொழிபெயர்ப்புகள் முதல் 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளின் புரட்சிகரமான எழுத்துக்கள் வரை, சமூகம், அரசியல் மற்றும் அறிவுசார் இயக்கங்களைத் திரட்டுவதில் வங்காள மொழி இலக்கியம் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை 2024 அக்டோபர் 03 அன்று மராத்தி, பாலி, அஸ்ஸாமி மற்றும் பிராகிருத மொழிகளுடன் வங்காள மொழிக்கும் செம்மொழி அந்தஸ்து வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அங்கீகாரம், வங்காள மொழியின் ஆழமான வரலாறு மற்றும் இலக்கியச் சாதனைகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதோடு, அதன் மொழியியல் பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதையும் ஊக்குவிக்கிறது.
வரலாற்றுப் பின்னணி
தென்கிழக்கு மண்டலத்தில், வங்காளம், அஸ்ஸாமி, ஒரியா, அத்துடன் மகதி, மைதிலி, போஜ்புரி ஆகிய மொழிகளுடன் சேர்ந்து ஒரு மொழிக் குழுவை உருவாக்குகிறது. அதன் உடனடி மூலத்தை மகதத்திலிருந்து (அல்லது பீகாரிலிருந்து) கொண்டுவரப்பட்ட மகதி பிராகிருதம் அல்லது கிழக்குப் பிராகிருதத்தில் இருந்து கண்டறியலாம். கௌட-பங்கா மொழியானது, மற்ற கிழக்கத்திய மொழிகளுடன் சேர்ந்து, மகத அபப்ரம்சத்தின் வழியாக வளர்ந்தது. மரபியல் ரீதியாக, வங்காள மொழி இந்தோ-ஆரிய மொழிகளிலிருந்து தோன்றியது; இவை இந்தோ-ஐரோப்பிய குடும்பத்தின் இந்தோ-ஈரானியக் கிளையின் இந்தியத் துணைக்கிளையைச் சேர்ந்தவை. இந்தியத் தீபகற்பத்தில் உள்ள இந்தோ-ஆரிய மொழிகளின் இலக்கிய ஆவணங்களை, அவற்றின் மொழியியல் மாற்றங்களின் அடிப்படையில் மூன்று காலகட்டங்களாக வகைப்படுத்தலாம்:
* பழைய இந்தோ-ஆரிய காலம் (கி.மு. 1500 / கி.மு. 1200 - கி.மு. 600)
* மத்திய இந்தோ-ஆரிய காலம் (கி.மு. 600 - கி.பி. 1000)
* புதிய இந்தோ-ஆரிய காலம் (கி.பி. 1000 - தற்காலம்)
வங்காள மொழி, மத்திய இந்தோ-ஆரிய மொழியிலிருந்து பரவலாகத் தோன்றிய புதிய இந்தோ-ஆரியப் பிரிவைச் சேர்ந்தது. தாந்திரிக பௌத்தர்கள், நாதியர்கள், சைவர்கள் அல்லது ஜைனர்களின் 'தோன்ஹா' போன்ற ஆவணங்கள், மத்திய இந்தோ-ஆரிய மொழியிலிருந்து புதிய இந்தோ-ஆரிய மொழிக்கு ஏற்பட்ட மாறுதல் காலத்தைக் குறிக்கின்றன; இது அவஹத்தம் அல்லது முன்-புதிய இந்தோ-ஆரியம் என்று குறிப்பிடப்படுகிறது. இருப்பினும், வங்காள மொழிக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த எழுத்து ஆவணங்களின் பற்றாக்குறை, அபப்ரம்சத்திலிருந்து கி.பி. 16-ம் நூற்றாண்டில் தொடங்கிய வங்காள மொழியின் வரலாற்று காலம் வரை படிப்படியான மாற்றங்களைக் கண்டறிவது குறிப்பிடத்தக்க ஒரு சவாலாக உள்ளது.
16-ம் நூற்றாண்டுக்குப் பின், வங்காள மொழி இலக்கியம் மூன்று தனித்துவ காலகட்டங்களாகப் பரிணமித்தது: பழைய வங்காளம் (கி.பி. 950/1000 - கி.பி. 1200 / 1350), இடைக்கால வங்காளம் (கி.பி. 1350 - கி.பி. 1800), நவீன வங்காளம் (கி.பி. 1800 – தற்போது வரை). இடைக்கால வங்காள மொழிக் காலம் என்பது முற்கால இடைக்கால வங்காளம் (கி.பி. 1350 - கி.பி. 1450/1600) மற்றும் பிற்கால இடைக்கால வங்காளம் (கி.பி. 1600 - கி.பி. 1800) என மேலும் பிரிக்கப்பட்டது.
இலக்கிய முக்கியத்துவம்
வங்காள மொழி, மாநிலத்தில் மட்டுமின்றி நாட்டின் கலாச்சார மற்றும் அறிவுசார் தளத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்திய கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களின் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. மிகப் பழமையான வங்காள மொழி இலக்கியப் படைப்புகளை கி.பி. 10 மற்றும் 12-ம் நூற்றாண்டுகளில், மாபெரும் சமஸ்கிருத இதிகாசங்களின் விரிவான மொழிபெயர்ப்புகளுடன் கண்டறியலாம். 16-ம் நூற்றாண்டு, சைதன்யநந்தரால் வழிநடத்தப்பட்ட மதச் சீர்திருத்தங்கள் மற்றும் ரகுநாத், ரகுநந்தனால் வளர்க்கப்பட்ட புனித சட்டத்துடன் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்த நூற்றாண்டுகளில், "வங்காள மொழியின் சாசர்" என்று அடிக்கடி குறிப்பிடப்படும் முகுந்த ராம் போன்ற குறிப்பிடத்தக்க ஆளுமைகள் மற்றும் பிற்கால இலக்கிய மேதைகளான பரத சந்திரா, ராம் பிரசாத் போன்றோரின் பங்களிப்புடன் அசல் படைப்புகளின் எழுச்சி காணப்பட்டது.
வங்காள மொழி இலக்கியத்திற்கு 19-ம் நூற்றாண்டு ஒரு பொற்காலமாக அமைந்தது. ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் போன்ற செல்வாக்கு மிக்க ஆளுமைகள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினர். சம்வாத் கௌமுதி, சோம் பிரகாஷ், வந்தே மாதரம் போன்ற செய்தித்தாள்கள் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றின; அவை மக்களைத் திரட்டுவதில் எழுத்து வடிவத்தின் சக்தியை எடுத்துக்காட்டின. பங்கிம் சந்திர சட்டர்ஜி வங்காள மொழிப் புனைகதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். அதே சமயம், ரவீந்திரநாத் தாகூர், மைக்கேல் மதுசூதன் தத்தா, சுகந்த பட்டாச்சார்யா, காஜி நஸ்ருல் இஸ்லாம் போன்ற கவிஞர்கள், சுதந்திரப் போராட்டத்திற்கு உத்வேகம் அளித்த இலக்கியப் புரட்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்தனர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 'ஜெய் ஹிந்த்', பங்கிம் சந்திர சட்டர்ஜியின் 'வந்தே மாதரம்' போன்ற முழக்கங்கள் தேசம் முழுவதும் எதிரொலித்து, தலைமுறைகளுக்கு உத்வேகம் அளித்தன. ரவீந்திரநாத் தாகூரால் இயற்றப்பட்ட நமது தேசிய கீதமான 'ஜன கண மன'வும், பங்கிம் சந்திராவின் 'வந்தே மாதரம்' என்ற தேசியப் பாடலும் வங்காள மொழிக் கவிஞர்களிடமிருந்து தோன்றியவையே.
குறிப்பாக, ரவீந்திரநாத் தாகூர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்று, வங்காள மொழி இலக்கியத்தை உலக அரங்கில் முன்னிறுத்தினார். மேலும், அவர் சாந்திநிகேதன் என்ற புகழ்பெற்ற திறந்தவெளி கலை, இலக்கியப் பள்ளியை நிறுவினார். அது இன்றும் செழித்து வளர்ந்து வருகிறது.
வங்காள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கிய அமைச்சரவை அறிவிப்பு
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, வங்காள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கு எடுத்த அண்மைக்கால முடிவு, இந்தியாவின் பாரம்பரியத்திற்கு அம்மொழி ஆற்றிய குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் வரலாற்றுப் பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது. இந்த அங்கீகாரம், இந்தியாவின் பண்டைய கலாச்சாரப் பாரம்பரியத்தின் பாதுகாவலராகவும், அதன் வளமான வரலாறு, இலக்கியம் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பவராகவும் வங்காள மொழியை ஏற்றுக்கொள்கிறது. இந்த அந்தஸ்தை வழங்குவதன் மூலம், இந்தியாவின் பன்முகக் கலாச்சார தளத்தின் மொழியியல் மைல்கற்களைக் கௌரவிப்பதையும், எதிர்காலச் சந்ததியினர் வங்காள மொழியின் ஆழமான வரலாற்று வேர்களை அணுகுவதற்கு வழிவகுப்பதையும் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை மொழிப் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தை வலுப்படுத்துகிறது. நாட்டின் கலாச்சார அடையாளத்தை உருவாக்குவதிலும், அறிவார்ந்த ஆராய்ச்சியை ஊக்குவிப்பதிலும், பண்டைய நூல்கள் மற்றும் அறிவுசார் அமைப்புகளுக்குப் புத்துயிர் அளிப்பதிலும் வங்காள மொழி ஆற்றிவரும் முக்கியப் பங்கினை இது அங்கீகரிக்கிறது.
வங்காள மொழியை செம்மொழியாக அங்கீகரிப்பது, இந்தியாவின் மொழிப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. தனது ஆழமான வரலாறு, உயிரோட்டமான இலக்கியப் பாரம்பரியம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்துடன், இந்திய அடையாளத்தின் பன்முகத்தன்மை வாய்ந்த மற்றும் வளமான சித்திரத்தைப் பிரதிபலிப்பதில் வங்காள மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. செம்மொழிகளை மேம்படுத்துவதில் அரசின் இந்த அர்ப்பணிப்பு, கடந்த காலத்தைக் கௌரவிப்பதோடு, எதிர்காலச் சந்ததியினர் வங்காளம் போன்ற மொழிகளின் மகத்தான பங்களிப்புகளுடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு அவற்றைப் பாராட்டவும் வழிவகுக்கிறது. இந்த முன்னெடுப்பு, தற்சார்பு மற்றும் கலாச்சாரத்தில் வேரூன்றிய இந்தியா என்ற பரந்த தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, கல்விசார் ஆய்வுகளை ஊக்குவிக்கவும், கலாச்சாரப் பெருமிதத்தை வளர்க்கவும், தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்தவும் உறுதியளிக்கிறது.
***
PKV/SMB/KR
(Features ID: 158269)
आगंतुक पटल : 14
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English