Others
ராய்கட் கோட்டை: புகழ்பெற்ற மராத்தா பேரரசின் தலைநகரம், சத்ரபதி சிவாஜி மகராஜால் பேணி வளர்க்கப்பட்டது.
Posted On:
28 OCT 2024 1:00PM
ராய்கட் கோட்டை என்பது, “இந்தியாவின் மராத்தா ராணுவத் தளங்கள்” என்ற தலைப்பின் கீழ் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய தளமாகப் பரிந்துரைக்கப்பட்ட 12 கோட்டைகளில் ஒன்றாகும்.
பரிந்துரைக்கப்பட்ட 12 கோட்டைகளில், ராய்கட் கோட்டை என்பது, மராத்தா கட்டடக்கலைக்கு ஓர் உன்னதமான உதாரணமாகவும், குன்றின் மீதான தலைநகரக் கோட்டையின் சிறந்த அடையாளமாகவும் விளங்குகிறது.
குஜராத்தின் கெவாடியாவில் இந்த ஆண்டு நடைபெறும் தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டங்களின் கருப்பொருளின் பின்னணி ராய்கட் கோட்டை ஆகும்.
சத்ரபதி சிவாஜி மகராஜின் அபாரமான வீரம், தீரச் செயல்கள், புதுமையான போர் நுட்பங்கள் குறித்த கதைகளைக் காட்சிப்படுத்தும் வகையில், கெவாடியாவில் நடைபெறும் தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெறும் இடத்தில் பின்னணியாக ராய்கட் கோட்டையின் மாதிரி வடிவம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ராய்கட் கோட்டை மற்றும் ஜிப்ரால்டர் பாறைக்கு இடையேயான ஒப்புமைகளைச் சுட்டிக்காட்டி, ராய்காட் கோட்டையைக் கிழக்கின் ஜிப்ரால்டர் என்று பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரான கிராண்ட் டஃப் குறிப்பிடுகிறார்
துர்க்ராஜ் ராய்கட்
மகாராஷ்டிராவின் பள்ளத்தாக்குகளுக்கு மேலே உயர்ந்து நிற்கும் ராய்கட் கோட்டை, சத்ரபதி சிவாஜி மகராஜ் ஆட்சியின் பிரதிபலிப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ஒரு காலத்தில் அவரது செழிப்பான மராத்தா பேரரசின் தலைநகராக விளங்கிய இந்த மலையுச்சிக் கோட்டை, வீரம், புதுமை மற்றும் தீரச்செயல்களின் கதைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. ராய்கட் கோட்டையின் ஒவ்வொரு கல்லும், இந்தக் கோட்டையை வலிமையின் சின்னமாக மாற்றிய சிவாஜி மகராஜின் குறிப்பிடத்தக்க துணிச்சலையும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தந்திரங்களையும் எதிரொலிக்கிறது. ஒரு பேரரசின் வரலாற்றை வடிவமைத்த அசாதாரணமான செயல்களைத் தலைமுறைகளுக்கு நினைவூட்டி இன்றும் இது தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது.

சத்ரபதி சிவாஜி மகராஜ் மராத்தா பேரரசின் தலைநகராக ராய்கட் கோட்டையை எவ்வாறு தேர்ந்தெடுத்தார் என்பதை 'சபாசத் பக்கர்' (பண்டைய கடிதம்) விவரிக்கிறது. "சத்ரபதி சிவாஜி மகராஜ், செங்குத்தான சரிவுகளைக் கொண்டதும், அப்பகுதியில் உள்ள அனைத்து மலைகள் மற்றும் குன்றுகளிலேயே மிக உயரமானதுமான ராய்ரி அல்லது இந்தக் குன்றின் ஆற்றலைக் கண்டார். பாறையின் தடையற்ற மற்றும் உடைபடாத தன்மை ஒரு பெரும் ஆற்றலாக இருந்தது. தௌலதாபாத் கோட்டையும் ஒரு நல்ல கோட்டைதான், இருப்பினும், அது ராய்கட் கோட்டையைப் போல் சிறந்ததல்ல. ஏனெனில், இது உயரமாகவும் சிறந்ததாகவும் இருப்பதால், தலைநகராகவும் மன்னரின் அரியணையாகவும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று கருதினார்" என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கால் மற்றும் காந்தாரி ஆறுகளால் உருவான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட ராய்கட், பக்கத்து மலைகளுடன் தொடர்பின்றி ஒரு தனித்த மலைத்தொடராகத் திகழ்கிறது. செங்குத்தான பாறைகள் மற்றும் 1500 அடி உயர செங்குத்துப் பாறைகள் போன்ற நிலவியல் அம்சங்களால் உருவான அதன் அசைக்க முடியாத தன்மை, புதுமையான ராணுவப் பாதுகாப்புத் தந்திரங்களால் மேலும் வலுவடைந்தது.

ராய்கட் கோட்டை மற்றும் ஜிப்ரால்டர் பாறைக்கு இடையேயான ஒப்புமைகளைச் சுட்டிக்காட்டி, ராய்காட் கோட்டையைக் கிழக்கின் ஜிப்ரால்டர் என்று மராத்தா காலம் குறித்த பிரிட்டிஷ் வரலாற்றாசிரியரான கிராண்ட் டஃப் குறிப்பிடுகிறார்.
"இந்தியாவின் மராத்தா ராணுவத் தளங்கள்" என்ற தலைப்பின் கீழ் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியத் தளமாகப் பரிந்துரைக்கப்பட்ட 12 கோட்டைகளில் ராய்கட் கோட்டையும் ஒன்றாகும். பரிந்துரைக்கப்பட்ட 12 கோட்டைகளில், ராய்கட் கோட்டை என்பது மராத்தா கட்டடக்கலைக்கு ஓர் உன்னதமான உதாரணமாகவும், ஒரு குன்றின் மீதான தலைநகரக் கோட்டைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. மேலும், குன்றின் நில அமைப்போடு நன்கு ஒருங்கிணைந்து, கோட்டைக்குள் மிகவும் மேம்பட்ட கட்டமைப்பு வகைகளை இது கொண்டுள்ளது.

குஜராத் மாநிலம் கெவாடியாவில் இந்த ஆண்டு நடைபெறும் தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டங்களின் கருப்பொருள் பின்னணி ராய்கட் கோட்டை ஆகும். சத்ரபதி சிவாஜி மகராஜின் அபாரமான வீரம், தீரச் செயல்கள், புதுமையான போர் நுட்பங்கள் குறித்த கதைகளைக் காட்சிப்படுத்தும் வகையில், கெவாடியாவில் நடைபெறும் தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெறும் இடத்தில் பின்னணியாக ராய்கட் கோட்டையின் மாதிரி வடிவம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
ராய்கட் கோட்டையின் வரலாறு
பொ.ஆ. 1653-ல், ராய்கட் (அப்போது ராய்ரி என்று அழைக்கப்பட்டது) மராத்தா படைகளால் மோரேக்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது. கோட்டையைத் தலைநகராக மாற்றுவதற்குத் தகுதியானதாக்கும் பொருட்டு, சிவாஜி மகராஜ் அதன் புனரமைப்புப் பணியை ஹிரோஜி இந்துல்கரிடம் ஒப்படைத்தார். அதைத் தொடர்ந்து, பொ.ஆ. 1674 ஜூன் 6 அன்று, ராய்கட் கோட்டையில் சிவாஜி மகராஜின் பிரம்மாண்டமான முடிசூட்டு விழா நடைபெற்றது. அப்போது அவர் "சத்ரபதி" என்ற பட்டத்தைப் பெற்றார். இக்கோட்டை சத்ரபதி சிவாஜி மகராஜின் இரண்டாவது தலைநகராக விளங்கியதுடன், மராத்தா ராஜியத்தின் நிர்வாகத்திலும் விரிவாக்கத்திலும் ஒரு முக்கியப் பங்கு வகித்தது.
மகாராஷ்டிராவின் புகழ்பெற்ற கடந்த காலத்தின் அமைதியான நினைவூட்டலாக ராய்கட் கோட்டை நிமிர்ந்து நிற்கிறது. இது துர்கராஜ் (கோட்டைகளின் அரசன்) என்று அழைக்கப்படுகிறது. இதன் பல்வேறு அடையாளச் சின்னங்கள், இதற்கு 'சிவ தீர்த்தம்' என்ற பெருமையைப் பெற்றுத் தந்துள்ளன. இக்கோட்டை சிவபக்தர்களுக்கு ஒரு புனிதத் தலமாக விளங்குகிறது. இதன் பாரம்பரியத் தன்மைக்காகவும், கச்சிதமான பாதுகாப்பு கட்டடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதற்காகவும் மட்டுமின்றி, வீரம், தைரியம், நிர்வாகத் திறமை, கருணை மற்றும் தேசபக்திக்குப் பெயர் பெற்ற தங்களின் முன்மாதிரியான சத்ரபதி சிவாஜி மகராஜின் இருப்பிடமாகவும் இருப்பதால், ஆயிரக்கணக்கான மக்கள் இக்கோட்டைக்கு வருகின்றனர். கிறித்தவ மற்றும் இந்து நாட்காட்டிகள் அடிப்படையில் கொண்டாடப்படும் சிவராஜ்யாபிஷேகப் பெருநாள், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பெருந்திரளான மக்களை ஈர்க்கும் வகையில் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இதேபோல், சிவாஜி மகராஜின் நினைவு நாளும் (புண்ணியதிதி) மிகுந்த மரியாதையுடன் அனுசரிக்கப்படுகிறது.
இங்குதான் பதினேழாம் நூற்றாண்டில் (பொ.ஆ. 1674) சிவாஜி மகராஜ் தனது தலைநகரை நிறுவினார். பொ.ஆ. 1656-ல் சந்திரராவ் மோரேயிடமிருந்து சிவாஜி மகராஜ் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினார். அதன் உத்திசார் அமைவிடம் மற்றும் எளிதில் அணுக முடியாத தன்மையைக் கருத்தில் கொண்டு, உரிய ஆய்வுக்குப் பின், இது ஹிந்த்வி ஸ்வராஜின் தலைநகருக்கு மிகவும் பொருத்தமானதாகக் கருதப்பட்டது. மலையின் ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே மலை உச்சியை அடைய முடியும். பொ.ஆ. 1680-ல் தனது மரணம் வரை ஆறு ஆண்டுகள் ராய்கட் கோட்டையிலிருந்து ஹிந்த்வி ஸ்வராஜை சிவாஜி மகராஜ் ஆட்சி செய்தார். ராய்கட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகராஜின் சமாதி உள்ளது.
ராய்கட் கோட்டை, அற்புதமாக வடிவமைக்கப்பட்ட வாயில்கள், கோட்டைச் சுவர்கள் மற்றும் கம்பீரமான நினைவுச்சின்னங்களுக்காகப் புகழ்பெற்றது. சிவாஜி மகராஜின் சமாதி, நக்கர் கானா, சீர்காய் தேவி கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜகதீஸ்வரர் கோயில் ஆகியவற்றைத் தவிர, கோட்டைக்குள் அமைந்துள்ள பொது மக்கள் சந்திப்பு மண்டபம் (ராஜ்சதார்), அரச வளாகம், ராணிவாசா அரண்மனை, பஜார்பேத், மனோர் (பொழுதுபோக்கு மண்டபங்கள்), வடேஷ்வர் கோயில், குப்லாடா புர்ஜ், மாசித் மோர்ச்சா, நானே தர்வாசா உள்ளிட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் மோசமான பாதுகாப்பு நிலையில் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

அரச வளாகம்: ராணிவாசா, ராஜ்சதர், நக்கர்கானா, மேனா தர்வாசா, பால்கி தர்வாசா ஆகியவற்றை உள்ளடக்கிய அரச வளாகம், நன்கு பாதுகாக்கப்பட்டுள்ளது. இதை நக்கர்கானா, மேனா தர்வாசா, பால்கி தர்வாசா ஆகிய மூன்று நுழைவாயில்கள் வழியாக மட்டுமே அணுக முடியும். இந்தப் பாதுகாக்கப்பட்ட வளாகம் பொதுவாக பல்லே கில்லா (கோட்டை) என்று அழைக்கப்படுகிறது. பல்லே கில்லாவிற்கு அருகில் மூன்று நேர்த்தியான கோபுரங்கள் உள்ளன. ஒன்று வடக்கிலும், மற்ற இரண்டும் அரண் சுவரின் கிழக்கிலும் அமைந்துள்ளன. இந்த மூன்று மாடிக் கோபுரங்கள் (மனோரே) மிகவும் அலங்கார வேலைப்பாடுகளுடனான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. இவை தொடக்கத்தில் கேளிக்கை மண்டபங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. முறையான வடிகால் வசதியுடன் இணைக்கப்பட்ட ஒரு கழிப்பறை இருப்பது குறிப்பிடத்தக்கது. கிழக்குப் பகுதியில் ஒரு நிலவறை (கல்பத் கானா) அமைந்துள்ளது. இது ரகசியக் கூட்டங்கள், தனிப்பட்ட வழிபாடு மற்றும் கருவூலமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

ராஜ்சதர் (மக்கள் சபை மண்டபம்): இங்குதான் சிவாஜி மகராஜ் அன்றாட நேர்வுகளில் நீதி வழங்கவும், பிரமுகர்களையும் தூதர்களையும் வரவேற்கவும் தனது அரசவையை நடத்தி வந்தார். இது கிழக்கு நோக்கிய ஒரு செவ்வக வடிவக் கட்டடமாகும். பொதுவாக நக்கர்கானா என்று அழைக்கப்படும் ஒரு பிரம்மாண்டமான நுழைவாயில் வழியாக கிழக்கிலிருந்து இதை அடையலாம். இந்த நுழைவாயில், அரச சிம்மாசனத்தை நோக்கியவாறு அமைந்துள்ள ஓர் உயர்ந்த மூன்று மாடிக் கட்டடம் ஆகும். இதன் மேல் மாடி செங்கற்களாலும், கீழ் மாடிகள் கல் தொகுதிகளாலும் கட்டப்பட்டுள்ளன. நக்கர்கானாவில் ஓர் அரச இசைக்குழு இசைக்கருவிகளை வாசித்து வந்ததாக நம்பப்படுகிறது. இது வியக்கத்தக்க ஒலிப் பண்புகளைக் கொண்ட கட்டடக்கலைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். நக்கர்கானாவிற்கும் அரச சிம்மாசனத்திற்கும் இடைப்பட்ட தூரம் சுமார் 65 மீட்டர் ஆகும். இருப்பினும் மிகச் சிறிய கிசுகிசுப்பு ஒலி கூட இரு முனைகளிலிருந்தும் தெளிவாகக் கேட்கும். சிவாஜி மகராஜின் மகிழ்ச்சி, துக்கம் , கோபம், வெற்றிகள், நிர்வாகத் திறமை, அளவற்ற கொடைத்தன்மை ஆகியவற்றிற்கு ராஜ்சதர்ஒரு மெளன சாட்சியாக விளங்குகிறது.
பிரதான மேடையில், அசல் சிம்மாசனம் இருந்த இடத்தின் மீது, அமர்ந்த நிலையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜின் திருவுருவத்துடன் எண்கோண மேகதாம்பரி (அலங்கார விதானம்) அமைந்துள்ளது. வைரங்கள் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட அந்த அரச சிம்மாசனம், ஏறக்குறைய 1000 கிலோ எடை கொண்ட எட்டு தங்கத் தூண்களின் மீது அமைந்திருந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது சிவாஜி மகராஜின் அரச சின்னத்தையும் கொண்டிருந்தது. சிம்மாசனத்தின் மேலிருந்த குடை, விலையுயர்ந்த கற்கள் மற்றும் முத்துக்களால் ஆன சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ஹோலிச்சா மால்: இது நக்கர்கானாவிற்கு வெளியே அமைந்துள்ளது. இது ஆண்டுதோறும் நடைபெறும் ஹோலி பண்டிகைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ள ஒரு பரந்த திறந்தவெளி மைதானமாகும். ஹோலிச்சா மாலின் மேற்கு எல்லையில், கோட்டையின் தலைமைத் தெய்வமான ஷிர்காய் பவானிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறிய கோயில் உள்ளது. தலைமைத் தெய்வம் முதலில் ஹோலிச்சா மாலின் தென்மேற்கில் ஓர் உயரமான கல் பீடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அது தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. ஹோலிச்சா மாலின் வடக்கே, பஜார் பேட் என்று பொதுவாக அழைக்கப்படும் விசாலமான, நன்கு அமைக்கப்பட்ட கட்டட அலகுகளின் இணையான வரிசை உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள ஒவ்வொரு அலகிலும் முன்புறம் ஒரு தாழ்வாரமும், பின்புறம் ஒன்றுக்கொன்று பின்புறமாக அமைந்த இரண்டு அறைகளும் உள்ளன. பீடமும் சுவர்களும் பகுதி செதுக்கப்பட்ட பசால்ட் கல் தொகுதிகள் மற்றும் சிதறிக் கிடக்கும் சரளைக் கற்களால் கட்டப்பட்டுள்ளன. மேலும் சுண்ணாம்பு சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜகதீஸ்வரர் ஆலயம்: கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயில், முன்புறத்தில் மண்டபத்துடனும் பின்புறத்தில் கருவறையுடனும் செவ்வக வடிவில் அமைந்துள்ளது. தாழ்வான நுழைவாயில் வழியாக கோயிலுக்குள் நுழையலாம். கருவறையில் உள்ள சிவலிங்கம் இன்றும் வழிபாட்டில் உள்ளது. கோயிலின் உட்புறச் சுவர்களில் எந்தச் சிற்ப வேலைப்பாடுகளும் இல்லை. இருப்பினும், நீட்டிக்கப்பட்ட மேற்கட்டுமானம் நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட தாங்கிகளால் தாங்கப்பட்டுள்ளது.
சத்ரபதி சிவாஜி மகராஜின் சமாதி: கோயிலை ஒட்டி, ஜகதீஸ்வரர் கோவிலின் கிழக்கு நுழைவாயிலுக்கு ஏறக்குறைய எதிரே சத்ரபதி சிவாஜி மகராஜின் சமாதி அமைந்துள்ளது. தொடக்கத்தில், இந்தச் சமாதியில் உயரம் குறைந்த எண்கோண மேடை மட்டுமே இருந்தது. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், மேடையின் உயரம் உயர்த்தப்பட்டது மட்டுமின்றி, அதே இடத்தில் ஒரு விதானமும் கட்டப்பட்டது.
ராய்கட்வாடி கிராமத்திற்கு அருகே, மலையடிவாரத்தில் சிட்டா தர்வாசா அமைந்துள்ளது. இது உள்ளூரில் ஜித் தர்வாசா என்றும் அழைக்கப்படுகிறது. அங்கிருந்து சுமார் 70-80 மீட்டர் தூரம் நடந்து மலையேறிய பின், கூப் லடா புர்ஜ் உள்ளது. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள கோபுரமாகும். இங்கிருந்து கோட்டையை நெருங்கி வருபவர்களைப் பாதுகாப்புப் படையினர் எளிதில் அடையாளம் கண்டுவிட முடியும்.
***
PKV/SMB/KR
(Features ID: 158268)
आगंतुक पटल : 24
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English