Others
நிலைத்தன்மைக்கு உலகளாவிய கவனத்தைப் பெறும் இந்திய உணவு முறை
Posted On:
14 OCT 2024 7:22PM
உணவு என்பது மனிதன் உயிர்வாழ்வதற்கு மட்டுமல்லாமல், சுற்றுப்புறச் சூழலின் நிலைத்தன்மையை வடிவமைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது பல்லுயிர் பெருக்கம், நீர் பயன்பாடு மற்றும் பசுமை இல்ல வாயு வெளியேற்றம் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனித ஆரோக்கியத்திற்கும் நமது பூமியின் ஆரோக்கியத்திற்கும் இடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த முயலும்போது, நிலையான உணவுத் தேர்வுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

நமது தற்போதைய உணவு முறைகள் பூமியின் வளங்களுக்கு பெரும் அழுத்தத்தைத் தருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும், இந்த சவாலுக்கு மத்தியில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிகிறது. இயற்கைக்கான உலகளாவிய நிதியம் WWF-ன் '2024 வாழும் கோள் அறிக்கை' , இந்தியாவின் உணவுப் பழக்கங்களை நிலைத்தன்மைக்கான ஒரு மாதிரியாக முன்னிலைப்படுத்துகிறது. குறிப்பிடத்தக்க வகையில், உலகம் முழுவதுமே இந்தியாவின் நுகர்வுப் பழக்கத்தைப் பின்பற்றினால், 2050-ம் ஆண்டில் உலகளாவிய தேவைக்கான உணவை உற்பத்தி செய்ய நமக்கு பூமியின் 0.84 பகுதியே போதுமானதாக இருக்கும். இந்த அங்கீகாரம், சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நுகர்வை நோக்கிய உலகளாவிய இயக்கத்தில் இந்தியாவின் தலைமைத்துவத்தை நிலைநிறுத்துகிறது.
இந்திய உணவு: நிலைத்தன்மைக்கான உணவு

பாரம்பரிய இந்திய உணவு முறை பெரும்பாலும் தாவர அடிப்படையிலானது; இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாதிரியாகத் திகழ்கிறது. அதிக வளங்கள் தேவைப்படும் விலங்குகளிலிருந்து கிடைக்கும் பொருட்களைச் சார்ந்திருக்காமல் தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளைச் சார்ந்திருப்பதன் மூலம், இந்திய உணவு முறை குறைவான இயற்கை வளங்களையே பயன்படுத்துகிறது மற்றும் குறைவான பசுமை இல்ல வாயுக்களையே வெளியேற்றுகிறது.
WWF அறிக்கையின்படி, அனைத்து நாடுகளும் இந்தியாவின் நுகர்வு முறைகளைப் பின்பற்றினால், வளங்களுக்கான உலகளாவிய தேவை கணிசமாகக் குறையும். உலகளவில் இந்திய உணவு முறை பின்பற்றப்பட்டால், 2050-ம் ஆண்டில் உலகளாவிய தேவைக்கான உணவை உற்பத்தி செய்ய நமக்கு பூமியின் 0.84 பகுதியே போதுமானதாக இருக்கும் என்று அந்த அறிக்கை மதிப்பிடுகிறது.
2050-ம் ஆண்டிற்குள் உலகளாவிய உணவு உற்பத்தியைத் தக்கவைப்பதற்கான இந்தியாவின் அணுகுமுறையை அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. 'தேசிய சிறுதானிய இயக்கம்' போன்ற முயற்சிகளின் மூலம் சிறுதானியங்கள் போன்ற பாரம்பரியமான மற்றும் மீள்திறன் கொண்ட பயிர்களை பயிரிட இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
உள்ளூர் கலாச்சார மரபுகள் ஆரோக்கியமான உணவுகளை ஆதரிப்பதோடு, நிலப் பயன்பாட்டைக் குறைக்கவும், இயற்கையை மீட்டெடுக்கவும், சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தணிக்கவும் உதவும் என்பதை இந்தியாவின் நடைமுறைகள் நிரூபிக்கின்றன.
ஸ்ரீ அன்னா: ஊட்டச்சத்து மற்றும் நிலைத்தன்மைக்கான இந்தியாவின் சிறுதானிய இயக்கம்
சிறுதானியங்களின் ஊட்டச்சத்து நன்மைகளை அங்கீகரித்து, மத்திய அரசு அவற்றை 'ஊட்டச்சத்து தானியங்கள்' என வகைப்படுத்தி குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மேலும், இதற்கு 'ஸ்ரீ அன்னா' என்று பெயரிட்டதன் மூலம், இந்த அற்புத உணவிற்கு ஒரு புதிய அர்த்தமும் பரிமாணமும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தப் பழங்காலத் தானியங்களை உலக அரங்கில் ஊக்குவிக்கும் முயற்சியாக, 2021 மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபை, 2023-ம் ஆண்டை 'சர்வதேச சிறுதானிய ஆண்டாக' அறிவித்தது. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்கவும், இந்தச் சத்தான தானியங்களை அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலம் உணவு நுகர்வு முறைகளை மாற்றவும் அரசு முயற்சிப்பதால், இது இந்தியாவிற்கு ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. இந்த தொலைநோக்குப் பார்வையை அடைய பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன:
• சிறப்பு மையம்: ஹைதராபாத்தில் உள்ள இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம், சிறந்த நடைமுறைகள் மற்றும் ஆராய்ச்சிகளை உலகளவில் பகிர்ந்து கொள்ளும் சிறப்பு மையமாகச் செயல்படுகிறது.

• உலகளாவிய ஊக்குவிப்பு முயற்சிகள்: சிறுதானியங்களை உலகளவில் கொண்டு செல்ல ஜி20 தலைமைத்துவ முயற்சிகள், சிறுதானிய சமையல் விழாக்கள், சர்வதேச வர்த்தக நிகழ்வுகள் மற்றும் ஆசியான்-இந்தியா சிறுதானிய விழாக்கள் போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
• உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டம்: 2022-23 முதல் 2026-27 வரை சிறுதானிய அடிப்படையிலான தயாரிப்புகளுக்காக ரூ 800 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு உணவுப் பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
• ஊட்டச்சத்து திட்டங்களுடன் ஒருங்கிணைப்பு: ஊட்டச்சத்து இயக்கத்தில் (போஷன் அபியான்) சிறுதானியங்கள் சேர்க்கப்பட்டுள்ளன; மேலும் பல்வேறு அரசுத் திட்டங்களின் கீழ் சிறுதானிய கொள்முதலை அதிகரிப்பதற்கான வழிகாட்டுதல்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
• ‘சரியான உணவை தேர்ந்தெடுத்தல்’ பிரச்சாரம்: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) சிறுதானியங்களை ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக ஊக்குவிக்கிறது மற்றும் அரசுத் துறை நிகழ்வுகளில் சிறுதானிய தின்பண்டங்களைச் சேர்க்க ஊக்குவிக்கிறது.
• விவசாயிகளுக்கு ஆதரவு: தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் உள்ள ஊட்டச்சத்து தானியங்களுக்கான துணை இயக்கம், 28 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் சிறுதானிய உற்பத்திக்கான ஊக்கத்தொகைகளை வழங்குகிறது. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள் பயிரிடுதலை ஊக்குவிக்க மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விரிவான முயற்சிகள் சிறுதானியங்களின் உற்பத்தி, நுகர்வு மற்றும் உலகளாவிய இருப்பை மேம்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. இவை அதன் ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை வெளிப்படுத்துவதோடு, நிலையான உணவு முறைகளையும் பொறுப்பான உற்பத்தி ஆதாரங்களையும் ஊக்குவிக்கின்றன.
நிலையான விவசாயத்திற்கு இந்தியா வழிவகுக்கிறது
விவசாய உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்த, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு, பருவநிலை மாற்றத்தைத் தாங்கி வளரும் விவசாய முறைகளைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறது. இந்த முயற்சியின் முக்கிய மைல்கல்லாக, 32 வகையான விளைநில மற்றும் தோட்டக்கலைப் பயிர்களில் 109 அதிக மகசூல் தரும், பருவநிலையைத் தாங்கி வளரும் பயிர் ரகங்களை அறிமுகப்படுத்தியதைக் குறிப்பிடலாம். மேலும், நிலையான விவசாய நடைமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு பல முன்முயற்சிகளைச் செயல்படுத்தியுள்ளது:
• நிலையான விவசாயத்திற்கான தேசிய இயக்கம்: இது இந்தியாவின் பருவநிலை நடவடிக்கை திட்டத்தின் ஒரு பகுதியாகும். மழைப்பொழிவை நம்பியுள்ள பகுதிகளின் மேம்பாடு, பண்ணை நீர் மேலாண்மை மற்றும் மண் ஆரோக்கிய மேலாண்மை போன்ற திட்டங்களின் மூலம் விவசாயத்தின் மீள்திறனை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது.
• இயற்கை விவசாய ஊக்குவிப்பு: 'பாரம்பரிய வேளண் வளர்ச்சி திட்டம்' மற்றும் வடகிழக்கு பிராந்தியத்திற்கான இயற்கை மதிப்புச் சங்கிலி மேம்பாட்டுத் திட்டம் போன்றவை இயற்கை விவசாயக் குழுக்கள், உள்ளூர் இயற்கை பிராண்டுகள் (எ.கா. "ஆர்கானிக் உத்தரகண்ட்") மற்றும் மாநிலங்கள் முழுவதும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கின்றன.
• நமாமி கங்கைத் திட்டம்: நிலையான விவசாயத்தையும் கங்கை நதியை மீட்டெடுக்கும் முயற்சிகளையும் இது இணைக்கிறது. இதில் 1.34 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் காடுகள் வளர்ப்பதும் அடங்கும்.
• ஜெயவிக்-கேதி தளம்: 6 லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் தங்கள் இயற்கை விளைபொருட்களை நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யக்கூடிய ஒரு ஆன்லைன் தளமாகும்.
• பெரிய பகுதிகளுக்கு அங்கீகாரச் சான்றிதழ்: அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லடாக் மற்றும் லட்சத்தீவுகள் உள்ளிட்ட நீண்டகாலமாக இயற்கை விவசாய பாரம்பரியத்தைக் கொண்ட பகுதிகளை முழுமையான இயற்கை விவசாய மண்டலங்களாக இந்திய அரசு அங்கீகரித்து சான்றளித்துள்ளது.
• பருவநிலையைத் தாங்கும் விவசாயம்: பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் விவசாயத்திற்கான தேசிய கண்டுபிடிப்புகள் மூலம், பருவநிலை அழுத்தத்தைத் தாங்கி வளரக்கூடிய 2,000-க்கும் மேற்பட்ட பயிர் ரகங்களை இந்தியா உருவாக்கியுள்ளது.
• தோட்டக்கலை மேம்பாடு: ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், தோட்டக்கலைப் பயிர்களுக்கான பரப்பளவு, இயற்கை விவசாயம் மற்றும் பழைய பழத்தோட்டங்களைப் புதுப்பித்தல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய உணவு முறையின் முக்கிய சிறப்பம்சங்கள்
உணவு முறையே உலகளவில் வாழ்விட இழப்பு மற்றும் சீரழிவிற்கு மிக முக்கியமான காரணியாக இருப்பதாக WWF வாழும் கோள் அறிக்கை 2024 குறிப்பிடுகிறது. மற்ற முக்கிய அச்சுறுத்தல்களில் அதிகப்படியான சுரண்டல், ஆக்கிரமிப்பு இனங்கள், மாசுபாடு மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை அடங்கும்.
• பல்லுயிர் இழப்பு: உலகளாவிய உணவு முறையே வாழ்விட இழப்பிற்கு முதன்மைக் காரணமாகும். இது மனிதர்கள் வாழக்கூடிய நிலப்பரப்பில் 40% சதவீதத்தைப் பயன்படுத்துகிறது, இதில் 71% கால்நடை மேய்ச்சலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமான அளவிற்கு இது பொறுப்பாகிறது. மேலும், கால்நடைகளை அதிகமாகச் சார்ந்திருப்பது பயிர் பன்முகத்தன்மையை கணிசமாகக் குறைத்துள்ளது, இதன் விளைவாக வெறும் 10 முக்கிய பயிர்கள் மட்டுமே உலகளாவிய உணவு கலோரிகளில் 83% சதவீதத்தை வழங்குகின்றன.
• உணவு வீணாதல்: உற்பத்தி செய்யப்படும் மொத்த உணவில் சுமார் 30-40% நுகரப்படுவதே இல்லை. இது 4.4% பசுமை இல்ல வாயு வெளியேற்றம் உட்பட உலகளாவிய சுற்றுச்சூழல் பாதிப்பில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளது.
• ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் உடல் பருமன்: உணவு உற்பத்தி அதிக அளவில் இருந்தபோதிலும், இந்த அமைப்பு போதுமான ஊட்டச்சத்தை வழங்கத் தவறிவிட்டது. கிட்டத்தட்ட 735 மில்லியன் மக்கள் பசியுடன் உறங்கச் செல்கின்றனர், அதே நேரத்தில் உடல் பருமன் விகிதங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த முரண்பாடு தற்போதைய அமைப்பில் உள்ள திறமையின்மை மற்றும் சமத்துவமின்மையை எடுத்துக் காட்டுகிறது.
• நிலையற்ற நடைமுறைகள்: உணவு முறையின் மறைமுகமான சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரச் செலவுகள் ஆண்டுக்கு 10-15 டிரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது நீண்டகால உணவுப் பாதுகாப்பு மற்றும் எதிர்கால சந்ததியினரைத் தாங்கும் திறனை பாதிக்கிறது.
• நன்னீர் குறைவு: உலகளாவிய நன்னீர் பயன்பாட்டில் 70% சதவீதம் விவசாயத்திற்கு செல்கிறது. இது நிலத்தடி நீர்மட்டம் மற்றும் ஆற்று நீரோட்டம் குறைவதற்கு பங்களிக்கிறது.
• மீன்வளம் பாதிப்பு: ஆண்டுதோறும் 90 மில்லியன் டன்களுக்கும் அதிகமான கடல் உணவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன, இது 3 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவளிக்கிறது. ஆனால் 37.7% கடல் மீன் வளங்கள் அளவுக்கு அதிகமாகப் பிடிக்கப்படுகின்றன. அதிகப்படியான சுரண்டல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவை கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பை அச்சுறுத்துகின்றன. சில பிராந்திய மீன் இனங்களை அழிவை நோக்கித் தள்ளுகின்றன.
• பல்லுயிர் இழப்பு மற்றும் உயிரினங்களின் அழிவு: உலகளாவிய உணவு முறையே பல்லுயிர் இழப்பிற்கு முதன்மை உந்துசக்தியாக உள்ளது. விவசாயமானது 80% சதவீதத்திற்கும் அதிகமான அழியும் நிலையிலுள்ள நிலப்பரப்பு பறவைகள் மற்றும் பாலூட்டி இனங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. பயிர் பன்முகத்தன்மை குறைவு மற்றும் மகரந்தச் சேர்க்கையாளர்களின் அழிவு விவசாய உற்பத்தித்திறனுக்கு ஆபத்து விளைவித்து, உணவுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
நிலையற்ற உணவு நுகர்வு மற்றும் உற்பத்தி நடைமுறைகளின் மோசமான தாக்கத்தை அங்கீகரித்து, பல்லுயிர் இழப்பை நிறுத்த உணவு, எரிசக்தி மற்றும் நிதி அமைப்புகளில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த மாற்றங்களில் இயற்கைக்கு உகந்த உணவு உற்பத்தியை அதிகரித்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுதல் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளிலிருந்து நிதி ஆதாரங்களைத் திசைதிருப்புதல் ஆகியவை அடங்கும்.
WWF வாழும் கோள் அறிக்கை 2024, உணவு உற்பத்திக்கான இந்தியாவின் முழுமையான மற்றும் நிலையான அணுகுமுறையைப் பாராட்டியுள்ளது, இது மற்ற நாடுகள் பின்பற்றுவதற்கான ஒரு உலகளாவிய உதாரணமாகத் நமது தேசத்தை முன்னிறுத்துகிறது. கலாச்சாரம் சார்ந்த உணவு முறைகளுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும், குறிப்பாக மாறுபட்ட இந்திய உணவுகளில் பாரம்பரிய உணவுகளை மீண்டும் அன்றாட உணவில் சேர்ப்பதன் மூலமும், இந்தியா ஊட்டச்சத்து பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, பல்லுயிர் பெருக்கம் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மையையும் ஊக்குவிக்கிறது. இந்த முன்முயற்சிகள் உள்ளூர் விவசாய நடைமுறைகள் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் மீதான ஆழமான மரியாதையைப் பிரதிபலிக்கின்றன, இது ஆரோக்கியமான, மீள்திறன் கொண்ட உணவு முறைகளை உருவாக்குவதற்கான உலகளாவிய முயற்சிகளுடன் ஒத்துப்போகிறது. இந்தியா நிலையான உணவு முறைகளைத் தொடர்ந்து ஆதரித்து வருவதால், இது மக்களையும் பூமியையும் மதிக்கும் இது போன்ற உத்திகளை ஏற்றுக்கொள்ள பிற நாடுகளுக்கு ஊக்கமளிக்கிறது.
***
PD/PKV/KR
(Features ID: 158218)
आगंतुक पटल : 3
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English