• Sitemap
  • Advance Search
Others

வருங்கால சினிமாவை வடிவமைத்தல்: வளர்ந்து வரும் திரைப்பட இயக்குநர்களுக்கு ஐஎப்எப்ஐ 2024 ஊக்கமளிக்கிறது

Posted On: 12 NOV 2024 5:48PM

படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்களை ஒன்றிணைப்பதற்கு, கலாச்சார எல்லைகளைத் தாண்டிப் பெயர்பெற்ற சினிமா உலகம், மீண்டும் 2024 நவம்பர் 20 அன்று கோவாவில் சினிமா ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎப்எப்ஐ) 55-வது பதிப்பு, ‘இளம் திரைப்படக் கலைஞர்கள்: எதிர்காலம் இப்போது’ என்ற கருப்பொருளின் மூலம் இளம் இயக்குநர்களின் திறனை வளர்க்கிறது. வளர்ந்து வரும் குரல்களின் மீதான இந்தக் கவனம், இந்திய சினிமாவின் ஆயுளும் வளர்ச்சியும் அதன் புதிய கதைசொல்லிகளையே சார்ந்துள்ளது என்பதை அங்கீகரிக்கிறது. இந்த இளம், புதுமையான திரைப்படக் கலைஞர்கள் பாரம்பரியக் கதைகளை நவீன நுட்பங்களுடன் கலந்து தனித்துவமான சினிமா அனுபவங்களை உருவாக்குகிறார்கள். அறிமுக இயக்குநர்களுக்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட விருதுகள் மற்றும் இளம் திறமையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட முன்முயற்சிகள் ஆகியவை மூலம் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் (ஐஎப்எப்ஐ) இந்தக் கருப்பொருள் உயிர் பெறுகிறது. இவை அனைத்தும் ஒரு புதிய தலைமுறை சினிமா முன்னோடிகளை உருவாக்கும் விழாவின் குறிக்கோளுக்கு ஏற்ப அமைந்துள்ளன.

இந்த ஆண்டு ஐஎப்எப்ஐ விழாவுக்கு 101 நாடுகளில் இருந்து 1,676 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இது இவ்விழாவின் வளர்ந்து வரும் சர்வதேச அந்தஸ்துக்கு ஒரு சான்றாகும். ஐஎப்எப்ஐ 2024-ல் 81 நாடுகளைச் சேர்ந்த 180-க்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்படங்கள் திரையிடப்படும். இதில் 15 உலக அளவிலான முதல் காட்சிகள், 3 சர்வதேச அளவிலான முதல் காட்சிகள், 40 ஆசிய அளவிலான முதல் காட்சிகள் மற்றும் 106 இந்திய அளவிலான முதல் காட்சிகள் அடங்கும். உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்ட மற்றும் விருது பெற்ற திரைப்படங்களின் தொகுப்பாக இவை இருப்பதால், இந்த ஆண்டு திரைப்பட விழா பார்வையாளர்கள் மத்தியில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும். ஐஎப்எப்ஐ 2024-ன் 'கௌரவ நாடு'  ஆக ஆஸ்திரேலியா இருக்கும். ஆஸ்திரேலிய திரைப்படங்களின் பிரத்யேக தொகுப்பு மற்றும் விழாவில் அந்த நாட்டின் வலுவான பங்களிப்பு இருக்கும்.

புதிய திறமைகளைக் கொண்டாடுதல் - சிறந்த அறிமுக இந்தியத் திரைப்படப் பிரிவு 2024:

 ஐஎப்எப்ஐ 2024-ன் சிறப்பம்சங்களில் ஒன்று 'சிறந்த அறிமுக இந்தியத் திரைப்பட இயக்குநர்' விருதாகும். இது முதன்முறையாகப் படம் இயக்கும் சிறந்த இயக்குநர்களைக் கொண்டாடுகிறது. இந்த விருதுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள புதிய அம்சம், இந்திய சினிமாவிற்குள் இருக்கும் புதிய பார்வைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது மட்டுமல்லாமல், இந்தியாவின் பிராந்திய கலாச்சாரங்களில் வேரூன்றிய கதைகளின் பன்முகத்தன்மையையும் எடுத்துரைக்கிறது. இந்த ஆண்டு, மொழி மற்றும் பிராந்தியங்களைக் கடந்து இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்து அறிமுக இயக்குநர்கள் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்துவார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள்: லட்சுமிப்பிரியா தேவியின் பூங் (மணிப்புரி), நவஜோத் பாண்டிவடேகரின் கராத் கணபதி (மராத்தி), மனோகரா கே-வின் மிக்கா பன்னடா ஹக்கி (கன்னடம்), யாதா சத்யநாராயணாவின் ரசாக்கர் (தெலுங்கு) மற்றும் ராகேஷ் நாராயணனின் தனுப்பு (மலையாளம்).

102 விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அறிமுகத் திரைப்படங்கள், கலாச்சார நுண்ணறிவுகளின் பல அம்சங்களை தேசிய தளத்துக்குக் கொண்டு வருகின்றன. உள்ளூர் கதைகளைத் தேசிய மற்றும் சர்வதேச பார்வையாளர்களுடன் இணைக்கின்றன. இந்த விருது நிறைவு விழாவின் போது அறிவிக்கப்படும். இதில் ஒரு சான்றிதழ் மற்றும் ₹5 லட்சம் பரிசுத் தொகை அடங்கும். நாடு முழுவதிலுமிருந்து இளம் திரைப்படத் தயாரிப்புத் திறமைகளை அங்கீகரிப்பதற்காக இந்த புதிய விருது நிறுவப்பட்டுள்ளது, இது 'இளம் திரைப்படக் கலைஞர்கள்' என்பதில் கவனம் செலுத்தும் ஐஎப்எப்ஐ -யின் கருப்பொருளுக்கு ஏற்ப அமைகிறது. ஐஎப்எப்ஐ இந்தப் பிரத்யேக தளத்தின் மூலம் புதிய குரல்களை ஊக்குவிக்கிறது. வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களுக்குப் பரந்த பார்வையாளர்களைச் சென்றடையவும், அங்கீகாரம் பெறவும், திரையுலகில் தங்கள் இடத்தைப் பிடிக்கவும் ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

படைப்பாற்றலை வளர்த்தல்: நாளைய படைப்பாற்றல் சிந்தனையாளர்கள்

'நாளைய படைப்பாற்றல் சிந்தனையாளர்கள்'  முன்முயற்சி இந்தியா முழுவதும் உள்ள இளம் சினிமா திறமைகளை வளர்க்கிறது. 2021-ம் ஆண்டில் 52-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் போது விடுதலையின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகத் தொடங்கப்பட்ட இந்த முன்முயற்சி, மூன்று வெற்றிகரமான பதிப்புகள் மூலம் 225 முன்னாள் மாணவர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளது. அதன் நான்காவது பதிப்பில், 13 வெவ்வேறு திரைப்படக் கலைகளில் 100 திறமையான இளம் திரைப்படக் கலைஞர்களை ஆதரிக்கும், இது கடந்த ஆண்டு 10 கலைகளில் 75 பங்கேற்பாளர்களாக இருந்தது; இது அவர்களின் திறமைகளை சர்வதேச அளவில் வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்குகிறது. இந்த ஆண்டு 1,032 விண்ணப்பங்களுடன் இந்த முன்முயற்சி சாதனை படைத்துள்ளது. இது 2023-ஐ விட கிட்டத்தட்ட இருமடங்காகும்.

இளம் இந்தியத் திறமைகளை அடையாளம் காண்பது, அவர்களின் தனித்துவமான படைப்பாற்றல் குரல்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு சர்வதேச மேடையை வழங்குவது மற்றும் பல்வேறு திரைப்படத் துறைகளில் சிறந்து விளங்குவதை அங்கீகரிப்பது ஆகியவை இந்த முன்முயற்சியின் முதன்மை நோக்கங்களாகும். 54-வது ஐஎப்எப்ஐ ஒரு  திறமை முகாமையும் நடத்தியது. அங்கு பங்கேற்பாளர்கள் முன்னணி ஊடக மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்களுடன் இணைந்தனர். அதில் தங்கள் படைப்புகளை வழங்கினர் மற்றும் தொழில்துறை சார்ந்த பயிலரங்குகளில் கலந்து கொண்டனர். இது இளம் திரைப்படக் கலைஞர்களுக்கு குறிப்பிடத்தக்க தொழில்முறை வளர்ச்சி மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை வளர்த்தது.

தொழில்துறை ஒத்துழைப்புக்கான ஒரு ஆற்றல்மிக்க தளம்: ஃபிலிம் பஜார் 2024

நவம்பர் 20 முதல் 24 வரை திட்டமிடப்பட்டுள்ள ஃபிலிம் பஜாரின் 18-வது பதிப்பு, திரைப்படச் சந்தையின் பல்வேறு பிரிவுகளில் இடம்பெற்றுள்ள 350-க்கும் மேற்பட்ட திரைப்படத் திட்டங்களுடன் மிகப்பெரியதாக அமைய உள்ளது. இந்த ஆண்டு ஃபிலிம் பஜார் இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்களுக்கு ஒரு கூட்டுத் தளத்தை வழங்கும். இந்த ஆண்டின் பட்டியலில் ஹிந்தி, ஆங்கிலம், அசாமி, தமிழ் மற்றும் பல மொழிகளில் திரைப்படங்கள் உள்ளன. இது பல்வேறு குரல்களுக்குத் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நிதியாளர்கள் மற்றும் விழா அமைப்பாளர்களிடம் தங்கள் திட்டங்களை முன்வைக்க வாய்ப்பளிக்கிறது. ஐஎப்எப்ஐ-யுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்படும் இந்த நிகழ்வில் காட்சி அறை,  இணை தயாரிப்பு சந்தை, அறிவுத் தொடர்கள் போன்ற முதன்மைப் பிரிவுகள் உள்ளன.

ஃபிலிம் பஜாரின் காட்சி அறையில் இந்தியா மற்றும் தெற்காசியாவைச் சேர்ந்த திரைப்படங்கள், நடுத்தர நீளப் படங்கள் மற்றும் குறும்படங்கள் என 208 படங்கள் காட்சிப்படுத்தப்படும். திரைப்படக் கலைஞர்களை உலகளாவிய விநியோகஸ்தர்களுடன் இணைக்க வடிவமைக்கப்பட்ட இந்த அறை, முடிவடைந்த அல்லது தயாரிப்புக்குப் பிந்தைய நிலையில் உள்ள படங்களைப் பார்க்க வல்லுநர்களை அனுமதிக்கிறது. இது நவம்பர் 21 முதல் 24 வரை திறந்திருக்கும். இதில் 145 திரைப்படங்கள், 23 நடுத்தர நீளப் படங்கள், 30 குறும்படங்கள் மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சேகரிப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மீட்டெடுக்கப்பட்ட கிளாசிக் படங்கள் இடம்பெறும்.

ஃபிலிம் பஜார் 2024-ல் ஒரு புதிய அம்சமாக, இணை தயாரிப்பு சந்தையில்  சிறந்த மூன்று கூட்டுத் தயாரிப்புத் திட்டங்களுக்கு 20,000 டாலர் ரொக்க மானியம் வழங்கப்படுகிறது. இதில் ஏழு நாடுகளைச் சேர்ந்த 21 திரைப்படங்கள் மற்றும் 8 வலைத் தொடர்கள்  இடம்பெறும். அறிவுத் தொடர்களில் திரைப்படத் தயாரிப்பு, விநியோகம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்த பட்டறைகள் மற்றும் அமர்வுகள் இருக்கும்.

இந்த ஆண்டு, பல்வேறு நாடுகள், மாநிலங்கள், திரைப்படத் துறை, தொழில்நுட்பம் மற்றும் விஎஃப்எக்ஸ்  துறை ஆகியவற்றின் பங்கேற்புடன் அரங்குகள் மற்றும் கண்காட்சிகள் அமையும். ஃபிலிம் பஜாரில் இந்த ஆண்டு 'வாங்குபவர்-விற்பனையாளர்' சந்திப்பும் ஏற்பாடு செய்யப்படும்.

ஃபிலிம் பஜார் இந்த ஆண்டு ஐஎப்எப்ஐ –யில் ஆறுசிறந்த  திரைப்படங்களை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள்: திரிபேனி ராயின் ஷேப் ஆஃப் மோமோஸ் (நேபாளி), சக்திதர் பிர்-ன் காங்ஷாலிக் (வங்காளம்), மோகன் குமார் வலசாலாவின் யெர்ரா மந்தாரம் (தெலுங்கு), ரிதம் ஜன்வேயின் காட்டி ரி ராட்டி (காடி, நேபாளி), சித்தார்த் பாடியின் உமல் (மராத்தி), விவேக் குமாரின் தி குட், தி பேட், தி ஹங்ரி (ஹிந்தி). இந்த ஆறு படங்களில் ஐந்து படங்கள் இளம் மற்றும் வளர்ந்து வரும் திரைப்படக் கலைஞர்களின் அறிமுகத் திரைப்படங்களாகும்.

2007-ம் ஆண்டு தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தால் தொடங்கப்பட்ட ஃபிலிம் பஜார், இன்று தெற்காசியாவின் மிகப்பெரிய கூட்டுத் தயாரிப்பு சந்தையாகவும், பிராந்திய சினிமாவை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் தளமாகவும் வளர்ந்துள்ளது. லஞ்ச் பாக்ஸ், மார்கரிட்டா வித் எ ஸ்ட்ரா, கோர்ட், தம் லகாகே ஹைஷா போன்ற வெற்றிகரமான படங்கள் முன்பு இந்தத் தளத்தால் பயனடைந்தவை.

ஐஎப்எப்ஐ 2024 நான்கு உற்சாகமான சர்வதேச பிரிவுகளை அறிமுகப்படுத்துகிறது: இவை, வளர்ந்து வரும் இயக்குநர்களின் படைப்புகள், சுற்றுச்சூழல் சார்ந்த படங்கள், ஆஸ்திரேலிய கதைகள் மற்றும் பிரிட்டிஷ் திரைப்பட நிறுவனத்தின் தேர்வுகள் ஆகியவை ஆகும்.  ஐஎப்எப்ஐ 2024-ல் பெண்களால் இயக்கப்பட் 47 திரைப்படங்கள் மற்றும் இளம் மற்றும் அறிமுக இயக்குநர்களின் 66 படைப்புகள் திரையிடப்படுகின்றன. 'சினிமாவில் பெண்கள்'  பகுதி பெண் இயக்குநர்களின் தாக்கத்தை ஏற்படுத்தும் பங்களிப்புகளைக் கௌரவிக்கிறது.

ஒரு செறிவான கல்வி அனுபவம்

திரைப்படத் திரையிடல்களுடன் கூடுதலாக, ஐஎப்எப்ஐ சிறப்பு வகுப்புகள் மற்றும் குழு விவாதங்கள் மூலம் ஆழ்ந்த கல்வி அனுபவத்தை வழங்குகிறது. பங்கேற்பாளர்கள் ஏ.ஆர். ரஹ்மான், ஷபானா ஆஸ்மி, மணிரத்னம், விது வினோத் சோப்ரா மற்றும் சர்வதேச ஆளுமைகளான பிலிப் நோய்ஸ், ஜான் சீல் ஆகியோரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். ஒலி வடிவமைப்பு, இயக்கம் முதல் நடிப்பு நுட்பங்கள் வரை பல்வேறு அம்சங்களை இந்த அமர்வுகள் உள்ளடக்குகின்றன.

ஐஎப்எப்ஐ தனது 55-வது பதிப்பில் அடி எடுத்து வைக்கும் போது, சினிமாவின் கலைத்திறனைக் கொண்டாடுவதோடு புதிய தலைமுறை கதைசொல்லிகளையும் வளர்க்கிறது. சிறந்த அறிமுக இயக்குநர் விருது, ஃபிலிம் பஜார் போன்ற முன்முயற்சிகள் மூலம், வளர்ந்து வரும் குரல்களுக்கான ஒரு அடித்தளமாக ஐஎப்எப்ஐ தனது பங்கை உறுதிப்படுத்துகிறது. இந்திய சினிமாவின் எதிர்காலம் நிச்சயமாகத் திறமையான கைகளில் உள்ளது, மேலும் ஐஎப்எப்ஐ 2024 ஒரு சினிமா மறுமலர்ச்சிக்கு வழி வகுக்கிறது.

***

PLM/PKV/KR

(Features ID: 158215) आगंतुक पटल : 27
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English