• Sitemap
  • Advance Search
Others

ஹார்ன்பில் திருவிழா 2024: நாகாலாந்தின் கலாச்சார வண்ணக்கோலம்

Posted On: 03 DEC 2024 8:46AM

ஒவ்வொரு டிசம்பர் மாதமும், நாகாலாந்தின் துடிப்பான நிலப்பரப்புகள் பாரம்பரியம், இசை மற்றும் தோழமையின் கொண்டாட்டத்துடன் உயிர் பெறுகின்றன. "திருவிழாக்களின் திருவிழா" என்று பொருத்தமாக அழைக்கப்படும் ஹார்ன்பில் திருவிழா, ஒரு கலாச்சார கண்கட்சியாகத் திகழ்கிறது. நாகா நாட்டுப்புறக் கதைகளில் துணிச்சலையும் கம்பீரத்தையும் குறிக்கும் புனிதமான பறவையான 'ஹார்ன்பில்' (இருவாச்சிப் பறவை) பெயரால் அழைக்கப்படும் இந்தத் திருவிழா, நாகாலாந்தின் துடிப்பான கலாச்சாரத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறது.

"திருவிழாக்களின் நிலம்" என்று அழைக்கப்படும் நாகாலாந்து, 17 முக்கிய பழங்குடி இனத்தின் தாயகமாகும். ஒவ்வொரு பழங்குடியினருக்கும் அதன் தனித்துவமான திருவிழாக்களும் பாரம்பரியங்களும் உள்ளன. டிசம்பர் 1 முதல் 10 வரை நடைபெறும் ஹார்ன்பில் திருவிழா, இந்தச் சமூகங்களை ஒன்றிணைத்து, அவர்களின் கலாச்சாரச் செழுமையை ஒரே கூரையின் கீழ் காணும் வாய்ப்பை வழங்குகிறது. 2000-ம் ஆண்டில் இருந்து கொண்டாடப்பட்டுவரும் இந்தத் திருவிழா, பழங்குடியினருக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துவதையும், நாகாலாந்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பாரம்பரியத்தையும் சமகாலத்தையும் ஒன்றிணைக்கிறது.

ஹார்ன்பில் திருவிழாவானது எழில்மிகு கிசாமா  பாரம்பரிய கிராமத்தில் நடைபெறுகிறது. ஒரு பொதுவான மேலாண்மை அணுகுமுறை மற்றும் விரிவான தரவுத்தளத்தின் மூலம் இனக் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதும், சுற்றுலா மேம்பாட்டைத் தொடர்வதுமே இந்த பாரம்பரிய கிராமத்தை உருவாக்கியதன் நோக்கமாகும். இது தொடங்கப்பட்டதிலிருந்து, மாநிலத்தின் சுற்றுலாத் துறையில் தீவிர மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. ஒரு பார்வையாளர் அனைத்து நாகா பழங்குடியினரையும், அவர்களின் கலாச்சாரம் மற்றும் தனித்துவத்தை ஒரே இடத்தில் மிக அருகில் காணும் வாய்ப்பைப் பெறுகிறார். இந்தப் பாரம்பரிய வளாகம் 17 பழங்குடியின வீடுகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது (இவை 'மொரங்என்று அழைக்கப்படுகின்றன, அதாவது இளைஞர் தங்குமிடம்). ஒவ்வொரு வீடும் ஒரு குறிப்பிட்ட பழங்குடியினத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்தக் கிராமம் ஒரு கலாச்சார மையமாகச் செயல்பட்டு, ஒவ்வொரு பழங்குடியினரின் தனித்துவமான மரபுகள் மற்றும் கட்டடக்கலை பற்றிய நுட்பமான அறிவை வழங்குகிறது.

"கலாச்சார இணைப்பு" என்ற கருப்பொருளில் நடைபெறும் ஹார்ன்பில் திருவிழா 2024, நாகாலாந்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையின் பிரம்மாண்டமான கொண்டாட்டமாகும். நாட்டுப்புற நடனங்கள், பாடல்கள், உள்நாட்டு விளையாட்டுகள் மற்றும் சடங்குகளை உள்ளடக்கிய தினசரி கலாச்சார நிகழ்ச்சிகளுடன், இந்தத் திருவிழா மாநிலத்தின் வாழும் பாரம்பரியங்களின் ஒரு கண்கவர் காட்சியாக அமைகிறது.  பயிற்சிப் பட்டறைகள், கலைப் போட்டிகள் ஆகியவை திருவிழாவிற்கு ஒரு சமகாலத் தன்மையைச் சேர்க்கிறது. அதே சமயம் 'கைவினைக்கலைஞர்கள் இடம்' உள்நாட்டு கைவினைத்திறனை முன்னிலைப்படுத்தி, நாகா கலைத்திறனின் வேர்களுடன் பார்வையாளர்களை இணைக்கிறது.

இந்தத் திருவிழாவின் ஈர்ப்பு கலாச்சாரத்தைத் தாண்டி, நாகா மல்யுத்தம், பாரம்பரிய வில்வித்தை, உணவு மற்றும் மூலிகை மருத்துவக் கடைகள், ஆடை அலங்காரக் காட்சிகள், அழகுப் போட்டிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் போன்ற செயல்பாடுகளின் மூலம் நவீனத்தையும் பாரம்பரியத்தையும் ஒன்றிணைக்கிறது. இந்த ஆண்டு, இந்திய தேசிய ஆவணக்காப்பகத்துடன் இணைந்து, ஆவணக்காப்பகப் பிரிவு "ஆவணக் கண்ணாடியில் நாகா-நிலம் மற்றும் மக்கள்" என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் கண்காட்சியை நடத்துகிறது. இது இப்பகுதியின் வரலாறு மற்றும் கலாச்சார நடைமுறைகள் குறித்த ஆழமான ஆய்வை வழங்குகிறது.

ஆழமான கலாச்சார அனுபவத்தைத் தேடும் எவருக்கும், நாகாலாந்தின் அழகு மற்றும் பன்முகத்தன்மையைக் காண்பதற்கு ஹார்ன்பில் திருவிழா ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. அதன் துடிப்பான தாளங்கள் மற்றும் நுணுக்கமான நடனங்கள் முதல், அதன் அருங்காட்சியகங்களின் அமைதி மற்றும் உணவு, கைவினைப் பொருட்கள் வரை, இந்தத் திருவிழா நாகா மக்களின் ஆன்மாவையும், அதன் மூலம் இந்தியாவின் உணர்வையும் பிரதிபலிக்கிறது!

கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் இந்த ஒருங்கிணைப்பு உணர்வு, வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பரந்த தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. இந்தியாவின் மொழிகள், பாரம்பரியங்கள், திருவிழாக்கள் மற்றும் கலை வடிவங்களின் செழுமையான தொகுப்பு, பல்வேறு கலாச்சாரங்களின் இணக்கமான முறையில் செழித்து வளர்கின்றன. ஒவ்வொரு பிராந்தியமும், சமூகமும் மற்றும் நம்பிக்கை முறையும் நாட்டின் துடிப்பான கூட்டு அடையாளத்திற்குப் பங்களிக்கின்றன. ஹார்ன்பில் திருவிழா போன்ற நிகழ்வுகள் இந்த தேசிய தத்துவத்திற்கு ஒரு சான்றாகும். இங்கே கலாச்சார இசைவானது பரஸ்பர மரியாதை, கண்டுபிடிப்பு மற்றும் மீள்திறனை வளர்க்கிறது; இது பன்முகத்தன்மையின் மூலம் இந்தியாவை உள்ளடக்கம் மற்றும் வலிமையின் உலகளாவிய அடையாளமாக மாற்றுகிறது.

***

PD/PKV/KR

(Features ID: 158202) आगंतुक पटल : 25
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English