• Sitemap
  • Advance Search
Others

தேசிய கலாச்சார வரைபடம் மற்றும் செயல்திட்டம்

இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்

Posted On: 10 DEC 2024 12:14PM

மணிப்பூரின் உள்ள 'தோங்ஜாவ்கிராமம் 'மட்பாண்டங்களின் பூமி' என்று அழைக்கப்படுகிறது. மதிப்புமிக்க 'பத்மஸ்ரீ' விருது பெற்ற கைவினைக்கலைஞர் நீலமணி தேவியின் மரபு, இந்தப் பண்டைய கலையைப் பாதுகாப்பதில் இன்றும் உத்வேகம் அளித்து வருகிறது. நீலமணியின் அபூர்வத் திறமை அவருக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், கிராமத்தின் மட்பாண்ட பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இன்று, அன்றாடப் பயன்பாட்டுக்கான பானைகள் முதல் நுணுக்கமான கலைப்படைப்புகள் வரை அனைத்தையும் தயாரிப்பதில் வல்லுநர்களான இக்கிராம மக்கள், தங்கள் கைவினைக்கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சென்று, கலாச்சாரப் பாரம்பரியத்துடன் ஆழமான தொடர்பைப் பேணி வருகின்றனர்.

இந்தச் செழுமையான பாரம்பரியம் இப்போது இந்தியாவின் கிராமப்புறக் கலாச்சார நடைமுறைகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மேற்கொள்ளப்படும் பெரிய திட்டத்தின் ஒரு அங்கமாக மாறியுள்ளது. தேசிய கலாச்சார வரைபடம் மற்றும் செயல் திட்டத்தின் (என்எம்சிஎம்ஆர்) கீழ் உள்ள 'எனது கிராமம் எனது பாரம்பரியம்தளத்தின் மூலம், தோங்ஜாவ் கிராமத்தின் மட்பாண்டக் கலையும், அதன் கலைஞர்களின் கதைகளும் உலகளாவிய மேடைக்குச் சென்றுள்ளன. இது கிராமப்புறப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் கலாச்சார பன்முகத்தன்மையை ஊக்குவிக்கவும் உதவுகிறது.

 

 

புத்துயிர் பெறும் எதிர்காலத்திற்கான கலாச்சார வரைபடம்

மத்திய கலாச்சார அமைச்சகத்தால் தொடங்கப்பட்டு, இந்திரா காந்தி தேசிய கலை மையத்தால் செயல்படுத்தப்படும் தேசிய கலாச்சார வரைபடம்  திட்டம், இந்தியாவின் பல்வேறு கலாச்சாரச் சொத்துக்களை ஆவணப்படுத்துவதையும் பட்டியலிடுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. கிராமப்புற பாரம்பரியத்தில் கவனம் செலுத்துவதன் மூலம், தோங்ஜாவ் மட்பாண்டக் கலை போன்ற உள்ளூர் மரபுகள் பாதுகாக்கப்படுவதையும் மேம்படுத்தப்படுவதையும் இத்திட்டம் உறுதி செய்கிறது. தற்போது 4.5 லட்சம் கிராமங்கள் இந்த  இணையதளத்தில் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த முயற்சி கிராமப்புற கலைஞர்களுக்கும் பரந்த அளவிலான மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து, கலாச்சார அங்கீகாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

இத்திட்டத்தின் நோக்கங்கள்:

•     கலாச்சார பாரம்பரியத்தின் வளம் மற்றும் மேம்பாடு, கலாச்சார அடையாளத்துடன் அதன் தொடர்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

•     6.5 லட்சம் கிராமங்களின் கலாச்சார வரைபடம் மற்றும் அவற்றின் புவியியல், மக்கள் தொகை விவரங்கள் மற்றும் படைப்பாற்றல் மூலதனங்களைக் கண்டறிதல்.

•     கலைஞர்கள் மற்றும் கலை நடைமுறைகளுக்கான தேசியப் பதிவேடுகளை உருவாக்குதல்.

•     தேசிய கலாச்சார வேலைத்தளமாக செயல்பட ஒரு இணையதளம் மற்றும் மொபைல் செயலியை உருவாக்குதல்.

மேலே குறிப்பிட்ட நோக்கங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட 3 திட்டங்களின் உதவியுடன் செயல்படுத்தப்படும்:

 

 

3 ஒருங்கிணைந்த திட்டங்கள்

கலாச்சார திறமை தேடல் (Sanskritik Pratibha khoj):

     தேசிய கலாச்சார விழிப்புணர்வு பிரச்சாரம், திறமை தேடல் மற்றும் நாட்டுப்புற மற்றும் பழங்குடி பாரம்பரியத்திற்குப் புத்துயிர் அளித்தல்.

 

எனது கிராமம் எனது பாரம்பரியம் (Mera Gaon Meri Dharohar):

  கலை நடைமுறைகளை வரைபடம் செய்தல் மற்றும் கலைஞர்கள் மற்றும் கைவினைக்கலைஞர்களை அடையாளம் காணுதல்.

 

தேசிய கலாச்சார வேலைத்தளம் (NCWP):        கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களுக்கான ஒரு கலந்துரையாடல்  இணையதளம் மற்றும் கலாச்சார சேவை வழங்குநர்களுக்கான தளமாகச் செயல்படுதல்.

 

 

எனது கிராமம் எது பாரம்பரியம்  (MGMD):

•     இது 'சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும் தேசிய கலாச்சார வரைபடம் திட்டத்தின் ஒரு அங்கமாகும்.

•     இத்திட்டம் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 6.5 லட்சம் கிராமங்களின் விரிவான கலாச்சார வரைபடத்தை உருவாக்கி வருகிறது. இதுவரை 4.5 லட்சம் கிராமங்கள் வரைபடம் செய்யப்பட்டு  தேசிய கலாச்சார வேலைத்தள இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.

•     இந்த வரைபடம் புவியியல் மற்றும் வளர்ச்சி விவரங்களுடன் கிராமங்களின் கதைகள், பாரம்பரிய அறிவு, பழக்கவழக்கங்கள், அணிகலன்கள், உணவு, திருவிழாக்கள், சடங்குகள், உள்ளூர் தெய்வங்கள், வரலாற்று அடையாளங்கள், கட்டடக்கலை, வழிபாட்டுத் தலங்கள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்கள், நடனங்கள், கைத்தறி போன்ற கலை வடிவங்களையும் உள்ளடக்கியது.

•     இத்திட்டத்தின் கீழ் 750 கிராமங்களில் 360 டிகிரி கோண வீடியோ படப்பிடிப்புகள் நடத்தப்பட்டுள்ளன.

சுவாரஸ்யமான கதைகளைக் கொண்ட கிராமங்கள்!

•     சனி ஷிங்னாபூர், அகமதுநகர், மகாராஷ்டிரா:

சனி பகவான் தங்களைப் பாதுகாப்பார் என்று நம்புவதால், இங்குள்ள வீடுகளுக்குக் கதவுகள் இல்லை.

•     திருச்சிகாடி, நீலகிரி, தமிழ்நாடு:

தென்னிந்தியாவின் நீலகிரி மலையில் உள்ள பெண் குயவர்களின் குடியிருப்பாக உள்ளது. கோட்டா பழங்குடியினப் பெண்களே பாரம்பரியமாக இங்கு மட்பாண்டங்களைச் செய்கிறார்கள்.

•     கோனோமா, கோஹிமா, நாகாலாந்து:

இது இந்தியாவின் முதல் 'பசுமை கிராமம்' ஆகும்.

•     சுகேதி, சிர்மௌர், இமாச்சலப் பிரதேசம்:

ஆசியாவின் பழமையான புதைபடிவ பூங்கா இங்கு அமைந்துள்ளது.

ஒரு நாட்டின் அடையாளத்தை வடிவமைப்பதில் கலாச்சாரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில், தேசிய கலாச்சார வரைபடம்  போன்ற முயற்சிகள் கிராமப்புற மரபுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் உதவுகின்றன. எனது கிராமம் எனது பாரம்பரியம் தளம் மூலம், தோங்ஜாவ் கிராமத்தின் மட்பாண்டக் கலை மற்றும் எண்ணற்ற பிற கலாச்சார நடைமுறைகள் அங்கீகாரம் பெற்று வருகின்றன. இது இந்தியாவின் பாரம்பரியம் வரும் தலைமுறையினருக்கும் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்கிறது.

***

PD/PKV/KR

(Features ID: 158201) आगंतुक पटल : 15
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English