Others
நல்லாட்சி: கடைசி மைல் வரை மாற்றமும் அதிகாரமளித்தலும்!
மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம்
Posted On:
12 DEC 2024 4:09PM
2024 டிசம்பர் 11, ரேகாவின் நினைவில் ஆழமாகப் பதிந்துள்ளது. தன் முயற்சிகளுக்கான அங்கீகாரத்தை எதிர்பார்த்து அவர் மிகுந்த உற்சாகத்துடன் அன்று காலை எழுந்தார். மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில், தனது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் காட்டிய அர்ப்பணிப்பிற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் அவருக்கு மிஸ் ஹீமோகுளோபின் விருது வழங்கப்பட்டது. ரேகா தொடர்ந்து சமச்சீர் உணவில் கவனம் செலுத்தியதுடன், ஆரம்பக்கால அசௌகரியங்களையும் மீறி இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளை உட்கொள்வதில் உறுதியாக இருந்தார். அவரது கடின உழைப்பிற்கு பலன் கிடைத்தது, மேலும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து முறைகளை ஊக்குவித்ததற்காக அவர் பாராட்டப்பட்டார். இந்த அங்கீகாரம் என்பது, குறிப்பாக வளர் இளம் பெண்களிடையே ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை ரத்த சோகை இல்லாத நாடாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஊட்டச்சத்து இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.


2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம், குணா போன்ற இந்தியாவின் மிகவும் பின்தங்கிய 112 மாவட்டங்களை நிலையான வளர்ச்சியின் மையங்களாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அரசுத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு, அதிகாரிகளுக்கிடையேயான ஒத்துழைப்பு மற்றும் மாதாந்திர மாவட்ட தரவரிசை மூலம் ஆரோக்கியமான போட்டி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்தத் திட்டம், சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் நிதி உள்ளடக்கம் போன்ற முக்கிய அம்சங்களை உள்ளடக்கியது. நல்லாட்சியின் கொள்கைகளில் வேரூன்றிய இது, வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை வலியுறுத்துகிறது. குணா போன்ற மாவட்டங்களுக்கு, சமூக நலனை மேம்படுத்துவதற்கான உள்ளூர் அளவிலான புதுமையான தீர்வுகளை இத்திட்டம் ஊக்குவிக்கிறது. ரேகாவின் இந்த அங்கீகாரம், ரத்த சோகையை எதிர்த்துப் போராடுவதற்கும் சமூகங்களில் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை ஊக்குவிப்பதற்கும் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிகாரமளிக்கும் இலக்கின் ஒரு பகுதியாகும்.
இத்திட்டத்தின் கீழ் உள்ள மற்றொரு மாவட்டமான பௌரி கர்வால் பகுதியிலும் இதேபோன்ற மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த வளர் இளம் பெண்ணான கவிதா, இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரைகளைத் சரியாக உட்கொள்ளாததால் ரத்த சோகையினால் பாதிக்கப்பட்டிருந்தார். சீரான இடைவெளியில் தகவல்கள் கிடைக்காமல் இருந்தது, பக்கவிளைவுகள் பற்றிய பயம் மற்றும் முறையான ஆலோசனை இல்லாமை போன்ற காரணங்களால் பல பெண்கள் இத்தகைய சவால்களை எதிர்கொண்டனர். இதை முறியடிக்க, முன்களப் பணியாளர்களுக்கு ஆலோசனை அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை மாத்திரைகளின் நன்மைகள், பக்கவிளைவுகளைக் கையாளுதல் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை வலுப்படுத்துதல் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கின. இந்த முயற்சி மாவட்டம் முழுவதும் இரும்புச்சத்து மாத்திரைகள் உட்கொள்வதை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.
அதே நேரத்தில், பௌரி கர்வால் பகுதியில், ஊட்டச்சத்து மிக்க மற்றும் உள்ளூரில் கிடைக்கக்கூடிய தினை வகையான ஜங்கோரா கொண்டு தயாரிக்கப்பட்ட இரும்புச்சத்து நிறைந்த ஜங்கோரா லட்டுகள் அறிமுகமாயின. இந்த லட்டுகள், பல பெண்களுக்கும் விருப்பமில்லாத பாரம்பரிய உணவுகளுக்கு ஒரு சுவையான மற்றும் வசதியான மாற்றாக அமைந்தன. இந்த முயற்சி ரத்த சோகையைத் தடுத்ததோடு, இந்த லட்டுகளை பெரிய அளவில் தயாரிக்கும் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி, புதிய வணிக வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளூர் தொழில்முனைவோரை ஊக்குவித்து பெண்களுக்கும் அதிகாரமளித்தது.

இந்தக் கதைகள் சுகாதாரப் பிரச்சினைகளைக் கையாள்வதில் சமூகம் சார்ந்த தீர்வுகளின் நேர்மறையான தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன. இவை புதுமையான தீர்வுகள், தனிநபர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டத்தின் குறிக்கோள்களுடன் நெருக்கமாக ஒத்துப்போகின்றன. மத்திய அரசு நல்லாட்சி வாரம் 2024-ன் (டிசம்பர் 19-24) போது பயனுள்ள நிர்வாகத்திற்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது. இந்த ஆண்டு, டிசம்பர் 11-18 வரையிலான ஆயத்த கட்டத்தில் டிசம்பர் 11, 2024 அன்று ஒரு பிரத்யேக இணையதளம் (https://darpgapps.nic.in/GGW24) தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் மாவட்ட ஆட்சியர்கள் முன்னேற்ற அறிக்கைகளைப் பதிவேற்றவும், நல்லாட்சி நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும் மற்றும் பிரச்சாரத்தின் போது வீடியோ காட்சிகளை வெளியிடவும் உதவுகிறது. இது அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை வளர்க்கிறது.
எனவே, முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம் என்பது நல்லாட்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். இது ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ள பங்கேற்பு மற்றும் உள்ளடக்கம் உள்ளிட்ட நல்லாட்சியின் 8 கொள்கைகளை உள்ளடக்கியுள்ளது. அனைத்து சமூகங்களும் முடிவெடுத்தலில் ஈடுபடுவதையும் அதனால் பயனடைவதையும் இது உறுதி செய்கிறது. வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை, பதிலளிக்கும் தன்மை ஆகியவற்றின் மீதான கவனம், மாவட்ட அளவிலான முன்முயற்சிகள் தெளிவான தகவல் தொடர்பு மற்றும் வளங்களின் திறமையான பயன்பாட்டுடன் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. மேலும், சமத்துவம் மற்றும் செயல்திறனை வலியுறுத்துவது, குறிப்பாக விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் உட்பட யாரும் பின் தங்கிவிடாமல் இருப்பதை உறுதி செய்கிறது. எனவே, முன்னேற விரும்பும் மாவட்டங்கள் திட்டம், நல்லாட்சி உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் நாடு தழுவிய மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் என்பதை நிரூபிப்பதோடு, தனிநபர்களும் சமூகங்களும் செழிக்க அதிகாரமளிக்கிறது.
***
PD/PKV/KR
(Features ID: 158197)
आगंतुक पटल : 17
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English