Others
இந்தியாவின் ஊரகப் பகுதி இணைப்புப் புரட்சி
கொள்கையிலிருந்து வளர்ச்சி வரை
Posted On:
26 DEC 2024 6:45PM
தற்சார்பை அடைவதிலும், மகளிருக்கு அதிகாரம் அளிப்பதிலும் மொபைல் மற்றும் இணைய இணைப்பு ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. இவை அரசின் மிக முக்கியமான இரண்டு இலக்குகளாகும். குறிப்பாக கிராமப்புறங்களில், வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலமும், இடைவெளிகளைக் குறைப்பதன் மூலமும், வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதன் மூலமும் இது சாத்தியமாகிறது. உதாரணமாக, திருமதி ரீனா கிராரின் கதை குறித்து காண்போம். மத்தியப் பிரதேசத்தில், திருமதி ரீனா கிரார் 'கிரிஜா தேவி ஜன் கல்யாண் சமிதி' என்ற சுயஉதவிக் குழுவை வழிநடத்துகிறார். இது ஆடைகள், பருத்தித் திரிகள், அப்பளங்கள், மசாலாப் பொருட்கள் மற்றும் ஊதுபத்திகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் மகளிரைக் கொண்ட ஒரு சுயஉதவிக் குழுவாகும். பல ஆண்டுகளாக, அவர்களின் சந்தை உள்ளூர் சமூகத்திற்குள் மட்டுமே இருந்ததால், அவர்களின் வளர்ச்சி வாய்ப்புகள் தடைபட்டன. இருப்பினும், அவர்கள் அரசு மின்-சந்தை இணையதளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியபோது, அவர்களின் வணிகம் ஒரு திருப்புமுனையை எட்டியது. அவர்கள் தொலைதூரப் பகுதியில் இருந்ததால் ஏற்பட்ட தடைகளைத் தாண்டி, அரசு மின்சந்தை மூலம், தங்கள் தயாரிப்புகளை அதிக அளவிலான நுகர்வோரை சந்தைப்படுத்த முடிந்ததாக திருமதி கிரார் கூறுகிறார், அதிகமான மக்களைச் சென்றடைவதற்கும், தங்கள் தயாரிப்புகளை முறையாகச் சந்தைப்படுத்துவதற்கும் இது ஒரு சிறந்த தளம் என்றும், அதனால்தான் அவர் அரசு மின் சந்தையை விரும்பிப் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். இந்த டிஜிட்டல் மேம்பாடு, குழுவின் வருவாயை அதிகரித்தது மட்டுமின்றி, பெரிய சந்தைகளில் போட்டியிடுவதற்கான அவர்களின் நம்பிக்கையையும் வலுப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் தளங்களுக்கான அணுகல் கிராமப்புற தொழில்முனைவோருக்கு ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும் என்பதை இது நிரூபிக்கிறது. நமது நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு மொபைல் நெட்வொர்க் மற்றும் இணையதள வசதியை விரிவுபடுத்தும் அரசின் முயற்சிகளால், டிஜிட்டல் தளங்களுக்கான அணுகல் வசதி சாத்தியமாகியுள்ளது.

டிஜிட்டல் யுகத்தில், இணைப்பு வசதியானது சமூக - பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு உந்துசக்தியாக செயல்பட்டு, கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளுக்கான அணுகலை வழங்குகிறது. நாட்டின் மிகத் தொலைதூரப் பகுதிகளுக்கும் மொபைல் மற்றும் இணைய இணைப்பு வசதியை விரிவுபடுத்தி, தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள 6,44,131 கிராமங்களில், 2024 செப்டம்பர் நிலவரப்படி, 6,22,804-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மொபைல் இணைப்பு வசதி உள்ளது. இவற்றில் 6,14,564-க்கும் மேற்பட்ட கிராமங்கள் 4ஜி மொபைல் இணைப்பு வசதியைப் பெற்றுள்ளன. மேலும், பழங்குடியினர் நல அமைச்சகத்தின் பிரதமரின் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குறிப்பாகப் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுக்களின் 4,543-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மொபைல் இணைப்பு வசதி இல்லாதது கண்டறியப்பட்டது. தற்போது இவற்றில் 1,136 குடியிருப்புகளுக்கு மொபைல் இணைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது. 2024 அக்டோபர் நிலவரப்படி, பல்வேறு 'டிஜிட்டல் பாரத் நிதி' நிதியுதவி பெற்ற மொபைல் திட்டங்களின் கீழ், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு 4ஜி இணைப்பு வசதியை வழங்குவதற்காக மொத்தம் 1,018 மொபைல் கோபுரங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ. 1,014 கோடியாகும்.
டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதில் மத்திய அரசு கொண்டுள்ள உறுதிப்பாடானது, பல்வேறு முக்கியத் திட்டங்களின் வாயிலாக தெளிவாக அறிய முடிகிறது.

டிஜிட்டல் பாரத் நிதி (முன்னதாக, ஒருங்கிணைந்த சேவை கடமை நிதி): தகவல் தொடர்பு சேவைகள் அனைவருக்கும் சமமாகக் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் நிறுவப்பட்ட டிஜிட்டல் பாரத் நிதி, போதிய சேவை கிடைக்காத பகுதிகளுக்கு மொபைல் மற்றும் அகன்ற அலைவரிசை இணைப்பை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கு நிதியளிப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. 2024 டிசம்பர் 27 நிலவரப்படி, பாரத் அகன்ற அலைவரிசை கட்டமைப்பு நிறுவனத்தின் வாயிலாக 8,730 அலைபேசி கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், 1.99 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் இச்சேவையின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன.
பாரத்நெட் திட்டம்: இது நாட்டின் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்திற்கும் குறைந்த கட்டணத்தில் அதிவேக இணைய வசதியை வழங்குவதை இலக்காகக் கொண்ட ஒரு லட்சியத் திட்டமாகும். தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இம்முயற்சி, கிராமப்புற இந்தியாவை வலுவூட்டவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற சமூகங்களுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் முயற்சிக்கிறது. 2024 டிசம்பர் 27 நிலவரப்படி, பாரத்நெட் வாயிலாக 2.14 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமப் பஞ்சாயத்துகள் இணைய வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.
பிஎம் வானி (வைஃபை அணுகல் கட்டமைப்பு இடைமுகம்- PM WANI): நாடு முழுவதும் பொது வைஃபை மையங்களின் ஒரு கட்டமைப்பை உருவாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள பிஎம் வானி, மக்களுக்கு குறைந்த கட்டணத்தில், நம்பகமான இணைய வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் டிஜிட்டல் பங்கேற்பையும் பொருளாதார வாய்ப்புகளையும் இது ஊக்குவிக்கிறது. 2024 டிசம்பர் 27 நிலவரப்படி, 2,47,076 வைஃபை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தொலைத்தொடர்பு பயனாளர்களைப் பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத இணைப்புகளைக் கண்காணிக்கவும் புகார் தெரிவிக்கவும் மக்களுக்கு உதவும் சஞ்சார் சாத்தி இணையதளத்தில் உள்ள 'உங்கள் மொபைல் இணைப்புகளை அறிந்து கொள்ளுங்கள்' வசதியும் இதில் அடங்கும். 2018-ம் ஆண்டின் தொலைத்தொடர்பு வர்த்தகத் தொடர்பு வாடிக்கையாளர் விருப்ப ஒழுங்குமுறைகள், தேவையற்ற அழைப்புகள் மற்றும் செய்திகளைத் தடுப்பதற்காக 'இடையூறு செய்ய வேண்டாம்' சேவையில் பதிவு செய்ய பயனாளர்களை அனுமதிக்கின்றன. தொலைத்தொடர்புத் துறை, தொலைபேசி வழி சந்தைப்படுத்துபவர்கள் மற்றும் வங்கிகளுக்காக குறிப்பிட்ட எண் தொடர்களை ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), பதிவு செய்யப்படாத தொலைபேசி வழி சந்தைப்படுத்துபவர்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறது. தேவையற்ற தகவல்தொடர்புகளைக் கட்டுப்படுத்தத் தவறும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மீது டிராய் அபராதங்களையும் விதிக்கிறது.

கிராமப்புறங்களில் மொபைல் மற்றும் கட்டமைப்பு சேவையை விரிவுபடுத்துவதில் நாட்டின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, சமூக -பொருளாதாரச் சூழலை மாற்றியமைத்து வருகிறது. திருமதி ரீனா கிராரின் கதை போன்ற சம்பவங்கள், கிராமங்களை வாய்ப்புகளின் துடிப்புமிக்க மையங்களாக மாற்றி, டிஜிட்டல் அதிகாரமளித்தலின் வலுவான தாக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. டிஜிட்டல் பாரத் நிதி, பாரத்நெட், பிஎம்-வானி போன்ற உத்திசார்ந்த முன்முயற்சிகள் மூலம், அரசு உள்கட்டமைப்பை உருவாக்குவதோடு மட்டுமின்றி, எதிர்கால டிஜிட்டல் யுகத்தில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்கவும் வழிவகை செய்கிறது. டிஜிட்டல் முறையில் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வை விரைவாக நனவாகிறது. இதன்மூலம், இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு குடிமகனும் நவீன உலகில் செழித்து வாழமுடியும் என்பது உறுதியாகிறது.
***
PKV/IR/LDN/KR
(Features ID: 158189)
आगंतुक पटल : 24
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English