• Sitemap
  • Advance Search
Others

பிராகிருத மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது

Posted On: 04 OCT 2024 4:47PM

மத்திய இந்தோ-ஆரிய மொழிகளின், பரந்த வரிசையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிராகிருத மொழி, இந்தியாவின் வளமையான மொழியியல், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் புரிந்துகொள்வதற்கு மிகவும் இன்றியமையாததாகும். இந்தத் தொன்மையான மொழி, பல்வேறு நவீன இந்திய மொழிகளுக்கு, ஒரு அடித்தளமாக அமைவதுடன் மட்டுமின்றி, இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறுகளை வடிவமைத்த பல்வேறு மரபுகளையும், தத்துவங்களையும், தன்னகத்தே கொண்டுள்ளது. ஆதி சங்கராச்சாரியாரின் கூற்றுப்படி, "வாச பிராகிருத சம்ஸ்கிருதௌ ஸ்ருதிகிரோ" (Vachah Prakrit Sanskritau Shrutigiro) — அதாவது, பிராகிருத மற்றும் சமஸ்கிருத மொழிகளே, இந்திய ஞானத்தின் உண்மையான ஊடகங்களாகத் திகழ்கின்றன. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழு, 2024-ம் ஆண்டு அக்டோபர் 3-ம் தேதியன்று, பிராகிருத மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தது. இத்துடன், மராத்தி, பாலி, அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளுக்கும், செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பிராகிருத மொழியின் வரலாற்றுச் சிறப்பு

பிராகிருத மொழியின் தொன்மை, மொழியியலாளர்கள் மற்றும் அறிஞர்கள் இடையே, பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாணினி, சந்த், வரருச்சி மற்றும் சமந்தபத்ரர் போன்ற, புகழ்பெற்ற ஆச்சாரியர்கள் இம்மொழியின் இலக்கண அமைப்பை வடிவமைத்துள்ளனர். மகாத்மா, புத்தர் மற்றும் மகாவீரர் போன்ற மகத்தான ஆளுமைகள், தங்களது போதனைகளை, மக்களுக்குத் திறம்பட எடுத்துரைக்க, பிராகிருத மொழியையே, ஊடகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். பிராகிருத மொழியின் தாக்கம், பிராந்திய இலக்கியங்களில் தெளிவாகப் புலப்படுகிறது. இம்மொழியின் நாடக, கவிதை மற்றும் தத்துவப் படைப்புகள், ஜோதிடம், கணிதம், புவியியல், வேதியியல் மற்றும் தாவரவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குப் பங்களித்துள்ளன.

பிராகிருத மொழி, இந்திய மொழியியல் மற்றும் வட்டார வழக்குகளைப் புரிந்து கொள்வதற்கு அடித்தளமாக அமைவதுடன் மட்டுமின்றி, ஒரு வளமையான மரபையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இந்தியாவின் "தேசிய மொழி"யான இந்தி மொழியின் வளர்ச்சி, பிராகிருத-அபப்ரம்ச மரபிலிருந்தே தோன்றியுள்ளது. மேலும், வேத மொழியிலும், பிராகிருத மொழியின் அம்சங்கள் கணிசமான அளவில் காணப்படுகின்றன. இது, இந்திய மொழியியல் பாரம்பரியத்தின், காலவரிசைப்படியான பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்ள, இந்தத் தொன்மையான மொழியைப் பயில வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

கல்வெட்டுகளும் இலக்கியங்களும்

பிராகிருத மொழியின் கல்வெட்டுகள், இந்தியாவின் கடந்தகாலம் குறித்த நுண்ணறிவுகளை வழங்கும் முக்கிய வரலாற்று ஆவணங்களாகத் திகழ்கின்றன. மௌரியப் பேரரசிற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகளும், பேரரசர் அசோகர் மற்றும் கார்வேலர் ஆகியோரின் கல்வெட்டுகளும், பெரும்பாலும் பிராகிருத மொழியிலேயே பொறிக்கப்பட்டுள்ளன. இந்தச் செழுமையான இலக்கிய மரபு, பல்வேறு இலக்கிய வகைகளை உள்ளடக்கியதாகத் திகழ்வதால், பிராகிருத மொழி, இந்திய வரலாறு, கலாச்சாரம், கலை, தத்துவம் மற்றும் அறிவுசார் அமைப்புகளின் கருவூலமாக விளங்குகிறது. மகாவீரர், மகாத்மா, புத்தர் போன்ற செல்வாக்குமிக்க ஆளுமைகள், தங்கள் ஞானத்தையும் சாதனைகளையும், பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாக, தங்களது போதனைகளை, பிராகிருத மொழியிலேயே வழங்கினர். பண்டைய இந்தியச் சமூகத்தின், அன்றாடப் பேச்சுமொழியாகப் பிராகிருத மொழியே இருந்தது. சமண மற்றும் பௌத்த மரபுகளின் அடிப்படை நூல்கள், பிராகிருத மொழிகளில் எழுதப்பட்டவையாகும். அவை, அறிவு மற்றும் அறிவியலின் மதிப்புமிக்க களஞ்சியமாகத் திகழ்கின்றன. மேலும், பல்வேறு நாட்டுப்புற இலக்கிய வடிவங்களும், வெவ்வேறு பிராந்தியங்களில், பிராகிருத மொழிகளின் பரந்த அளவிலான பயன்பாடுகளையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

ஆச்சார்ய பரதமுனி, தனது மிக முக்கியமான படைப்பான 'நாட்டியசாஸ்திரம்' என்ற நூலில், பிராகிருத மொழியைப்  பெரும்பான்மையான இந்தியர்களின் மொழியாகவும், கலை வெளிப்பாட்டிலும், கலாச்சாரப் பன்முகத்தன்மையிலும், வளமையான  மொழியாகவும்  அங்கீகரித்தார். இந்த அங்கீகாரம், சாமானிய மக்களிடையே, தகவல் தொடர்பு முறையாக பிராகிருத மொழியின்  பயன்பாட்டையும், முக்கியத்துவத்தையும் வலியுறுத்துகிறது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், மகாவீரர் பிறந்த இடமான வைசாலி குறித்து விவாதிக்கும் புகழ்பெற்ற "வைசாலி அபிநந்தன் கிரந்த்" (வைசாலிக்கு மரியாதை) என்ற நூலில் பிராகிருத மொழியின் முக்கியத்துவத்தை அங்கீகரித்துள்ளார்.

இந்தி, பெங்காலி மற்றும் மராத்தி போன்ற மொழிகளின் வளர்ச்சி பிராகிருதத்தில் இருந்து தொடங்குகிறது. இது நவீன மொழிகளின் தோற்றம் மற்றும் பரிணாம வளர்ச்சியை முழுமையாகப் புரிந்துகொள்ள பிராகிருத இலக்கியத்தைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்திய இலக்கியத்தின் பரந்த நிலையைப் புரிந்துகொள்வதற்கு, பிராகிருத மொழியில் உள்ள இலக்கியத்தின் ஆராய்ச்சியும், வெளியீடும் இன்றியமையாதவையாகும்.

பிராகிருத மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்குவதன் முக்கியத்துவம்

பிராகிருத மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்படுவது, குறிப்பிடத்தக்க கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பண்டைய இந்திய நாகரிகக் காலத்தில்செழித்தோங்கிய பிராகிருத மொழிகள், இந்தியாவின் வளமான  இலக்கிய மரபுடன், குறிப்பாக, சமண மற்றும் பௌத்த நூல்களின் துறையில், முக்கிய இணைப்பாகத் திகழ்கின்றன. இந்த அங்கீகாரம் பிராகிருத மொழியின் வரலாற்று முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்வதுடன் மட்டுமின்றி, பண்டைய காலத் தத்துவங்கள், கலாச்சாரம் மற்றும் கலை வெளிப்பாடுகள் ஆகியவை ஒரு ஊடகமாக அதன் மதிப்பை உயர்த்தவும் செய்கிறது. பிராகிருத மொழியை முன்னெடுப்பதன் மூலம், பண்டைய இலக்கிய மரபுகளைப் பாதுகாக்கவும், புத்துயிர் அளிக்கவும், மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இது, இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த மொழியியல் குறித்த, சமகாலப் புரிதலைச் செழுமைப்படுத்துகிறது. மேலும், இந்த அந்தஸ்து, அறிவார்ந்த ஆராய்ச்சிப் பணிகளுக்கு உத்வேகம் அளிப்பதற்கும், கல்விசார் முயற்சிகளை ஊக்குவிக்கவும், வரலாற்று ரீதியாகப் பிராகிருத மொழியைப் பயன்படுத்தி வந்த சமூகங்களிடையே கலாச்சாரப் பெருமையை வளர்க்கவும், வகை செய்கிறது. இதன் மூலம் நவீனச் சூழலில் தேசிய அடையாளம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியம் ஆகியவை வலுப்பெறுகின்றன.

பிராகிருத மொழி, இந்தியாவின் மொழியியல் பாரம்பரியத்தின் அடித்தளமாகத் திகழ்கிறது. இது, பண்டைய சிந்தனையாளர்கள்அறிஞர்களின், கலாச்சார மற்றும் அறிவுசார் பங்களிப்புகளால்வளமையானப் பன்முகத்தன்மையைச் சித்தரிக்கிறது. சாமானிய மக்களின் மொழியாகத் திகழ்ந்த இது, இந்தியாவின் மத, தத்துவ மற்றும் இலக்கிய நிலப்பரப்புகளை வடிவமைப்பதில், முக்கியப் பங்காற்றியுள்ளது. பிராகிருத மொழியின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பது, வரலாற்று நூல்களை ஆய்வு செய்வதற்கு மட்டுமின்றி, சமகால இந்திய மொழிகளின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வதற்கும், மிகவும் இன்றியமையாததாகும். பிராகிருத மொழி இலக்கியத்தைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வதன் மூலம், நமது முன்னோர்களின் ஞானமும், அறிவும், வருங்காலத் தலைமுறையினருக்குத் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதை நாம் உறுதி செய்கிறோம். இது நமது கலாச்சார வேர்கள் மற்றும் மொழியியல் பன்முகத்தன்மையுடனான ஆழமான பிணைப்பை வளர்க்கிறது.

***

PKV/SV/PD

(Features ID: 158173) आगंतुक पटल : 25
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English