Culture & Tourism
கலை கிராமம்: 2025 மகா கும்பமேளாவின் கலாச்சார ஆபரணம்
Posted On:
15 JAN 2025 8:08PM

இந்தியாவின் மிகப் புனிதமான நதிகளான கங்கை, யமுனை ஆகியவையும், புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதியும் சங்கமிக்கும் இடத்தில் நீங்கள் நிற்பதாகக் கற்பனை செய்து பாருங்கள். லட்சக்கணக்கான பக்தர்களின் ஒருங்கிணைந்த மந்திர உச்சரிப்புகளையும், கோயில் மணிகளின் எதிரொலியையும், இந்த நதிகளின் சீரான ஓட்டத்தையும் சுமந்து வரும் ஒருவித மின்சார ஆற்றலால் அந்தச் சூழல் உயிர்ப்புடன் இருக்கிறது. இதுதான் மகா கும்பமேளா 2025. இணையற்ற பக்தியும் கொண்டாட்டமும் சங்கமிக்கும் உலகின் மிகப்பெரிய ஒன்றுகூடல் .
பிரயாக்ராஜின் இந்த தெய்வீகமான சூழலில், பரந்து விரிந்த 10 ஏக்கர் பகுதியில் கலை கிராமம் (கலாகிராம்) என்ற கலாச்சார மாணிக்கல் அமைந்துள்ளது. கலை கிராமம் என்பது வெறும் ஒரு கண்காட்சிக் கூடம் மட்டுமல்ல. அது இந்தியப் பாரம்பரியத்தின் உயிரோட்டமான ஒரு சித்திரமாகும். இது, பாரதத்தின் காலத்தால் அழியாத மரபுகள் இன்றைய படைப்பாற்றல் மிக்க கதைசொல்லலுடன் சங்கமிக்கும் இடமாகும். மேலும் பன்முகத்தன்மைக்குப் பெயர் பெற்ற ஒரு தேசத்தின் ஆன்மாவிற்குள் ஒர் ஆழ்ந்த பயணத்தை இது வழங்குகிறது.
மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்டு நிர்வகிக்கப்படும் கலை கிராமம், கைவினை, உணவு வகைகள், கலாச்சாரம் ஆகிய மூன்றிலும் வேரூன்றிய ஒரு பயணமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த உயிரோட்டமான இடம், பழங்காலக் கலை வடிவங்கள், நேர்த்தியான பிராந்திய உணவு வகைகள், மயக்கும் கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் சிறந்த அம்சங்களைக் கொண்டாடும் ஓர் இணையற்ற அனுபவத்தை உருவாக்குகிறது.

2025 ஜனவரி 12 அன்று, மத்திய கலாச்சாரம், சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்தால் திறந்து வைக்கப்பட்ட கலை கிராமம், இந்தியப் பாரம்பரியங்களின் சாராம்சத்திற்கான நுழைவாயிலாக விளங்குகிறது. இது வெறும் ஒரு நிகழ்வுகளுக்கான இடம் மட்டுமல்ல; இது நாடு முழுவதிலுமிருந்து வரும் கைவினைஞர்கள், நிகழ்த்துக் கலைஞர்கள், சமையல் வல்லுநர்களின் கதைகளை ஒன்றாகப் பிணைத்து, சிறந்த அனுபவமாகத் திகழ்கிறது.

மாபெரும் வரவேற்பு - கதைகள் தொடங்கும் இடம்:
கலை கிராமத்திற்கான உங்கள் பயணம், 635 அடி அகலமும் 54 அடி உயரமும் கொண்ட ஒரு தலைசிறந்த படைப்பான அதன் பிரமிக்க வைக்கும் நுழைவாயில் முகப்பில் தொடங்குகிறது. இந்தக் கட்டடக்கலை அதிசயம், 12 ஜோதிர்லிங்கங்களின் கதைகளையும், சிவபெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்ட புராண நிகழ்வையும் சித்தரித்து. இந்தியாவின் புனிதப் பாரம்பரியத்தை ஒரு காட்சிப் படைப்பாக விவரிக்கிறது. தெய்வீக ஆற்றலுடன் ஜொலிக்கும் அந்த முகப்பின் நுணுக்கமான கைவினைத்திறன், அடுத்த மாயாஜாலப் பயணத்திற்கான களத்தை அமைக்கிறது.
கலாச்சாரத்தின் இதயத்திற்குள் அடியெடுத்து வையுங்கள்:
உள்ளே நுழைந்ததும், கலை கிராமம் இந்தியாவின் பன்முகத்தன்மையின் ஒரு மயக்கும் சித்திரத் தொகுப்பாக விரிகிறது. நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட அம்சங்கள், நாட்டின் வெவ்வேறு பகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றன. இவை கொல்கத்தாவின் தட்சிணேஸ்வர காளி கோயில், புஷ்கரின் பிரம்ம மந்திர் போன்ற புகழ்பெற்ற கோயில்களை மையமாகக் கொண்டு கருப்பொருளாக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்கள் பிராந்திய கைவினைத்திறனின் புதையல்களாகத் திகழ்கின்றன. வங்காளத்தின் பட்டசித்ரா ஓவியங்கள், அசாமின் மூங்கில் கைவினைப்பொருட்கள் முதல் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் ஓவியங்கள், மத்தியப் பிரதேசத்தின் பழங்குடியினர் கலை வரை அனைத்தையும் இவை காட்சிப்படுத்துகின்றன. இங்கே, 230 கைதேர்ந்த கலைஞர்கள் பழங்கால நுட்பங்களுக்கு உயிர் கொடுப்பதை நீங்கள் நேரில் காணலாம்.
கலை ஆன்மாவுடன் சங்கமிக்கும் இடம் - மயக்கும் கலை நிகழ்ச்சிகள்:
கலை கிராமத்தில், தினமும் பல மேடைகளில் சுமார் 15,000 கலைஞர்களால் காற்று அதிர்ந்து கொண்டிருக்கிறது. சங்கீத நாடக அகாடமி, மண்டல கலாச்சார மையங்கள் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களால் ஒருங்கிணைக்கப்படும் இந்த நிகழ்ச்சிகள், மனதை வருடும் செவ்வியல் இசையிலிருந்து எழுச்சியூட்டும் நாட்டுப்புற நடனங்கள் வரை பரந்து விரிந்துள்ளன. ஒரு கதக் நடனக் கலைஞரின் நுணுக்கமான அசைவுகளாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு பாங்ரா குழுவின் ஆற்றலாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு நிகழ்ச்சியும் பாரம்பரியத்தில் ஊறிய ஒரு கதையைச் சொல்கிறது.

தேசிய நாடகப் பள்ளியின் நாடகத் தயாரிப்புகளும், பார்வையாளர்களை மெய்மறக்கச் செய்யும் பிரபலங்களின் நிகழ்ச்சிகளும் இதன் கவர்ச்சியை மேலும் கூட்டுகின்றன. இத்தகைய செழுமையான நிகழ்ச்சிகளுடன், கலை கிராமத்துக்கு வரும் ஒவ்வொரு வருகையும் புதிதாக ஒன்றைக் கண்டறிய வாய்ப்பளிக்கிறது.
புராணங்களுக்குள் மூழ்குங்கள் - ஆழ்ந்து ரசியுங்கள்:
கலை கிராமத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றான அனுபூதி மண்டபம், வேறு எங்கும் காண முடியாத ஓர் ஆழ்ந்த அனுபவத்தை வழங்குகிறது. அதிநவீன 360-டிகிரி காட்சிகள் மற்றும் உயர் தொழில்நுட்பத்தின் மூலம், பார்வையாளர்கள் கங்கை அவதாரத்தின் பிரபஞ்சக் கதைக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இது கங்கை பூமிக்கு இறங்கி வந்த தெய்வீக நிகழ்வாகும். சிவபெருமானால் கருணையுடன் அடக்கப்படும் நதியின் சக்தியை உணருங்கள். தெய்வீக முக்கியத்துவம் வாய்ந்த இது, பிரமிக்க வைக்கும் யதார்த்தத்துடன் உயிரூட்டப்பட்டுள்ளது. இது வெறும் கதை மட்டுமல்ல. நீங்கள் அங்கிருந்து சென்ற பிறகும் நீண்ட காலம் உங்கள் நினைவில் நிலைத்திருக்கும் ஓர் அனுபவம்.
வரலாறு உயிர்பெறுகிறது - கண்காட்சி மண்டலம்:
அவிரல் ஷஷ்வத் கும்ப மண்டலம் என்ற பகுதி, மகா கும்பமேளாவின் ஆழமான பாரம்பரியத்தைப் பற்றிய ஓர் அறிவார்ந்த ஆய்வை வழங்குகிறது. இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை, தேசிய ஆவணக் காப்பகம் போன்ற நிறுவனங்கள் இணைந்து, இந்தப் பகுதியில், காலங்காலமாக கும்பமேளாவின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் கலைப்பொருட்கள், டிஜிட்டல் கண்காட்சிகள், வரலாற்றுப் பார்வைகள் ஆகியவற்றை வழங்குகின்றன. இது வரலாறும் கலாச்சாரமும் சங்கமிக்கும் ஓர் இடமாகும். யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பற்றிய ஆழமான புரிதலை இது வழங்குகிறது.
ஒரு தெய்வீக இரவும் சாத்வீக மகிழ்ச்சி உணர்வும்:
கலை கிராமம் என்பது வெறும் கலாச்சாரம் பற்றியது மட்டுமல்ல. அது ஒரு இணைப்பு பற்றியதும் ஆகும். இரவு நேரங்களில், பார்வையாளர்கள் தொலைநோக்கிகள் வழியாக நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை உற்றுநோக்கி, கிட்டத்தட்ட ஆன்மீக உணர்வைத் தரும் ஒரு சூழலில் அண்டத்துடன் இணையலாம்.
மேலும், உணவுப் பிரியர்களுக்கு 'சாத்விக் ஃபிளேவர்ஸ் ஆஃப் இந்தியா' என்ற பகுதி ஒரு சமையல் சொர்க்கமாகும். பிரயாக்ராஜின் உள்ளூர் சிறப்பு உணவுகள் முதல் இந்தியா முழுவதிலுமிருந்து வரும் தனித்துவமான உணவுகள் வரை, இந்தப் புனித நிகழ்வுக்குப் பொருத்தமான தூய்மையுடனும் அக்கறையுடனும் தயாரிக்கப்பட்ட 28 வகையான சாத்வீக உணவு வகைகளை இந்த மண்டலம் வழங்குகிறது.
ஈடுபடுங்கள், ஆராயுங்கள்:
கலை கிராமம், உற்சாகமான செயல்பாடுகள் மூலம் பங்கேற்பை வரவேற்கிறது. லலித் கலா அகாடமியின் புகைப்படப் போட்டியில் கலந்துகொள்ளலாம் அல்லது இந்திரா காந்தி கலை மையம், மண்டல கலாச்சார மையங்கள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்களைப் பார்க்கலாம். கலை கிராமத்தின் ஒவ்வொரு மூலையிலும் கற்றுக் கொள்ளவும், உருவாக்கவும், உத்வேகம் பெறவும் வாய்ப்புகள் நிறைந்துள்ளன.
உலகத்திற்கான ஓர் அழைப்பு
கலை கிராமம் என்பது வெறும் கலாச்சாரக் கொண்டாட்டம் மட்டுமல்ல. அது ஓர் அழைப்பு. இந்தியாவின் இதயத்தை ஆராய்வதற்கான ஓர் அழைப்பு. இங்கு ஒவ்வொரு கைவினைப்பொருளும், ஒவ்வொரு நிகழ்ச்சியும், ஒவ்வொரு உணவும் ஒரு கதையைச் சொல்கின்றன. இது, உலக சுற்றுலாப் பயணிகள் இந்தியாவின் பாரம்பரியத்தின் ஆழத்தை அனுபவிக்கவும், உள்ளூர் மக்கள் தங்கள் வேர்களுடன் மீண்டும் இணையவும் ஏற்ற ஓர் இடம். நீங்கள் ஒரு வரலாற்று ஆர்வலராகவோ, கலைக் காதலராகவோ, உணவுப் பிரியராகவோ, அல்லது சாதாரணமாக உத்வேகத்தைத் தேடுபவராகவோ இருந்தாலும், கலை கிராமம் மறக்க முடியாத மிகச் சிறந்த அனுபவப் பயணத்தை உங்களுக்கு வழங்கும். அதன் துடிப்பான காட்சிகளுக்கும், ஆன்மாவைத் தொடும் நிகழ்ச்சிகளுக்கும் அப்பால், அது இந்தியாவின் அழியாத ஆன்மாவுடன் ஓர் ஆழமான தொடர்பை வழங்குகிறது. அந்த ஆன்மா நாட்டு மக்களிடமும், அவர்களின் கைவினைப்பொருட்களிலும், அவர்களின் கதைகளிலும் செழித்து வளர்கிறது.

***
SMB/PLM/LDN/PD
(Features ID: 158172)
आगंतुक पटल : 8
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English