Technology
சமூக வானொலி உள்ளடக்கப் போட்டி- உள்ளூர் அளவில் தாக்கத்தை அதிகரித்தல்
Posted On:
27 FEB 2025 4:26PM
முன்னுரை
சமூக வானொலி உள்ளடக்கப் போட்டி என்பது உள்ளூர் மக்களின் குரல்களுக்கு வலுவூட்டுவதிலும் பிராந்திய அளவிலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் சமூக வானொலி நிலையங்களின் பங்களிப்பை வலியுறுத்தும் வகையில் நடத்தப்படுகிறது. சமூக வானொலிகளின் படைப்பாற்றல் மிக்க, சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, புதுமையான உள்ளடக்கங்களை முன்னிலைப்படுத்துவதை இப்போட்டி நோக்கமாகக் கொண்டுள்ளது. தகவல் ஒலிபரப்பு அமைச்சகமும் சமூக வானொலி சங்கமும் இணைந்து, வேவ்ஸ் உச்சி மாநாட்டில் நடைபெறும் முதலாவது இந்திய படைப்பாக்கப் போட்டியில், இந்தத் தளம் வானொலி நிலையங்களின் பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது. இதுவரை, 14 சர்வதேசப் பங்கேற்பு உட்பட 246 பங்கேற்பாளர்கள் இந்தப் போட்டிக்காகப் பதிவு செய்துள்ளனர்.

உலக ஒலி-ஒளி, பொழுதுபோக்கு உச்சிமாநாடான வேவ்ஸ், அதன் முதல் பதிப்பில், முழு ஊடக, பொழுதுபோக்கு துறையையும் ஒன்றிணைக்கத் தயாராக உள்ள ஒரு தனித்துவமான மையத் தளமாக விளங்குகிறது. இந்த நிகழ்வு, உலகளாவிய ஊடக - பொழுதுபோக்குத் துறையின் கவனத்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து, அதனை இந்திய ஊடக - பொழுதுபோக்குத் துறையுடனும் அதன் திறமையாளர்களுடனும் இணைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முதன்மையான உலகளாவிய நிகழ்வாகும்.
இந்த உச்சிமாநாடு 2025 மே 1 முதல் 4 வரை மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும். ஒலிபரப்பு, தகவல், பொழுதுபோக்கு, ஏவிஜிசி - எக்ஸ்ஆர், டிஜிட்டல் மீடியா, புத்தாக்கம், திரைப்படங்கள் ஆகிய முக்கியத் தூண்களை மையமாகக் கொண்டு, வேவ்ஸ் உச்சி மாநாடு இந்தியப் பொழுதுபோக்குத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வகையில் தொழில் துறைத் தலைவர்கள், படைப்பாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரை ஒன்றிணைக்கும்.
ஒலிபரப்பு, தகவல், பொழுதுபோக்குத் துறையின் கீழ் வரும் சமூக வானொலி உள்ளடக்கப் போட்டியானது, தகவலறிந்த, ஈடுபாடுள்ள சமூகங்களை வளர்ப்பதில் சமூக வானொலியின் முக்கியப் பங்களிப்பைக் கொண்டாடுகிறது.
போட்டியின் நோக்கங்கள்:
இந்தப் போட்டி, சமூக வானொலி நிலையங்களின் ஆற்றலையும் திறனையும் போற்றுவதையும், புதுமைகளை ஊக்குவிப்பதையும், ஒத்துழைப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

பதிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான பிரிவுகள்:
இந்த வேவ்ஸ் போட்டியானது, சமூக மேம்பாட்டின் ஒவ்வொரு முக்கிய அம்சத்திலும் கவனம் செலுத்தும் வகையில் கீழ்க்கண்ட ஐந்து தனித்துவமான பிரிவுகளில், சமூக வானொலி நிலையங்கள் தங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்குமாறு அழைக்கிறது. இந்தப் பிரிவுகள், பல்வேறு துறைகளில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக சமூக வானொலி நிலையங்கள் ஆற்றிவரும், தாக்கம் மிக்கப் பணிகளை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
1. பொது சுகாதாரப் பாதுகாப்பு: பொது சுகாதாரப் பிரச்சனைகள், அவசரகாலத் தயார்நிலை, நோய்த் தடுப்பு, சுகாதாரப் பழக்கவழக்கங்கள், மனநல விழிப்புணர்வு ஆகியவற்றை உள்ளடக்கிய புதுமையான நிகழ்ச்சிகளை சமூக வானொலி நிலையங்கள் காட்சிப்படுத்தலாம்.
2. கல்வி, எழுத்தறிவு : குறிப்பாக கிராமப்புறங்களில், கல்வி, எழுத்தறிவை ஊக்குவித்து, தனிநபர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான அறிவையும் திறன்களையும் அவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சிகள்.
3. பெண்கள், குழந்தைகள் மேம்பாடு/சமூக நீதி, ஆதரவு: பாலின சமத்துவம், குழந்தைகள் உரிமைகள், அதிகாரமளித்தல், சமூக நீதி ஆகியவற்றில் கவனம் செலுத்தி, விளிம்புநிலை சமூகங்களுக்காகப் பேசி, ஒரு சமத்துவமான சமூகத்தை வளர்க்கும் நிகழ்ச்சிகள்.
4. வேளாண்மை, ஊரக வளர்ச்சி: நிலையான விவசாயம், வேளாண் புத்தாக்கங்கள், ஊரகத் தொழில்முனைவு ஆகியவற்றை ஆதரித்து, ஊரக சமூகங்களின் சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள்.
5. பண்பாட்டுப் பாதுகாப்பு: இந்தியாவின் வளமான பண்பாட்டு மரபைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும், பாரம்பரிய கலை வடிவங்கள், மொழிகள், பழக்கவழக்கங்களை வருங்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சிகள்.

பதிவு வழிகாட்டுதல்கள்:
போட்டிக்கான பதிவு பிப்ரவரி 28, 2025 வரை திறந்திருக்கும். தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு, செல்லுபடியாகும் அல்லது புதுப்பிக்கப்பட்ட உரிமம் வைத்திருக்கும், இந்தியாவில் உள்ள அனைத்துப் பதிவுசெய்யப்பட்ட சமூக வானொலி நிலையங்களும் இதில் பங்கேற்கலாம். ஒவ்வொரு நிலையமும் ஐந்து பிரிவுகளில் ஒன்றின் கீழ் ஒரே ஒரு பதிவை மட்டுமே சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும். ஒரே அல்லது வெவ்வேறு பிரிவுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைச் சமர்ப்பித்தால், அது தகுதி நீக்கத்திற்கு வழிவகுக்கும்.
- விருதுக்கான நிகழ்ச்சிகள் தொழில்முறை வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டதாகவோ அல்லது அவர்களின் குரல் பங்களிப்பைக் கொண்டதாகவோ இருக்கக்கூடாது.
- விண்ணப்பிக்கும் சமுதாய வானொலி நிலையங்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மட்டுமே விருதுகளுக்கு ஏற்றுக்கொள்ளப்படும்.
- இந்த நிகழ்ச்சி இதற்கு முன்பு எந்தவொரு நிறுவனம் அல்லது அமைப்பிடமிருந்தும் விருது பெற்றிருக்கக்கூடாது.
- குறிப்பிட்ட நிகழ்ச்சியானது 01.06.2023 முதல் 31.06.2024 வரையிலான காலகட்டத்தில் சம்பந்தப்பட்ட சமுதாய வானொலி நிலையத்தால் ஒளிபரப்பப்பட்டிருக்க வேண்டும்.
- தயாரிப்பில் உள்ள அல்லது மேற்கண்ட தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஒளிபரப்பப்படாத நிகழ்ச்சிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
- விண்ணப்பங்களுடன் நிகழ்ச்சியைப் பற்றிய சுருக்கமான குறிப்பு (ஆங்கிலம் அல்லது இந்தியில் 250 வார்த்தைகளுக்குள்) இணைக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பங்கள் அனைத்தும் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் நிகழ்ச்சியின் ஒலிக்கோப்புகளுடன் (MP3 வடிவில் மட்டும்) சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க 2025 பிப்ரவரி 28 வரை கால அவகாசம் உள்ளது.

சமர்ப்பிப்புக்கான தேவைகள்:
நிகழ்ச்சி சமர்ப்பிப்புகள், அவற்றின் உள்ளடக்கம், தாக்கம் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில், வடிவம், கால அளவு, துணைப் பொருட்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
நிகழ்ச்சி வகைமைகள்: சமர்ப்பிக்கப்படும் ஒவ்வொரு படைப்பும் அரை மணி நேர நிகழ்ச்சியாகவோ அல்லது ஒரு தொடரின் ஒரே ஒரு அத்தியாயமாகவோ இருக்க வேண்டும்.
நிகழ்ச்சி வடிவங்கள்: கலந்துரையாடல் நிகழ்ச்சிகள், ஆவணப்படங்கள், இசை நிகழ்ச்சிகள், கல்வி சார்ந்த உள்ளடக்கங்கள், நேரலை நிகழ்ச்சிகள், தொலைபேசி வழி நிகழ்ச்சிகள் அல்லது வேறு எந்த வகையிலான நிகழ்ச்சிகளையும் சமர்ப்பிக்கலாம்.
துணைப் பொருட்கள்:
நிகழ்ச்சி விளக்கங்கள்: நிகழ்ச்சியின் உள்ளடக்கம், நோக்கங்கள் குறித்த ஒரு சுருக்கமான கண்ணோட்டத்தை வழங்க வேண்டும்.
தாக்க அறிக்கைகள்: நிகழ்ச்சி சென்றடைவதையும், சமூகத்தின் மீதான அதன் தாக்கத்தையும் விவரிக்க வேண்டும்.
கேட்போர் சான்றுகள்: கேட்போரின் பின்னூட்டங்களையும் கருத்துக்களையும் சேர்க்கவும்.
சமர்ப்பித்தல் நடைமுறை

சமர்ப்பித்தல் தளம்;
விருதுக்கான நிகழ்ச்சிகள் அதிகாரப்பூர்வ போட்டி தளத்தின் மூலமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
வடிவம்;
ஒலிக் கோப்புகள், எம்பி3 வடிவில் இருக்க வேண்டும். துணைபுரியும் ஆவணங்கள் பிடிஎஃப் வடிவில் மட்டுமே இருக்க வேண்டும்.
மதிப்பீட்டு அளவுகோல்கள்:
வேவ்ஸ் போட்டிக்குச் சமர்ப்பிக்கப்படும் படைப்புகளின் நியாயமான, முழுமையான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக, ஒவ்வொரு சமூக வானொலி நிகழ்ச்சியையும் மதிப்பிடுவதற்குப் குறிப்பிட்ட அளவுகோல்கள் பயன்படுத்தப்படும்.
(இறுதித் தெரிவு)
இந்த வேவ்ஸ் போட்டியானது, ஊடக ஆளுமைகள், இந்திய சமூக வானொலி சங்கத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட நிபுணர் குழுவால், இரண்டு கட்ட மதிப்பீட்டு நடைமுறையின் மூலம் மதிப்பிடப்படும்.
இறுதித்தெரிவு:

தகுதிப் பட்டியலில் உள்ள பதிவுகளிலிருந்து, மதிப்பீட்டு அளவுகோல்களின் அடிப்படையில் வெற்றியாளர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
முடிவுரை
வேவ்ஸ் போட்டிகளின் ஒரு பகுதியாக நடைபெறும் சமூக வானொலி உள்ளடக்கப் போட்டியானது, இந்தியா முழுவதும் உள்ள சமூக வானொலி நிலையங்களின் தாக்கம் மிக்க பணிகளை அங்கீகரிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் ஒரு மதிப்புமிக்க தளத்தை வழங்குகிறது. புத்தாக்கத்தையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதன் மூலம், உள்ளூர் சமூகங்களுக்கு வலுவூட்டுவதிலும் முக்கியப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதிலும் சமூக வானொலியின் இன்றியமையாத பங்கினை இந்தப் போட்டி எடுத்துக்காட்டுகிறது.
***
SMB/PLM/LDN/PD
(Features ID: 158168)
आगंतुक पटल : 9
Provide suggestions / comments