Rural Prosperity
நம்பிக்கையின் கலங்கரை விளக்கம் ஸ்வாமித்வா திட்டம் - கோடிக்கணக்கான மக்களிடையே உத்வேகத்தை வளர்க்கிறது
Posted On:
19 JAN 2025 6:28PM
“தமது அரசின் நோக்கங்கள், கொள்கைகள், முடிவுகள் அனைத்தும் கிராமப்புற இந்தியாவிற்குப் புதிய ஆற்றலை அளித்து வலுவூட்டுகின்றன.”
-பிரதமர் திரு நரேந்திர மோடி

கிராமப்புற இந்தியாவில்தான் தேசத்தின் சாராம்சம் அடங்கியுள்ளது. கிராமப்புற மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது அரசின் கடமை. ஆயினும், பல ஆண்டுகளாக, லட்சக்கணக்கான கிராமப்புறக் குடும்பங்கள் சட்டப்பூர்வமான சொத்து ஆவணங்கள் இல்லாமல் சவாலை எதிர்கொண்டன. இது அவர்களை நிலத் தகராறுகள், பாதுகாப்பற்ற வாழ்வாதாரம் ஆகியவற்றுக்கு ஆளாக்கியது. கிராம மக்களுக்குத் தாங்கள் நிலம் வைத்திருப்பது வெறும் உடைமை சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அது நம்பிக்கை, நிலைத்தன்மை, தங்களுக்கென சொந்தமான எதிர்காலம் ஆகியவற்றின் அடையாளமாக உள்ளது. முறையான நிலப் பதிவேடுகள் இல்லாததால், அரசு அலுவலகங்களுக்கு அவர்கள் பலமுறை செல்ல வேண்டியிருந்தது. இது பெரும்பாலும் ஊழலுக்கும் தாமதத்திற்கும் வழிவகுத்தது. ஆனால் இந்த இன்னல்களுக்கு மத்தியிலும், சிறந்த எதிர்காலத்திற்கான நம்பிக்கை ஒருபோதும் மங்கவில்லை.

ஸ்வாமித்வா திட்டம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைக்கும் ஒரு நம்பிக்கை ஒளியாக உருவெடுத்துள்ளது. பிரதமர் திரு நரேந்திர மோடி 65 லட்சம் ஸ்வாமித்வா சொத்து அட்டைகளை வழங்கிய நாளில், அந்தச் சூழல் உற்சாகத்தால் நிறைந்திருந்தது. இந்தியா முழுவதிலும் உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களின் போராட்டம் மற்றும் விடாமுயற்சிக் கதைகளைப் பகிர்ந்துகொண்டபோது, இத்திட்டம் வெறும் நிலம் பற்றியது மட்டுமல்ல என்பது தெரிய வந்தது. அது கண்ணியம், அதிகாரமளித்தல், வாய்ப்பு ஆகியவை பற்றியது என்பது தெளிவாகியது. பெண்கள், விவசாயிகள், கிராமப்புற மக்கள் ஆகியோருக்கு அதிகாரமளித்தல் என்பது மத்திய அரசின் ஒவ்வொரு முக்கியத் திட்டத்தின் மையமாக உள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற அரசின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு முக்கியப் படியாக இந்த முயற்சி அமைந்துள்ளது.
ஸ்வாமித்வா திட்டத்திலிருந்து வெளிவந்த பல அனுபவக் கதைகளில் ஒன்று, குஜராத்தில் உள்ள பிரதியா கிராமத்தைச் சேர்ந்த திருமதி தாக்கோர் பூமிபென் என்பவருடையது. பல ஆண்டுகளாக, அவர் வாழ்வாதாரப் பாதுகாப்பின்மையாலும் தமது நிலத்திற்கு சட்டப்பூர்வ உரிமை இல்லாததாலும் தொடர்ச்சியாக நிச்சயமற்ற நிலையில் வாழ்ந்து வந்தார். அவர் பெற்ற ஸ்வாமித்வா சொத்து அட்டை, அவருக்கு சட்டப்பூர்வ உரிமையை வழங்கியது மட்டுமின்றி, கடன்கள், நிதிச் சுதந்திரம், அவரது குடும்பத்திற்கான பாதுகாப்பு ஆகியவற்றிற்கான கதவுகளையும் திறந்தது. புதிதாகக் கிடைத்த இந்த அதிகாரம், திருமதி பூமிபென்னுக்கு நம்பிக்கையை அளித்தது. நிலத்தை இழந்துவிடுவோமோ என்ற பயமின்றி, தனது குடும்பம் செழித்து வாழும் ஓர் எதிர்காலத்தைக் கற்பனை செய்ய அது அவருக்கு உதவியது.
டேராடூன் அருகே பீமாவாலா கிராமத்தைச் சேர்ந்த திரு வினோத் குமார், நீண்ட காலமாக சொத்துத் தகராறுகள், தெளிவற்ற உரிமைப் பதிவுகளால் அவதிப்பட்டு வந்தார். ஸ்வாமித்வா திட்டத்தின் மூலம், அவர் தனது உரிமைக்கான சட்டப்பூர்வ ஆதாரத்தைப் பெற்றார். இது அவருக்கு சாதகமான நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுத் தந்தது மட்டுமின்றி, அவரது குடும்பத்திற்கு நிம்மதியையும் பாதுகாப்பையும் அளித்தது. ஸ்வாமித்வா திட்டம் கிராமப்புற இந்தியாவை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் பல கதைகளில் அவரது கதையும் ஒன்றாகும். இத்திட்டம் நிலத் தகராறுகளைக் குறைப்பதிலும், பொது நில மேலாண்மையை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிப்பதால், வினோத்துக்குக் கிடைத்த இந்த நிம்மதி பலருக்கு உத்வேகமாக அமைகிறது.

சத்தீஸ்கரின் துர்க் பகுதியில் உள்ள ஜீத் ஜிபி ஊராட்சித் தலைவர் சசிகலா சின்ஹா, ஸ்வாமித்வா திட்டத்தில் உள்ள இடஞ்சார்ந்த திட்டமிடலின் தாக்கத்தை எடுத்துரைத்தார். ஸ்வாமித்வா திட்டத்தின் தாக்கம் நில உரிமையையும் தாண்டி விரிவடைந்துள்ளது. அது மாற்றத்திற்கான ஊக்க சக்தியாக மாறி, இந்தியாவில் கிராமப்புற மேம்பாட்டிற்கான முன்மாதிரியை உருவாக்கியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம், துர்க் மாவட்டத்தில் உள்ள ஜீத் கிராமப் பஞ்சாயத்தின் தலைவர் திருமதி சசிகலா சின்ஹாவை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம். இத்திட்டத்தின் இடஞ்சார்ந்த திட்டமிடல் திறன்களையும், தனது கிராமத்தின் வளர்ச்சியைத் திட்டமிடும் விதத்தில் அது எவ்வாறு ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். துல்லியமான இடத் தேர்வு, செலவு மதிப்பீடுகள், செலவின மேலாண்மை ஆகியவை, வளர்ச்சிக்கும் வளங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கும் வழிவகுத்துள்ளன. இதன்மூலம், செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயும் நிலையான வளர்ச்சிக்குப் பங்களிப்பதை உறுதிசெய்கிறது.

இந்தக் கதைகளின் மூலம், ஸ்வாமித்வா திட்டத்தின் மையக் கருத்தை நாம் காண்கிறோம். அது கிராமப்புற இந்தியாவிற்கு வலுவூட்டும் ஒரு தொலைநோக்குப் பார்வையாகும். இத்திட்டம் வெறும் நில உரிமைப் பத்திரங்களை வழங்குவது மட்டுமின்றி பெண்கள், விவசாயிகள், ஒட்டுமொத்த சமூகங்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. சட்டப்பூர்வமான சொத்துரிமையை வழங்குவதன் மூலம், கிராமப்புறக் மக்கள் கடன் பெறவும், தங்கள் வீடுகளை மேம்படுத்தவும், தங்கள் எதிர்காலத்தில் முதலீடு செய்யவும் அரசு வழிவகை செய்கிறது. கிராமப்புறங்கள், இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருப்பதால், இத்திட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
மகளிருக்கு அதிகாரமளித்தல் மீதான அரசின் கவனம், ஸ்வாமித்வா திட்டத்தின் வெற்றியிலும் பிரதிபலிக்கிறது. பிரதமர் திரு நரேந்திர மோடி வலியுறுத்தியது போல, வளர்ச்சி அடைந்த இந்தியாவில் அதிகாரம் பெற்ற பெண்கள் என்ற நிலையைக் கட்டமைப்பதில் பெண்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கடந்த பத்து ஆண்டுகளில், தாய்மார்களுக்கும் மகள்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் பல முக்கியத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாற்றத்தில் ஸ்வாமித்வா திட்டமும் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. திருமதி பூமிபென் போன்ற பல பெண்களுக்கு, நிலம் என்பது வெறும் நிதிப் பாதுகாப்பு மட்டுமல்ல. அது கண்ணியம், சுதந்திரம், தங்கள் எதிர்காலத்தைத் தாங்களே வடிவமைத்துக் கொள்ளும் திறன் ஆகியவற்றைப் பற்றியது.
ஸ்வாமித்வா என்பது வெறும் திட்டம் மட்டுமல்ல. அது ஒவ்வொரு சொத்து அட்டை மூலமாகவும் கிராமப்புற இந்தியாவை மிகச் சிறப்பாக மாற்றும் ஒரு முயற்சியாகும். இது, பல ஆண்டுகால நிச்சயமற்ற நிலையைக் கடந்துவர மக்களுக்கு உதவுவதோடு, நிதி வளர்ச்சிக்கான கதவுகளைத் திறந்து, சமத்துவமான, வளர்ச்சியடைந்த ஒரு தேசத்திற்கான அடித்தளத்தையும் உருவாக்குகிறது. அதிகமான குடும்பங்கள் தங்களின் சொத்து அட்டைகளைப் பெற்று, தாங்கள் அதிகாரமளிக்கப்பட்ட கதைகளைப் பகிர்ந்துகொள்ளும்போது, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வை எளிதில் எட்டக்கூடியதாக மாறுகிறது.
***
SMB/PLM/RJ/PD
(Features ID: 158164)
आगंतुक पटल : 8
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English