• Sitemap
  • Advance Search
Culture & Tourism

ஆன்மீக சக்தி மையங்கள்: மகா கும்பமேளா 2025-ன் முன்களத்தில் அகாராக்கள்

Posted On: 22 JAN 2025 4:08PM

 

மகா கும்பமேளாவில் அகாராக்கள், சனாதன தர்மத்தின் பல்வேறு மரபுகளையும் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி, நீண்ட காலமாக இந்த நிகழ்வின் இதயமாக விளங்குகின்றன. 'அகாரா' என்ற சொல், ' பிரிக்க முடியாதது ' என்று பொருள்படும் 'அகண்டம்' என்பதிலிருந்து பெறப்பட்டது. 6-ம் நூற்றாண்டில் ஆதி குரு சங்கராச்சாரியாரின் காலத்திலிருந்து இந்த சமய அமைப்புகள், கும்பமேளாவின் ஆன்மீக நடைமுறைகள், சடங்குகளின் பாதுகாவலர்களாக இருந்து வருகின்றன. தங்களின் தனித்துவமான பழக்கவழக்கங்கள், தலைமைத்துவக் கட்டமைப்புகளுடன், அகாராக்கள் இந்த நிகழ்வின் ஆன்மீக, கலாச்சார அம்சங்களில் முக்கியப் பங்காற்றி, உலகெங்கிலும் இருந்து பல லட்சக் கணக்கான பக்தர்களை ஈர்க்கின்றன.

கும்பமேளாவில், அகாராக்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமின்றி, ஆன்மீகக் கல்வி, உடல் பயிற்சி ஆகியவற்றுக்கான மையங்களாகவும் செயல்படுகின்றன. சாஸ்திரங்கள் மூலம் ஆன்மீகக் கல்வி, தற்காப்புக் கலைகள் மூலம் உடல் பாதுகாப்பு ஆகிய இரட்டை நோக்கங்களை மேம்படுத்துவதற்காக அகாரா அமைப்பு நிறுவப்பட்டது. இன்றும், இந்த அகாராக்கள் மாறிவரும் காலங்களுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொண்டு, இந்தக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றன. அகாராக்களை வழிநடத்தும் மகாமண்டலேசுவரர்கள் , அகாராக்களின் ஆன்மீக அம்சங்களும், அமைப்பு ரீதியான அம்சங்களும் முறையாகப் பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கும்பமேளா அனுபவத்தை வரையறுக்கும் சடங்குகள், ஊர்வலங்கள் ஆகியவற்றுக்கு தலைமை மையமாக விளங்குகிறது.

13 அகாராக்களில், சைவம், வைணவம், உதாசின் ஆகிய பிரிவுகள் அவற்றின் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவத்திற்காகத் தனித்து நிற்கின்றன. இந்த அகாராக்கள் ஒவ்வொன்றும் பக்தி, வழிபாடு, சமூக வாழ்க்கை ஆகியவற்றில் ஒரு தனித்துவமான கண்ணோட்டத்தைக் கொண்டு வருவதால், கும்பமேளாவின் வளமான பன்முகத்தன்மைக்கு பங்களிக்கின்றன. உதாரணமாக, சைவ அகாராக்கள் நாக சந்நியாசிகளால் வழிநடத்தப்படுகின்றன. இவர்கள் சிவபெருமானை வழிபடும் துறவிகள். அவர்களின் ஆன்மீகத் திறமைக்காகவும், தற்காப்புக் கலைத் திறமைக்காகவும் அறியப்படுகிறார்கள். ஈட்டிகள், வாள்கள் போன்ற பாரம்பரிய ஆயுதங்களைத் தாங்கியுள்ள இந்த நாக சந்நியாசிகள், கும்பமேளாவின் பிரம்மாண்டமான ஊர்வலங்கள், சடங்குகளில் முக்கியப் பங்காற்றுகின்றனர். குறிப்பாக ஷாஹி ஸ்நான விழாக்களின் போது இவர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

சைவ அகாராக்களின் , குறிப்பாக ஜூனா அகாராவின் நாக சந்நியாசிகள், கும்பமேளாவில் மிகவும் போற்றப்படும் பங்கேற்பாளர்களில் அடங்குவர் . தங்களின் கடுமையான தவப் பயிற்சிகளுக்கும் தற்காப்புக் கலைகளில் உள்ள தேர்ச்சிக்கும் பெயர் பெற்ற நாக சந்நியாசிகள், கும்பமேளாவின் ஆன்மீகப் பாரம்பரியத்தைத் தொடர்கின்றனர். ஏராளமான தீட்சை பெற்ற நாக சந்நியாசிகளைக் கொண்ட ஜூனா அகாரா, ஆன்மீக அறிவொளியையும் உடல் ஒழுக்கத்தையும் நாடும் பக்தர்களை ஈர்த்து, கும்பமேளாவில் ஒரு முக்கிய ஆன்மீக சக்தியாகத் தொடர்ந்து விளங்குகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அகாராக்களில் ஒன்றான ஸ்ரீ பஞ்ச தஷ்னம் ஆவஹன் அகாரா, 1,200 ஆண்டுகளுக்கும் மேலாக கும்பமேளாவின் ஒரு அங்கமாக இருந்து வருகிறது. மஹந்த் கோபால் கிரி தலைமையில், இந்த அகாரா தெய்வீக அதிகாரத்தின் அடையாளச் சின்னமான புனிதக் கோலை ஏந்திச் செல்லும் ஊர்வலமான சாரி யாத்திரையின் புனிதப் பாரம்பரியத்தைப் பேணி வருகிறது. கும்பமேளாவிற்கு ஆவஹன் அகாராவின் பங்களிப்பு, நவீன தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு, பழங்கால நடைமுறைகளைப் பாதுகாப்பதில் வேரூன்றியுள்ளது. சனாதன தர்மத்தின் ஆன்மீகப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அகாராக்களின் காலத்தால் அழியாத முக்கியத்துவத்தை அதன் தொடர்ச்சியான இருப்பு எடுத்துக் காட்டுகிறது.

ஸ்ரீ பஞ்ச நிர்மோஹி அனி அகாரா, ஸ்ரீ பஞ்ச நிர்வாணி அனி அகாரா, ஸ்ரீ பஞ்ச திகம்பர அனி அகாரா உள்ளிட்ட வைஷ்ணவ அகாராக்களும் கும்பமேளாவில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்த அகாராக்கள் விஷ்ணு பகவானின் வழிபாட்டில், குறிப்பாக அவரது அனுமன் அவதாரத்தில் கவனம் செலுத்துகின்றன. அனுமன் உருவம் பொறிக்கப்பட்ட தர்ம துவஜங்களை (மதக் கொடிகள்) ஏற்றுவது, பக்தர்களுக்கு தெய்வீகப் பாதுகாப்பையும் ஆசீர்வாதங்களையும் குறிப்பதாக அமைகிறது. இது அந்த நிகழ்வின் ஆன்மீகச் சூழலை மேலும் மேம்படுத்துகிறது.

இந்த மகா கும்பமேளா ஆன்மீக உலகில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. ஏனெனில், வரலாற்றிலேயே முதல்முறையாக, மகா கும்பமேளாவில் பங்கேற்கும் முக்கிய அகாராக்களில் 1,000-க்கும் அதிகமான பெண்கள் தீட்சை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில், சமஸ்கிருதத்தில் முனைவர் பட்ட ஆய்வாளரான ராதேனந்த் பாரதி போன்ற பெண்கள் உட்பட, ஏற்கனவே பலர் சந்நியாசத்தில் தீட்சை பெற்றுள்ளனர். அகாராக்களில் பெண்கள் சேர்க்கப்படுவது, ஆன்மீக வாழ்வில் அவர்களின் பங்கிற்கான அங்கீகாரத்தைக் குறிக்கிறது. மேலும், சில அகாராக்கள் பெண் துறவிகளுக்கென தனி இடங்களையும் உருவாக்கியுள்ளன.

இந்த இயக்கத்தில் ஒரு முக்கியப் பங்கு வகிப்பது ஸ்ரீ பஞ்சதஷ்ணம் ஜூனா அகாரா ஆகும். இது கும்பமேளாவில் உள்ள மிகப்பெரிய, மிகவும் செல்வாக்கு மிக்க அகாராக்களில் ஒன்றாகும். இந்த அகாரா 200-க்கும் அதிகமான பெண்களுக்கு சந்நியாச தீட்சை அளித்துள்ளது. இந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஜூனா அகாரா சமீபத்தில் தனது பெண் துறவிகள் அமைப்பிற்கு 'சந்நியாசினி ஸ்ரீ பஞ்சதஷ்ணம் ஜூனா அகாரா' எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது. இதன் மூலம் ஆன்மீக சமூகத்திற்குள் அதற்கு ஓர் அதிகாரப்பூர்வமான, மரியாதைக்குரிய அடையாளம் கிடைத்துள்ளது. பாலின சமத்துவத்தின் மூலம், இந்த அகாராக்கள் தங்களின் உள் கட்டமைப்புகளை மறுவடிவமைப்பது மட்டுமின்றி, இந்தியாவின் கலாச்சார, ஆன்மீகக் கட்டமைப்பில் பெண்கள் தீவிரமாகப் பங்களிக்கும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றன.

மிகவும் செல்வந்த, செல்வாக்கு மிக்க அகாராக்களில் ஒன்றான மகா நிர்வாணி அகாரா, பாலின மேம்பாட்டிலும் முன்னணியில் உள்ளது. பெண்களுக்கு மகா மண்டலேஷ்வர் பதவியை நிறுவிய முதல் அகாராவாக, இது ஆன்மீகத் துறையில் பாலின சமத்துவத்திற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. சாத்வி கீதா பாரதி, சந்தோஷ் பூரி போன்ற பெண் மகா மண்டலேஷ்வர்களின் பங்கேற்பு, ஆன்மீக சமூகத்தை வழிநடத்தவும் வழிகாட்டவும் பெண்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதில் அகாராவின் அர்ப்பணிப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

பாலின சமத்துவத்துடன் கூடுதலாக, மகா நிர்வாணி அகாரா, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது . இது சமூக, ஆன்மீகப் பொறுப்புணர்வில் அகாராவின் பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. நிலைத்தன்மை மீதான இந்த கவனம், ஆன்மீக ஒற்றுமையின் கலங்கரை விளக்கமாக கும்பமேளா விளங்குவதை எடுத்துக்காட்டுகிறது. இங்கு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு அந்த நிகழ்வின் சடங்குகள், செயல்பாடுகளில் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

கும்பமேளாவில் மற்றொரு குறிப்பிடத்தக்க வளர்ச்சி , சமூகத்தில் பின்தங்கிய கின்னார் சமூகத்தை வரவேற்கும் கின்னார் அகாராக்களின் இருப்பாகும். முதல் முறையாக, ஒரு கின்னார் அகாரா மகா கும்பமேளாவில் பங்கேற்பது, அந்த நிகழ்விற்கும் சமூகத்திற்கும் ஒரு மகத்தான தருணத்தைக் குறிக்கிறது. இந்த அகாரா சமத்துவம், மரியாதை ஆகிய கொள்கைகளை உள்ளடக்கி, சனாதன தர்மத்தின் பிற பிரிவுகளுடன் இணைந்து கின்னார் சமூகம் ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கு ஒரு தளத்தை வழங்குகிறது.

குறிப்பாக 2025-ல் நடைபெறும் கும்பமேளா, இந்தியாவின் ஆன்மீக வாழ்வில் அகாராக்களின் நீடித்த முக்கியத்துவத்திற்கு சான்றாகத் திகழ்கிறது. இந்த அகாரா நிறுவன அமைப்புகள் சனாதன தர்மத்தின் ஆன்மீக, கலாச்சார விழுமியங்களைப் பாதுகாப்பது மட்டுமின்றி, அனைவரையும் உள்ளடக்கிய சமத்துவத்தை ஏற்றுக்கொண்டு, நவீன உணர்வுகளுக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கின்றன. மகா கும்பமேளாவில் உள்ள அகாராக்கள், கோடிக்கணக்கான பக்தர்களுக்கு ஆன்மீக வளர்ச்சி, ஒழுக்கம், ஒற்றுமை ஆகியவற்றுக்கான பாதையை வழங்கி, தொடர்ந்து அவர்களுக்கு உத்வேகம் அளிக்கின்றன. பிரமாண்டமான ஊர்வலங்கள் நடைபெறும்போதும், புனித சடங்குகள் நிகழ்த்தப்படும்போதும், அகாராக்களே மகா கும்பமேளாவின் இதயமாகவும் ஆன்மாவாகவும் திகழ்ந்து, பக்தர்களை தெய்வீகத்துடன் ஆழமான ஆன்மீகத் தொடர்பை நோக்கி வழிநடத்துகின்றன.

***

SMB/PLM/PD

(Features ID: 158163) आगंतुक पटल : 13
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English