• Sitemap
  • Advance Search
Others

மராத்தி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது

Posted On: 04 OCT 2024 5:27PM

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் பரவலாகப் பேசப்படும் இந்தோ-ஆரிய மொழியான மராத்தி, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வளமான இலக்கியப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. கலாச்சார வெளிப்பாடுதகவல் தொடர்புக்கான முக்கிய ஊடகமாகத் திகழ்ந்த மராத்தி மொழிகவிதை, உரைநடை, நாட்டுப்புறக் கதைகளை உள்ளடக்கிய பன்முக இலக்கியப் பாரம்பரியத்தின் மூலம், அம்மொழி பேசும் மக்களின் தனித்துவ மரபுகளையும், விழுமியங்களையும், பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. மத்திய அரசு அண்மையில், மராத்தி மொழிக்கு, செம்மொழி அந்தஸ்து வழங்கியுள்ளது. இது அம்மொழிக்கு வழங்கப்பட்டுள்ள  குறிப்பிடத்தக்க அங்கீகாரத்தைக் குறிக்கிறது. இந்த அங்கீகாரம் மராத்தி மொழியின் விரிவான இலக்கியப் பங்களிப்புகளைக் கௌரவிப்பதுடன் மட்டுமின்றி, அதன் வரலாற்று மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.

மராத்தி மொழியின் தொன்மையும், தொடக்ககால வளர்ச்சியும்

மராத்தி மொழி நீண்ட மற்றும் வளமான வரலாற்றைக் கொண்டுள்ள மொழியாகும். இது பல நூற்றாண்டுகளாகப் பரிணமித்து, இன்று இந்தியாவின் முக்கிய மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த மொழி 2,500 ஆண்டுகளுக்கும் மேலாகப் பழமை வாய்ந்தது. இது பிரசீன மகாரத்தி, மராஹத்தி, மகாராஷ்டிரி பிரகிருதம் மற்றும் அபப்ரம்ச மராத்தி போன்ற மொழிகளிலிருந்து தோன்றியதாகும். இம்மொழி, குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்பட்டபோதிலும், பல்வேறு வரலாற்று காலகட்டங்களில் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது.

நவீன மராத்தி மொழி, இப்பகுதியில் பேசப்பட்ட பண்டைய மொழிகளிலிருந்து, பரிணாம வளர்ச்சி அடைந்தது. இது, சாதவாகன காலத்தில் (கி மு 2-ம் நூற்றாண்டு முதல் கி பி 2-ம் நூற்றாண்டு வரை) பேசப்பட்ட பிராகிருத மொழிகளின், கிளைமொழியான மகாராஷ்டிரி பிராகிருதத்தில் இருந்து தொடங்குகிறது. மராத்தி மொழி குறித்த முதல் கல்வெட்டு, சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இதற்கான குறிப்புகள் நானேகாட்டா கல்வெட்டில் காணப்படுகிறது. அதில் "மகாராத்தினோ" என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பிராமி எழுத்தில் எழுதப்பட்ட இந்தக் கல்வெட்டு, மராத்தி மொழி, குறைந்தது சில நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கிறது.

மகாராஷ்டிர பிராகிருதத்திலிருந்து, மராத்திக்கு மாறிய காலகட்டத்தில், உச்சரிப்பு மற்றும் இலக்கணத்தில் படிப்படியான மாற்றங்கள் ஏற்பட்டன. மகாராத்தி மற்றும் மராஹதி போன்ற பெயர்கள், மொழியியல் மாற்றங்களைக் குறிக்கின்றன.

மராத்தி மொழி இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சி

மராத்தி மொழியில் அறியப்பட்ட மிகப் பழமையான இலக்கியப் படைப்பான 'கதாசப்தசதி', சுமார் 2,000 ஆண்டுகள் பழமையானது. இது தொடக்ககால மராத்தி கவிதைகளின், உயர்ந்த தரத்தை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இது சாதவாகன மன்னன் ஹாலனால் இயற்றப்பட்டதாகக் கருதப்படும், ஒரு கவிதைத் தொகுப்பாகும். இது கி.பி. 1-ம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இதைத் தொடர்ந்து, சுமார் எட்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு, மராத்தி மொழி ஒரு முதிர்ந்த மொழி நிலையை எட்டிய பின்பு, லீலாசரித்திரம் மற்றும் ஞானேஸ்வரி போன்ற நூல்கள் தோன்றின. இந்த நூல்கள் இயற்றப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, மராத்தி மொழி ஒரு வளமான, உணர்ச்சிமிக்க மொழியாக வளர்ந்திருந்தது என்பதை இவை உணர்த்துகின்றன.

கல்வெட்டுகள் மற்றும் பிற வரலாற்று ஆவணங்களின் பங்களிப்பு

எண்ணற்ற கல்வெட்டுகள், செப்பேடுகள், கையெழுத்துப் பிரதிகள் மற்றும் பழமையான சமய நூல்கள் (போதிகள்) ஆகியவை மராத்தி மொழியின் ஆழமான வரலாற்றுத் தொடர்புகளை மெய்ப்பிக்கின்றன. குறைந்தது 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, மராத்தி மொழி, பயன்பாட்டில் இருந்ததை நிரூபிக்கும் முக்கியச் சான்றாக 'நானேகாட் கல்வெட்டு' திகழ்கிறது. மராத்தி மொழி குறித்த, பிற முக்கியக் குறிப்புகளை, 'வினயபிடகம்', 'தீபவம்சம்' மற்றும் 'மகாவம்சம்' போன்ற பண்டைய இந்திய இலக்கியங்களிலும், காளிதாசர் மற்றும் வரருசி போன்ற புகழ்பெற்ற படைப்பாளிகளின் நூல்களிலும் காண முடியும்.

மராத்தி மொழி ஆய்வில், அறிஞர்களின் பங்களிப்புகள்

கடந்த பல நூற்றாண்டுகளாக, ராஜாராம் சாஸ்திரி பகவத், எஸ்.வி. கேத்கர், மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன் மற்றும் டாக்டர் ஆர் ஜி பண்டார்கர் போன்ற அறிஞர்கள், மராத்தி மொழி, அதன் மூலமான 'மகாராஷ்டிரி பிராகிருத' மொழியிலிருந்து எவ்வாறு பரிணமித்தது என்பதை விரிவாக எடுத்துக் காட்டியுள்ளனர். இவர்களும், வி கே ராஜவாடே மற்றும் ஆன் ஃபெல்ட்ஹவுஸ் போன்ற பிற அறிஞர்களும் இணைந்து, மராத்தி, மகாராஷ்டிரி மற்றும் 'அபப்ரம்ச மராத்தி' ஆகியவை தனித்தனி மொழிகள் அல்ல என்றும், மாறாக, ஒரே மொழியியல் மரபின் வெவ்வேறு காலகட்டங்களைக் குறிக்கின்றன என்றும்  வலியுறுத்தியுள்ளனர். 'மகாராஷ்டிரி' மொழி, அஸ்மகம், குந்தலம் மற்றும் விதர்ப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், பண்டைய காலத்தில், பரவலாகப் பேசப்பட்டு வந்ததுடன், பல நூற்றாண்டுகளாகப் படிப்படியாகப் பரிணமித்து, தற்போதைய நவீன மராத்தி மொழியாக உருவெடுத்துள்ளது.

11 கோடிக்கும் அதிகமான தாய்மொழிப் பேச்சாளர்களைக் கொண்ட மராத்தி மொழி, உலகிலேயே அதிகமாகப் பேசப்படும் முதல் 15 மொழிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இம்மொழி, நீண்டகால இலக்கிய வளம் செறிந்த மரபைக் கொண்டுள்ளதுடன், ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான நூல்களையும், வெளியீடுகளையும் படைத்து வருகிறது. மராத்தி மொழி இலக்கிய மரபானது, ஞானேஸ்வர், நாமதேவர், துக்காராம் போன்ற பல்வேறு மாபெரும் கவிஞர்களின் படைப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவர்களின் பங்களிப்புகள் இன்றும் பரவலாகப் போற்றப்பட்டு வருகின்றன.

செம்மொழி அந்தஸ்தும், உலகளாவிய பரவலும்

மராத்தி மொழியின் வளமையான மற்றும் தொன்மையான இலக்கிய மரபைப் அங்கீகரிக்கும் விதமாக, மத்திய அரசு, அதற்கு 'செம்மொழி' அந்தஸ்தை வழங்கியுள்ளது. இம்மொழி, மிக நீண்ட காலப் பழமையைக் கொண்டிருப்பதற்கும், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து இலக்கியப் படைப்புகளை படைத்து வருவதற்கும் உள்ள சான்றுகளே, இந்த சிறப்பை பெறுவதற்கான தகுதியை மராத்தி மொழிக்கு வலுவான உறுதியை வழங்குவதாக உள்ளன. இந்த அங்கீகாரத்தின் வாயிலாக, மராத்தி மொழி சார்ந்த கல்வியை மேம்படுத்தவும், அதன் வளமையான இலக்கிய மரபுகள் குறித்த ஆய்வுகளை ஊக்குவிக்கவும், சமகாலச் சமூகத்திலும் இம்மொழி தொடர்ந்து செழித்து வளர்வதை உறுதி செய்யவும், உரிய முயற்சிகளை மேற்கொள்ள இயலும். ஆகையால், மராத்தி மொழியைப் பாதுகாப்பதிலும், அதற்குப் புத்துயிர் அளிப்பதிலும் இந்தச் செம்மொழி அந்தஸ்து, முக்கியப் பங்காற்றுகிறது. இதன் மூலம், மராத்தி மொழியின் மரபு, வருங்காலத் தலைமுறையினருக்கும் தொடர்ந்து நிலைத்திருப்பதை, இது உறுதி செய்கிறது.

***

PKV/SV/PD

(Features ID: 158146) आगंतुक पटल : 3
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English