• Sitemap
  • Advance Search
Culture & Tourism

மகா கும்பமேளா 2025

படித்துறையைத் தூய்மைப்படுத்துதலும் ஆசீர்வாதங்களைப் பெறுவதும்

Posted On: 03 MAR 2025 7:25PM

 

பிரயாக்ராஜில் நடைபெற்ற 2025 மகா கும்பமேளாவில், 66.30 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகளின் புனித சங்கமத்தில் மூழ்கி நீராடியுள்ளனர். இதன் மூலம், நம்பிக்கையுடன் கூடிய பெரிய ஆன்மீக சங்கமம் அரங்கேறியுள்ளது. 45 நாட்கள் நீடித்த இந்த நிகழ்வு, பக்தி மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் அடையாளமாக விளங்கியது.

தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவாக, மகா கும்பமேளா 2025, கங்கையை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் கின்னஸ் உலக சாதனை படைத்தது. இதில் 19,000 பேர் பங்கேற்று, மாபெரும் தூய்மைப் பணிகளில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர்களின் கடின உழைப்பைப் பாராட்டும் வகையில், மாநில முதலமைச்சர், ஏப்ரல் 2025 முதல் 16,000 ரூபாய் சம்பள உயர்வை அறிவித்ததுடன், 10,000 ரூபாய் ஊக்கத்தொகையையும் அறிவித்தார் .

மாபெரும் திருவிழா முடிவுக்கு வந்த நிலையில், நகரத்தின் தூய்மையை மீட்டெடுப்பது, கும்பமேளா பகுதியின் தூய்மையான நிலையை உறுதி செய்வது ஆகியவற்றின் மீது கவனம் திரும்பியுள்ளது. வரலாற்றிலேயே மிகப்பெரிய மனிதக் கூட்டங்களில் ஒன்றைக் கண்ட மகா கும்பமேளா பகுதியை தூய்மைப்படுத்துவதற்கு ஒரு அசாதாரண முயற்சி தேவைப்பட்டது. இதை உணர்ந்து, மாநில அரசு உடனடியாக ஒரு விரிவான தூய்மை இயக்கத்தைத் தொடங்கியது. கும்பமேளா பகுதியை தூய்மைப்படுத்த, 15 நாட்களுக்கான ஒரு சிறப்புத் தூய்மை இயக்கம் தொடங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள், அர்ப்பணிப்புள்ள தன்னார்வலர்களுடன் இணைந்து, ஆற்றங்கரைகள், சாலைகள், தற்காலிகக் குடியிருப்புகளைத் தூய்மைப்படுத்தும் மாபெரும் சவாலை ஏற்றுப் பணியாற்றினர்.

தூய்மைப் பணி தொடரும் நிலையில், இந்தப் புனித நீரின் புனிதத்தன்மையைப் பேணுவதற்குத் தங்கள் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துமாறு நிர்வாகமும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மக்களை வலியுறுத்தியுள்ளனர். தூய்மைப் பணியை மேற்பார்வையிடும் உள்ளூர் அதிகாரி ஒருவர், "மகா கும்பமேளா முடிவடைந்திருக்கலாம், ஆனால் அதன் தூய்மை, சுற்றுச்சூழலின் மீதான மரியாதை ஆகியவைத் தொடர வேண்டும். நமது ஆறுகள் தூய்மையாகவும் மாசுபடாமலும் இருப்பதை உறுதி செய்வது நமது அனைவரின் கடமையாகும்" என்று குறிப்பிட்டார்.

தூய்மைப் பணியாளர்கள், பாதுகாப்புப் பணியாளர்கள், உள்ளூர் அதிகாரிகள் ஆகியோரின் அயராத முயற்சிகள் இல்லாமல், 2025 மகா கும்பமேளாவை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருக்க முடியாது. நிகழ்வு முழுவதும் கும்பமேளா பகுதியைத் தூய்மையாக வைத்திருப்பதில் முக்கியப் பங்காற்றிய இந்த செயல் வீரர்களை மாநில அரசு கௌரவித்தது. 15,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களும், 2,000 கங்கை சேவகர்களும் அயராது இரவும் பகலும் உழைத்து, 'தூய்மையான கும்பமேளா' என்ற உறுதிப்பாட்டை வலுப்படுத்தினர்.

கழிவுகளைச் சேகரிப்பது மட்டுமல்லாமல், இந்தத் தூய்மைப்படுத்தும் இயக்கம், கழிவுகளை முறையாக அகற்றுதல், தற்காலிகமாக அமைக்கப்பட்ட உள்கட்டமைப்புகளை நீக்குதல், அப்பகுதியின் சூழலியல் சமநிலையை மீட்டெடுத்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தியது. பல பணிகளில் சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன:

தற்காலிகக் கழிப்பறைகளை அகற்றுதல் : நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த 1.5 லட்சத்திற்கும் மேற்பட்ட நடமாடும் கழிப்பறைகள் திட்டமிட்ட முறையில் அகற்றப்பட்டன.

கழிவுகளைத் திறம்பட நிர்வகித்தல் : கும்பமேளா பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்ட குப்பைகள், முறையா அகற்றப்பட்டு நைனியில் உள்ள பஸ்வர் ஆலைக்குக் கொண்டு செல்லப்பட்டன.

அத்தியாவசிய உள்கட்டமைப்பை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருதல்: கும்பமேளாவிற்காக நிறுவப்பட்டிருந்த தற்காலிக குழாய்கள், தெருவிளக்குகள் கவனமாக அகற்றப்பட்டு, அந்த இடம் அதன் முந்தைய நிலைக்கு மீட்டெடுக்கப்பட்டது.

தற்காலிகக் குடியிருப்புகள் அகற்றப்பட்டன : யாத்ரீகர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களும் பந்தல்களும் அகற்றப்பட்டு, அப்பகுதியின் இயற்கை அழகு மீண்டும் வெளிப்பட வழிவகை செய்யப்பட்டது.

2025 மகா கும்பமேளாவானது, நிகழ்ச்சி மேலாண்மை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை ஆகிய அம்சங்களில் புதிய அளவுகோல்களை அமைத்துள்ளது. நகரம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வேளையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்விலிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள், எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் மாபெரும் நிகழ்வுகளுக்கு வழிகாட்டுவதாக அமையும். தூய்மையையும் கலாச்சார பாரம்பரியத்தையும் பாதுகாப்பதில் உள்ள அர்ப்பணிப்பு, பிரயாக்ராஜையும் அதன் புனித நதிகளையும் வரும் தலைமுறையினருக்காகத் தூய்மையாகப் பேணுவதற்கான முயற்சிகளுக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.

மகா கும்பமேளாவில் நேரில் கலந்துகொள்ள முடியாதவர்களும் அதன் புனிதத்தில் பங்குபெறுவதை மாநில அரசு உறுதி செய்தது. ஒரு தனித்துவமான முயற்சியாக, திரிவேணி சங்கமத்திலிருந்து உத்தரப் பிரதேசத்தின் 75 மாவட்டங்களுக்கும் புனித நீரைக் கொண்டு செல்லும் பொறுப்பு தீயணைப்பு - அவசரகால சேவைகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐந்து லட்சம் லிட்டருக்கும் அதிகமான இந்தப் புனித நீர் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தே மகா கும்பமேளாவின் ஆசீர்வாதங்களைப் பெற முடிந்தது.

இந்த முன்முயற்சி, மாநிலம் முழுவதும் உள்ள சிறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அங்கு 90,000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்குப் புனித நீரில் நீராடும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இது கும்பமேளா வரலாற்றில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க (முதல் முறை நிகழும்) நிகழ்வாகும். இத்தகைய முயற்சிகள் அனைவரையும் உள்ளடக்கும் உறுதிப்பாட்டிற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. இதன் மூலம், நம்பிக்கை என்பது தடைகளைத் தாண்டி, சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு தனிநபரையும் சென்றடைவதை உறுதி செய்கிறது.

மகா கும்பமேளா என்பது வெறும் ஆன்மீக சங்கமம் மட்டுமல்ல. அது மனிதனின் திறன், பொறுப்புணர்வு, தூய்மையான சுற்றுச்சூழலைப் பேணுவதற்கான கூட்டு மனப்பான்மை ஆகியவற்றுக்கான சான்றாகவும் விளங்கியது. பக்தர்கள் தங்கள் புனிதப் பயணத்தின் நினைவுகளைச் சுமந்து செல்லும் வேளையில், பிரயாக்ராஜ் நகரம் புத்துயிர் பெற்று, தனது வளமான, காலத்தால் அழியாத வரலாற்றின் அடுத்த அத்தியாயத்தை வரவேற்கத் தயாராக நிற்கிறது.

***

PD /PLM

(Features ID: 158145) आगंतुक पटल : 12
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English