Others

அரசியல் சாசன தினம் 2024

ஒற்றுமை மற்றும் ஜனநாயக உணர்வுகளைக் கொண்டாடுதல்

Posted On: 25 NOV 2024 12:22PM

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட,1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி, நாட்டின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இது தன்னாட்சி பெற்ற நிர்வாகம் மற்றும் ஜனநாயக நடைமுறைகளின் விடியலைக் குறிப்பதாகத் திகழ்ந்தது. ஏறக்குறைய மூன்று ஆண்டுகளாக, நாட்டின் மிகச்சிறந்த அறிஞர்கள் சிலர், தில்லியில் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு, தொடர் விவாதங்களை மேற்கொண்டு, புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் நிர்வாக நடைமுறைகளுக்கான அடித்தளம் அமைத்து செம்மைப் படுத்தினர். இந்த ஆவணம் ஆட்சி முறையின் கட்டமைப்பை வரையறுப்பதுடன் மட்டுமின்றி, கோடிக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் லட்சியங்களை உள்ளடக்கியதாகவும் திகழ்ந்தது. மேலும் நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அம்சங்களின் கீழ், மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் இந்த அரசியலமைப்புச் சாசனம், நாட்டின் முன்னேற்றத்திற்குத் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது. மக்களின் ஒற்றுமைக்கு அடிப்படையான மையக் கொள்கைகளைப் பாதுகாப்பதுடன், மாறிவரும் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல்களுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் என்பது 'சுயராஜ்யத்தின்' கொண்டாட்டமாகும். அதாவது, தன்னாட்சியின் மகிழ்ச்சியான தருணமாகும். இது இந்தியா காலனித்துவ ஆதிக்கத்திலிருந்து, இறையாண்மை கொண்ட ஜனநாயக நாடாக மாற்றம் அடைந்துள்ளதைக் குறிப்பதாக உள்ளது. மேலும், தங்களது நிர்வாக நடைமுறைகளை வடிவமைத்துக்கொள்ளும் மக்களின் அதிகாரத்தை இது உறுதிப்படுதுவதாக உள்ளது. ஜனநாயக நடைமுறைகளை நிறுவனமயமாக்குவதன் மூலம், குடிமக்கள் ஆட்சிமுறையில் பங்கேற்கவும், தங்களது உரிமைகளைப் பேணிக்காக்கவும், தலைவர்களிடம் பொறுப்புடைமையைக் கோரவும் இது அதிகாரம் அளிக்கிறது.

ஆண்டுதோறும் நவம்பர் 26-ம் தேதி, கொண்டாடப்பட்டு வரும் 'சம்விதான் திவாஸ்' அல்லது 'அரசியல் சாசன தினம்', காலத்தால் அழியாத பாரம்பரியத்தை நமக்கு நினைவூட்டுவதாக உள்ளது. 2015-ம் ஆண்டில், அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தினம், சுய சிந்தனைக்கும் மீள் பார்வைக்கும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தங்களது  உரிமைகளைப் புரிந்து கொள்ளவும், தங்கள் கடமைகளை நிறைவேற்றவும் இந்த அரசியலமைப்புச் சட்டம் அழைப்பு விடுக்கிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள், அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசித்தல், விவாதங்கள் மற்றும் இந்த ஆவணத்தில் பொதிந்துள்ள காலத்தால் அழியாத விழுமியங்களை வலியுறுத்தும் பல்வேறு செயல்பாடுகள் மூலம் இந்த தினத்தைக் கொண்டாடுகின்றன.

மொழிகள், இனங்கள், மதங்கள் மற்றும் கலாச்சாரங்கள் என ஈடு இணையற்ற பன்முகத்தன்மை கொண்ட இந்நாட்டில், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றிணைக்கும் சக்தியாகத் திகழ்கிறது. உலகளவில் மற்றும் உள்நாட்டுச் சிந்தனைகளின் கலவையால் ஈர்க்கப்பட்ட இந்த அரசியலமைப்புச் சட்டம், ஆங்கிலேய நாடாளுமன்ற நடைமுறைகள், அமெரிக்க உரிமைகள் மசோதா மற்றும் பிரெஞ்சு ஜனநாயகத்தின் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களைச் சிறப்பாக ஒருங்கிணைத்துள்ளது. அதே வேளையில், இந்தியாவின் மரபுகளிலும், யதார்த்தங்களிலும் வலுவாக வேரூன்றிய தன்மையுடனும் இது விளங்குகிறது. இதன் விரிவான, நெகிழ்வுத்தன்மை கொண்ட கட்டமைப்பு, லட்சியம் நிறைந்ததாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவும் இருப்பதை உறுதி செய்கிறது. காலத்தால் அழியாத விழுமியங்களைப் பாதுகாத்துக் கொண்டே, சமகாலச் சவால்களை எதிர்கொள்ளும் திறனையும் இச்சட்டம் கொண்டுள்ளது. பன்மைத்தன்மையை அரவணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம், ஒவ்வொரு சமூகமும், தனிநபரும் நாட்டின் கட்டமைப்பிற்குள் தங்களது குரலையும், இடத்தையும் பெறுவதை உறுதி செய்கிறது. அனைவரையும் உள்ளடக்கிய விதிகள் மற்றும் முற்போக்கான தொலைநோக்குப் பார்வை மூலம், அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவின் பன்முகத்தன்மையை அதன் வலிமையாக மாற்றி, ஏற்பு, பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட நோக்கில், ஒருங்கிணைந்த தேசிய அடையாளத்தை உருவாக்குகிறது. அரசியலமைப்புச் சட்டம், அனைவரையும் உள்ளடக்கும் தன்மையை நிலைநிறுத்தி, மதம், மொழி மற்றும் கலாச்சார நடைமுறைகளின் சுதந்திரம் போன்ற அடிப்படை உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. இதன் மூலம் பன்முகத்தன்மை கொண்ட நாட்டைப் பிளவுபடுத்துவதற்கு மாறாக,வலுப்படுத்துவதை உறுதி செய்கிறது.

இத்தகைய விரிவான சமூக-பொருளாதார மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் திறன் கொண்ட அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது சாதாரணமான சாதனை அல்ல. தொடக்கத்தில், 389 உறுப்பினர்களைக் கொண்டிருந்த (பிரிவினைக்குப் பின்பு 299-ஆகக் குறைக்கப்பட்டது) அரசியல் நிர்ணய சபை, இந்திய சமூகத்தின் குறு வடிவமாக இருந்தது. அதன் உறுப்பினர்கள் அரசின் மாகாணங்கள், சமஸ்தானங்கள் மற்றும் தலைமை ஆணையர் மாகாணங்கள் உட்பட பல்வேறு பின்னணியிலிருந்து வந்தவர்கள். அந்தச் சபையே இந்தியாவின் நாடித் துடிப்பைப் பிரதிபலித்தது. அதில் சுதந்திரப் போராட்ட வீரர்கள், சட்ட மேதைகள், சமூக சீர்திருத்தவாதிகள் மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். இந்தியா போன்ற பன்முகத்தன்மை வாய்ந்த ஒரு தேசத்தை ஒன்றிணைக்கக்கூடிய ஆவணத்தை உருவாக்கும் பொறுப்பை அவர்கள் ஒன்று சேர்ந்து ஏற்றுக் கொண்டனர். காலனி ஆதிக்கம், பிரிவினை மற்றும் சுதந்திரம் ஆகியவற்றில் தாங்கள் பெற்ற அனுபவங்களை முன்வைத்து, அரசியலமைப்புச் சட்டம், ஒவ்வொரு இந்தியரின் விருப்பங்களையும் எதிரொலிக்கும் ஆவணமாக இருப்பதை அவர்கள் உறுதி செய்தனர். அவர்களில் பதினைந்து அசாதாரணத் திறன் கொண்ட பெண்களும் அடங்குவர். வளர்ச்சியடைந்த நாடுகளில்கூட, ஆட்சியில் பெண்களின் பங்களிப்பு, அரிதாக இருந்த காலகட்டத்தில், அவர்கள் சம உரிமைகளுக்காகவும், அனைவருக்கும் வாக்குரிமைக்காகவும் குரல் கொடுத்தனர். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அவர்களின் வாதங்களும், கண்ணோட்டங்களும் முக்கியப் பங்கு வகித்தன.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு "உயிர்ப்புள்ள ஆவணமாக" திகழ்கிறது. விரைவாக மாறிவரும் உலகில், அதன் தகவமைக்கும் தன்மைக்கும், நீடித்த பொருத்தத்திற்கும், இது ஒரு சான்றாக உள்ளது. இது ஒரு நிலையான சட்டக் கட்டமைப்பாக இருப்பதற்கு மாறாக, ஆற்றல் மிக்க மற்றும் பன்முகத்தன்மை கொண்ட தேசத்தின் உணர்வை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது நிர்வாகம், தனிநபர் அதிகாரமளித்தல், சமூக மாற்றம் ஆகியவற்றை ஒன்றாக இணைக்கிறது. அதன் அடிப்படை உரிமைகளுக்கான விதிமுறைகள், அரசுக் கொள்கையின் வழிகாட்டுதல் நெறிமுறைகள், நிர்வாகக் கட்டமைப்புகள் ஆகியவை, குடிமக்களுக்கு அதிகாரமளித்தல், அரசின் பொறுப்புணர்வு ஆகிய இரண்டையும் உறுதி செய்கின்றன. அரசியல் ஸ்திரமற்ற சூழல் மற்றும் சமூகப் பதற்றமானக்  காலங்களில், அவற்றை  நிலைப்படுத்தும் சக்தியாகச் செயல்பட்டு, சட்டத்தின் ஆட்சியைத் தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. உள்நாட்டுக் கருத்து வேறுபாடுகள் அல்லது வெளிப்புறச் சவால்கள் போன்றவை காரணமாக ஏற்படும் நெருக்கடியான தருணங்களில், அரசியலமைப்புச் சட்டம் நாட்டிற்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாகவும், வழிகாட்டும் ஒளியாகவும் தனது பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் மிக அற்புதமான அம்சங்களில் ஒன்று, அதன் தகவமைத்துக் கொள்ளும் தன்மையாகும். இன்று வரை 105 திருத்தங்களுடன், அரசியலமைப்புச் சட்டம் தனது அடிப்படைக் கொள்கைகளைப் பாதுகாத்துக் கொண்டே, சமூகம், தொழில்நுட்பம் மற்றும் உலகளவில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி காரணமாக, மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றியமைத்துக் கொண்டுள்ளது. இந்தத் தகவமைக்கும் தன்மை, அதன் தொலைநோக்குப் பார்வையை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இது அதன் அடிப்படைக் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாமல், பொருத்தமான மற்றும் பயனுள்ள ஆட்சிமுறைக் கருவியாக நிலைத்திருக்க அனுமதிக்கிறது. அதன் தொடக்க நாட்களில், பன்முகத்தன்மை கொண்ட மற்றும் புதிதாக சுதந்திரம் பெற்ற ஒரு நாடு எவ்வளவு காலம் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று விமர்சகர்கள் கேள்வி எழுப்பி, ஐயத்தை ஏற்படுத்தி இருந்தபோதிலும், அரசியலமைப்புச் சட்டம் காலத்தின் சோதனையைக் கடந்து, எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக, நிலைத்தன்மையையும், ஒற்றுமையையும் வழங்கி வருகிறது.

இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டிற்கு, அரசியலமைப்புச் சட்டம் என்பது ஒரு வாக்குறுதியாகும். அது பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் மரபுகளை ஒத்திசைவான கட்டமைப்பாக ஒன்றிணைக்கிறது. நாடாளுமன்ற நூலகத்தில், ஹீலியம் நிரப்பப்பட்ட பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டுள்ள அரசியலமைப்புச் சட்டத்தின் அசல் பிரதிகள், சமத்துவம் மற்றும் நீதியின் கொள்கைகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியா குறித்து கனவு கொண்ட நபர்களின் தொலைநோக்குப் பார்வையை நினைவூட்டுவதுடன், தொடர்ந்து பிரமிப்பை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. இது குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. குடிமக்கள் தங்களது அன்றாட வாழ்வில் அரசியலமைப்புச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதன் மூலமும், அதைப் பாதுகாப்பதன் மூலமும், அதன் இலட்சியங்களை நிலைநிறுத்துவதன் மூலமும், அரசியலமைப்புக் சட்டத்திற்கு அதிகாரம் அளிக்கின்றனர்.

அரசியலமைப்புச் சட்ட தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், 1949-ம் ஆண்டில், இந்த மகத்தான ஆவணம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த அசாதாரணமான தருணத்தை நாம் போற்றுகிறோம். இது கடந்த காலத்தைக் கொண்டாடுவதற்கும், நிகழ்காலத்துடன் ஒன்றிணைவதற்கும், அரசியலமைப்புச் சட்டத்தின் இலட்சியங்கள் நமது ஜனநாயகத்தின் முக்கியத் தூணாகத் திகழும் எதிர்காலத்திற்கு, நம்மை அர்ப்பணித்துக் கொள்வதற்கான நாளாகும். அரசியலமைப்புச் சட்டம்  என்பது அரசு அல்லது நீதித்துறைக்கு மட்டும் உரியதல்ல. அது ஒரு கூட்டுப் பொறுப்பு, ஒரு பகிரப்பட்ட மரபு, மற்றும் நம் அனைவரையும் பிணைக்கும் ஒரு வாக்குறுதி என்பதை இது நினைவூட்டுகிறது.

***

VL/SV/KR

(Features ID: 158142) आगंतुक पटल : 53
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English