• Sitemap
  • Advance Search
Others

பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து

Posted On: 04 OCT 2024 4:42PM

 

இந்தியா பல்வேறு கலாச்சாரங்கள், மரபுகள் மற்றும் மொழிகளைக் கொண்ட ஒரு நாடாகும். இவற்றில் ஒவ்வொன்றும், நாட்டின் பறந்து விரிந்துள்ள வரலாற்றுச் சிறப்புகளைப் பிரதிபலிக்கும் வளமான இலக்கியக் களஞ்சியத்தைக் கொண்டுள்ளது. மொழிகள், இந்தியாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தின் முக்கிய அங்கமாகும். மேலும், அவை பல நூற்றாண்டுகளாக, அதன் வரலாற்று அடையாளத்தை வடிவமைத்துள்ளன. அத்தகைய ஒரு தொன்மையான மொழி பாலி மொழியாகும். இதற்கு அண்மையில், மத்திய அரசால் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம், பாலி மொழியின் இலக்கிய முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. பாலி மொழியுடன் சேர்த்து, மேலும் நான்கு மொழிகளுக்கும், மதிப்புமிக்க  செம்மொழிகளுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இது தனது மொழிப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில், இந்தியாவின் அர்ப்பணிப்புணர்வை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

வரலாற்றுப் பின்னணி

"பாலி பாஷா" அல்லது "பாலி மொழி" என்ற சொல், ஒரு நவீனகாலச் சொல்லாகும். மேலும், இந்த மொழியின் சரியான தோற்றம், அது சார்ந்த  அறிஞர்களிடையே, விவாதத்திற்குரிய பொருளாகவே உள்ளது. 6 அல்லது 7- ம் நூற்றாண்டு வரை, பாலி என்று அறியப்பட்ட ஒரு குறிப்பிட்ட மொழி பயன்பாட்டில் இருந்தது இல்லை. பாலி மொழி குறித்த தொடக்ககாலக் குறிப்புகள், பௌத்த அறிஞர் புத்தகோசரின் உரைகளில் காணப்படுகின்றன. பாலி மொழியின் தோற்றம் குறித்து பல்வேறு கோட்பாடுகள் வெளிவந்துள்ளன. மாக்ஸ் வாலெசர் (ஜெர்மானிய இந்தியவியல் அறிஞர்), பாலி மொழி 'பாதாள்' அல்லது 'பாடலி' என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும், இது பாடலிபுத்திரத்தின் மொழியுடனான தொடர்பைக் குறிக்கக்கூடும் என்றும் பரிந்துரைத்தார். ஆர் சி சைல்டர்ஸ் (ஆங்கிலேயே மொழிப் புலமையாளர், முதலாவது பாலி-ஆங்கில அகராதியைத் தொகுத்தவர்), பாலி மொழி என்பது, சாமானிய மக்களால் பேசப்பட்ட, ஒரு வட்டார மொழி என்ற நம்பிக்கை கொண்டிருந்தார். அதே நேரத்தில், ஜேம்ஸ் அல்விஸ் (இலங்கையைச் சேர்ந்த காலனித்துவ கால சட்டமன்ற உறுப்பினர்), அது கௌதம புத்தரின் காலத்தில், பரவலாக இருந்த மகதத்தின் மொழி என்று அடையாளம் கண்டறிந்தார். பாலி மொழியின் அசல் பெயர் மகதி என்றும், அது பேரரசர் அசோகரின் காலம் வரை, பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது என்றும், அல்விஸ் தெரிவித்துள்ளார்.

பண்டைய இந்தியாவின் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு, பாலி மொழியின் ஆய்வு மிகவும் முக்கியதத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில், அதன் இலக்கியங்கள், கடந்த காலம் குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கும் பொருள் சார்ந்த வார்த்தைகளால் செறிந்துள்ளன. இருப்பினும், பாலி மொழியில் உள்ள பல்வேறு நூல்கள் எளிதில் சேகரிக்க முடியாத கையெழுத்துப் பிரதிகளில் உள்ளன. இலங்கை, மியான்மர், தாய்லாந்து போன்ற பௌத்த நாடுகளிலும், பெரும்பான்மையான பௌத்தர்கள் வசிக்கும் சிட்டகாங், ஜப்பான், கொரியா, திபெத், சீனா மற்றும் மங்கோலியா போன்ற பகுதிகளிலும் பாலி மொழி தொடர்ந்து பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

பாலி மொழியின் இலக்கியப் பங்களிப்புகள்

பண்டைய இந்தியாவில் பௌத்த மற்றும் சமண மதத்தினரால், தங்களின் புனித மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பல்வேறு வட்டார மொழிகளிலிருந்து, உருவாக்கப்பட்ட வளமையான ஒரு மொழிக் கலவையே பாலி மொழி ஆகும். கி.மு. 500-ம் ஆண்டில் வாழ்ந்த புத்தர், தனது சொற்பொழிவுகளுக்கு, பாலி மொழியைப் பயன்படுத்தினார். இது அவரது போதனைகளைப் பரப்புவதற்கான, அடிப்படை ஊடகமாக அமைந்தது. பௌத்த சமய நூல்கள் அனைத்தும், பாலி மொழியில் இயற்றப்பட்டுள்ளன. இவற்றில், குறிப்பிடத்தக்கது திரிபிடகம் என்ற நூல் ஆகும். இதன் பொருள், "மும்மடங்கு கூடை" என்பதாகும்.

முதல் கூடையான வினய பிடகம், பௌத்தத் துறவிகளுக்கான துறவற விதிமுறைகளைச் சுட்டிக் காட்டுகிறது. இது அறநெறி நடத்தை மற்றும் சமூக வாழ்விற்கான,கட்டமைப்பை வழங்குகிறது.

இரண்டாவது கூடையான சூத்திர பிடகம், புத்தரின் உரைகள் மற்றும் உரையாடல்களின் ஒரு பொக்கிஷத் தொகுப்பாகும். இது அவரது ஞானத்தையும், தத்துவம் சார்ந்த தொலைநோக்குப் பார்வைகளையும் உள்ளடக்கியுள்ளது.

இறுதியாக, அபிதர்ம பிடகம் என்பது, அறநெறி, உளவியல் மற்றும் ஞானக் கோட்பாடு தொடர்பான பல்வேறு தலைப்புகளை ஆராய்ந்து, மனம் மற்றும் யதார்த்தம் குறித்த, ஆழ்ந்த பகுப்பாய்வை வழங்குகிறது.

அங்கீகரிக்கப்பட்ட நூல்களுடன் கூடுதலாக, பாலி மொழி இலக்கியத்தில், ஜாதகம் சார்ந்த கதைகளும் அடங்கும். இவை, போதிசத்துவர் அல்லது வருங்கால புத்தராக, புத்தர் எடுத்த முந்தைய பிறவிகளின் கதைகளை விவரிக்கும், அங்கீகரிக்கப்படாத கதைகளாகும். இந்தக் கதைகள், இந்திய மக்களின் பொதுவான பாரம்பரியத்துடன் ஒன்றிணைந்து, பகிரப்பட்ட தார்மீக விழுமியங்களையும், கலாச்சார மரபுகளையும், பிரதிபலிப்பதாக உள்ளன. இந்த இலக்கியப் பங்களிப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, பண்டைய இந்திய சிந்தனையையும், ஆன்மீகத்தையும் பாதுகாப்பதிலும், பரப்புவதிலும், பாலி மொழி இன்றியமையாத மொழியாக திகழ்வதன் அவசியம் குறித்து சுட்டிக் காட்டுகின்றன.

பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதன் முக்கியத்துவம்

பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்குவதன் மூலம், நீண்ட காலமாக பயன்பாடற்று இருந்த இம்மொழி, புத்துயிர் பெற உதவுகிறது. இந்த அங்கீகாரம், பாலி மொழியை மேம்படுத்தவும், பாதுகாக்கவும், பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்த மத்திய அரசிற்கு    உதவிடும். இத்தகைய முயற்சிகளின் மூலம், கல்வி நிறுவனங்களில், பாலி மொழிக் கல்வியை மேம்படுத்தவும், அதன் வளமான இலக்கியப் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், வரலாற்று முக்கியத்துவம் குறித்த ஆய்வுகளை ஊக்குவிக்கவும், முயற்சிகள் மேற்கொள்ளப்பட வகை செய்கிறது. இறுதியில், இது பாலி மொழியின் புத்துயிர் பெறுவதற்குப்  பங்களித்து, நவீன காலத்திலும், அதன் தொடர்ச்சியான பொருத்தத்தையும், இந்தியாவின் பரந்த மொழிப் பன்முகத்தன்மையின் பின்னணியில், அதற்கென உள்ள இடத்தையும் உறுதி செய்யும்.

***

PKV/SV/PD

(Features ID: 158126) आगंतुक पटल : 7
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English