• Sitemap
  • Advance Search
Culture & Tourism

மகா கும்பமேளாவில் மகர சங்கராந்தி

Posted On: 14 JAN 2025 6:34PM

 

குளிர்காலத்தின் இறுதிக் கட்டத்தையும் இதமான வசந்த காலத்தின் தொடக்கத்தையும் குறிக்கும் திருவிழாவான மகா சங்கராந்தி தினத்தன்று அதிகாலைப் பொழுதில் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தின் நதிக்கரைகள் தெய்வீகப் பேரொளி சூழ்ந்த காட்சிக்களமாக மாறியிருந்தன. 2025-ம் ஆண்டின் மகா கும்பமேளாவின் முதலாவது புனித நீராடல் மகர சங்கராந்தி எனும் மங்கல நன்னாளில் தொடங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இந்தத் திரிவேணி சங்கமத்தின் புனிதத் தலத்திற்கு, லட்சக்கணக்கான பக்தர்களும் துறவிகளும் திரண்டு வந்து, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் புனித நீராடினர். இந்த முதலாவது புனித நீராடல் நிகழ்வின் போது, 3.5 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடினர். இதன் மூலம், முதல் இரண்டு நாட்களில் புனித நீராடிய பக்தர்களின் மொத்த எண்ணிக்கை 5 கோடியைக் கடந்தது. தூய்மையையும், ஆசியையும் அடையாளப்படுத்தும் நம்பிக்கையின் இந்த வலுவான, இந்திய நாட்டின் பண்பாடு மற்றும் மரபுகளின் சாரத்தை முழுமையாகப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருந்தது. 

புனித நீராடிய பக்தர்கள் தூய்மை மற்றும் வளம் வேண்டிப் பிரார்த்தனை செய்தனர். மகர சங்கராந்திப் பண்டிகை சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பதால் நற்பண்புகளையும் முக்தியையும் வேண்டி சூரியனுக்கு நீர் வழிபாடு செய்து அவர்கள் வழிபட்டனர். அறிவியல் ரீதியாக இப்பண்டிகை சூரியன் தென் பகுதியிலிருந்து வட பகுதிக்கு பயணிப்பதைக் குறிக்கிறது. இது பகல் பொழுது அதிகமாகவும், இரவுப் பொழுது குறைவாகவும் மாறுவதற்கான இயற்கையின் அறிகுறியாகும். புனித நீராடலைத் தொடர்ந்து, பக்தர்கள் நதிகளின் படித்துறையில் எள் மற்றும் பிற புனிதப் பொருட்களை படைத்து, சடங்குகள் மற்றும் வழிபாடுகளை மேற்கொண்டனர். மேலும், பக்தர்கள் கங்கா ஆரத்தி வழிபாட்டிலும் கலந்துகொண்டனர். மரபுகளைப் போற்றும் வகையில், அவர்கள் எள் மற்றும் உணவுப் பொருட்களை தானமாக வழங்கி ஈகைச் செயல்களிலும் ஈடுபட்டனர். இது இப்பண்டிகையின் புனிதத்தன்மையை மேலும் மெருகூட்டுவதாக அமைந்தது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த அமெரிக்கக் குடியுரிமை பெற்றவரான சுதர்ஷன், கும்பமேளா நிகழ்வு மீது தான் கொண்டுள்ள பக்தியை வெளிப்படுத்தினார். ஆறு ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற அர்த்த கும்பமேளாவிற்கு வந்திருந்த போது, இங்கு எனக்கு அற்புதமான அனுபவம் கிடைத்தது என்று அவர் கூறினார். எனவே, இந்த மகா கும்பமேளாவில் மீண்டும் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், வேறு எங்கும் கிடைக்காத ஆற்றல்களுடன் ஒன்றிணைவதற்கான மிகச் சிறப்பான வாய்ப்பாக அமைந்துள்ளது என்று தெரிவித்தார். ஆகையால், இந்தக் கும்பமேளா விழாவில் மரியாதையை செலுத்தவும், வாழ்க்கைப்பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான ஆசிகளைப் பெறவும் இங்கு வந்திருப்பதாக அவர் கூறினார். கும்பமேளாவில் கலந்துகொள்வதன் மூலம் மக்கள் தங்களது ஆன்மீக விழிப்புணர்வை பெறும் இது போன்ற பல்வேறு கதைகள் உள்ளன.

மகா கும்பமேளா என்பது திரிவேணி சங்கமத்தின் நதிக்கரைகளை நம்பிக்கையாலும், தெய்வீகத் தன்மையாலும் ஒருங்கிணைக்கப்பட்ட உயிர்ப்புள்ள ஓவியமாக உருமாற்றும் அற்புத நிகழ்வாகும். சூரியனின் முதல் கதிர்கள் நதி நீரைத் தொட்டவுடன், பிரம்ம முகூர்த்த நேரம் முதல் நள்ளிரவில் புனித நீராடலின் வாயிலாகத் தூய்மையையும், ஆசியையும் வேண்டி, பக்தர்களின் இடைவிடாத பங்கேற்பில் நிறைந்திருந்தது. ஜனவரி மாதத்தின் கடும் குளிர்கூட, அங்கே நிறைந்திருந்த ஏராளமான பக்தர்களின் கூட்டு பக்திக்கு முன்னால் அற்புதமாகத் தோன்றியது.

லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்த இந்த அதிகாலை வேளையில், சாதுக்களின் காட்சி பிரம்மிக்க வைக்கும் வகையில் இருந்தது. பஞ்சாயத்து அகாதா மகாநிர்வாணியைச் சேர்ந்த நாக சாதுக்கள், அரச கம்பீரத்துடன் புனித நீராடினர். ஈட்டிகள், திரிசூலங்கள் மற்றும் வாள்களால் அலங்கரிக்கப்பட்ட அவர்கள், பெருந்திரளான பக்த வெள்ளத்திற்கு இடையே கம்பீரத்திற்கு சற்றும் குறைவில்லாத ஊர்வலமாகச் சென்றனர். குதிரைகள் மற்றும் தேர்களில் அமர்ந்திருந்த அவர்களின் துறவற வடிவங்கள், பார்வையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஆன்மீகத் தன்மையை வெளிப்படுத்தின. பஜனைக் குழுவினர் பக்திப் பாடல்களைப் பாடியும், பக்தர்கள் "ஹர் ஹர் மஹாதேவ்" மற்றும் "ஜெய் ஸ்ரீ ராம்" என்று கோஷங்களை எழுப்பியும், திரிவேணி சங்கமத்தின் சூழலைத் தெய்வீக இசையால் அதிரச் செய்தனர்.

 

குடும்பங்கள் இந்த வளமான கலாச்சாரச் சித்திரத்திற்கு மற்றொரு பரிமாணத்தைச் சேர்த்தன. புனிதமான இந்தத் திரிவேணி சங்கமத்தை முதன்முறையாக காணும் குழந்தைகளை அவர்களது பெற்றோர்கள்  தங்களது தோளில் சுமந்தபடி சென்றனர்.  பெருந்திரளான பக்தர்களின் கூட்டம் நிறைந்திருந்த படித்துறைகளின் இடையே தங்கள் குடும்பத்தின் மூத்த குடிமக்களை வழிநடத்திச் சென்று, அவர்களும் அந்தப் புனித நீரில் நீராடினர். இது இந்தியப் பண்பாட்டின் காலத்தால் அழியாத விழுமியங்களான பக்தி, கடமை, ஒற்றுமை ஆகியவற்றின் சங்கமத்திற்கு ஒரு உயிர்ப்புள்ள சான்றாகத் திகழ்ந்தது.

பல்வேறு மொழிகளைப் பேசுதல், பலவிதமான பாரம்பரிய உடைகளை அணிதல்தனித்துவ கலாச்சார நடைமுறைகளைக் கடைப்பிடித்தல் என யாத்ரீகர்களின் பன்முகத்தன்மை, பிரமிக்க வைக்கும் நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் அமைந்திருந்தது. பன்முகத்தன்மைக்கு இடையே காணப்படும் இந்த ஒற்றுமையே மகா கும்பமேளாவின் மிக முக்கிய அம்சங்களில் ஒன்றாக உள்ளது. நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அடையாளப்படுத்தும் மூவண்ணக் கொடியுடன், சனாதன மரபின் காவிக்கொடிகளும் பறக்க, இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீகப் பாரம்பரியம் உயிர்ப்புடன் திகழ்கிறது.

நிர்வாகத்தின் மிகத் துல்லியமான திட்டமிடல், மகா கும்பமேளா விழாவை அமைதியாகவும், செம்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்தது. திரிவேணி சங்கமத்திற்கு செல்லும் ஒவ்வொரு சாலையிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை திறம்படக் கையாள்வதை உறுதிசெய்யும் வகையில் தீவிர சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் கும்பமேளா நடைபெறும் பகுதியில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டனர். இத்தகைய ஏற்பாடுகள் மகா கும்பமேளாவில் பங்கேற்பதற்காக பிரயாக்ராஜ் வந்துள்ள யாத்ரீகர்களுக்கு, நம்பிக்கையூட்டுவதாக இருந்தது. பக்தர்களுக்கு கருணையுடன் வழிகாட்டிய தன்னார்வலர்களின் அயராத செயல்கள், இந்த விழாவின் அமைதிச் சூழலை மேலும் வலுப்படுத்துவதாக இருந்தது.

திரிவேணி சங்கமத்தில் நீராடுவதற்காக செல்பவர்களின் பயணம் கும்பமேளா தொடங்குவதற்கு முன்னதாகவே தொடங்கியது. இளையோர், முதியோர் என வயது வித்தியாசமின்றி பக்தர்கள், ஆன்மீகத்தில் கொண்டிருந்த வலுவான நம்பிக்கையின் அடிப்படையில் தங்களது உடமைகளைச் சுமந்தவாறு மைல்கணக்கில் நடைப் பயணமாகவே வந்தடைந்தனர். சிலர் வானில் வர்ணஜாலம் காட்டும் விண்மீன்களின் பிரகாசத்தில் உறையவைக்கும் குளிரைப் பொருட்படுத்தாமல், இரவிலேயே புனித நீராடத் தொடங்கினர். சூரியன் உதயமாக தொடங்கியதும், நாகவாசுகி கோயிலும் திரிவேணி சங்கமப் பகுதியிலும் பக்தி மையமாக காட்சியளித்தன. முதியவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் என அனைவரும் ஒன்றுதிரண்டு, இறைவனை வழிபட்டு புனிதச் சடங்குகளில் பங்கேற்றனர்.

மகா கும்பமேளா இந்தியப் பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தின் பிரதிபலிப்பாகும். மகர சங்கராந்தி தினத்தன்று மேற்கொள்ளும் புனித நீராடல், வாழ்வில் ஆசீகளையும் நேர்மறையான சிந்தனைகளையும் வழங்கும் என்று கருதப்படுகிறது. புனித சங்கம நீரில் நீராடுவதன் மூலம், பக்தர்கள் தங்களது பாவங்களில் இருந்து, முக்தி அடையலாம் என்ற நம்பிக்கையை கொண்டிருந்தனர்.

மகா சங்கராந்தி தினம் நிறைவடையும் வேளையில், திரிவேணி சங்கமத்தின் கரைகள் உயிர்ப்புடன் இருந்தன. பக்தர்கள் அகல்விளக்குகளை ஏற்றி ஆற்றில் மிதக்க விட்டனர். அவற்றின் அசைந்தாடும் சுடர்கள், தெய்வீகத் தன்மையுடன் இணைக்கும் என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனைகளின் அடையாளமாகவும் இருந்தன. கங்கை, யமுனை, மற்றும் சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளின் திரிவேணி சங்கமம் அந்திப் பொழுதில் அகல் விளக்குகளால் ஜொலித்தது. இந்தக் காட்சி சொர்க்கம் பூமியை வந்தடைவதைப் போன்ற ஒரு புனிதமான சூழலை ஏற்படுத்தியது. பிரயாக்ராஜுக்குப் பயணம் மேற்கொண்டவர்களுக்கு, மகா கும்பமேளாவில் மகர சங்கராந்தி என்பது வெறும் பண்டிகையாக மட்டுமின்றி, ஒரு சிறந்த அனுபவமாக இருந்து, பூமியையும், தெய்வீத்தையும் இணைக்கும் பாலமாக அமைந்தது.

மகா கும்பமேளா என்பது திருவிழா மட்டுமின்றி, நமது அன்றாட கடமைகளை நினைவூட்டும் நிகழ்வாகும் என்பது மகான் ஒருவரின் கூற்றாகும். மனிதகுலம் ஒன்றிணைந்து தெய்வீகம் மற்றும் ஒற்றுமையுடன் பிணைப்பை ஏற்படுத்தும் இடமாக இது உள்ளது.

****

PKV/SV/RJ/PD

(Features ID: 158124) आगंतुक पटल : 22
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English