• Sitemap
  • Advance Search
Social Welfare

சர்வதேச மகளிர் தினம் 2025

ஒரு இந்தியப் பெண்ணின் நாட்குறிப்பு

Posted On: 07 MAR 2025 7:00PM

 

இந்தியாவில் சூரியன் உதிக்கும் வேளையில், ஒரு சிறுமி கண்விழித்து சோம்பல் முறிக்கிறாள். இதுவும் மற்றுமொரு சாதாரண பள்ளி நாள் என்றே அவள் நினைக்கிறாள். ஆனால், மேசையின் மீது கிடக்கும் தன் பாட்டியின் பழைய, காலத்தால் சிதைந்த நாட்குறிப்பை அவள் நோக்கும்போது, ​​அவளுக்குள் ஆர்வம் மேலோங்குகிறது. கனவுகள், நம்பிக்கைகள், மற்றும் பெண்கள் எல்லாத் துறைகளிலும் இருக்கும் ஒரு எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றால் நிரம்பியிருந்த அந்தப் பக்கங்களை அந்தச் சிறிய வயதில் அவள் புரட்டிப் பார்க்கிறாள்.

ஒருநாள், பெண்கள் எல்லாத் துறைகளிலும் சமமாக மதிக்கப்படும் ஒரு உலகத்தைக் காண அவள் விரும்புகிறாள். அங்கு அவர்கள் தலைவர்களாக, படைப்பாளிகளாக, புதுமையாளர்களாக, முடிவெடுப்பவர்களாகத் திகழ்வார்கள். ஒரு இளம் பெண் தன்னைச் சுற்றிப் பார்த்து, தான் கனவு காணும் எதையும் தன்னால் அடைய முடியும் என்பதை உணரும் ஒரு உலகம். அந்த உலகம் தன் காலத்தில் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அது எதிர்காலத்தில் அமையக் கூடும்.” என்று அதில் எழுதப்பட்டிருந்த இந்த வார்த்தைகளைப் படிக்கும்போது அந்தச் சிறுமி புன்னகைக்கிறாள்.

ராணி லட்சுமிபாய், சரோஜினி நாயுடு, கேப்டன் லட்சுமி சேகல் போன்ற அச்சமற்ற பெண்களின் தியாகங்களால்தான் ஒரு சுதந்திர தேசத்தில் இன்று வாழ்கிறோம் என்பதை அவள் அறிவாள். இந்தப் பெண்கள் சுதந்திரத்திற்காகப் போராடியது மட்டுமல்லாமல், வருங்காலப் பெண் தலைமுறையினர் சிறப்பாகக் கனவு காணவும் வழிவகுத்தனர்.

சுதந்திர இந்தியா, பெண்களுக்கு அதிகாரமளித்தலில் மற்ற நாடுகளை விட ஏற்னவே முன்னணியில் உள்ளது. இந்தியா தொடக்கத்திலிருந்தே வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை ஏற்றுக்கொண்டு, ஒவ்வொரு பெண்ணுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் சில, தங்கள் பெண்களுக்கு இந்த உரிமையை பல ண்டுகளுக்குப் பிறகே வழங்கின. ஆனால் இந்தியா, சுதந்திரம் அடைந்த உடனையே இதனை வழங்கி விட்டது. இது ஒரு மிக முக்கியமான நடவடிக்கையாகும். நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியப் பெண்களுக்கு சமமான பங்கு இருப்பதை இது உறுதி செய்தது.

பெண்களுக்கு உரிமைகள் வெறுமனே வழங்கப்படவில்லை, அவர்களே அவற்றை வடிவமைத்தனர். அந்தப் பெண் முதலில் கேட்பது காலைச் செய்திதான்: "இந்தியக் குடியரசுத் தலைவர், ஒரு பெண். நம்பிக்கையுடனும் பெருமையுடனும் அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்." அதைக் கேட்கும்போது, ​​பெண்கள் தலைமை என்பது கடினமானது அல்ல என்பதை அவள் உணர்ந்துகொள்கிறாள்.

அவள் தன் பள்ளிப் புத்தகங்களைப் புரட்டி, இந்தியாவின் அரசியலமைப்புச் சபையில் அங்கம் வகித்து, பெண்களின் உரிமைகள் அரசியலமைப்பில் இடம்பெறுவதை உறுதிசெய்த 15 சக்திவாய்ந்த பெண்களைப் பற்றிப் படிக்கிறாள்.

பள்ளியில், அவளுடைய பெண் ஆசிரியை, உயர்கல்வியில் பெண்களின் பங்களிப்பு கிட்டத்தட்ட 32% அதிகரித்துள்ளதாகவும், 2014-15-ல் 1.57 கோடியாக இருந்த சேர்க்கை 2021-22-ல் 2.07 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் கூறுகிறார். பெண்கள் வெறும் மாணவிகள் மட்டுமல்ல. அவர்கள் மருத்துவ அறிவியல், சமூக அறிவியல்,கலை போன்ற துறைகளில் முன்னணியில் உள்ளனர். அறிவியல் வகுப்பின் போது, ​​இந்தியாவின் விண்வெளிப் பயணங்களில் முக்கியப் பங்கு வகித்த இஸ்ரோவின் பெண் விஞ்ஞானிகளைப் பற்றி அவள் படிக்கிறாள். இப்போது, சந்திரயான்-3-ஐ நிலவுக்கு அனுப்ப பெண் விஞ்ஞானிகள் உதவியுள்ளனர் .

மதிய உணவின்போது, ​​குழந்தைகள் சத்தான உணவைப் பெறுவதை உறுதி செய்வதற்காக மதிய உணவுத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட உணவை அவள் உண்கிறாள். பணிபுரியும் ஒரு பெண்ணான அவளது தாய், மாலையில் வீடு திரும்புகிறார். அந்த தாய் சம்பாதிப்பது மட்டுமல்லாமல் குடும்பத்திற்குத் தலைமை தாங்குகிறார். அவர் ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். முக்கிய முடிவுகளை எடுக்கிறார். தனது வீட்டிற்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிக்கிறார். இந்தியா முழுவதும், 10 கோடிக்கும் அதிகமான மகளிர் சுய உதவிக் குழுக்களில் உள்ள பெண்கள், அடிமட்ட அளவில் பொருளாதார மேம்பாட்டை முன்னெடுத்து வருகின்றனர் . ஜன் தன் திட்டம் போன்ற திட்டங்கள், பெண்களின் நிதி சுதந்திரத்தை உறுதி செய்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளில் 55 சதவீதத்துக்கும் அதிகமானவை பெண்களுக்குச் சொந்தமானவை.

இந்தியாவில் கிராமப்புற, நகர்ப்புறங்களில் பெண்கள் தடைகளை உடைத்து முன்னேறி வருகிறார்கள் என்பதைப் பற்றிப் பேசும் ஒரு பத்திரிகையை அவள் எடுக்கிறாள். அவள் அடுத்த பக்கத்தைப் புரட்டும்போது, ​​அரசியலமைப்பின் 243டி பிரிவு, விளிம்புநிலை சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யும் வகையில், பஞ்சாயத்துகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீட்டைக் கட்டாயமாக்குகிறது என்பதைப் படிக்கிறாள். 21 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் , பஞ்சாயத்துகளில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இது, இந்தியா முழுவதும் சுகாதாரம், நீர் பாதுகாப்பு, கிராமப்புற மேம்பாடு போன்றவற்றில் தலைமைப் பதவிகளில் பெண்கள் இருப்பதை எடுத்துரைக்கிறது.

 

பின்னர் அவள், விவசாயத்திற்காக ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் பெண்கள் தலைமையிலான சுய உதவிக் குழுக்களுக்கு (SHG) அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி முயற்சியான 'நமோ ட்ரோன் சகோதரி' பற்றிப் படிக்கிறாள். அவள் மேலும் இணையதளத்தில் தேடி, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமைமிக்க 'நமோ ட்ரோன் சகோதரி'யான சுனிதா தேவி, ட்ரோன்களைப் பயன்படுத்தி பயிர்களுக்கு எப்படி மருந்து தெளிக்கிறார் என்பதை விளக்கும் ஒரு காணொலியைப் பார்க்கிறாள்.                      

இப்போது, ஸ்டாண்ட் அப் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா போன்ற முன் முயற்சிகள் பெண் தொழில்முனைவோருக்கு ஆதரவளித்து, அவர்கள்  தொழில்களில் இணைவதோடு நின்றுவிடாமல், அவற்றின் உரிமையாளர்களாகவும் ஆவதை உறுதி செய்கின்றன. டிசம்பர் 31, 2024 நிலவரப்படி, அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் தரவுகளின்படி, மொத்தம் 75,935 புத்தொழில் நிறுவனங்களில் குறைந்தது ஒரு பெண் இயக்குநராவது உள்ளர். இது இந்தியாவில் பெண் தொழில்முனைவோரின் எழுச்சியை எடுத்துக்காட்டுகிறது. அவள் தன் கைபேசியை எடுக்கும்போது, ​​இத்தகைய தொழில்நுட்பத்தை யார் சாத்தியமாக்குகிறார்கள் என்று வியக்கிறாள். "இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி" மற்றும் டிஆர்டிஓ-வின் தலைமை இயக்குநர் (விமானவியல் அமைப்புகள்) டாக்டர் டெஸ்ஸி தாமஸ், பத்ம விருது பெற்றவரும், காமனி டியூப்ஸ் நிறுவனத்தின் தலைவருமான டாக்டர் கல்பனா சரோஜ், சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணியான ஓய்வுபெற்ற நீதிபதி எஸ். விமலா, இந்தியா, சீனா என இரு நாடுகளின் பக்கங்களிலிருந்தும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்தியப் பெண்மணியான அனிதா குண்டு போன்ற பெண்களைப் பற்றி அவள் படிக்கிறாள். காஷ்மீரிலிருந்து சர்வதேச அளவில் சக்கர நாற்காலி கூடைப்பந்து விளையாடும் முதல் வீராங்கனையான இஷ்ரத் அக்தர் மற்றும் இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) நிறுவனத்தின் முதல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான வர்திகா சுக்லா போன்றவர்களைப் பற்றி அவள் அறிந்து கொள்கிறாள்.

அவள் பயன்படுத்தும் மெட்ரோ வெறும் ஒரு போக்குவரத்து வசதி மட்டுமல்ல; அது பெண் பொறியாளர்களின் திறமைக்கு ஓர் சான்றாக விளங்குகிறது. அவள் பயணிக்கும் சாலைகள் கூட, உள்கட்டமைப்பு, மேம்பாட்டுத் துறைகளில் பெண்களின் பங்களிப்புடன்தான் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன.

உறங்குவதற்கு முன், அவர் பி.வி. சிந்து, மேரி கோம், வினேஷ் போகத், மிதாலி ராஜ் போன்ற விளையாட்டு வீராங்கனைகளைப் பற்றிய ஆவணப்படத்தைப் பார்க்கிறார். பூப்பந்து ஆடுகளங்கள் முதல் குத்துச்சண்டை அரங்குகள் வரை, எந்தத் துறையையும் பெண்களால் வெல்ல முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில், ஒலிம்பிக், பிற உலகப் பட்டங்களை வென்ற பெண்கள் இவர்கள்.

தலையணையில் தலை சாய்த்தவாறே, அவள் தன் கையிலிருந்த நாட்குறிப்பைப் பற்றிச் சிந்திக்கிறாள். ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு உரிமை உள்ள ஓர் உலகத்தைப் பற்றி அவளுடைய பாட்டி ஒரு காலத்தில் கனவு கண்டிருந்தார். அந்தக் கனவு இப்போது நனவாகிவிட்டது.! அவள் புன்னகையுடன் அந்த நாட்குறிப்பை மூடுகிறாள்.

இந்த மகளிர் தினத்தில், கடந்த கால முன்னோடிகளையும் இப்போது மாற்றத்தை உருவாக்குபவர்களையும் நாம் கொண்டாடுவோம்.

எதிர்காலம் பிரகாசமானது மட்டுமல்ல; அதை வடிவமைக்கும் அதிகாரம் பெண்களுக்கு உண்டு.

***

PD/PLM

(Features ID: 158123) आगंतुक पटल : 2
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English