Energy & Environment
உலக சிட்டுக்குருவிகள் தினம் 2025
சிறிய இறகுகளைக் கொண்ட நமது தோழர்களான அழகிய பறவைகளின் கீச்சொலியைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் நாள்
Posted On:
18 MAR 2025 5:36PM
கிராமங்களின் அமைதியான காலைப் பொழுதுகள் முதல் நகரங்களின் பரபரப்பான வாழ்க்கை வரை, ஒரு காலத்தில் சிட்டுக்குருவிகளின் கீச்சொலிகள் காற்றை நிரப்பின. அழைக்கப்படாமலேயே வீடுகளுக்கு வந்த இந்தச் சிறிய பறவைக் கூட்டங்கள், மறக்க முடியாத நினைவலைகளை நமக்குள் உருவாக்கியுள்ளன. ஆனால் காலப்போக்கில், இந்தச் சிறிய பறவைகள் நம் வாழ்வில் இருந்து மெல்ல மெல்ல மறைந்து வருகின்றன. ஒரு காலத்தில் அதிக எண்ணிக்கையில் இருந்த சிட்டுக்குருவிகள், இப்போது காண்பதற்கு அரிதானதாக உள்ளது. இந்தச் சிறிய உயிரினங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றைப் பாதுகாக்கவும், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது.

உலக சிட்டுக்குருவிகள் தினம், 2010-ஆம் ஆண்டில் 'நேச்சர் ஃபார் எவர்' என்ற பறவைகள் பாதுகாப்பு அமைப்பால் தொடங்கப்பட்டது. குறைந்து வரும் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றை அதிகரிப்பதுமே இதன் நோக்கமாகும். இந்த தினம் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 2012-ம் ஆண்டில், வீட்டுச் சிட்டுக்குருவி தில்லியின் மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்டது. அன்று முதல், இந்த தினம் உலகளாவிய கவனத்தைப் பெற்றுள்ளது. உலகெங்கிலும் உள்ள மக்கள் சிட்டுக்குருவிகளைக் கொண்டாடுவதோடு, அவற்றைப் பாதுகாக்கவும் முன் வந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
சிட்டுக்குருவிகள் சிறிய ஆனால் முக்கியமான பறவைகளாகும், அவை சூழலியல் சமநிலையைப் பேணுவதில் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. அவை பல்வேறு பூச்சிகளையும் தீங்கு விளைவிக்கும் உயிர்களையும் உண்பதன் மூலம் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், மகரந்தச் சேர்க்கையிலும் விதைப் பரவலிலும் சிட்டுக்குருவிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை பல்லுயிர்ப் பெருக்கத்தை மேம்படுத்துவதால், கிராமப்புற, நகர்ப்புறச் சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவையாகின்றன.
இந்தியாவில், சிட்டுக்குருவிகள் வெறும் பறவைகளாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. அவை பகிரப்பட்ட வரலாறு மற்றும் கலாச்சாரத்தின் அடையாளச் சின்னமாகும். இந்தியில் 'கொரையா' எனவும், தமிழில் 'குருவி' என்றும் உருதுவில் 'சிர்யா' என்றும் பல்வேறு மொழிகளில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் இந்தச் சிட்டுக்குருவிகள், பல தலைமுறைகளாக மனிதர்களின் அன்றாட வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகின்றன. குறிப்பாக கிராமங்களில், தங்கள் உற்சாகமான ஒலிகளால் காற்றை நிரப்பி, பலருக்கு இனிய நினைவுகளை அவை உருவாக்கின.
சிட்டுக்குருவிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தபோதிலும், அவை மிக மோசமான விகிதத்தில் அழிந்து வருகின்றன. இந்த வீழ்ச்சிக்கு பல காரணிகள் பங்களிக்கின்றன. தற்போதைய நவீன காலத்தில் மனிதர்களின் பல நடவடிக்கைகள், சிட்டுக்குருவிகள் உணவாகச் சார்ந்திருக்கும் பூச்சிகளுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுச் சேர்மங்களை உருவாக்கியுள்ளது. நகரமயமாக்கல், குருவிகளின் கூடு கட்டும் இடங்களைப் பறித்துள்ளது. நவீன கட்டடங்களில் சிட்டுக்குருவிகள் கூடு கட்டுவதற்குத் தேவையான இடங்கள் இல்லாததால், அவை தங்கள் குஞ்சுகளை வளர்ப்பதற்கான இடங்கள் குறைகின்றன.
விவசாயத்தில் பூச்சிக்கொல்லி பயன்பாடு பூச்சிகளின் எண்ணிக்கையைக் குறைத்து, சிட்டுக்குருவிகளின் உணவு விநியோகத்தை பாதிக்கிறது. காகங்கள், பூனைகளின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுடன், பசுமையான இடங்களுக்கும் பற்றாக்குறை நிலவுகிறது. இவை இந்தப் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தக் காரணிகளும், வாழ்க்கை முறை மாற்றங்களும் சிட்டுக்குருவிகள் செழித்துப் பெருகுவதைக் கடினமாக்கியுள்ளன.
இந்த சவால்களுக்கு மத்தியில், சிட்டுக்குருவிகளைப் பாதுகாத்து அவற்றின் எண்ணிக்கையை மீண்டும் அதிகரிக்கச் செய்வதற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்தகைய ஒரு முயற்சிதான், சுற்றுச்சூழல் பாதுகாவலர் ஜகத் கிங்கப்வாலா தலைமையிலான "சிட்டுக்குருவியைக் காப்போம்" இயக்கம். அவர், வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும் இடையே சமநிலையைப் பேண வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். 2017-ம் ஆண்டில் இந்தப் இயக்கத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அளித்த ஆதரவு, இது குறித்த விழிப்புணர்வை கணிசமாக அதிகரித்துள்ளது.


சென்னையில் உள்ள “கூடுகள்” என்ற அறக்கட்டளை குறிப்பிடத்தக்க முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த அமைப்பு, சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை உருவாக்குவதில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தியுள்ளது. குழந்தைகள் சிறிய மர வீடுகளைக் கட்டி, சிட்டுக்குருவிகளுக்கு உணவும் தங்குமிடமும் அளிக்கின்றனர். 2020 முதல் 2024 வரை, இந்த அறக்கட்டளை 10,000-க்கும் மேற்பட்ட கூடுகளைக் கட்டியதால், சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தகைய முயற்சிகள் மூலம் சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இளைய தலைமுறையினர் ஈடுபடுத்தப்பட்டு அதன் முக்கியத்துவம் அவர்களுக்கு உணர்த்தப்படுகிறது.
கர்நாடகாவின் மைசூரில், 'ஏர்லி பேர்ட்' (Early Bird) பிரச்சார இயக்கம் குழந்தைகளை பறவைகளின் உலகிற்கு அறிமுகப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தில் ஒரு நூலகம், செயல்பாட்டுக் கருவிகள், பறவைகளைக் காண்பதற்காக கிராமங்களுக்குச் செல்லும் பயணங்கள் ஆகியவை அடங்கும். இந்தக் கல்வி சார்ந்த முயற்சிகள், சிட்டுக்குருவிகள் & பிற பறவைகளின் முக்கியத்துவத்தை குழந்தைகள் புரிந்துகொள்ள உதவுகின்றன.


மாநிலங்களவை உறுப்பினர் பிரிஜ் லால் சிட்டுக்குருவிகள் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் தமது வீட்டில் 50 கூடுகளை அமைத்துள்ளார். சிட்டுக்குருவிகள் ஒவ்வொரு ஆண்டும் முட்டையிட அக்கூடுகளுக்குத் திரும்புகின்றன. அவற்றுக்கு உணவளித்து, முறையாகப் பராமரிப்பதையும் அவர் உறுதி செய்கிறார். சிட்டுக்குருவிகளைப் பாதுகாப்பதில் இதுபோன்ற முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, பிரிஜ் லாலின் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.
உலக சிட்டுக்குருவிகள் தினம், நமது சிறிய இறகுகளைக் கொண்ட அழகிய பறவை நண்பர்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. பசுமையான சூழலை உருவாக்கி, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டைக் குறைத்து, பாதுகாப்பான கூடு கட்டும் இடங்களை உருவாக்குவது என ஒவ்வொரு சிறிய முயற்சியும் முக்கியத்துவம் வாய்ந்தது. உலக சிட்டுக்குருவிகள் தினத்தைக் கொண்டாடுவதன் மூலம், இந்தச் சிறிய பறவைகளை மீண்டும் நமது வாழ்வில் அதிக அளவில் கொண்டு வரவும், இயற்கைக்கும் மனிதகுலத்திற்கும் இடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் நாம் உதவலாம்.
***
PD/PLM
(Features ID: 158117)
आगंतुक पटल : 37
Provide suggestions / comments