Culture & Tourism
மகா கும்பமேளாவில் சாதனை: 45 கோடி பக்தர்கள் வருகை
Posted On:
11 FEB 2025 2:07PM
வரலாற்றிலேயே மிகப்பெரிய சமயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக மகா கும்பமேளா உருவெடுத்துள்ளது. 2025 பிப்ரவரி 11 நிலவரப்படி, 45 கோடிக்கும் (450 மில்லியன்) அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். 45 நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை 45 கோடியை எட்டும் என்று மாநில அரசு எதிர்பார்த்திருந்த நிலையில், மகா கும்பமேளா நிறைவடைய இன்னும் 15 நாட்கள் எஞ்சியிருக்கும் சூழலில், ஒரு மாதத்திலேயே இந்த இலக்கு எட்டப்பட்டுள்ள்து குறிப்பிடத்தக்கது. ஆன்மீக சிறப்பு, பிரம்மாண்டமான சடங்குகள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பப் பயன்பாடுகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், இந்தக் மகா கும்பமேளா நிகழ்வு, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் மேலாண்மை நடவடிக்கைகள், சுகாதாரம் மற்றும் டிஜிட்டல் வசதிகள் ஆகியவற்றில் புதிய தரநிலைகளை நிர்ணயித்துள்ளது.

பக்தர்களின் எண்ணிக்கை 45 கோடியைக் கடந்துள்ள நிலையில், கூட்ட மேலாண்மை முக்கியக் கவனத்தை ஈர்ப்பதாக அமைந்துள்ளது. அடுத்த புனித நீராடல் நிகழ்வு பிப்ரவரி 12-ம் தேதியன்று, அதாவது 'மகா பூர்ணிமா நீராடல்' என்ற பெயரில் நடைபெறவுள்ளது. பிரகஸ்பதி என்றழைக்கப்படும் குரு பகவானின் வழிபாட்டுடள் இந்துக்கள் தெய்வமான கந்தர்வன் விண்ணுலகிலிருந்து புனித சங்கமத்திற்கு நீராட வருகிறார் என்ற ஐதீக நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இந்தத் தினம் போற்றப்படுகிறது. மகா பூர்ணிமா தினத்தில் நீராடல் நடைபெறும் போது பக்தர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மேலாண் நடவடிக்கைகளை உறுதிசெய்யும் வகையில், 2025 பிப்ரவரி 11-ம் தேதி காலை முதல் விழா நடைபெறும் பகுதியில் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படாத மண்டலமாக உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவித்துள்ளது. இப்பகுதியில் அத்தியாவசிய மற்றும் அவசரகால சேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
மகா கும்பமேளாவில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய ரயில்வே முழுத் திறனுடன் இயங்கி வருகிறது. பிப்ரவரி 9 அன்று, 330 ரயில்களில் 12.5 லட்சம் யாத்ரீகர்கள் பயணம் மேற்கொண்டனர். பிப்ரவரி 10 அன்று பிற்பகல் 3 மணிக்குள் கூடுதலாக 130 ரயில்கள் இயக்கப்பட்டன பிப்ரவரி 12 அன்று நடைபெறவுள்ள புனித நீராடலுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மற்றும் மத்திய அமைச்சர் ஆய்வு செய்தனர். பிரயாக்ராஜ் சந்திப்பு உட்பட அனைத்து எட்டு ரயில் நிலையங்களும் முழுமையாகச் செயல்பட்டு வருகின்றன. அதே வேளையில், கூட்ட மேலாண்மை நடவடிக்கையை சீராக மேற்கொள்ளும் வகையில், முக்கிய நீராடல் தினங்களையொட்டி பிரயாக்ராஜ் சங்கமத்தில் உள்ள ரயில் நிலையம் தற்காலிகமாக மூடப்படுகிறது.
மாநில அரசு, பல்வேறு முகமைகளுடன் இணைந்து, பல்லடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பை செயல்படுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள், ட்ரோன் கண்காணிப்பு மற்றும் நிகழ்நேரப் பகுப்பாய்வு போன்ற, பாதுகாப்பு அம்சங்கள் செயல்படுத்தப்பட்டன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் யாத்ரீகர்கள் நீராடச் செல்வதற்கான படித்துறைகளைச் சீர் செய்யவும், அதிக அளவிலான கூட்ட நெரிசலைக் குறைக்கவும் நிர்வாகம் டிஜிட்டல் டோக்கன் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் கும்பமேளா அனைவரையும் உள்ளடக்கிய ஆன்மீக அனுபவமாகத் திகழ்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகா கும்பமேளாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிப்ரவரி 10-ம் தேதியன்று நடைபெற்ற விழாக்களில் பங்கேற்றார். அவரது வருகையின்போது, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியது, இந்த நிகழ்வு ஆன்மீக முக்கியத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்தது. குடியரசுத் தலைவர் முக்கியத்துவம் வாய்ந்த தலங்களில் வழிபாடு நடத்தியதுடன், துறவிகள் மற்றும் பக்தர்களுடன் கலந்துரையாடினார். குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்முவைத் தவிர, பிரதமர் திரு நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள் மற்றும் ஆளுநர்களும் சங்கமத்தில் புனித நீராடினர். பாலிவுட் மற்றும் இந்திய விளையாட்டுத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும், மதச் சடங்குகள் மற்றும் பொது கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். துறவிகள் மற்றும் ஆன்மீகத் தலைவர்களின் பங்கேற்பு, இந்த நிகழ்வின் புனிதத்தையும், மகத்துவத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.

மகா கும்பமேளாவின் போது, விரதம் மற்றும் ஆன்மீக ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கும் காலமான கல்பவாசம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்கிறது. இந்த ஆண்டு 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் கல்பவாச விரதத்தை மேற்கொண்டனர். மகா பூர்ணிமா தினம், புனித நீராடல், சிறப்புப் பூஜைகள் மற்றும் தானதர்ம நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இந்த விரதம் சார்ந்த மரபின்படி, கல்பவாசிகள் சத்யநாராயண கதையை வாசித்தல் மற்றும் ஹவன பூஜைகளை மேற்கொள்வதுடன், தங்களது புரோகிதர்களுக்குத் தானங்களையும் வழங்குகின்றனர். கல்பவாசத்தின் தொடக்கத்தில் விதைக்கப்பட்ட பார்லி தானிய வகைகள் கங்கை நதியில் கரைக்கப்படுகின்றன. மேலும், அங்கு வளர்க்கப்பட்ட துளசிச் செடி தெய்வீக அருட்கொடையாக கருதி பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் செல்கின்றனர். பன்னிரண்டு ஆண்டுகால கல்பவாச விரதம் மகா கும்பமேளாவில் உச்சத்தை எட்டுகிறது. இதனைத் தொடர்ந்து, அவரவர் கிராமங்களில் சமூக விருந்து நிகழ்ச்சிகளையும் நடத்துகின்றனர்.

விரிவான சுகாதாரச் சேவைகள் வாயிலாக, 7 லட்சத்திற்கும் மேற்பட்ட யாத்திரீகர்கள் மருத்துவ சிகிச்சையைப் பெற்றனர். மருத்துவ சேவைகளில், 23 ஆங்கிலமுறை மருத்துவமனைகளில் 4.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், 3.71 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மேற்கொள்ளப்பட்ட நோய் கண்டறியும் பரிசோதனைகள் மற்றும் 3,800 சிறிய மற்றும் 12 பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகளும் இதில் அடங்கும். மேலும், 20 ஆயுஷ் மருத்துவமனைகள் வாயிலாக, 2.18 லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்களுக்கு ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. தில்லி எய்ம்ஸ் மற்றும் வாரணாசி ஐஎம்எஸ் பிஹெச்யு ஆகிய மருத்துவமனைகளைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள், கனடா, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சர்வதேச மருத்தவ நிபுணர்களின் ஒருங்கிணைந்த பங்களிப்பு, உலகத்தரம் வாய்ந்த சுகாதாரச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்துள்ளது. பஞ்சகர்மா, யோகா சிகிச்சை மற்றும் சுகாதார விழிப்புணர்வுப் பொருட்களை விநியோகித்தல் போன்ற சேவைகள் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், அங்கு வருகை தருவோரின் ஒட்டுமொத்த நலவாழ்வையும் மேம்படுத்தியுள்ளன.

இதுவரை நடைபெற்றுள்ள கும்பமேளாக்களில் மிகவும் தூய்மையானதாக இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், அதிகாரிகள் முறையான கழிவு மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்தினர். 22,000-க்கும் அதிகமான துப்புரவுப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, வளாகங்கள் குப்பைகளின்றி தூய்மையாக இருப்பதை உறுதி செய்துள்ளனர். நதி நீரைத் தூய்மையாகவும், புனித நீராடலுக்கு ஏற்ற வகையில் இருப்பதை உறுதி செய்ய, பெரிய அளவிலான நீர் சுத்திகரிப்புத் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிப்பது மற்றும் மக்கும் தன்மையுள்ள பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது போன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளன. கும்பமேளா நடைபெறும் மைதானம் முழுவதும் ஆயிரக்கணக்கான உயிரி-கழிவறைகள் மற்றும் தானியங்கி குப்பை அகற்றும் அலகுகள் நிறுவப்பட்டிருப்பதன் மூலம், தூய்மை இந்தியா இயக்கத்தின் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
இந்த நிகழ்வு முழுவதும், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், நாட்டுப்புற இசை மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் இடம்பெறும் கலாச்சார நிகழ்ச்சிகள் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளதுடன், பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பத்ம விருது பெற்றவர்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நாட்டுப்புறக் குழுக்கள் உள்ளிட்ட புகழ்பெற்ற கலைஞர்கள், கதகளி, பரதநாட்டியம் மற்றும் லாவணி, பிஹு போன்ற பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள் மூலம் இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார மரபுகளை வெளிப்படுத்தினர். கும்பமேளாவில் பல்வேறு இலக்கியக் கூட்டங்களும் நடைபெறுகின்றன. அவற்றில் துறை சார்ந்த அறிஞர்கள் பண்டைய நூல்கள், வேத தத்துவம் மற்றும் சமகாலத்தில் சனாதன தர்மத்தின் பொருத்தம் குறித்தும் விரிவாக விவாதிக்கின்றனர். கைவினைஞர்கள் கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள் மற்றும் சமய கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தும் அரங்குகளை அமைத்து, இவ்விழாவை கலாச்சார சங்கமமாக மாற்றுகின்றனர்.

மகா கும்பமேளா என்பது வெறும் ஒரு சமய நிகழ்வாக இருப்பது மட்டுமின்றி, துல்லியமான திட்டமிடல், கலாச்சாரப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஒரு பிரம்மாண்டமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. ஏற்கனவே 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் இதில் பங்கேற்றுள்ள நிலையில், இந்த விழா நிறைவடைவதற்குள் இன்னும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், மரபையும், நவீனத்தையும் ஒருங்கிணைக்கும் இந்தியாவின் திறனுக்கு இந்த கும்பமேளா சான்றாகத் திகழ்வதுடன், அனைவருக்கும் ஆன்மீக வளம் மிக்கதும் எவ்விதத் தடையுமற்ற சிறந்த அனுபவத்தையும் உறுதி செய்கிறது.
****
PKV/SV/RJ/KR
(Features ID: 158091)
आगंतुक पटल : 11
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English