• Sitemap
  • Advance Search
Technology

வேவ்ஸ் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள்

கலை, இசை மற்றும் புத்தாக்கத்தின் மூலம் இந்தியாவின் பாரம்பரியத்தையும் உலகளாவிய ஒற்றுமையையும் பறைசாற்றுதல்

Posted On: 30 APR 2025 1:21PM
  1. வேவ்ஸ் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் செழுமையான செவ்வியல் நடனங்கள், நாட்டுப்புற இசை மற்றும் தற்காப்புக் கலைகளைக் காட்சிப்படுத்தி நம் நாட்டின் பாரம்பரியத்தைப் போற்றுகின்றன.
  2. 'கிங்' (KING) மற்றும் ஆலன் வாக்கர் இடையேயான கூட்டணி, இலங்கை, மெக்சிகோ, எகிப்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் சர்வதேசக் கலைஞர்களின் பங்களிப்பு மற்றும் தென்கொரியாவின் 'பீட்பெல்லா ஹவுஸ்' உடன் 'தாராவி ட்ரீம் ப்ராஜெக்ட்' இணைந்து நடத்திய அதிரடியான கலை நிகழ்ச்சி ஆகியவை உலகளாவிய ஒற்றுமையை வெளிப்படுத்தின.
  3. இந்தியாவின் நேரடி பொழுதுபோக்குத் பொருளாதாரத்தின் (Live Entertainment Economy) மாற்றத்தை நோக்கிய ஆற்றலை வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் 'வெள்ளை அறிக்கை' வெளியிடப்பட்டது.
  4. கலைத்துறையின் முன்னோடிகள் மற்றும் சாதனையாளர்களுடனான நேரடித் தொடர்புகள், உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் கருத்துப் பரிமாற்றத்தை மேலும் வலுப்படுத்தின.
  5. பண்டைய மரபுகளையும் நவீன உள்ளடக்கத்தையும் ஒன்றிணைப்பதன் மூலம், இந்தியாவின் உலகளாவிய கலாச்சார செல்வாக்கை வேவ்ஸ் மேம்படுத்துகிறது.

மும்பையிலுள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் (JWCC), வரும் மே 1 முதல் 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ள 'உலக ஒலி-ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு' (வேவ்ஸ்) 2025, ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உலகளாவிய உரையாடலுக்கான ஒரு தளமாக அமைகிறது. அமர்வுகள் மற்றும் கண்காட்சிகளுடன், "படைப்பாளர்களை இணைப்போம், நாடுகளை இணைப்போம்" என்ற நோக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் 'வேவ்ஸ் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள்' இதில் இடம்பெறுகின்றன. இது பாரம்பரியமும் நவீனப் புத்தாக்கமும் சந்திக்கும் இடமாகவும், கலைகளின் பொதுவான மொழி மூலம் நாடுகள் இணையும் ஒரு களமாகவும் அமைகிறது.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில், செவ்வியல் கலைகளின் சிறப்பு முதல் துணிச்சலான சமகாலப் பரிசோதனைகள் வரை, மற்றும் காலத்தால் அழியாத மரபுகள் முதல் நவீனத் தொழில்நுட்பப் படைப்புகள் வரை எனப் பார்வையாளர்கள் ஒரு புதிய கலைப் பயணத்தை மேற்கொள்வர். இந்திய மற்றும் சர்வதேசக் கலைஞர்கள் மும்பையின் மிகச்சிறந்த அரங்குகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவர். இதன் மூலம் ஒவ்வொரு மேடையும் கலாச்சாரம், படைப்பாற்றல் மற்றும் புதிய கண்ணோட்டங்களின் சந்திப்புத் தளமாக மாறும். 'வேவ்ஸ் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள்' என்பது படைப்பாளர்களின் கூட்டு முயற்சி மற்றும் கலைப் பகிர்வுக்கு ஒரு பெருமிதமான குரலாக விளங்கும்.

இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்திற்கு ஒரு துடிப்பான அர்ப்பணிப்பு:

வேவ்ஸ் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள், இசை, நடனம் மற்றும் கதைசொல்லல் ஆகியவற்றின் துடிப்பான கலவையின் மூலம் இந்தியாவின் ஆன்மாவைப் போற்றுகின்றன. இதில் கதக் போன்ற செவ்வியல் நடனங்கள், நாட்டுப்புறக் கலைகளின் வீச்சு மற்றும் களரிப்பயட்டு போன்ற தற்காப்புக் கலைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி தலைமையில், ஸ்ரேயா கோஷல், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் பங்கேற்கும் பிரம்மாண்ட இசைக்குழு, ‘வேவ்ஸ் ஆஃப் இந்தியா’ (வேவ்ஸ் of India) என்ற இசைத் தொகுப்பை வெளியிடுகின்றது. சரத் கேட்கர் முன்னெடுக்கும் ‘சங்கல்ப்: தி ரிசால்வ்’ (Sankalp: The Resolve) போன்ற நிகழ்ச்சிகள், வேத மரபுகளை நவீனத் திரையுலகத்துடன் இணைக்கின்றன. அதேபோல், டெட்ஸியோ சிஸ்டர்ஸ் (Tetseo Sisters) மற்றும் ஏ. ஆர். ரஹ்மானின் 'ஜாலா' (JHALAA) போன்ற பிராந்திய நிகழ்ச்சிகள் இந்தியாவின் பன்முகத்தன்மையை முன்னிலைப்படுத்துகின்றன. அனுபம் கெர் தொகுத்து வழங்கும் நடன நாடகம், பார்வையற்ற குழந்தைகளின் உள்ளடக்கிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் ‘வா உஸ்தாத்’ (Wah Ustad), ‘இடிஎம் சேலஞ்ச்’ (EDM Challenge) போன்ற ‘கிரியேட் இன் இந்தியா’ (Create in India) சவால்கள் ஆகியவை இந்தியாவின் படைப்பாற்றலைப் பிரதிபலிக்கின்றன. இவை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், உலகளாவிய புத்தாக்கத்திற்கும் ஊக்கமளிக்கின்றன.

கேரளாவின் களரிப்பயட்டு மற்றும் மகாராஷ்டிராவின் தண்டபட்டா போன்ற தற்காப்புக் கலை நடனங்கள் வியக்கத்தக்க வகையில் அமையவுள்ளன. போர்வீரர்களின் உணர்வை அடிப்படையாகக் கொண்ட இந்த நிகழ்ச்சிகள், இந்தியாவின் வலிமை மற்றும் மீள்திறன் கொண்ட பெருமைமிக்க பாரம்பரியத்தை வெளிப்படுத்தும். அவற்றின் ஆற்றல்மிக்க அசைவுகள் தேசத்தின் அசைக்க முடியாத வலிமைக்குச் சான்றாகும்.

கலை மற்றும் ஒற்றுமையின் உலகளாவிய சங்கமம்:

"படைப்பாளர்களை இணைப்போம், நாடுகளை இணைப்போம்" என்ற கருப்பொருளின் கீழ், 'வேவ்ஸ் 2025' உச்சிமாநாடு, மும்பையில் கலைஞர்களை ஒன்றிணைக்கிறது. இதில் 'கிங்' (KING) மற்றும் ஆலன் வாக்கர் இடையேயான கூட்டணி, 'தாராவி ட்ரீம் ப்ராஜெக்ட்' மற்றும் 'பீட்பெல்லா ஹவுஸ்' இடையேயான கலைப் பகிர்வுகள் இடம்பெறுகின்றன. இலங்கையின் கம்பீரமான 'வெஸ்' (Ves) நடனம், எகிப்தின் மனதைக் கவரும் 'அல்-தனூரா' (Al-Tanoura), மலேசியாவின் தாளம் மிக்க 'ஜாபின்' (Zapin), மெக்சிகோவின் ஆன்மாவைத் தொடும் மெல்லிசைகள் மற்றும் இந்தோனேசியாவின் நுணுக்கமான 'பாலினீஸ்' (Balinese) நடனங்கள் என உலகளாவிய கலாச்சார செழுமை மற்றும் நல்லிணக்கம் இதில் காட்சிப்படுத்தப்படுகிறது.

நவீன தாளங்களின் மூலமும் பாரம்பரியத்தை மறுசீரமைப்பதன் மூலமும், நாடுகளுக்கு இடையேயான கலாச்சார உரையாடல்களை ஊக்குவிப்பதன் மூலமும், இந்தியாவின் உலகளாவிய கலாச்சார செல்வாக்கை வேவ்ஸ் வலுப்படுத்துகிறது. இது இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட கதையாடலை உலகின் கலாச்சாரக் கட்டமைப்போடு இணைப்பதுடன், எல்லைகளைக் கடந்த புத்தாக்கமான கலைகளின் மூலம் ஒற்றுமையை மேம்படுத்துகிறது.

துடிப்பான குரல்கள்: பாரம்பரியம் மற்றும் புத்தாக்கத்தை இணைக்கும் கலந்துரையாடல்கள்

வேவ்ஸ் 2025-ன் அமர்வுகள் இந்திய இசை மற்றும் நேரடி பொழுதுபோக்குத் துறையின் பரிணாம வளர்ச்சியை ஆராய்கின்றன. ரோஷன் அப்பாஸ் தலைமையில் டாக்டர் எல். சுப்பிரமணியம், கவிதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் 'ஸ்பாடிஃபை ஹவுஸ்' (Spotify House) அமர்வு, பாலிவுட்டில் செவ்வியல் இசையின் பங்களிப்பு குறித்து ஆராய்கிறது. அதேபோல், பிரசூன் ஜோஷி மற்றும் பாப்பன் ஆகியோர் பங்கேற்கும் மற்றொரு அமர்வு, நவீனப் பாடல்களில் சூஃபி, நாட்டுப்புறம் மற்றும் கஜல் இசையின் தாக்கத்தைப் போற்றுகிறது. தீபக் சௌதரி ஒருங்கிணைப்பில் மகேஷ் பூபதி உள்ளிட்டோர் பங்கேற்கும் ‘பொழுதுபோக்கின் புதிய முகம்’ (New Face of Entertainment) என்ற அமர்வு, நேரடி நிகழ்ச்சிகளின் மறுமலர்ச்சி குறித்து விவாதிப்பதோடு, ‘இந்தியாவின் நேரடி பொழுதுபோக்கு பொருளாதாரம்’ குறித்த வெள்ளை அறிக்கையையும் வெளியிடுகிறது. இத்தகைய விவாதங்கள் படைப்பாற்றல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதோடு, பாரம்பரியத்தைத் தொழில்நுட்பத்துடன் இணைத்து இந்தியாவின் உலகளாவிய தலைமையை உறுதிப்படுத்துகின்றன.

வேவ்ஸ் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் இந்தியாவின் செழுமையான பாரம்பரியம் மற்றும் நவீன வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன. இவை பாரம்பரிய மற்றும் சமகால கலைகளை ஒன்றிணைத்து இந்தியாவின் மீள்திறன் மற்றும் பன்முகத்தன்மையை முன்னிலைப்படுத்துகின்றன. உலகளாவிய கலாச்சாரப் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம், கலாச்சார உரையாடல்களில் இந்தியாவை ஒரு தலைமைத்துவ நாடாக இது நிலைநிறுத்துகிறது. இது புத்தாக்கத்தைத் தூண்டுவதுடன், இந்தியாவின் கலாச்சாரக் கதையாடல், உலகம் முழுவதும் எதிரொலிப்பதை உறுதி செய்கிறது

****

PLM/VK/KR

 

(Features ID: 158090) आगंतुक पटल : 34
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी