Infrastructure
பீகாரில் அதிகரித்து வரும் விமான போக்குவரத்திற்கான வசதிகள்
Posted On:
15 SEP 2025 5:31PM
பீகாரில் ஒரு புதிய விடியல்

பாட்னாவில் பனிமூட்டம் சூழ்ந்த ஒரு குளிர்காலக் காலைப்பொழுதில், அன்றைய முதல் விமானம், பனிமூட்டத்தைக் கிழித்துக்கொண்டு பறப்பதற்கு, நூற்றுக்கணக்கான பயணிகள், புதிய விமான முனையத்தில் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பதற்றத்துடன் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள், திருமண நிகழ்வுகளுக்குச் செல்லும் உற்சாகமான குடும்பங்கள், வியாபார நிமித்தமாகச் செல்லும் நேர்த்தியான உடையணிந்த தொழில்முனைவோர் என, விமானத்தில் பறந்து செல்வதற்குத் தயாராகக் காத்திருப்பவர்களால், அந்த விமான முனையம் பரபரப்பாக இயங்கி வருகிறது. அண்மைக்காலம் வரை, இதுபோன்ற பயணங்களுக்கு ரயில்கள், பேருந்துகளில் பல மணிநேரம் தேவைப்பட்டது. ஆனால் இன்று, பீகார் மாநிலத்தின் வான்வெளி ஒரு மாறுபட்ட கதையைச் சொல்கிறது. அது புதிய விமான முனையங்கள், புதிய வழித்தடங்கள் மற்றும் அதிகரித்து வரும் விமானங்களின் எண்ணிக்கை போன்ற அம்சங்களைப் பறைசாற்றுகிறது. வளமான கலாச்சாரப் பாரம்பரியம், வளர்ந்து வரும் பொருளாதார நடவடிக்கைகளால் நிறைந்துள்ள பீகாரில், விமானப் போக்குவரத்துத் துறை, தேசிய மற்றும் உலக அளவில் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது.
பீகாரின் முக்கிய விமானப் போக்குவரத்து மையங்கள்
அண்மைக்காலத் திட்டங்கள், பாட்னா, தர்பங்கா, கயா, பிஹ்டா மற்றும் பூர்னியாவை, நாட்டின் பிற பகுதிகளுடன் இணைத்து, பீகாரை முன்னெப்போதும் இல்லாத வகையில், விமானப் போக்குவரத்துக்கான வரைபடத்தில், மிக முக்கிய இடத்தைப் பெற வகை செய்துள்ளன. நவீனமயமாக்கப்பட்ட விமான முனையங்கள் முதல் புதிய விமான நிலையங்கள் வரை, அனைத்தும் பீகார் மாநிலம் பின்தங்கிய நிலையிலிருந்து, பெரும் வளர்ச்சி கண்டு வரும் மாநிலமாக உயர்ந்து வருகிறது என்பதை உணர்த்துகின்றன.
புதிய சகாப்தத்தில் அடியெடுத்து வைக்கும் புர்னியா விமான நிலையம்:

பிரதமர் திரு நரேந்திர மோடி, புர்னியா விமான நிலையத்தின் வளாகத்தில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள விமானப் பயணிகளுக்கான இடைக்கால முனையக் கட்டிடத்தைத் திறந்து வைத்ததன் மூலம், விமானப் போக்குவரத்து இணைப்பில், புர்னியா பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்தப் புதிய வசதி, விமானப் பயணிகளைக் கையாளும் திறனை கணிசமாக மேம்படுத்துவதுடன், இப்பகுதியில் அதிகரித்து வரும் விமானப் பயணத்திற்கான தேவையைச் சிறப்பாகப் பூர்த்தி செய்யும் வகையில், விமான நிலையத்தை மேம்படுத்துகிறது. இது பீகாரின் விமானப் போக்குவரத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவதுடன், மாநிலத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றான இங்கு, பொருளாதார நடவடிக்கைகள், சுற்றுலா மற்றும் எளிதான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் உறுதி செய்கிறது.
பாட்னா விமான நிலையம்: பீகாரின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்

பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம்
பாட்னா விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி மே 29, 2025 அன்று திறந்து வைக்கிறார்

விசாலமான ஓய்வறைகள், சிறந்த செக்-இன் அமைப்புகள் மற்றும் பயணிகளின் வசதிக்காக உருவாக்கப்பட்ட அம்சங்களுடன், பாட்னாவில் உள்ள ஜெயபிரகாஷ் நாராயண் சர்வதேச விமான நிலையத்தில், ஒரு பளபளப்பான புதிய முனையம் தற்போது கம்பீரமாக நிற்கிறது. இது பீகாரின் விமானப் போக்குவரத்துக்கான கட்டமைப்புக்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளில் பெருமைமிக்க தருணத்தைக் குறிக்கிறது. நவீன கட்டிடக்கலை மற்றும் மேம்பட்ட பயணிகளுக்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த முனையம், ஆண்டுதோறும் ஒரு கோடி எண்ணிக்கையிலானப் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. இது, பீகாரின் அதிகரித்து வரும் எதிர்பார்ப்புகளுக்குப் பொருத்தமானதாக உள்ளது. 2014 முதல் 2024 ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில், பாட்னா விமான நிலையம், பீகாரின் விமானப் போக்குவரத்து கட்டமைப்பில் முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. இது கிட்டத்தட்ட 3 கோடி பயணிகளைக் கையாண்டுள்ளதுடன், சுமார் 83,000 டன் சரக்குகளைக் கையாண்டுள்ளது. மேலும், ஆண்டொன்றுக்கு சராசரியாக 24,026 விமானங்களின் இயக்கங்களையும் பதிவு செய்துள்ளது. இந்த முக்கிய நடவடிக்கை, பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன் மட்டுமின்றி, பீகாரின் விமான உள்கட்டமைப்பு வசதிகள், நவீன, அனைவரையும் உள்ளடக்கிய அமைப்பாகப் பரிணமித்த புரட்சிகரமான வளர்ச்சியை பிரதிபலிப்பதாக உள்ளன. இந்த விமான நிலையம் மாநிலம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகளுக்கான உண்மையான நுழைவாயிலாக உருமாறியுள்ளது.
பிஹ்டா விமான நிலையம்: எதிர்காலத்தைக் கட்டமைத்தல்
பிஹ்டா விமான நிலையத்தின் மேம்பாடு, விமானப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கிறது. 1,413 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாகும் இத்திட்டத்தின் கீழ், பிஹ்டா விமானப்படைத் தளத்தில், விமானப் பயணிகளுக்கான புதிய வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது பாட்னாவின் மேற்குப் பகுதியில், ஒரு முக்கிய விமான மையமாகச் செயல்படும். 50 லட்சம் பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், நவீன வசதிகள், பாட்னாவின் சர்வதேச விமான நிலையத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்து, இப்பகுதியில் போக்குவரத்துக்கான இணைப்பை மேலும் வலுப்படுத்தும்.
பிஹ்டா விமான முனையம், நவீன விமானப் போக்குவரத்து கட்டிடக்கலையை, பீகாரின் பொற்காலத்தின் சாயல்களுடன் ஒன்றிணைக்கிறது. இது மௌரிய மற்றும் குப்தர் கால வம்சங்களின் கம்பீரம், நாளந்தா மற்றும் விக்ரம்ஷிலா-வின் அறிவுசார் பாரம்பரியம் போன்றவற்றில் இருந்து உத்வேகம் பெறுகிறது. பிஹ்டாவின் எதிர்காலம் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மட்டுமின்றி, அதன் தொலைநோக்குப் பார்வையிலும் அடங்கியுள்ளது. இது பீகாரின் அடுத்தக்கட்ட விமானப் போக்குவரத்து வளர்ச்சிக்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமைகிறது. இதன்மூலம், தடையற்ற விமான பயணத்தை சாத்தியமாக்கி, வர்த்தகத்திற்கு ஆதரவளித்து, மாநிலப் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய வாய்ப்புகளை ஈர்க்க வகை செய்கிறது.
தர்பங்கா விமான நிலையம்: வடக்கு பீகாரின் வான்வெளிப் பாலம்
2020-ம் ஆண்டில், உடான் மண்டல விமானப் போக்குவரத்துக்கான இணைப்புத் திட்டம், செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து, தர்பங்கா விமான நிலையம், பீகாருக்கு ஒரு முக்கிய போக்குவரத்து இணைப்பாக உருவெடுத்துள்ளது. தில்லி, மும்பை மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய பெருநகரங்களுக்கு, நேரடி விமானச் சேவைகளை வழங்குவதன் மூலம், நாடு முழுவதும் வாய்ப்புகளும், விமான நிலையங்களும் அதிகரிக்க இது வழிவகை செய்துள்ளது.
2023-24-ம் நிதியாண்டில், 5 லட்சத்திற்கும் அதிகமான பயணிகள், தர்பங்கா விமான நிலையத்தை தங்களது பயணத்தின் தொடக்கப் புள்ளியாகத் தேர்ந்தெடுத்தனர். தர்பங்காவின் வளர்ந்து வரும் விமானப் போக்குவரத்து கட்டமைப்புகள்,அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அடையாளமாக விளங்குகிறது. இது வடக்கு பீகார் மக்களை இந்தியாவின் நகர்ப்புற மையங்களுக்கு நெருக்கமாகக் கொண்டு வருவதுடன், அவர்களின் கலாச்சாரம், திறமையை மாநில எல்லைகளுக்கு அப்பால் கொண்டு செல்கிறது.
கயா விமான நிலையம்: வளர்ந்து வரும் நம்பிக்கையுடன் கூடிய ஒரு பௌத்த நுழைவாயில்

வரலாறு மற்றும் நவீனப் பயணத்தின் செல்வாக்கை, கயா விமான நிலையத்தைப் போன்ற வெகு சில விமான நிலையங்களே கொண்டிருக்கின்றன. ஆண்டுதோறும், இந்த விமான நிலையம், மாணவர்களையும், தொழில் வல்லுநர்களையும் வரவேற்பதுடன், புத்த கயாவில், புத்தர் காட்டிய பாதைகளைப் பின்பற்றி வரும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள், துறவிகள் மற்றும் ஆன்மீகவாதிகளுக்கும், முக்கிய போக்குவரத்துக்கான மையமாக திகழ்கிறது. 954 ஏக்கர் பரப்பளவில், நேர்த்தியாகக் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையம், 250 விமானப் பயணிகளின் வருகை, 250 விமானங்களின் புறப்பாடு ஆகியவற்றைக் கையாளும் திறன் கொண்டது. கயா விமான நிலையம், பீகாரை உலகின் பௌத்த மையங்களுடன் இணைக்கும் ஒரு கலாச்சாரப் பாலமாகத் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. இது பீகாரின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தை, உலகளவிலான பார்வையாளர்களுடன் இணைப்பதுடன், இந்திய விமானப் போக்குவரத்து வரைபடத்தில் இந்த மாநிலத்தை உறுதியாக நிலைநிறுத்துகிறது.
பீகாரின் வானம், பிரகாசம் மற்றும் எல்லையற்றதன்மை
பாட்னா விமான நிலையத்தின் ஓடுபாதைகள், புதிய விளக்குகளின் கீழ் பிரகாசிக்க, பிஹ்டாவிற்கு விமானம் புறப்படத் தயாராக, தினசரி விமானங்களின் புறப்பாடுகளால், தர்பங்கா விமான நிலையம் பரபரப்பாக இயங்க, கயா நம்பிக்கை மற்றும் வரலாற்றின் மூலம் கண்டங்களை இணைக்க, புர்னியா தனது முதல் பயணிகளை வரவேற்கத் தயாராகும் இந்த வேளையில், பீகாரின் வானம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பிரகாசமாகக் காட்சியளிக்கிறது. ஒரு காலத்தில், ரயில்களையும், நெடுஞ்சாலைகளையும் சார்ந்திருந்த இப்பகுதி, தற்போது படிப்படியாக, ஒரு விமானப் போக்குவரத்து மையமாக உருவெடுத்து வருகிறது. இவை வெறும் விமான நிலைய முனையங்களாக மட்டுமின்றி, லட்சியங்களின் அடையாளங்களாகவும் உருவெடுத்துள்ளது. ஒவ்வொரு பயணமும், கற்பவர்களின் ஆர்வத்தையும், வணிகத்தின் உந்துதலையும், வேலைவாய்ப்பு தேடுபவர்களின் நம்பிக்கையையும், தாயகம் திரும்புபவர்களின் அன்பையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இவை அனைத்தும் ஒன்றிணைந்து, பீகார், இந்தியாவுடன் மட்டுமின்றி, உலக நாடுகளுடன் இணைக்கப்பட்டு, வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் வாய்ப்புகள் நிறைந்த எதிர்காலத்தை நோக்கிப் பறக்கும் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கின்றன.
***
SV/BR/KR
(Features ID: 158087)
आगंतुक पटल : 27
Provide suggestions / comments