• Sitemap
  • Advance Search
Security

ஆகாஷ்தீர்: இந்தியாவின் புதிய போர் திறனுக்குப் பின்னணியில் உள்ள கண்ணுக்குப் புலப்படாத சக்தி

எதிரிகள் தாங்கள் கண்காணிக்கப்படுவதை உணர்வதற்குள், அவர்கள் ஏற்கெனவே குறிவைக்கப்பட்டுள்ளனர்

Posted On: 16 MAY 2025 5:45PM

இருள் சூழ்ந்த வானில், ஒரு புதிய வகை வீரன் விழித்தெழுந்துள்ளது. அது ஒரு போர் விமானத்தைப் போல கர்ஜிக்கவோ அல்லது ஏவுகணையைப் போல மின்னவோ இல்லை. அது செவிமடுத்து, துல்லியமாகக்  கணக்கிட்டு, இலக்கைத் தாக்கி அழித்தது. இந்தக் கண்ணுக்குப் புலப்படாத கேடயமான ஆகாஷ்தீர், இனி நாட்டின் வான் பாதுகாப்பு என்பது பத்திரிக்கை இதழ்களுக்குள் மட்டுமே அடங்கிய கருத்தாக இல்லாமல், இந்தியாவின் வான் பாதுகாப்பிற்கான கூர்முனையாக அமைந்துள்ளது. மே 9 மற்றும் 10 - ம் தேதிகளின் இரவில், பாகிஸ்தான் இந்திய இராணுவ மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது, தனது மிகக் கொடிய தாக்குதலைத் தொடுத்த போது, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் சரமாரியான தாக்குதலை வான் பகுதியிலேயேத் தடுத்து நிறுத்திய கண்ணுக்குப் புலப்படாத பாதுகாப்பு சுவராக அது உள்ளது. ஆகாஷ்தீர் என்பது இந்தியாவின் முழுமையான உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட, தானியங்கி வான் பாதுகாப்பு கட்டுப்பாடு மற்றும் பதில் தாக்குதல் அமைப்பு ஆகும். இது இந்திய வான் எல்லை பகுதிக்குள் வரும் ஒவ்வொரு வான்வழித் தாக்குதல் நடத்தக்கூடிய சாதனங்களை இடைமறித்து செயலிழக்கச் செய்தது.

இந்த வான் பாதுகாப்பு அமைப்பிற்கும், அவற்றின் இலக்குகளுக்கும் இடையே வெறும் தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமின்றி, தற்சார்பு இந்தியா மீதான பல ஆண்டுகால அர்ப்பணிப்புமிக்க சேவையாகும். இந்தியா நடத்திய வான்வெளித் தாக்குதல்களைக் கண்டறிந்து இடைமறிப்பதில் தோல்வியடைந்த பாகிஸ்தான், இறக்குமதி செய்யப்பட்ட எச்கியூ-9 மற்றும் எச்கியூ-16 வான் அமைப்புகளைச் சார்ந்திருந்த நிலையில், நிகழ்நேர, தானியங்கி வான் பாதுகாப்புப் போரில் இந்தியாவின் ஆதிக்கத்தை ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பு மேலோங்கி இருந்ததை வெளிப்படுத்தியது.

உலக நாடுகள் இதுவரை களமிறக்கிய வான் பாதுகாப்புச் சாதனங்களைக் காட்டிலும் அதிவிரைவாக செயல்படக்கூடிய, ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பு துல்லியமாக கவனித்து, தீர்மானித்து, இலக்கைத் தாக்குகிறது என்பதை நிரூபித்துள்ளது.

பல்வேறு அம்சங்களை ஒருங்கிணைப்பதன மூலம், நட்புப் படைகள் மீது தாக்குதல் நடத்தும் வாய்ப்பை இந்த அமைப்பு குறைக்கிறது. இது, சர்ச்சைக்குரிய வான்வெளியில் விமானங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், விரோதிகளின் இலக்குகளை விரைந்து தாக்குதல் நடத்த அனுமதிக்கிறது. ஒருங்கிணைக்கப்பட்ட தொலையுணர் கருவிகளில் உத்திசார் கட்டுப்பாட்டு ரேடார் சமிக்ஞை, முப்பரிமாண உத்திசார் கட்டுப்பாட்டு ரேடார்கள், தாழ்நிலை இலகுரக ரேடார் மற்றும் ஆகாஷ் ஆயுத அமைப்பின் ரேடார் ஆகியவை இந்த வான் பாதுகாப்பு அமைப்பில் அடங்கும்.

ஆகாஷ்தீர்: செயலற்ற ரேடார் அமைப்பிலிருந்து அறிவார்ந்த போர்யுக்தி  வரை

ஆகாஷ்தீர் என்பது வெறும் வலிமை சார்ந்தது மட்டுமின்றி, அது அறிவார்ந்த போர்யுக்தி குறித்ததாகும். இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் (கட்டுப்பாட்டு அறை, ரேடார்கள் மற்றும் பாதுகாப்புத் துப்பாக்கி) ஒரு பொதுவான, நிகழ்நேர வான்வெளி தாக்குதலை துல்லியமாகக் கண்டறிந்து உடனடியாக இடைமறித்து தாக்கி அழிக்கும் வலிமையை வழங்குகிறது. இது ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சாத்தியமாக்குகிறது. இது எதிரி நாடுகளின் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைக் கண்டறிதல், பின்தொடர்தல் மற்றும் தாக்குதல் நடத்துதல் ஆகியவற்றைத் தானியங்கி முறையில் நடத்த ஏதுவாக வடிவமைக்கப்பட்ட ஒரு வான் பாதுகாப்பு கவச அமைப்பாகும். இது பல்வேறு ரேடார் அமைப்புகள், தொலையுணர் சாதனங்கள் மற்றும் தகவல் தொடர்புத் தொழில்நுட்பங்களை ஒரே செயல்பாட்டுக் கட்டமைப்பில் ஒருங்கிணைக்கிறது. ஆகாஷ்தீர் பல்வேறு ஆதார அமைப்பு முறைமைகளிடமிருந்து தரவுகளைச் சேகரித்து, அவற்றைச் செயலாக்கி, தன்னிச்சையாக, நிகழ்நேரத் தாக்குதல் நடத்துவது குறித்த முடிவுகளை மேற்கொள்ள அனுமதிக்கிறது. ஆகாஷ்தீர், மற்ற பாதுகாப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படும் பரந்த சி4ஐஎஸ்ஆர்  (கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, கணினிகள், புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் உளவு) கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். இந்த வான் பாதுகாப்பு அமைப்பு, வாகனங்களில் கொண்டுசெல்லக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், இது எளிதில் நகரக்கூடியதாகவும், பகைமையான சூழலில் கையாள எளிதாகவும் உள்ளது.

தரைதளங்களில் உள்ள ரேடார்கள் மற்றும் உடனடி முடிவுகளைச் சார்ந்திருக்கும் பாரம்பரிய வான் பாதுகாப்பு மாதிரிகளைப் போலன்றி, ஆகாஷ்தீர் போர்க்களங்களில் தாழ்நிலையில் பறந்து சென்று வான்வெளியைத் தன்னாட்சி முறையில் கண்காணிக்கவும், தரைத்தள  அடிப்படையிலான வான் பாதுகாப்பு ஆயுத அமைப்புகளைத் திறமையாகக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது இந்தியாவின் பாதுகாப்பு வியூகம் சார்ந்த கொள்கையில்,செயலற்ற பாதுகாப்பு நிலையிலிருந்து, முன்கூட்டியே பதிலடி கொடுக்கும் முறைக்கு ஒரு தெளிவான மாற்றத்தைக் குறிக்கிறது. இந்தியாவின் மிகப்பெரிய சி4ஐஎஸ்ஆர் (கட்டளை, கட்டுப்பாடு, தகவல் தொடர்பு, கணினிகள், புலனாய்வு, கண்காணிப்பு மற்றும் உளவு) சூழலமைப்புடன் இது தடையின்றி ஒருங்கிணைவதால், தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளிலும் இணையற்ற ஒருங்கிணைப்புடன் செயல்பட முடிகிறது.

இந்தியாவின் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு வலையமைப்பு: பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அமைதியான சக்தி

ஆகாஷ்தீர், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பின் மையமாக திகழ்கிறது. இது ஐஏசிசிஎஸ் (இந்திய விமானப்படை) மற்றும் டிஆர்ஐஜியுஎன் (இந்திய கடற்படை) ஆகியவற்றுடன் தடையின்றி இணைந்து, போர்க்களத்தின் தெளிவான மற்றும் நிகழ்நேரக் காட்சியை உருவாக்குகிறது. இது தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆயுதங்கள் இரண்டையும் விரைவாகவும் திறம்படவும் பயன்படுத்த உதவுகிறது.

ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம், முப்படைகளும் இணைந்து செயல்படுவதால், தற்செயலாக நட்பு இலக்குகளைத் தாக்கும் அபாயம் மிகவும் குறைவாக உள்ளது. இது சூழ்ல் விழிப்புணர்வை மேம்படுத்துவதுடன், துல்லியமான மற்றும் வலிமையான  நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வழிவகுக்கிறது. ஆகாஷ்தீர், ராணுவ  வாகனத்தில் பொருத்தப்பட்டு, அதிக இயங்குதிறன் கொண்டிருப்பதால், அபாயகரமான மற்றும் தீவிரமான போர் மண்டலங்களில் நிலைநிறுத்துவதற்கு இது மிகவும் ஏற்றதாகும்.

உள்நாட்டு மேன்மை

ஆகாஷ்தீர் தனித்த அமைப்பாக இல்லாமல், இது, இந்தியாவின் போரிடும் திறன்களை மறுவடிவமைத்து வரும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தளங்களின் வளர்ந்து வரும் சூழல் அமைப்பின் ஒரு அங்கமாக உள்ளது. 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்' என்ற முன்முயற்சி, தனுஷ் பீரங்கி அமைப்பு, மேம்பட்ட இழுவைப் பீரங்கி அமைப்பு, அர்ஜுன் முதன்மைப் போர்க் கவச வாகனம், இலகுரக சிறப்பு வாகனங்கள், அதிவேக வாகனங்கள், தேஜஸ் இலகுரக போர் விமானம், மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர், இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர், ஆயுத இருப்பிட ரேடார், முப்பரிமாண உத்திசார் கட்டுப்பாட்டு ரேடார் அமைப்பு மற்றும் மென்பொருள் வரையறுக்கப்பட்ட வானொலி உள்ளிட்ட மேம்பட்ட இராணுவத் தளங்களின் வளர்ச்சிக்கு வலுசேர்த்துள்ளது. மேலும், தாக்குதல் நடத்தி அழிப்பதற்கான நடவடிக்கைகளுக்கான கப்பல்கள், உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள், சிறுபோர்க்கப்பல்கள், அதிவேக ரோந்துக் கப்பல்கள், அதிவேகத் தாக்குதல் திறன் கொண்ட படகுகள் மற்றும் கடலோர ரோந்துக் கப்பல்கள் போன்ற கடற்படைச் சொத்துக்களின் வளர்ச்சிக்கும் இது வழிவகுத்துள்ளது.

•     2029-ம் ஆண்டிற்குள் ரூ 3 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி செய்வதை இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது. இதன் மூலம், உலகளவில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி மையமாக இந்தியா தனது நிலையை வலுப்படுத்துகிறது.

•     மொத்த பாதுகாப்புத் தளவாட உற்பத்தியில் 21% பங்களித்து, புதிய கண்டுபிடிப்புகளையும், செயல்திறனையும் வளர்ப்பதில் தனியார் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

•     ஒரு வலுவான பாதுகாப்புத் தொழில் தளம் என்பது, 16 பொதுத்துறை நிறுவனங்கள், 430-க்கும் அதிகமான உரிமம் பெற்ற நிறுவனங்கள் மற்றும் சுமார் 16,000 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை உள்ளடக்கி, உள்நாட்டு உற்பத்தித் திறன்களை வலுப்படுத்துகிறது.

•     பாதுகாப்பு உபகரணங்களில் 65% தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. இது, முன்பு இருந்த 65-70% இறக்குமதிச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகும். இது, பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தன்னிறைவை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

ஆகாஷ்தீர்: ஒரு அமைப்பை விட மேலானது - உலகிற்கான ஒரு செய்தி

உலகெங்கிலும் உள்ள துறை சார்ந்த வல்லுநர்கள் ஆகாஷ்தீர் வான் பாதுகாப்பு அமைப்பை "போர் உத்தியில் ஒரு பெரும் மாற்றம்" என்று கருதுகின்றனர். இந்த அமைப்பின் மூலம், முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட, தானியங்கி வான் பாதுகாப்பு கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுத் திறனைக் கொண்ட நாடுகளின் உயர்நிலைக் குழுவில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இது விரைவாக கண்டறிவதுடன் மட்டுமின்றி, உலகளவில் இதுவரை களமிறக்கப்பட்டுள்ள எதையும் விட விரைவாக முடிவெடுக்கிறது. மேலும், விரைவாகவும், துல்லியமாகவும்  இலக்கை தாக்குகிறது.

ஆகாஷ்தீர் என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமின்றி, அது சமச்சீரற்ற போர்,  அச்சுறுத்தல்கள் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவின் பதில் நடவடிக்கையாகும். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் தாக்குதலை முறியடிப்பதில் அதன் வெற்றிகரமான பயன்பாடு, இந்தியாவின் எதிர்காலம் இறக்குமதி செய்யப்பட்ட தளங்களில் இல்லாமல், அதற்கு மாறாக, அதன் சொந்த கண்டுபிடிப்புகளிலேயே உள்ளது என்பதற்கும், இதுவே உண்மையான தற்சார்புடைய நாடு என்பதற்கும் சான்றாக உள்ளது.

***

PKV/SV/KR

 

(Features ID: 158084) आगंतुक पटल : 19
Provide suggestions / comments