• Sitemap
  • Advance Search
Social Welfare

உலகிற்கு இந்தியா வழங்கிய காலத்தால் அழியாத பரிசு

ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா

Posted On: 14 JUN 2025 10:09AM

“யோகா பயிற்சி செய்வதால், ஒருமைப்பாட்டு உணர்வு உருவாகிறது. மனம், உடல், அறிவு ஆகியவற்றின் ஒருமைப்பாடு, நம் குடும்பத்தினருடனான ஒருமைப்பாடு, நாம் வாழும் சமூகத்துடனான ஒருமைப்பாடு, சக மனிதர்களுடனான ஒருமைப்பாடு, நமது அழகான பூமியைப் பகிர்ந்துகொள்ளும் அனைத்துப் பறவைகள், விலங்குகள், மரங்களுடனான ஒருமைப்பாடு... இதுவே யோகா.”

-பிரதமர் நரேந்திர மோடி

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த மல்லி மஸ்தான் பாபு, எளிய பின்னணியில் இருந்து வந்து, இந்தியாவின் மிகவும் ஊக்கமளிக்கும் மலையேற்ற வீரர்களில் ஒருவராக உருவெடுத்தார். பொறியியல் மற்றும் மேலாண்மையில் தமது கல்வியுடன், மலையேறுவதில் தமக்கு இருந்த ஆர்வத்தை உணர்ந்து, தீவிரமான உடல், மனப் பயிற்சிகள் மூலம் தன்னைத் தயார்படுத்திக் கொண்டார். அவரது பயணத்தில் யோகா ஒரு முக்கியப் பங்காற்றியது. அது அவருக்கு வலிமையும், கவனத்துடன் இருக்கவும், கடுமையான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்கவும் உதவியது. தமது உணவைத் தானே தயாரிப்பது முதல், மலையேற்றத்தின் ஒவ்வொரு அடியையும் கவனமாகத் திட்டமிடுவது வரை, அவரது ஒழுக்கம் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. வெறும் 172 நாட்களில், பாபு ஏழு கண்டங்களிலும் உள்ள மிக உயரமான சிகரங்களில் ஏறி, இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியர், தெற்காசியர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். உள் சமநிலையும் உறுதியும் நம்மை மிக உயர்ந்த சிகரங்களை அடைய உதவும் என்பதற்கு அவரது கதை ஒரு உதாரணம் ஆகும். முழுமையான நல்வாழ்வை நோக்கிய நமது தேடலில், அவரது வாழ்க்கை வலிமை, தெளிவு, அமைதிக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.

இந்தியாவின் பழங்கால நாகரிகம் எப்போதுமே அறிவு, நல்வாழ்வு மற்றும் நல்லிணக்கத்தைப் போற்றி வந்துள்ளது. பூஜ்ஜியத்தைக் கண்டுபிடித்தது முதல் வானியல், அறுவை சிகிச்சை, தத்துவம் போன்ற துறைகளில் ஆற்றிய பங்களிப்புகள் வரை, இந்தியா பல நூற்றாண்டுகளாக உலகை வளப்படுத்தியுள்ளது. 'வசுதைவ குடும்பகம்' என்ற, உலகம் ஒரு குடும்பம் என்ற தத்துவத்தில் இந்தியா வேரூன்றியுள்ளது.  மனிதகுலத்தின் கூட்டு முன்னேற்றத்தில்தான் உண்மையான முன்னேற்றம் அடங்கியுள்ளது என்ற நம்பிக்கையை இந்த ஞானம் பிரதிபலிக்கிறது.

உலகிற்கு இந்தியா அளித்த மாபெரும் கொடைகளில் ஒன்று யோகா. யோகா வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல. யோகா என்பது ஒரு வாழ்க்கை முறையாகும். அது மனத்தெளிவு, உணர்ச்சி நிலைத்தன்மை, ஆன்மீக அமைதி ஆகியவற்றை வழங்குகிறது. மக்களுக்கும் பூமிக்கும் இடையே நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நல்வாழ்வு குறித்த ஒரு பொதுவான பார்வையை உலகம் தழுவியுள்ள இன்றைய சூழலில், இதன் முக்கியத்துவம் வலுவாக உள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் அயராத முயற்சிகளின் காரணமாக, வாழ்க்கையில் ஆரோக்கியம் மற்றும் சமநிலைக்கான யோகாவின் முழுமையான அணுகுமுறையை அங்கீகரிக்கும் வகையில், ஐநா பொதுச் சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. இது, இந்தியாவின் பழங்கால ஞானத்தில் வேரூன்றிய நோய்த் தடுப்பு சுகாதாரத்தை நோக்கிய ஒரு உலகளாவிய மாற்றத்தைக் குறிக்கிறது.

'ஒன்றிணைத்தல்' என்று பொருள்படும் 'யுஜ்' என்ற சமஸ்கிருத மூலத்திலிருந்து உருவான யோகா, உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஒருங்கிணைக்கிறது. மகரிஷி பதஞ்சலியால் யோக சூத்திரங்களில் நெறிப்படுத்தப்பட்ட இது, அறநெறி வாழ்க்கை, ஒழுக்கம் மற்றும் உள் அமைதிக்கு வழிகாட்டும் எட்டு அங்கங்களை விவரிக்கிறது.

மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவை சாதாரணமாகிவிட்ட இன்றைய வேகமான உலகில், யோகா சுய மீட்சிக்கான ஒரு சக்திவாய்ந்த கருவியாக விளங்குகிறது. தினசரிப் பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் மன உறுதித்தன்மையை ஊக்குவிக்கிறது. குறிப்பாக கொவிட்-19 பெருந்தொற்றின் போது, ​​மன மற்றும் உடல் ரீதியான மீள்தன்மைக்கு இது இன்றியமையாததாக நிரூபிக்கப்பட்டது. இதன் மதிப்பை உணர்ந்து, உலக சுகாதார அமைப்பு தனது 2018-2030-ம் ஆண்டுக்கான உடல் செயல்பாடு குறித்த உலகளாவிய செயல் திட்டத்தில் யோகாவைச் சேர்த்துள்ளது.

2015-ல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, சர்வதேச யோகா தினம் உலகின் மிகப்பெரிய சுகாதார இயக்கங்களில் ஒன்றாக வளர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து வருகிறது. 2024-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தில், சுமார் 24.53 கோடி பங்கேற்பாளர்களுடன் அதிக ஈடுபாடு காணப்பட்டது. சமூக வானொலி, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசுத் துறைகள் மூலம் யோகா, மக்களைச் சென்றடைவது விரிவுபடுத்தப்பட்டது. சமூக ஊடக ஈடுபாடு 3.48 கோடிக்கும் அதிகமான மக்களைச் சென்றடைந்தது. அதே நேரத்தில் இந்தியத் தூதரகங்களும் நிறுவனங்களும் உலக அளவில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தின. இந்த மைல்கற்கள், நல்வாழ்வு மற்றும் ஒற்றுமைக்கான உலகளாவிய பாலமாக யோகாவின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தின.

­­பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் யோகாவை நிறுவனமயமாக்குவதற்கு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆயுஷ் அமைச்சகம், உலக அளவில் யோகாவை ஊக்குவிக்கும் பிரச்சாரங்களை முன்னெடுத்து, கல்வி, நல்வாழ்வு மற்றும் மருத்துவ நிறுவனங்களில் ஆராய்ச்சித் திட்டங்களுக்கு ஆதரவளிக்க ரூ.15.30 கோடியை ஒதுக்கியுள்ளது. யோகா சான்றிதழ் வாரியம் உலகளாவிய தரநிலைகளை நிர்ணயித்து, தகுதிவாய்ந்த யோகா வல்லுநர்கள் அங்கீகாரம் பெறுவதை எளிதாக்கியுள்ளது.

இந்தியா பல வழிகளில் யோகாவை உலகத்துடன் பகிர்ந்து வருகிறது. அது வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆயுஷ் இருக்கைகளை நிறுவியுள்ளதுடன், இந்தியத் தூதரகங்கள் மூலம் பயிலரங்குகளையும் நடத்துகிறது. ஒய்-பிரேக் மற்றும் அறிவுப் பகிர்வுக்கான டிஜிட்டல் உள்கட்டமைப்பு (DIKSHA) போன்ற டிஜிட்டல் பிரச்சார இயக்கங்கள் மூலம், மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில், குறிப்பாக வேலைநேரம் மற்றும் பணிகளின் போது, யோகாவை பின்பற்ற உதவுகின்றன.

மாணவர்களுக்கான அரசின் மனநல ஆதரவிலும் யோகா ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. மனோ தர்பன் திட்டத்தின் மூலம், மாணவர்கள் சிறப்பாக உணர உதவும் வகையில், யோகாவுடன் கலந்தாய்வும் இணைத்து நடத்தப்படுகிறது. 2020-ம் ஆண்டு முதல் 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக 12 தொலைக்காட்சி அலைவரிசைகளில் யோகா வகுப்புகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

யோகாவின் பிரபலம் புதிய வேலைவாய்ப்புகளையும் வணிகங்களையும் உருவாக்கி வருகிறது. யோகா கற்றுக்கொள்வதற்காக ரிஷிகேஷ், காசி, கேரளா போன்ற இடங்களுக்கு அதிகமான மக்கள் வருகிறார்கள். விமான நிலையங்கள், தங்குமிடங்கள் மற்றும் ஆரோக்கிய மையங்கள் இப்போது யோகா வசதிகளை வழங்குகின்றன. யோகா உடைகள், உபகரணங்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பணியிட ஆரோக்கியத் திட்டங்களுக்கான சந்தையும் வளர்ந்து வருகிறது. யோகா அன்றாட வாழ்க்கை மற்றும் வேலையின் ஒரு அங்கமாக மாறி வருகிறது.

 

ழங்கால ஞானத்தில் வேரூன்றிய யோகா, மாற்றங்கள் நிறைந்த உலகில் சமநிலையை வழங்குகிறது. அது தனிநபர்களுக்குள் வலிமை, தெளிவு மற்றும் பிணைப்பை வளர்க்கிறது. இந்தியாவின் மென்மையான சக்தியின் அடையாளமாக, யோகா எல்லைகளையும், கலாச்சாரங்களையும் கடந்து, அமைதி, நல்வாழ்வு மற்றும் ஒற்றுமையை ஊக்குவிக்கிறது. அறிவு, பாரம்பரியம் மற்றும் காலத்தால் அழியாத விழுமியங்கள் மூலம் உலகளாவிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் இந்தியாவின் திறனை யோகா பிரதிபலிக்கிறது.

***

PD/PLM/RJ/KR

(Features ID: 158083) आगंतुक पटल : 8
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी