• Sitemap
  • Advance Search
Culture & Tourism

காலத்தால் அழியாத யோகாவின் பயணம்

Posted On: 17 JUN 2025 3:37PM

இந்தியா 11-வது சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் வேளையில், 2025-ம் ஆண்டின் கருப்பொருளான “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்பது ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுக்கான செய்தியை உணர்த்துகிறது. லடாக் முதல் கேரளா வரை, மக்கள் யோகாவின் உணர்வோடு ஒன்றிணைந்து வருகின்றனர். தலைமுறை தலைமுறையாக இந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து வந்த புகழ்பெற்ற யோகா குருமார்களின் அர்ப்பணிப்பால், இன்று உலகெங்கிலும் கோடிக்கணக்கானோர் யோகா பயிற்சி செய்கின்றனர். இந்தப் பயிற்சி மேலும் வலுப்பெற்று, உயிரோட்டத்துடன் வளர்ந்து, ஆரோக்கியமான, சமநிலையான வாழ்க்கையை ஊக்குவிக்கிறது.

யோகாவின் வரலாறு இந்தியாவின் பழங்கால நாகரிகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது. இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உடல், மனம், ஆன்மீக ஒழுக்கத்திற்கான ஒரு தனித்துவமான அமைப்பாகப் பரிணமித்துள்ளது. மனித நாகரிகத்தின் தொடக்க காலத்திலேயே யோகா தொடங்கியதாக நம்பப்படுகிறது. இது ஆரம்பகால சிந்து-சரஸ்வதி சமவெளிக் கலாச்சாரத்தில் ஒரு ஆன்மீகப் பயிற்சியாகத் தொடங்கி, படிப்படியாக சுய உணர்தலை நோக்கிய ஒரு ஒழுக்கப் பாதையாகப் பரிணமித்தது. இந்தப் பயணம் இந்தியாவின் நீடித்த ஞானத்தையும், மனிதகுலத்தின் நல்வாழ்விற்கான அதன் தொடர்ச்சியான பங்களிப்பையும் பிரதிபலிக்கிறது.

யோகா என்ற சொல், 'ஒன்றிணைத்தல்' என்று பொருள்படும் 'யுஜ்' என்ற சமஸ்கிருத மூலத்திலிருந்து உருவானது. இது உடல், மனம் மற்றும் ஆன்மாவின் ஒருங்கிணைப்பைக் குறிக்கிறது. இது அகச் சமநிலையையும் உலகத்துடனான நல்லிணக்கத்தையும் கொண்டுவந்து, மனதை அமைதிப்படுத்தி, கவனச்சிதறல்களிலிருந்து விடுவிக்கிறது.

பல ஆண்டுகளாக, பௌத்த மதத்தின் எழுச்சியின் போது, ​​கி.மு. 500-ம் ஆண்டு வாக்கில் யோகா தோன்றியதாக அறிஞர்கள் நம்பி வந்தனர். இருப்பினும், சிந்து-சரஸ்வதி சமவெளி நாகரிகத்தின் தொல்பொருள் கண்டுபிடிப்புகள், யோகா மிகவும் பழமையானது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. அந்தக் காலத்தைச் சேர்ந்த பல முத்திரைகள், தியான நிலையில் அமர்ந்திருக்கும் மனித உருவங்களைச் சித்தரிக்கின்றன. இது ஆரம்பகால யோகப் பயிற்சிகளைக் குறிக்கிறது. அன்னை தேவி போன்ற சிலைகளின் வழிபாடு, யோக மரபுகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டிருந்த ஆன்மீகப் பயிற்சிகளைச் சுட்டிக்காட்டுகிறது.

யோகாவின் வேர்கள் வேத காலம் வரை ஆழமாகப் பதிந்துள்ளன. அக்காலத்தில் அது உபாசனை (ஆன்மீகப் பயிற்சி) மற்றும் சடங்குகளின் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது. சூரியன் பெரிய ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. அது சூரிய நமஸ்காரம் போன்ற பிற்காலப் பயிற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிராணாயாமம் அல்லது சுவாசப் பயிற்சி, அன்றாட வேத சடங்குகள் ஏற்கனவே பொதிந்திருந்தது. இந்தக் காலகட்டத்தில், ஆன்மீக மாற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, ஒரு குருவின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் யோகா பயிற்றுவிக்கப்பட்டது.

உபநிடதங்கள், ஸ்மிருதிகள், புராணங்கள், பௌத்த – சமண மரபுகள், மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களிலிருந்தும் யோகத்திற்கான சான்றுகள் வெளிப்படுகின்றன. சைவம், வைணவம், தாந்திரீகம் போன்ற ஆத்திகப் பிரிவுகள் யோக அறிவையும் ஆன்மீக அனுபவங்களையும் தொடர்ந்து பேணி வந்தன. இது தெற்காசியாவின் ஆன்மீகக் கட்டமைப்பில் யோகத்தின் தூய வடிவம் இருந்ததைச் சுட்டிக்காட்டுகிறது.

கிமு 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த மகரிஷி பதஞ்சலியின் காலத்தில், யோகத்தின் பரிணாம வளர்ச்சியில் ஒரு மைல்கல் நிகழ்ந்தது. வேத காலத்திற்கு முன்பிருந்தே யோகம் பயிற்றுவிக்கப்பட்டு வந்தபோதிலும், பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் அதன் பல்வேறு பயிற்சிகள், அர்த்தங்கள், தத்துவ அடிப்படைகளை முறையாகத் தொகுத்தன. அவரது படைப்பு, அஷ்டாங்க யோகம் என்று அழைக்கப்படும் எட்டு வழிப் பாதையாக யோகத்தை முறைப்படுத்தி, ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையாக அமைந்தது. பதஞ்சலிக்குப் பிறகு, பல முனிவர்களும் குருமார்களும் ஆவணப்படுத்தப்பட்ட இலக்கியங்கள் மற்றும் செம்மைப்படுத்தப்பட்ட பயிற்சிகள் மூலம் இத்துறையை மேலும் வளப்படுத்தினர்.

கி.பி. 700 முதல் 1900 வரையிலான காலகட்டம், செவ்வியல் மற்றும் நவீனத்திற்கு முந்தைய சகாப்தங்களைக் குறிப்பதாக அமைந்தது. இக்காலக்கட்டத்தில், ஆன்மீக வளர்ச்சிக்கு உடலை ஒரு வாகனமாக வலியுறுத்தும் ஹத யோகா போன்ற அமைப்புகள் தோன்றின. ஹதயோகபிரதீபிகா, கெரண்ட சம்ஹிதா, கோரக்ஷ சதகம் போன்ற நூல்கள் யோக நுட்பங்களை விரிவாக விவரித்தன. இக்காலக்கட்டத்தில், ரமண மகரிஷி, ராமகிருஷ்ண பரமஹம்சர், பரமஹம்ச யோகானந்தர், சுவாமி விவேகானந்தர் போன்ற மாபெரும் ஆன்மீகத் தலைவர்கள் யோகாவின் வளர்ச்சிக்கும் உலகளாவிய புரிதலுக்கும் வடிவம் கொடுத்தனர். சர்வதேச தளங்களில் யோகாவையும் வேதாந்தத்தையும் முன்வைக்க சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட முயற்சிகள், இந்திய ஆன்மீக மரபுகளை உலக அரங்கில் நிலைநிறுத்த உதவின.

நவீன காலத்தில், யோகாவின் நோய்களை குணப்படுத்தும் தன்மை, உளவியல் மற்றும் ஆன்மீகப் பரிமாணங்கள் ஆகியவற்றை ஆராய்ந்த சுவாமி சிவானந்தர், டி. கிருஷ்ணமாச்சாரியார், சுவாமி குவலயானந்தர், ஸ்ரீ அரவிந்தர், பி.கே.எஸ். ஐயங்கார், பட்டாபி ஜோயிஸ் ஆகியோரின் பங்களிப்புகளின் மூலம் யோகா மேலும் உத்வேகம் பெற்றது.

2014-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி, ஐநா பொதுச் சபையில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரை, உடல்நலம் மற்றும் நல்வாழ்வு குறித்த பார்வையில் ஒரு உலகளாவிய மாற்றத்தைத் தூண்டியது. மனம், உடல் மற்றும் உணர்வுநிலைக்கு யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவரது உரை, இந்தப் பழங்கால இந்தியப் பயிற்சிக்கு மிகவும் தேவையான உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. சில மாதங்களுக்குப் பிறகு, 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐநா பொதுச் சபை, ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக ஒருமனதாக அறிவித்தது .

அன்று முதல், ஜூன் 21-ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. குறியீட்டு மற்றும் ஆன்மீகக் காரணங்களுக்காக இந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தத் தேதியானது, வட அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாளான கோடைக்கால சங்கராந்தியைக் குறிக்கிறது. இந்த நாளில், பூமியின் சாய்வு சூரியனை நோக்கி அதன் உச்சத்தில் இருக்கும். ஆன்மீக ரீதியாக, முதல் யோகியான அல்லது ஆதி யோகியான சிவபெருமான், இந்த நாளில்தான் ஏழு முனிவர்களுக்கு அல்லது சப்தரிஷிகளுக்கு யோகாவைக் கற்பிக்கத் தொடங்கினார் என்று நம்பப்படுகிறது. இதுவே யோக மரபின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

யோகா என்பது வெறும் ஒரு பயிற்சி மட்டுமல்ல, அது நல்லிணக்கம், கருணை, அனைவரையும் மதித்தல் ஆகிய இந்தியாவின் விழுமியங்களில் வேரூன்றிய ஒரு வாழ்க்கை முறையாகும். தனிப்பட்ட மற்றும் சமூக ரீதியான ஒட்டுமொத்த நல்வாழ்வில் அது கவனம் செலுத்துவதால், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு இது பொருத்தமானதாக அமைகிறது. ஒருவரின் மதம், இனம் அல்லது தேசியம் எதுவாக இருந்தாலும், யோகா ஒரு ஆரோக்கியமான, சமநிலையான மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கைக்கான பாதையை வழங்குகிறது.

***

PD/PLM/KR

(Features ID: 158082) आगंतुक पटल : 10
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी