Culture & Tourism
சர்வதேச யோகா தினம் 2025
ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா – நல்லிணக்கம் மற்றும் நல்வாழ்வு குறித்த இந்தியாவின் உலகளாவிய செய்தி
Posted On:
19 JUN 2025 11:52AM
முக்கிய அம்சங்கள்:
2025-ம் ஆண்டு கருப்பொருள்: “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்பதாகும். இது யோகாவை நிலைத்தன்மையுடனும் உலகளாவிய நல்வாழ்வுடனும் இணைக்கிறது.
சிறப்பு நிகழ்வுகள்:
யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக யோகா சங்கமம், யோகா பந்தன், ஹரித் யோகா, யோகா சமவேஷ் போன்ற 10 பிரத்யேக நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
பெரிய அளவில் பொது யோகா நிகழ்வு: 2025 ஜூன் 21 அன்று விசாகப்பட்டினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலும் அதே நாளில் அதே நேரத்தில் இந்தியா முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களிலும் ஒருங்கிணைக்கப்பட்ட பொது யோகா நெறிமுறை அமர்வுகள் நடைபெறும்

இயக்கங்களும் விருதுகளும்: 100, 75, 50, 25 ஆகிய நாட்களுக்கான நாடு தழுவிய கவுண்ட்டவுன் நிகழ்வுகள் ஜூன் 21, 2025 யோகா தினத்தை முன்னிட்டு நடைபெறுகிறது. இது பரவலான உற்சாகத்தை ஏற்படுத்தி வரும் வேளையில், பிரதமரின் யோகா விருதுகள் உலகளவில் யோகாவில் சிறந்து விளங்குபவர்களைக் கொண்டாடுகிறது.
பழங்கால இந்தியப் பாரம்பரியத்தின் விலைமதிப்பற்ற கொடையான யோகா, உடல், மன நலனை மேம்படுத்துவதற்கான மிகவும் நம்பகமான வழிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது . "யோகா" என்ற சொல்லுக்கு, 'சேர்ப்பது', 'ஒன்றிணைப்பது' என்று பொருள்படும். இது 'யுஜ்' என்ற சமஸ்கிருத மூலத்திலிருந்து பெறப்பட்டது. இது மனம் மற்றும் உடலின் ஒற்றுமை ; எண்ணம் மற்றும் செயல் ; கட்டுப்பாடு மற்றும் நிறைவு ; மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான நல்லிணக்கம், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு முழுமையான அணுகுமுறை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.
யோகாவின் உலகளாவிய முக்கியத்துவத்தை அங்கீகரித்து, 2014 டிசம்பர் 11 அன்று, ஐநா தீர்மானம் 69/131 மூலம் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது. சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடும் இந்தத் தீர்மான வரைவை இந்தியா முன்மொழிந்ததுடன், சாதனை அளவாக 175 உறுப்பு நாடுகள் இதற்கு ஒப்புதல் அளித்தன. பிரதமர் திரு நரேந்திர மோடி , 2014 செப்டம்பர் 27 அன்று நடைபெற்ற ஐநா பொதுச் சபையின் 69-வது அமர்வின் தொடக்க அமர்வில் ஆற்றிய தமது உரையில் இந்த முன்மொழிவை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். வட அரைக்கோளத்தில் ஆண்டின் மிக நீண்ட நாளான ஜூன் 21 அன்று கோடைக்கால சங்கராந்தி நிகழ்வதால், அந்தத் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாள் இயற்கைக்கும் மனித நலனுக்கும் இடையிலான ஒரு நல்லிணக்கத்தைக் குறிக்கிறது. அத்துடன் இது பல கலாச்சாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது .

இது, குணப்படுத்துவதை விட நோய்த்தடுப்புக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்ட ஒரு முழுமையான சுகாதாரப் புரட்சியின் சகாப்தத்திற்கு வழிவகுக்கிறது. 2015- ல் அதன் முதல் பதிப்பு முதல், மாநில அரசுகள், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் ஐ.நா. அமைப்புகளின் தீவிர ஆதரவுடன், ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இந்தியா உலக அளவில் இந்தக் கொண்டாட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது .
யோகா தின சின்னம்
இந்த அடையாளச் சின்னத்தில் இரு கைகளையும் கூப்புவது யோகாவைக் குறிக்கிறது. அது தனிமனிதனுக்கும் பிரபஞ்சத்திற்கும் இடையிலான இணைப்பையும், மனத்திற்கும் உடலுக்கும், மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான ஒரு பரிபூரண நல்லிணக்கத்தையும், உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு முழுமையான அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது.
பழுப்பு நிற இலைகள் பூமித் தத்துவத்தையும், பச்சை நிற இலைகள் இயற்கையையும், நீல நிறம் நீர் தத்துவத்தையும், பிரகாசம் நெருப்புத் தத்துவத்தையும், சூரியன் ஆற்றல் மற்றும் உத்வேகத்தையும் குறிக்கின்றன. இந்தச் சின்னம், யோகாவின் சாராம்சமான மனிதகுலத்திற்கான நல்லிணக்கத்தையும் அமைதியையும் பிரதிபலிக்கிறது.
பல ஆண்டுகளாக ஏற்பட்ட தாக்கம்
சர்வதேச தினத்தின் பயணம் மிகவும் அற்புதமானதாகவே இருந்துள்ளது. 2018- ல் 9.59 கோடி பேர் என்ற குறைந்த பங்கேற்புடன் இருந்த இந்தக் கொண்டாட்டம், தற்போது பன்மடங்கு வளர்ச்சி கண்டுள்ளது. 2024-ல், உலகெங்கிலும் சுமார் 24.53 கோடி மக்கள் யோகா கொண்டாட்டங்களில் இணைந்தனர். இது, இந்த நிகழ்வின் மிகப்பெரிய உலகளாவிய ஈர்ப்பை எடுத்துக்காட்டுகிறது. சர்வதேச யோகா தினம், நாடுகளைக் கடந்து கோடிக்கணக்கான மக்களை ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய நல்வாழ்வு இயக்கமாக உருவெடுத்துள்ளது.

2025-ம் ஆண்டு யோகா தினத்தின் கருப்பொருள்
இந்த ஆண்டு, “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்ற கருப்பொருளுடன் 11-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தக் கருப்பொருள், ஆரோக்கியம், நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் ஒன்றோடொன்று இணைந்த தன்மை குறித்த ஒரு முக்கிய உண்மையை எதிரொலிக்கிறது. இது, ஜி20 கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் போது இந்தியா முன்னிலைப்படுத்திய “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப அமைந்துள்ளது.
2025-ம் ஆண்டில் முக்கிய யோகா நிகழ்வுகள்
கடந்த பத்து ஆண்டுகளில், சர்வதேச யோகா தினம், பல்வேறு கலாச்சாரங்கள், சமூகங்களில் முழுமையான ஆரோக்கியம், விழிப்புணர்வு மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தப் பத்து ஆண்டு காலப் பயணத்தை நினைவுகூரும் வகையில், 2025-ம் ஆண்டு யோகா தின நிகழ்வில் யோகாவை விரிவுபடுத்தும் பத்து சிறப்பு நிகழ்வுகள் இடம்பெறும். இவை ஒவ்வொன்றும் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரை இலக்காகக் கொண்டிருக்கும்.
யோக சங்கம்

சர்வதேச யோகா தினத்தின் முக்கிய நிகழ்வான யோகா சங்கத்தில், பொது யோகா நெறிமுறையை (CYP) அடிப்படையாகக் கொண்டு, 2025 ஜூன் 21 அன்று காலை 6:30 மணி முதல் 7:45 மணி வரை இந்தியா முழுவதும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட மாபெரும் யோகா நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த தேசிய நிகழ்வை பிரதமர் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் இருந்து வழிநடத்துவார். காலத்தால் அழியாத யோகா பயிற்சி மற்றும் இன்றைய உலகில் அதன் நீடித்த பொருத்தம் ஆகியவற்றின் மீதான நமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்வதே இந்த ஒருங்கிணைந்த கொண்டாட்டத்தின் நோக்கமாகும்.
பொது யோகா நெறிமுறை என்பது இந்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தால், முன்னணி யோகா வல்லுநர்கள் மற்றும் நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்ட ஒரு தரப்படுத்தப்பட்ட யோகா பயிற்சி நடைமுறையாகும். இது சர்வதேச யோகா தினத்தில் பயிற்சி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து வயதுப் பிரிவினர் மற்றும் உடற்தகுதி கொண்டவர்களுக்கும் ஏற்றது. பொது யோகா நெறிமுறை தொடர்பான காணொளிகள் மற்றும் கையேடுகள் 22 இந்திய மொழிகளிலும், 6 ஐ.நா. மொழிகளிலும், மற்றும் 9 பிற வெளிநாட்டு மொழிகளிலும் கிடைக்கின்றன .
யோகா பந்தன்

யோகா பந்தன் என்பது பிற நாடுகளுடன் இணைந்து யோகா பயிற்சியை ஊக்குவிக்கும் ஒரு சர்வதேசப் பரிமாற்றத் திட்டமாகும். இது இந்தியாவிற்கும் பிற நாடுகளுக்கும் இடையே யோகா பயிற்சியாளர்கள், பிரதிநிதிகளின் பரஸ்பரப் பரிமாற்றத்தை உள்ளடக்கியது. இந்தத் திட்டம், இந்திய யோகா நிறுவனங்களுக்கும் சர்வதேச நிறுவனங்களுக்கும் இடையிலான கூட்டுச் செயல்பாடுகளை உள்ளடக்கியது. வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் இந்தியப் பிரதிநிதிகளுக்கு, கல்வி நிறுவனங்களில் யோகா அமர்வுகளை நடத்துதல், கலந்துரையாடல்களில் ஈடுபடுதல் போன்ற செயல்பாடுகள், அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களால் ஒருங்கிணைக்கப்படும். இந்தியாவிற்கு வருகை தரும் பிற நாடுகளின் பிரதிநிதிகள், யோகா நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். இது ஜூன் 21, 2025 அன்று சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்துடன் நிறைவடையும்.
யோகா பூங்கா

யோகா பூங்கா திட்டமானது, உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன், பல்வேறு கிராமப்புற பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற நகராட்சிகளில் உள்ள பூங்காக்களை யோகா பூங்காக்களாகத் தரம் உயர்த்த முயல்கிறது. இந்தத் திட்டம், பொதுப் பூங்காக்களை மக்கள் தினமும் யோகா பயிற்சி செய்யக்கூடிய பிரத்யேக நலவாழ்வு மண்டலங்களாக மாற்றும். இந்த யோகா பூங்காக்கள், அனைத்துத் தரப்பு மக்களையும் வரவேற்கும் பொது இடங்களாக விளங்கும். இங்கு, யோகா நிறுவனங்களைச் சேர்ந்த பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள், யோகா அமர்வுகளையும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் வழிநடத்துவார்கள். மேலும், யோகாசனங்கள், சுவாசப் பயிற்சிகள் சார்ந்த நுட்பங்களை விவரிக்கும் தகவல் பலகைகளும் அங்கு இருக்கும். இது, சுயமாகப் பயிற்சி செய்வதற்கு வழிவகுக்கும். மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் எளிதில் பயிற்சி பெறுவதை உறுதிசெய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இதன் மூலம் அனைவரும் யோகாவின் மூலம் பயனடைய முடியும்.
யோக சமவேஷ்

யோகா சமவேஷ் என்பது அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் அனைவருக்கும் கிடைத்தல் ஆகிய கொள்கைகளில் வேரூன்றிய ஒரு திட்டமாகும். இது , சிறப்புத் தேவைகள் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்களின் தனிப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும். இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, சிறப்பு யோகா நெறிமுறைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன: யோகா சமவேஷின் மையக்கருவானது, சிறப்புப் பிரிவினருக்கு இந்த இலக்கு சார்ந்த யோகாப் பயிற்சிகளைப் பிரபலப்படுத்தும் முயற்சிகளை உள்ளடக்கியிருக்கும்.
யோக பிரபாவ்

யோக பிரபாவ் என்பது, சர்வதேச யோகா தினத்தின் பத்து ஆண்டு கால தாக்கத்தை பல்வேறு கோணங்களில் இருந்து முறையாக மதிப்பீடு செய்த ஒரு தீவிரமான ஆராய்ச்சிப் பயிற்சியாகும். கொவிட்-19 பெருந்தொற்று காலத்திலும் கூட தடையின்றி மேற்கொள்ளப்பட்ட சர்வதேச யோகா தின நிகழ்வு, பொது சுகாதார பலன்களை அடைவதற்காக யோகாவைப் பயன்படுத்துவதில் இந்தியாவின் தலைமைத்துவத்திற்கு ஒரு சான்றாகத் திகழ்கிறது. யோக பிரபாவ் அதன் விளைவுகளை உறுதியான வகையில் வெளிப்படுத்தியுள்ளன. மேலும் அவை, நல்வாழ்வு முயற்சிகளை வடிவமைத்து, நோய்த் தடுப்பு சுகாதார முயற்சிகளை வலுப்படுத்தக்கூடிய கொள்கை வழிகாட்டுதலாகவும் செயல்படும். இந்த ஆராய்ச்சி முடிவுகள் யோகா கனெக்ட் என்ற மாநாட்டில் வெளியிடப்பட்டன .
யோகா கனெக்ட்

யோகா கனெக்ட் என்பது 2025 ஜூன் 14 அன்று நேரடியாகவும் காணொலிக் காட்சி மூலமாகவும் என இரு வகைகளிலும் நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய யோகா உச்சிமாநாடு ஆகும். இதில், உலகெங்கிலும் உள்ள யோகாவின் மிகவும் புகழ்பெற்ற ஆளுமைகள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், பத்து ஆண்டு கால சர்வதேச யோகா தினத்தின் தாக்கம் குறித்த மதிப்பீட்டை முன்னிலைப்படுத்தும் 'யோகா பிரபாவ்' நூலும் வெளியிடப்பட்டது.
யோகா கனெக்ட் மாநாடு, ஒத்துழைப்பு, கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் முழுமையான நல்வாழ்வை ஊக்குவிக்கும் ஒரு துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய உலகளாவிய தளமாகத் திகழ்வதை மேலும் நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. நிறுவன ரீதியான ஒத்துழைப்புகளை வளர்ப்பதன் மூலமும், உலகளாவிய போக்குகளை முன்னிலைப்படுத்துவதன் மூலமும், இது யோகாவுடனான பொதுமக்களின் ஈடுபாட்டை மேம்படுத்துவதையும், நவீன அன்றாட வாழ்வில் அதன் பயன்பாட்டை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஹரித் யோகா

ஹரித் யோகா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த செய்தியைப் பரப்புவதற்கு யோகாவை ஒரு ஊடகமாகப் பயன்படுத்த முயல்கிறது. யோகா அமர்வுகளில் பங்கேற்பதைத் தாண்டி, பங்கேற்பாளர்கள் மரம் நடுதல் , தூய்மை இயக்கங்கள், சமூகம் சார்ந்த சுற்றுச்சூழல் முயற்சிகள் போன்ற சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். ஹரித் யோகா , பருவநிலை மாற்றம் போன்ற முக்கியத் தலைப்புகளை உள்ளடக்கிய கல்விப் பிரச்சாரங்களையும், நிலையான வாழ்க்கை முறைகளை ஊக்குவிப்பதையும் கொண்டிருக்கிறது. இந்தச் சுற்றுச்சூழல் உணர்வுள்ள முயற்சிகளில் சேர உலகளாவிய சமூகங்களை ஊக்குவிப்பதற்காக, உலகளாவிய பங்கேற்பு ஊக்குவிக்கப்படும். இந்த முன்னெடுப்பு 2025 ஏப்ரல் 7 அன்று தொடங்கப்பட்டது.
யோகா அன்ப்ளக்டு

யோகா அன்ப்ளக்டு என்பது இளைஞர்களைத் தங்கள் அன்றாட வாழ்வில் யோகாவை இணைத்துக்கொள்ள ஊக்குவிப்பதன் மூலம், மன விழிப்புணர்வு, ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, இளைஞர்களைக் கவர்ந்து அவர்கள் யோகாவைத் தீவிரமாகப் பின்பற்றத் தூண்டும். இணையதளம் மற்றும் நேரடியாக என இரண்டு முறைகளிலும் இது நடத்தப்படும். இணையதள செயல்பாடுகளில் வினாடி வினாக்கள், கட்டுரைப் போட்டிகள், மின்-சுவரொட்டிப் போட்டிகள், புகைப்படப் போட்டிகள், பல்வேறு சமூக ஊடகப் போட்டிகள் ஆகியவை அடங்கும். நேரடி நிகழ்வுகளில் பயிலரங்குகள், உரைகள், போட்டிகள், தெருக்கலை போன்றவை இடம்பெறும். யோகா அன்ப்ளக்டு இளைஞர் விழாக்களும் ஏற்பாடு செய்யப்படும். இதில், யோகாவை ஆற்றல்மிக்கதாகவும் எளிதில் செய்யகூடியதாகவும் மாற்றுவதற்காக, பாரம்பரியப் பயிற்சிகளை நவீன இசை மற்றும் நடனங்களுடன் இணைக்கும் யோகா ஃபியூஷன் ஒரு முக்கிய அம்சமாக இருக்கும்.
யோகா மகா கும்பமேளா

யோகா மகா கும்பமேளா, 10 வெவ்வேறு நகரங்களில் சாதாரண மக்களுக்கு யோகாவை ஒரு பண்டிகைக் கோலத்தில் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒவ்வொரு நகரத்திலும், ஆயுஷ் அமைச்சகம் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், மாநில பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றுடன் இணைந்து, அந்த நிகழ்வுகளுக்கு நிதியுதவி அளித்து ஏற்பாடு செய்யும். யோகா மகா கும்பமேளா ஜூன் 15 அன்று தொடங்கி ஜூன் 21 அன்று நிறைவடையும். கொண்டாட்டங்கள் வெவ்வேறு கருப்பொருள்களை மையமாகக் கொண்டிருக்கும்.
சம்யோகம்

சம்யோகா என்பது, மரபுசார் மருத்துவத்திலும், ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி, இயற்கை மருத்துவம், சோவா ரிக்பா போன்ற மருத்துவ முறைகளிலும் யோகாவைப் பின்பற்றுவது தொடர்பான கலந்துரையாடல்களையும் அனுபவப் பகிர்வுகளையும் உள்ளடக்கியது. சம்யோகாவின் ஒரு பகுதியாக, யோகா மற்றும் பிற சமகால மருத்துவ முறைகளுக்கு இடையேயான பல்துறை ஒத்துழைப்பிற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படும். சம்யோகாவின் முக்கிய விளைவுகளில் ஒன்றாக, பொது சுகாதார முயற்சிகளில் கட்டமைக்கப்பட்ட முறையில் சேர்ப்பதற்காக, இந்த நிகழ்விலிருந்து பெறப்பட்ட அத்தியாவசியச் செயல்பாடுகளின் ஒரு களஞ்சியம் உருவாக்கப்படும். இதில் பல்வேறு மருத்துவத் துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் பங்கேற்பை வழங்குவார்கள். வெற்றிக் கதைகளும் சிறந்த நடைமுறைகளும் தேசிய, சர்வதேச தளங்களில் பகிரப்படும்.
தேசிய அளவிலான கவுண்ட்டவுன் இயக்கங்கள்
சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் மக்கள் பங்கேற்பை அதிகரிப்பதற்காக ஆயுஷ் அமைச்சகம் மேற்கொண்டு வரும் சில நடவடிக்கைகள் பின்வருமாறு:
100 நாள் கவுண்ட்டவுன் நிகழ்வு: மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் (MDNIY) மற்றும் ஆயுஷ் அமைச்சகம் இணைந்து, 2025 யோகா தினத்துக்கான முன்னோட்டமாக 'யோகா மகோத்சவ் 2025' -ஐ மார்ச் 13, 2025 அன்று புது தில்லியில் ஏற்பாடு செய்தன. இந்த நிகழ்வு யோகா தினத்தின் 11-வது பதிப்பை நோக்கிய பயணத்தின் முறையான தொடக்கத்தைக் குறித்தது .
75-நாட்கள் கவுண்ட்டவுன் நிகழ்வு: 75-வது நாள் கவுண்ட்டவுன் நிகழ்வு , 2025 ஏப்ரல் 7 அன்று புவனேஸ்வரில் நடைபெற்றது. இதில் 6,000-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாகப் பங்கேற்றனர். இந்நிகழ்வில் 5,000-க்கும் மேற்பட்ட மூலிகைச் செடிகள் விநியோகிக்கப்பட்டு, ஹரித் யோகா முன்னெடுப்பும் தொடங்கப்பட்டது .
50-நாட்கள் கவுண்ட்டவுன் நிகழ்வு: 50-வது நாள் கவுண்ட்டவுன் நிகழ்வு 2025 மே 2 அன்று மகாராஷ்டிராவில் நடைபெற்றது . இதில் 6,200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் யோகா ஆர்வலர்கள் முன்னிலையில், காலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை பொது யோகா நெறிமுறை குறித்த மாபெரும் செயல்விளக்கம் இடம்பெற்றது.
25-நாட்கள் கவுண்ட்டவுன் நிகழ்வு: 25-வது நாள் கவுண்ட்டவுன் நிகழ்வு, 2025 மே 27 அன்று புதுச்சேரியில் நடைபெற்றது. இதில் 4,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
பிரதமரின் யோகா விருதுகள் 2025

பிரதமரின் யோகா விருதுகள், யோகாவை ஊக்குவிப்பதிலும் பயிற்சி செய்வதிலும் உள்ள சிறப்பை அங்கீகரிக்கின்றன.
4 விருதுகள்: 2 தேசிய, 2 சர்வதேச விருதுகள்.
விருது பெறும் ஒவ்வொரு தனிநபர் மற்றும் நிறுவனத்திற்கும் ₹ 25 லட்சம், ஒரு கோப்பை மற்றும் ஒரு சான்றிதழ் வழங்கப்படும்.
2025-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் நிறைவடைந்துவிட்டன; வெற்றியாளர்கள் 2025 ஜூன் 21 அன்று அறிவிக்கப்படுவார்கள்.
2025-ம் ஆண்டின் சர்வதேச யோகா தினம் என்பது வெறும் ஒரு நாள் கொண்டாட்டம் மட்டுமல்ல. அது முழுமையான ஆரோக்கியம், சுற்றுச்சூழல் நல்லிணக்கம், உலகளாவிய நல்வாழ்வு ஆகியவற்றில் இந்தியாவின் நீடித்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. “ஒரே பூமி, ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா” என்பதைத் தனது வழிகாட்டும் கொள்கையாகக் கொண்டு, உடல் தகுதியை விழிப்புணர்வுடன் கூடிய வாழ்க்கைமுறையுடன் இணைப்பதில் இந்தியா தொடர்ந்து உலகிற்கு வழிகாட்டுகிறது.
***
PD/PLM/KR
(Features ID: 158080)
आगंतुक पटल : 6
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English