Culture & Tourism
யோகா: உலகிற்கு இந்தியா அளித்த கொடை
எல்லைகளைக் கடந்த ஒரு பாரம்பரியத்தின் கொண்டாட்டம்
Posted On:
20 JUN 2025 8:19PM

இந்தியாவின் பழங்கால ஞானத்தில் வேரூன்றிய யோகா, ஆரோக்கியம், நல்லிணக்கம் ஆகியவற்றின் உலகளாவிய அடையாளமாக மாறியுள்ளது. 2015-ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் பங்கேற்புடன், சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடுவதில் இந்தியா உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது. உள்ளூர் முதல் உலகம் வரை, யோகா கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தொட்டுள்ளது. இது உடல் தகுதி, மன அமைதி, சமச்சீரான வாழ்க்கை முறை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. கடந்த 11 ஆண்டுகளில் யோகாவின் பயணம் ஒற்றுமை, நல்வாழ்வு, உள்ளார்ந்த வலிமை ஆகிய இந்தியாவின் செய்தியைப் பிரதிபலிக்கிறது.

2014 செப்டம்பர் 27 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாகக் கொண்டாட ஐநா-வில் முன்மொழிந்தார். 2014 டிசம்பர் 11 அன்று, 193 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன், ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ஐ சர்வதேச யோகா தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அன்று முதல், யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கிலும் கொண்டாடப்படுகிறது.
2015: நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கான யோகா

முதல் சர்வதேச யோகா தினம், 2015 ஜூன் 21 அன்று புது தில்லியின் கடமைப் பாதையில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்றது. அன்று இரண்டு கின்னஸ் உலக சாதனைகள் படைக்கப்பட்டன. ஒன்று, 35,985 பேருடன் நடைபெற்ற மிகப்பெரிய யோகா பயிற்சி; மற்றொன்று, 84 நாடுகள் பங்கேற்றதன் மூலம் அதிகபட்ச நாடுகள் பங்கேற்றது.
2016: நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான யோகா

சண்டிகரில் நடைபெற்ற பிரதான நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் 30,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். யோகாவிற்கு பலரும் ஆற்றும் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய, சர்வதேச விருதுகளை அவர் அறிவித்தார். மேலும், நீரிழிவு நோயை யோகா மூலம் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தவும் அவர் அழைப்பு விடுத்தார். இந்தியாவில் சுமார் 50 லட்சம் மக்கள் ஒரு மாத கால யோகா பயிற்சி நிகழ்வுகளில் கலந்துகொண்டனர். உலக அளவில், 191 ஐநா உறுப்பு நாடுகள் 2016 ஜூன் 18 முதல் 26 வரை யோகா தினத்தைக் கொண்டாடின.
2017: ஆரோக்கியத்திற்கான யோகா

பிரதமர் திரு நரேந்திர மோடி, லக்னோவில் உள்ள ரமாபாய் அம்பேத்கர் மைதானத்தில் சுமார் 51,000 பங்கேற்பாளர்களுடன் மாபெரும் யோகா நிகழ்வுக்குத் தலைமை வகித்தார். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஆயுஷ் அமைச்சகம் 2017 அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் புது தில்லியில் 'நல்வாழ்விற்கான யோகா' என்ற தலைப்பில் ஒரு சர்வதேச மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டை அப்போதைய குடியரசுத் துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். இதில் 44 நாடுகளைச் சேர்ந்த 80 யோகா நிபுணர்கள் உட்பட சுமார் 600 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
2018: அமைதிக்கான யோகா

டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில் சுமார் 50,000 பேர் கலந்துகொண்டனர். தில்லியில் உள்ள செங்கோட்டையில் பிரம்மகுமாரிகளால் நடத்தப்பட்ட மற்றொரு பெரிய நிகழ்வில், காவல்துறையைச் சேர்ந்த 2,000 பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 30,000 பேர் பங்கேற்றனர். மொத்தத்தில், தில்லியில் நடைபெற்ற கொண்டாட்டங்களில் சுமார் 65,000 பேர் கலந்துகொண்டனர். நாடு முழுவதும், யோகா தின நடவடிக்கைகளில் சுமார் 9.59 கோடி மக்கள் பங்கேற்றனர்.
சுற்றுலா அமைச்சகம் குதுப் மினார் வளாகத்தில் சர்வதேச யோகா தினத்தைக் கொண்டாடியது. இந்நிகழ்ச்சியில், 30-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு விருந்தினர்கள் உட்படப் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.
2019: இதயத்திற்கான யோகா

ஐந்தாவது சர்வதேச யோகா தினம் 2019 ஜூன் 21 அன்று, இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலும், உலகெங்கிலும் உள்ள 150 நாடுகளிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கொண்டாடப்பட்டது. முக்கிய தேசிய நிகழ்வு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. அங்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, சுமார் 30,000 பங்கேற்பாளர்களுடன் யோகா செய்தார். ஈபிள் கோபுரம், சிட்னியில் உள்ள ஓபரா ஹவுஸ், வாஷிங்டன் நினைவுச்சின்னம், எவரெஸ்ட் அடிவார முகாம் போன்ற உலகப் புகழ்பெற்ற இடங்களிலும் யோகா அமர்வுகள் நடத்தப்பட்டன. 2019-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் நடைபெற்ற யோகா தின நிகழ்வுகளில் 13 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர்.
2020: வீட்டில் யோகா, குடும்பத்துடன் யோகா & 2021: உடல்நலத்திற்கான யோகா
2020, 2021-ம் ஆண்டுகளில், கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சர்வதேச யோகா தினம் பெரும்பாலும் இணையவழி நிகழ்வுகள் மூலமாகவே கொண்டாடப்பட்டது. உலகம் முழுவதும் பயிற்சியில் ஒரு சீரான தன்மையை உறுதி செய்வதற்காக, பொது யோகா நெறிமுறை ஊக்குவிக்கப்பட்டது. 22 இந்திய மொழிகளிலும், 6 ஐநா மொழிகளிலும், 9 பிற வெளிநாட்டு மொழிகளிலும் காணொளிகள் யூடியூபில் வெளியிடப்பட்டன. 2020-ம் ஆண்டில் சுமார் 12.06 கோடி மக்கள் பங்கேற்ற நிலையில், 2021-ல் இந்த எண்ணிக்கை 15.68 கோடியாக உயர்ந்தது.
2022: மனிதகுலத்திற்கான யோகா

2022-ம் ஆண்டு யோகா தின நிகழ்ச்சியில் இந்தியாவில் சுமார் 22.13 கோடி மக்கள் பங்கேற்ற நிலையில், உலகளாவிய ரீதியில் இது கிட்டத்தட்ட 125 கோடியை எட்டியது. இந்தியாவில் உள்ள 75 பாரம்பரிய தலங்களில் யோகா அமர்வுகள் நடத்தப்பட்டன. 2022-ம் ஆண்டில், “ஒரே சூரியன் ஒரே பூமி” என்ற கருப்பொருளின் ஒரு பகுதியாக 24 மணி நேர உலகளாவிய யோகா நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் 2022-ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, குவாலியர் கோட்டையில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் யோகா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து கொண்டாடியது.
2023: ஒரே குடும்பமான உலகத்திற்கு யோகா
2023-ம் ஆண்டில், இந்தியாவில் சுமார் 23.14 கோடி மக்கள் யோகா தின கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு சாதனை படைத்தனர். ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார். இதில் 135-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டதற்காக இந்த நிகழ்வு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது. சூரத்தில் மற்றொரு சாதனை படைக்கப்பட்டது, அங்கு யோகா அமர்விற்காக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடினர். 'பெருங்கடல் வளைய யோகா' 'ஆர்க்டிக் முதல் அண்டார்டிக் வரையிலான யோகா' போன்ற தனித்துவமான முன்முயற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. "அனைவருக்கும் யோகா" என்ற இயக்கமானது, ஊராட்சிகள், பள்ளிகள், அங்கன்வாடிகள், சுகாதார மையங்கள் போன்றவற்றில் நடைபெற்ற நிகழ்வுகள் மூலம் கிராமப்புறங்களைச் சென்றடைந்தது.

2024: தனி நபருக்கும் சமூகத்திற்குமான யோகா
ஸ்ரீநகரில் உள்ள ஷேர்-இ-காஷ்மீர் சர்வதேச மாநாட்டு மையத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்விற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகித்தார். 2024-ம் ஆண்டு யோகா தின கொண்டாட்டங்களில் நாடு முழுவதும் சுமார் 24.53 கோடி மக்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு பல புதிய சாதனைகளைப் படைத்ததுடன், மீண்டும் ஒருமுறை கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது. இது யோகாவின் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லைக் குறிப்பதாக அமைந்தது.

கின்னஸ் உலக சாதனைகள்:
- உத்தரப் பிரதேசத்தில் யோகா தொடர்பான இயக்கத்தின் ஒரு பகுதியாக 25.93 லட்சம் மக்கள் இணையவழியில் உறுதிமொழி எடுத்தனர்.
- அக்ஷர் யோகா கேந்திரா நிறுவனர் யோகி ஹிமாலயன் சித்தா அக்ஷரால் ஐந்து புதிய சாதனைகள் படைக்கப்பட்டன.
- ஆந்திரப் பிரதேசத்தில், 600 மாற்றுத்திறனாளிகள் உட்பட 1,000 மாணவர்கள் ஒன்றாக யோகாசனங்களைச் செய்தனர்.
- ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ராஜஸ்தான் ஆயுர்வேத பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக 12 மணி நேரம் யோகா பயிற்சி நடைபெற்றது.
- ஜெய்ப்பூர் மாநகராட்சி மற்றும் ராஜஸ்தான் அரசின் ஒருங்கிணைப்பில், ஜெய்ப்பூரில் பல நிறுவனங்கள் ஒன்றிணைந்து 1500 நிமிடங்களுக்கும் மேலாக யோகா பயிற்சி செய்து புதிய உலக சாதனை படைத்தன.
2025: ஒரே பூமி ஒரே ஆரோக்கியத்திற்கான யோகா

11-வது சர்வதேச யோகா தினம் 2025 ஜூன் 21 அன்று கொண்டாடப்படுகிறது. இதன் முக்கிய நிகழ்வான யோகா சங்கமத்தில், பொது யோகா நெறிமுறையை அடிப்படையாகக் கொண்ட மாபெரும் யோகா நிகழ்வு, இந்தியா முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் காலை 6:30 மணி முதல் 7:45 மணி வரை நடைபெறும். ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் நடைபெறும் பிரதான தேசிய யோகா கொண்டாடத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை வகிக்கவுள்ளார். இந்த ஆண்டு, இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் 10 சிறப்பு நிகழ்வுகளையும் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 11 ஆண்டுகளில், சர்வதேச யோகா தினம் ஒரு உலகளாவிய நிகழ்வாக உருவெடுத்துள்ளது. யோகா பயிற்சியில் இந்தியா உலகிற்கு வழிகாட்டியுள்ளது. நாடுகள், கலாச்சாரங்களைக் கடந்து மக்கள் இப்போது யோகாவைத் தங்கள் அன்றாட வாழ்வில் இணைத்துக்கொள்கின்றனர். கிராமங்கள் முதல் உலகப் புகழ்பெற்ற இடங்கள் வரை, ஆரோக்கியம், அமைதி, சமநிலை ஆகியவற்றை யோகா மேம்படுத்துகிறது. இது இந்தியாவின் கலாச்சார ஞானத்திற்கும், நல்வாழ்வில் அதன் உலகளாவிய தலைமைக்கும் காலத்தால் அழியாத அடையாளமாகத் திகழ்கிறது. நல்லிணக்கம், நோய்களை குணமாக்குதல், முழுமையான நல்வாழ்வு ஆகிய உணர்வோடு நாடுகளை ஒன்றிணைத்து, யோகாவின் பயணம் தொடர்கிறது.
***
PD/PLM/KR
(Features ID: 158079)
आगंतुक पटल : 29
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English