• Sitemap
  • Advance Search
Farmer's Welfare

மக்களுக்கே அதிகாரம்

Posted On: 25 JUL 2025 9:12AM

“இந்தியாவைப் பொறுத்தவரை, கூட்டுறவு என்பது கலாச்சாரத்தின் அடிப்படை; அது ஒரு வாழ்வியல் முறை. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சியில் கூட்டுறவு அமைப்புகள் மிகப்பெரிய பங்கினை வகிக்கப் போவதை இந்தியா காண்கிறது.”

- பிரதமர் நரேந்திர மோடி

கூட்டுறவுத்துறை தொடர்பான முக்கிய அம்சங்கள் :

  • கிராமப்புற கடன் உதவி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வலுவூட்டலை முன்னெடுத்துச் செல்லும் வகையில், இந்தியாவில் 30-க்கும் மேற்பட்ட துறைகளில் 8.44 லட்சத்திற்கும் அதிகமான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
  • கூட்டுறவு நிறுவனங்களை திறமையான, டிஜிட்டல் மயமாக்கப்பட்ட மற்றும் பேரிடர்களைத் தாங்கும் அமைப்புகளாக மாற்றுவதற்காக, 73,492 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் 59,920 சங்கங்கள் 2025 ஜூலை 22 ம் தேதி நிலவரப்படி ஒருங்கிணைந்த ஈஆர்பி (தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
  • ஒரே தளத்தில் இருந்து பல்வேறு கிராமப்புற சேவைகளை வழங்குவதற்காக, 23,173 புதிய பல்நோக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பால் மற்றும் மீன்வளக் கூட்டுறவு சங்கங்கள் 2025 ஜூலை 22 ம் தேதி வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

 

  • அரசு மின்-சந்தை (GeM) தளத்தில், 667 கூட்டுறவு சங்கங்கள் கொள்முதல் செய்பவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2025 மார்ச் 31 ம் தேதி நிலவரப்படி, கூட்டுறவு சங்கங்கள் மூலம் 319.02 கோடி ரூபாய் மதிப்பிலான 2,986 பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
  • தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (NCEL), 8,863 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தன்னுடன் இணைத்துள்ளது. இதன் மூலம் 5,239.5 கோடி ரூபாய் மதிப்பிலான வேளாண் பொருட்கள் 27 நாடுகளுக்கு வெற்றிகரமாக ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் கூட்டுறவு கலாச்சாரம் இன்று ஒரு புதிய எழுச்சியைக் கண்டு வருகிறது. அடிமட்ட அளவிலான கூட்டுறவு நிறுவனங்கள், சமூக-பொருளாதார வலுவூட்டல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் சக்திமிக்க இயந்திரங்களாக உருவெடுத்து வருகின்றன. இத்தகைய மாற்றத்திற்கு ஒரு சிறந்த உதாரணமாக ராஜஸ்தான் மாநிலத்தின் போர்க்கேடா கிராம சேவை கூட்டுறவு சங்கம் திகழ்கிறது.

கடந்த 1954-ம் ஆண்டு வெறும் 15 உறுப்பினர்களுடனும், வெறும் 30 ரூபாய் பங்கு மூலதனத்துடனும் இந்தச் சங்கம் தனது பயணத்தைத் தொடங்கியது. ஆனால், இன்று அது 8,299-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களையும், சுமார் 107.54 லட்சம் ரூபாய் பங்கு மூலதனத்தையும் கொண்ட ஒரு செழிப்பான நிறுவனமாக வளர்ந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இந்தச் சங்கத்தின் உறுப்பினர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் சமூகத்தின் நலிந்த பிரிவினரைச் சேர்ந்தவர்கள் என்பதுதான்.

கடந்த பல தசாப்தங்களாக, இந்தச் சங்கம் தனது விவசாயத் தேவைகளைத் தாண்டிப் பல துறைகளில் தடம் பதித்துள்ளது. தற்போது இச்சங்கம் மூன்று கிளைகளுடன் ஒரு 'மினி வங்கி'யை நடத்தி வருகிறது. கடந்த 2018-19-ம் நிதியாண்டில் மட்டும், இது 4.55 கோடி ரூபாய் மதிப்பிலான வைப்புத் தொகையைத் திரட்டி சாதனை படைத்துள்ளது.

மேலும், இச்சங்கத்தின் கீழ் இயங்கும் 'இ-மித்ரா பிளஸ்' (e-Mitra Plus) மையம், கிராமப்புற மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இம்மையம் மூலம் காப்பீடு, ஆதார் சார்ந்த சேவைகள், சாதி மற்றும் வருமானச் சான்றிதழ்கள் பெறுதல் மற்றும் மின்சாரம் போன்ற பயன்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்துதல் எனப் பல்வேறு அத்தியாவசிய குடிமக்கள் சேவைகள் ஒரே இடத்தில் வழங்கப்படுகின்றன.

இச்சங்கத்தின் அளப்பரிய சேவையைப் பாராட்டி, 2010-ம் ஆண்டில் என்சிடிசி தேசிய கூட்டுறவு சிறப்பு விருதும், 2018-ம் ஆண்டில் என்சிடிசி மண்டல விருதும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. போர்க்கேடா சங்கத்தின் இந்த மாற்றம் என்பது ஒரு தனிப்பட்ட நிகழ்வல்ல; இது நாடு முழுவதும் கூட்டுறவுத் துறையை மறுசீரமைப்பதற்கான ஒரு மாபெரும் தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இந்தியா இன்று கூட்டுறவுத் துறையில் ஒரு பிரமாண்டமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது. தற்போது நாடு முழுவதும் கடன் உதவி, வீட்டுவசதி, சந்தைப்படுத்துதல், பால் வளம், மீன்வளம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட முக்கியத் துறைகளில் 8.44 லட்சத்திற்கும் அதிகமான கூட்டுறவுச் சங்கங்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

இந்தச் சங்கங்கள் வெறும் அமைப்புகளாக மட்டுமல்லாமல், கிராமப்புறக் கடன் உதவி, சுயவேலைவாய்ப்பு மற்றும் கூட்டுப் பொருளாதார வலிமை ஆகியவற்றை உறுதி செய்யும் அத்தியாவசியக் கருவிகளாகத் திகழ்கின்றன. குறிப்பாக, கடைக்கோடி மனிதருக்கும் நிதிச் சேவைகளைக் கொண்டு சேர்ப்பதிலும், உள்ளூர் அளவிலான பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் இவை முதுகெலும்பாக விளங்குகின்றன.

 

வளர்ச்சியின் வேகம் குஜராத்தில் உள்ள குழந்தைகளிடையே கூடத் தெரிகிறது. சபர்காந்தாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் 'பால் கோபால் சேமிப்பு மற்றும் கடன் கூட்டுறவுச் சங்கம்', 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்காக மட்டுமே பிரத்யேகமாக இயங்கும் இந்தியாவின் ஒரே கூட்டுறவுச் சங்கமாகும். இந்தத் தனித்துவமான "குழந்தைகள் சேமிப்புப் பழக்கம்" மாதிரியின் மூலம், குழந்தைகளுக்குச் சேமிப்புப் பெட்டிகள் வழங்கப்படுகின்றன, மேலும் ஒவ்வொரு மாதமும் சேகரிக்கப்படும் தொகைகள் ஆண்டுக்கு 6% வட்டியில் அவர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படுகின்றன. 2024 மார்ச் நிலவரப்படி, 335 கிராமங்களைச் சேர்ந்த 19,020 சிறுவர் உறுப்பினர்கள் ₹17.47 கோடியைச் சேமித்துள்ளனர். இந்த கூட்டுறவுச் சங்கம், உறுப்பினராக உள்ள குழந்தையின் பாதுகாவலருக்கு சுய உத்தரவாதக் கடனையும், குழந்தையின் உயர்கல்விக்காகச் சொத்து அடமானக் கடனையும் வழங்குகிறது. மொத்தம் 1,070 குழந்தைகளின் பாதுகாவலர்களுக்குக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன மற்றும் மொத்தம் 5,370 குழந்தைகளுக்கு நிதி ஆலோசனைகள் வழங்கப் பட்டுள்ளன.

கூட்டுறவு அமைச்சகம் 2021-ல் உருவாக்கப்பட்டதிலிருந்து இந்த மாற்றத்தின் அலை தொடங்கியது. நான்கே ஆண்டுகளில், கூட்டுறவுச் சங்கங்களை நவீனப்படுத்தவும், டிஜிட்டல் மயமாக்கவும் மற்றும் பன்முகப்படுத்தவும் வடிவமைக்கப்பட்ட 61 கட்டமைக்கப்பட்ட முன்முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மிகவும் மாற்றத்தை ஏற்படுத்தியவற்றுள், 73,492 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கணினிமயமாக்கும் திட்டத்திற்கு அனுமதி அளித்தது, 2025 ஜூலை 22 நிலவரப்படி 59,920 சங்கங்களை ஒருங்கிணைந்த நிறுவன வளத் திட்டமிடல் தளத்தில் இணைத்தது மற்றும் புதிய துணை விதிகளின் கீழ் பல்நோக்கு கூட்டுறவு மாதிரிகளை முறையாகச் செயல்படுத்தியது ஆகியவை அடங்கும்.

 

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரகண்டநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், டிஜிட்டல் தயார் நிலைக்கு ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக அதன் உள்கட்டமைப்பு மற்றும் காகித ஆவணங்கள் அழிந்தபோது, அந்தச் சங்கம் ஏற்கனவே மேற்கொண்ட கணினிமயமாக்கல் மற்றும் கிளவுட் அடிப்படையிலான தரவுச் சேமிப்பு முறை விரைவான மீட்புக்கு உதவியது. பணியாளர்கள் உறுப்பினர் மற்றும் பரிவர்த்தனை தரவுகளை தொலைதூரத்தில் இருந்தே அணுக முடிந்ததால், மிகக்குறைந்த இடையூறுடன் சேவைகள் விரைவாகத் தொடங்கப்பட்டன. இந்த நிகழ்வு, பேரிடர்களைத் தாங்கும் திறன் கொண்ட கூட்டுறவு வடிவமைப்பிற்கு ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. மகாராஷ்டிராவின் கர்சாய் விவிதா காரியகாரி சங்கத்தின் நிலையும் இது போன்றதே. முன்னதாக திறமையின்மை மற்றும் காகித அடிப்படையிலான கணக்கியல் முறையால் சுமையாக இருந்த இந்தச் சங்கம், கணினிமயமாக்கல் திட்டத்தின் கீழ் முழு அளவிலான ஈஆர்பி அமைப்புகளை ஏற்றுக்கொண்டது. அதன்பிறகு, அதன் துல்லியம், வெளிப்படைத்தன்மை, வேகம் மற்றும் உறுப்பினர் திருப்தி என அனைத்து அளவுகோல்களிலும் செயல்பாடு மேம்பட்டுள்ளது. டிஜிட்டல் யுகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் எவ்வாறு செழிக்க முடியும் என்பதற்கு இது ஒரு பாடப்புத்தக உதாரணமாக உள்ளது.

அரசின் உத்தியில் மிகப்பெரிய விரிவாக்கமும் அடங்கும். 2025 ஜூலை 22 நிலவரப்படி, 23,173 புதிய பல்நோக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பால் மற்றும் மீன்வளக் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தச் சங்கங்கள் தானியக் கிடங்கு, உரம் மற்றும் விதை விநியோகம், எல்பிஜி மற்றும் பெட்ரோல் பங்குகள் மற்றும் மக்கள் மருந்தக மையங்களை ஒரே ஈஆர்பி அடிப்படையிலான டிஜிட்டல் கட்டமைப்பின் கீழ் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

 

இதன் நோக்கம் தெளிவாக உள்ளது: ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கூட்டுறவுச் சங்கம் இருக்க வேண்டும், அது பலதரப்பட்ட சேவைகளை வழங்கும் மையமாகச் செயல்பட வேண்டும், என்பதே ஆகும்.

டிஜிட்டல் மாற்றம் என்பது நிதித்துறையுடன் மட்டும் நின்றுவிடவில்லை. 2025 மார்ச் 31 நிலவரப்படி, 667 கூட்டுறவுச் சங்கங்கள் அரசு மின்-சந்தை தளத்தில் கொள்முதல் செய்பவர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. கிராமப்புறக் கைவினைஞர்கள் தேசியச் சந்தைகளை அணுகுவதை ஊக்குவிக்கும் வகையில், கூட்டுறவுச் சங்கங்களை விற்பனையாளர்களாக இணைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025 மார்ச் 31-க்குள், இந்தக் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 319.02 கோடி ரூபாய் மதிப்பிலான 2,986 பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.

டிஜிட்டல் முறையிலிருந்து நிலையான வளர்ச்சியை நோக்கி நகரும் வகையில், குஜராத்தின் கேடா மாவட்டத்தில் உள்ள தோண்டி சூரியசக்தி உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகத் திகழ்கிறது. டாட்டா கன்சல்டிங் மற்றும் ஐ.டபிள்யூ.எம்.ஐ ஆகியவற்றுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட இது, இந்தியாவின் முதல் கூட்டுறவு சூரியசக்தி சங்கமாகும். 12 விவசாய உறுப்பினர்களில் 9 பேரின் நிலங்களில் சூரியசக்தித் தகடுகள் நிறுவப்பட்டுள்ளன; இதன் மூலம் அவர்கள் தங்களது நிலங்களுக்குச் சூரியசக்தி மூலம் நீர் பாய்ச்சுவதுடன், உபரி மின்சாரத்தை மாநில மின் தொகுப்பிற்கு விற்பனை செய்கின்றனர். இரண்டு ஆண்டுகளில், அவர்கள் பசுமை எரிசக்தி மூலம் ரூ.8 லட்சம் ஈட்டியுள்ளனர், இது டீசல் மீதான தேவையைக் குறைத்து, நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கிறது.

இந்தியாவில் கூட்டுறவுச் சங்கங்கள் பெருகிய முறையில் உள்ளூர் சமூக மையங்களாகச் செயல்பட்டு வருகின்றன. இவை நிதிச் சேவைகள், கல்வி மேம்பாடு, நலத்திட்டங்கள், சுகாதார வசதிகள் மற்றும் அத்தியாவசியப் பயன்பாடுகளுக்கான ஒரு ஒருங்கிணைந்த தளத்தை வழங்கி, அடிமட்ட அளவில் உள்ளடக்கிய வளர்ச்சியை வளர்க்கின்றன. மேற்கு வங்காளத்திலிருந்து வரும் கதைகள் இந்தத் தேசிய அளவிலான உத்வேகத்தை மேலும் வலுப்படுத்துகின்றன.

மதுசூதன்கதி வேளாண்மை கடன் சங்கம் அடிப்படை விவசாயக் கடன்களைத் தாண்டி ஒரு முழுமையான பல்நோக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமாக மாறியுள்ளது. இது கிசான் கடன் அட்டை மற்றும் சுயஉதவிக் குழுக் கடன்களை வழங்குகிறது; இஃப்கோ மற்றும் பென்பெட் தயாரிப்புகள் உட்பட உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளராகச் செயல்படுகிறது. இச்சங்கம் வாடகை சேவை மையம் கிராமப்புற குடிநீர்த் திட்டம், வேளாண் விளைபொருள் கொள்முதல் மையம் மற்றும் நுகர்வோர் பொருட்கள் அங்காடிகளையும் நடத்தி வருகிறது. பொருளாதார நடவடிக்கைகளுடன் நின்றுவிடாமல், மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்தல், மருத்துவ மையம், சிறுவர் பூங்கா மற்றும் சமூக மையத்தை நடத்துதல் ஆகியவற்றின் மூலம் சமூக நலனிலும் தீவிரமாகப் பங்களிக்கிறது. அதேபோல், "முரகடா கூட்டுறவு விவசாய மேம்பாட்டுச் சங்கம்" 45 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்டு, 2022-க்குள் 1,603 உறுப்பினர்களாக வளர்ந்துள்ளது. ஆரம்பத்தில் டெபாசிட் பெறாத கடன் சங்கமாகச் செயல்பட்ட இது, தற்போது டெபாசிட் வசதிகள் உட்பட விரிவான வங்கிச் சேவைகளை வழங்குகிறது. இச்சங்கம் உள்ளூர் விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் வாடகை சேவை மைய வசதிகளை வழங்குகிறது. பெரும்பாலும் வனப்பகுதிகளை உள்ளடக்கிய மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் வசிக்கும் பகுதியில், இது முதன்மையாக விவசாயம் சார்ந்த சமூகத்திற்குச் சேவை செய்கிறது. முன்னதாக ஒற்றைப் பயிர் சாகுபடியுடன் மட்டுப்படுத்தப்பட்டிருந்த உள்ளூர் விவசாயிகள், தற்போது கிசான் கடன் அட்டை, பயிர் காப்பீடு மற்றும் மலிவு விலை அறுவடை சேவைகள் மூலம் ஆண்டு முழுவதும் சாகுபடி செய்து பயனடைகின்றனர்.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள 'கோல்ட் எம்பிசிஎஸ் லிமிடெட்' அதன் விரிவான கிராமப்புற சேவைகளுக்காகத் தனித்து நிற்கிறது. இது பயிர்க்கடன், காப்பீடு, பிரதமரின் சூரிய மின்சக்தித் இல்லத் திட்டம் தொடர்பான உதவிகளை வழங்குவதுடன், பொதுச் சேவை மையமாகவும் செயல்படுகிறது. இச்சங்கத்தின் பொதுச் சேவை மையம் 2023-24 நிதியாண்டில் 641 பரிவர்த்தனைகளை முடித்தது; 2024-25-ம் நிதியாண்டில் (2024 நவம்பர் 11 வரை) 1,852 பரிவர்த்தனைகளைப் பதிவு செய்துள்ளது, இது அதன் வளர்ந்து வரும் தேவையையும் பயனுள்ள தன்மையையும் பிரதிபலிக்கிறது. கடந்த ஆறு மாதங்களில், பொதுச் சேவை மையம் மூலம் ₹9.16 லட்சம் மதிப்பிலான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன - இது மக்களுக்கு பான் கார்டு எடுத்தல், காப்பீடு மற்றும் கட்டணங்களைச் செலுத்துவதில் உதவுகிறது. அதேபோல், கிஷ்த்வாரில் (ஜம்மு-காஷ்மீர்) உள்ள அதோலி பல்நோக்கு கூட்டுறவுச் சங்கம் உள்ளூர் சமூகத்தின் வாழ்வாதாரமாகச் செயல்படுகிறது. மாதிரி துணை விதிகளின் கீழ் இயங்கும் இச்சங்கம், மக்கள் மருந்தக மையத்தை நடத்துவதுடன், பொதுச் சேவை மையச் சேவைகளையும், அங்கன்வாடி மையங்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களையும் வழங்குகிறது. 2024-25 நிதியாண்டில் அதன் வணிக விற்றுமுதல் ரூ.18.66 லட்சமாக இருந்தது, இது சமூகத்தில் அதன் வளர்ந்து வரும் வணிக வெற்றி மற்றும் செல்வாக்கைக் காட்டுகிறது.

இந்தியாவின் கூட்டுறவு சீர்திருத்தங்கள் தேசிய அளவிலும் வடிவம் பெற்றுள்ளன. கூட்டுறவுச் சங்கங்களுக்குச் சந்தை வாய்ப்பு, நற்பெயர் மற்றும் ஏற்றுமதித் திறனை வழங்குவதற்காக 2023-ஆம் ஆண்டில் மாநிலங்களுக்கு இடையிலான மூன்று கூட்டுறவு அமைப்புகள் உருவாக்கப்பட்டன:

  • தேசிய கூட்டுறவு ஏற்றுமதி நிறுவனம் (என்சிஇஎல்)
  • தேசிய கூட்டுறவு இயற்கை வேளாண் பொருட்கள் நிறுவனம் (என்சிஓஎல்)
  • பாரதிய விதைத் கூட்டுறவு சங்கம் (பிபிஎஸ்எஸ்எல்)

2025 மார்ச் 31 நிலவரப்படி, கூட்டு ஏற்றுமதியை எளிதாக்குவதற்காக 8,863 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளை என்சிஇஎல் தன்னுடன் இணைத்துள்ளது. மேலும், அரிசி, கோதுமை, மக்காச்சோளம், சர்க்கரை, வெங்காயம் மற்றும் சீரகம் உள்ளிட்ட சுமார் 13.08 எல்எம்டி  அளவிலான வேளாண் பொருட்களை 5,239.5 கோடி ரூபாய் மதிப்பில் 27 நாடுகளுக்கு என்சிஇஎல் வெற்றிகரமாக ஏற்றுமதி செய்துள்ளது. அதே வேளையில், 5,185 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் என்சிஓஎல்-இல் உறுப்பினர்களாக இணைந்துள்ளன. என்சிஓஎல் நிறுவனம் 'பாரத் ஆர்கானிக்ஸ் பிராண்ட்'  கீழ் சுமார் 167.1 லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 மாநிலங்களில் உள்ள முதன்மை முகமைகளுடன் என்சிஓஎல் புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுள்ளது. மற்றொருபுறம், 19,171 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் பிபிஎஸ்எஸ்எல்-இல் உறுப்பினர்களாக இணைந்துள்ளன. 13 மாநிலங்களில் விதைப் உரிமத்தை பிபிஎஸ்எஸ்எல் பெற்றுள்ளது.

இந்த மாற்றத்தை மேலும் துரிதப்படுத்தும் வகையில், 2025 ஜூலை 24 அன்று அமைச்சகம் புதிய தேசிய கூட்டுறவுக் கொள்கையை வெளியிட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களை அனைவரையும் உள்ளடக்கியதாக மாற்றுவது, அவற்றை நிபுணத்துவத்துடன் நிர்வகிப்பது, எதிர்காலத்திற்குத் தயார் செய்வது மற்றும் குறிப்பாக கிராமப்புற இந்தியாவில் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளையும் வாழ்வாதார வாய்ப்புகளையும் உருவாக்குவதே இந்த தேசிய கூட்டுறவுக் கொள்கையின் நோக்கமாகும். இந்தப் புதிய கூட்டுறவுக் கொள்கையானது, 2025-45 வரையிலான அடுத்த இரண்டு தசாப்தங்களில் இந்தியாவின் கூட்டுறவு இயக்கத்தில் ஒரு மைல்கல்லாக அமையும்.

இந்தப் புதிய கொள்கையானது "கூட்டுறவு மூலம் செழிப்பு" என்ற தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கான செயல் திட்டத்தை வகுப்பதுடன், 2047-க்குள் "தற்சார்பு இந்தியா" மற்றும் "வளர்ச்சியடைந்த இந்தியா" என்ற இந்தியாவின் கூட்டு லட்சியத்திற்குப் பங்களிக்கும்.

மேலும், ஐக்கிய நாடுகள் சபையினால் அறிவிக்கப்பட்ட 2025-ஆம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஆண்டின் (ஐஓய்சி) ஒரு பகுதியாக, இந்தியக் கூட்டுறவுச் சங்கங்களை உலக அரங்கில் நிலைநிறுத்துவதற்காகக் கூட்டுறவு அமைச்சகம் ஒரு விரிவான தேசிய செயல் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அமுல், இஃப்கோ மற்றும் கிரிப்கோ போன்ற இந்தியாவின் வெற்றிகரமான கூட்டுறவு மாதிரிகளை சர்வதேசக் கண்காட்சிகள், சிறந்த நடைமுறைகளின் ஆவணப்படுத்துதல் மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாக வெளிப்படுத்துவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்துகிறது. கூட்டுறவு ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், கூட்டுறவு அமைப்புகளுக்குள் புத்தொழில்களை (Startups) ஆதரிக்கவும் மற்றும் நாடுகளுக்கு இடையேயான கற்றலை எளிதாக்கவும் அரசு பணியாற்றி வருகிறது. இந்தியாவின் அடிமட்ட வலிமை மற்றும் பரந்த உறுப்பினர் தளத்தைப் பயன்படுத்தி, கூட்டுறவு கண்டுபிடிப்புகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியாவின் சில மிக வெற்றிகரமான கூட்டுறவுச் சங்கங்களும் அவற்றின் குறிப்பிடத்தக்க சில சாதனைகளும்:

  • அமுல் (AMUL - GCMMF) -   பால் வளத்துறையில் செயல்படும் இச்சங்கம்,     இந்தியாவின் மிகப்பெரிய பால் வளம் சார்ந்த கூட்டுறவுச் சங்கமைகும். இது, இந்தியாவை உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளராக மாற்ற உதவிய "வெண்மைப் புரட்சியில்" முக்கியப் பங்கு வகித்தது; இதன் விற்றுமுதல் 7.3 பில்லியன் டாலருக்கும் அதிகம்.
  • இஃப்கோ - உரத் துறை கூட்டுறவு நிறுவனமான இது, இந்தியாவின் மிகப்பெரிய உரக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் தனிநபர் ஜிடிபி அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கூட்டுறவுச் சங்கமாகும்; 2023-ம் நிதியாண்டில் 7.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயுடன், ஃபார்டியூன் இந்தியா 500 (Fortune India 500) பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
  • கர்நாடகா பால் கூட்டமைப்பு (நந்தினி)    - பால் வளத்துறை சார்ந்த நிறுவனமான இது,   இந்தியாவின் இரண்டாவது பெரிய பால் வளம் சார்ந்த கூட்டுறவுச் சங்கமாகும். கர்நாடகா முழுவதும் 15 பால் கூட்டுறவு ஒன்றியங்களுடன் செயல்பட்டு, தொடக்க பால் கூட்டுறவுச் சங்கங்களிலிருந்து பாலைக் கொள்முதல் செய்கிறது; நகர்ப்புற மற்றும் கிராமப்புறச் சந்தைகளுக்குச் சேவை செய்வதன் மூலம் 1,500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயனடைகின்றனர்.
  • இந்தியன் காபி ஹவுஸ் சொசைட்டி -     நுகர்வோர்/உணவகங்கள் தொடர்பான இச்சங்கம்,    பணியாளர் கூட்டுறவுச் சங்கங்களின் கட்டமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது; சுமார் 400 காபி விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது.
  • ஊராளுங்கல் தொழிலாளர் ஒப்பந்தக் கூட்டுறவுச் சங்கம் -    தொழிலாளர் கூட்டுறவுச் சங்கமான இது,     இந்தியாவின் பழமையான தொழிலாளர் கூட்டுறவுச் சங்கமாகும். சுமார் 1,415 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சங்கம், இதுவரை 7,500-க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக முடித்துள்ளது.

இந்தியாவின் கூட்டுறவுத் துறை வளர்ச்சி என்பது இனி ஒரு வெறும் கருத்தியல் அல்ல - அது ஒரு வலுவான, அடிமட்ட அளவிலான புரட்சியாகும். கூட்டுறவுச் சங்கங்கள் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதுடன் மட்டுமல்லாமல், அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக ரீதியான வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதையும் மறுசீரமைக்கின்றன. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மக்கள் இயக்கமாகத் தொடங்கியது, இப்போது இந்தியாவின் சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான திறவுகோலாக மாறியிருக்கிறது.

****

PLM/VK/KR

 

(Features ID: 158078) आगंतुक पटल : 23
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी