Culture & Tourism
லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கர்
போராளி, சீர்திருத்தவாதி, ராஜமாதா
Posted On:
31 MAY 2025 5:32PM
லோகமாதா தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் 300-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, மே 31, 2025 அன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி போபாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மேலும், இத்தினத்தையொட்டி, அவரது நினைவு அஞ்சல் தலையையும், சிறப்பு நாணயம் ஒன்றையும் மத்திய அரசு வெளியிட்டது. ரூ.300 மதிப்பிலான நாணயத்தில், அஹில்யாபாய் ஹோல்கரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. பழங்குடியினர், நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகளில் சிறப்பாக பங்களிப்பை வழங்கிய பெண் கலைஞர் ஒருவருக்கு தேசிய அளவிலான தேவி அஹில்யாபாய் விருதும் வழங்கப்பட்டது.

2024 செப்டம்பர் 20 அன்று, 'புண்யாஷ்லோக் அஹில்யாதேவி ஹோல்கர் மகளிர் புத்தொழில் திட்டம்' என்ற திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், மகாராஷ்டிரா மாநிலத்தில் பெண்களால் நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தொடக்ககால ஆதரவு வழங்கப்படுவதுடன், இத்திட்டத்தின் கீழ் ரூ 25 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மொத்த நிதியுதவியில் 25%, மத்திய அரசால் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
அஹில்யாபாய் ஹோல்கரின் வாழ்க்கை வரலாறு

ராஜமாதா அஹில்யாபாய் ஹோல்கர், மால்வா சாம்ராஜ்ஜியத்தின் ஹோல்கர் ராணி ஆவார். அவர் இந்தியாவின் மிகவும் தொலைநோக்குப் பார்வை கொண்ட பெண் ஆட்சியாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 18-ம் நூற்றாண்டில், மால்வாவின் மகாராணியாக, அவர் தர்ம சிந்தனையைப் பரப்புவதிலும், தொழில்மயமாக்கல் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்காற்றியுள்ளார். அவர் தனது ஞானம், துணிச்சல் மற்றும் நிர்வாகத் திறன்களுக்காகப் பரவலாக அறியப்படுகிறார்.
1725-ம் ஆண்டு மே 31-ம் தேதி, மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள ஜாம்கேட் தாலுக்கா பகுதியில் அமைந்துள்ள சோண்டி என்ற கிராமத்தில் பிறந்த அஹில்யா, மிகவும் எளிய குடும்பப் பின்னணியைக் கொண்டவர். அவரது தந்தை மங்கோஜி ராவ் ஷிண்டே கிராமத் தலைவராக இருந்தார். மேலும் அவர் அஹில்யாவுக்கு எழுதவும், படிக்கவும் கற்றுக் கொடுத்தார். சிறுமியாக இருந்தபோதே, அஹில்யாவின் எளிமையும், மன உறுதியும், மால்வா பகுதியின் பிரபுவான மல்ஹர் ராவ் ஹோல்கரின் கவனத்தை ஈர்த்தன. இளம் அஹில்யாவின் மீது மிகுந்த ஈர்ப்பு கொண்ட அவர், 1733-ம் ஆண்டில் தனது மகன் கண்டேராவ் ஹோல்கருக்கு அவரைத் திருமணம் செய்து வைத்தார்.
திருமணமாகி பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கும்ஹேர் கோட்டை முற்றுகையின் போது, அவரது கணவர் கண்டேராவ் மறைந்தார். மிகுந்த துயரத்தில் மூழ்கிய அஹில்யாபாய், சதி எனப்படும் உடன்கட்டை ஏறுவதற்கு முடிவு செய்தார். அவரது மாமனாரான மல்ஹர் ராவ், அவரது இத்தகைய தீவிரமான முடிவைத் தடுத்து நிறுத்தினார். மாறாக, அவர் அஹில்யாவைத் தன் பாதுகாப்பில் வைத்துக் கொண்டு, இராணுவ மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் பயிற்சி அளித்தார்.
அவரது மாமனார் மல்ஹர் ராவ் 1766-ம் ஆண்டில் காலமானார். அவரது மறைவிற்குப் பின் ஓராண்டு கழித்து, தனது மகன் மாலே ராவையும் இழந்தார். மகனை இழந்த துயரம் தன்னை ஆட்கொள்வதற்கு அவர் அனுமதிக்கவில்லை. அரசு மற்றும் குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மால்வாவின் ஆட்சிப் பொறுப்பேற்பதற்கு தன்னை அனுமதிக்குமாறு பேஷ்வாவிடம் அவர் முறையிட்டார். சில பிரபுக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இராணுவம் அவருக்கு ஆதரவளித்தது. அவர் இராணுவ மற்றும் நிர்வாக நடைமுறைகளை நன்கு அறிந்து கொண்டு முறைப்படி பயிற்சி பெற்றிருந்ததால், இராணுவத்தினர் அவர் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தனர். பல்வேறு தருணங்களில், அவர் இராணுவத்தை முன்னின்று வழிநடத்தி, ஒரு உண்மையான வீராங்கனையைப் போலப் போரிட்ட அனுபவத்தைக் கொண்டிருந்தார். 1767-ம் ஆண்டில், மால்வாவின் ஆட்சிப் பொறுப்பேற்க பேஷ்வா அஹில்யாபாய்க்கு அனுமதி வழங்கினார். அவர் 1767 டிசம்பர் 11 அன்று அரியணை ஏறி இந்தூரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அவரது ஆட்சியும், நிர்வாகமும்
1754-ம் ஆண்டில் நடைபெற்ற கும்ஹேர் போரின்போது, தனது கணவரின் மறைவிற்குப் பிறகு, அஹில்யாபாய் மால்வாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பின்னர், 1792-ம் ஆண்டில் வலிமையான ஹோல்கர் படைக்கு அடித்தளம் அமைத்து, தனது ஆட்சி காலத்தில், வில் வித்தையில் மிகவும் அஞ்சப்பட்ட வீரர்களில் ஒருவரானார்.
மகாராணி அஹில்யாபாய் மால்வாவை நீதியுடனும், ஞானத்துடனும், அறிவுடனும் ஆட்சி செய்தார். அஹில்யாபாயின் ஆட்சியின் கீழ், மால்வா ஒப்பீட்டளவில் அமைதி, வளம் மற்றும் ஸ்திரத்தன்மை கொண்ட ராஜ்ஜியமாக இருந்தது. மேலும், மால்வாவின் தலைநகரான மகேஷ்வர், இலக்கியம், இசை, கலை மற்றும் தொழில்துறை முயற்சிகளுக்கான ஒரு சோலைவனமாக உருவெடுத்தது. கவிஞர்கள், கலைஞர்கள், சிற்பிகள் மற்றும் அறிஞர்களின் படைப்புக்கள் மீது பெரும் மதிப்பு கொண்டிருந்ததால், அவர்கள் அஹில்யாபாய் ஆட்சி காலத்தில் சிறப்பாக வரவேற்கப்பட்டனர்.
சாமானிய மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவிடும் வகையில், அவர் தினமும் பொதுக்கூட்டங்களை நடத்தினார். அவர் ஒரு திறமையான ஆட்சியாளராக மட்டுமின்றி, நாட்டின் குடிமக்களுக்கு ஒரு பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் இருந்து தனது திறமையை உலகிற்கு நிரூபித்தார். அவரது சாம்ராஜ்ஜியம் இந்தூரையும் கடந்து விரிந்திருந்தது. மேலும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கருணையையும், தொலைநோக்குப் பார்வையையும் பிரதிபலிப்பதாக இருந்தன.
நாட்டைக் கட்டமைப்பதில் பங்களிக்கும் விதமாக, அஹில்யாபாய் மகேஷ்வர் நகரில் ஒரு ஜவுளித் தொழிற்சாலையை நிறுவினார். அது தற்போது, அதன் மகேஷ்வரி புடவைகளுக்கு மிகவும் பிரபலமான பகுதியாக பெயர் பெற்றது. அவர் தனது கவனத்தை பல்வேறு தொண்டுப் பணிகளின் மீதும் திசை திருப்பினார். அவை நாட்டின் வடக்குப் பகுதியில், கோயில்கள், படித்துறைகள், கிணறுகள், குளங்கள் மற்றும் ஓய்விடங்கள் கட்டுவது முதல், தெற்கில் புனித யாத்திரைத் தலங்கள் அமைப்பது வரை பறந்து விரிந்திருந்தன. 1780-ம் ஆண்டில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலைப் புதுப்பித்துச் சீரமைத்தது அவரது மிக முக்கியமான பங்களிப்பாகும். அவரது இந்த நடவடிக்கையை அங்கீகரிக்கும் விதமாக, காசி விஸ்வநாதர் கோயிலில், தேவி அஹில்யாபாய் ஹோல்கரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள பழைய (ஜுனா) சோமநாதர் கோயிலைக் கட்டிய பெருமையும், தேவி அஹில்யாபாயையே சாரும். சுவாரஸ்யமாக, இந்தக் கோயில் அஹில்யாபாய் கோயில் என்றே பிரபலமாக அறியப்படுகிறது. இந்தக் கோயில் அண்மையில் புனரமைக்கப்பட்டு, 2021 ஆகஸ்ட் 20 அன்று பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.
மதம் மற்றும் கொடை ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் இரண்டு உட்பட ஏராளமான கோயில்களைக் கட்டினார். அவரது கொடைப் பண்பு அவரது நாட்டின் எல்லைக்கு அப்பால், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் விரிந்திருந்தது. மதிப்பிற்குரிய வரலாற்றாசிரியர்கள் தங்கள் நூல்களில் அவரைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.
அஹில்யாபாய் இந்தியா முழுவதும் சாலைகள் மற்றும் ஓய்வு இல்லங்கள் அமைக்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், ஹரித்வார், காசி, சோமநாத், ராமேஸ்வரம் போன்ற புனித யாத்திரைத் தலங்களில் உள்ள கோயில்களைப் புனரமைத்தார். இருப்பினும், அவரது தொலைநோக்குப் பார்வை, மதத்தையும் கடந்து விரிந்திருந்தது. அவர் விவசாயிகளின் மேம்பாட்டிற்கு ஆதரவு அளித்ததுடன், வர்த்தகத்தை விரிவுபடுத்தினார். கல்வியின் மகத்துவத்தைப் புரிந்துகொண்டு, அவர் பல்வேறு குருகுலங்களையும், பள்ளிகளையும் நிறுவினார். அக்காலத்திற்கு ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக, அவர் ஒரு மகளிர் படையை உருவாக்கி, அவர்களுக்குப் போர்முறை, தற்காப்புக் கலை மற்றும் நிர்வாகப் பாதுகாப்பு ஆகியவற்றில் பயிற்சி அளித்தார். இந்தப் படை, மாநிலப் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் போன்ற திட்டங்களின் அடையாளமாகத் திகழ்கிறது.
அவர் மகாராஷ்டிராவில் பிறந்திருந்தாலும், அவரது வாழ்நாள் பணிகள் இந்தூர், மகேஷ்வர் மற்றும் பல்வேறு பிராந்தியங்களில் பரவியிருந்தன. மகேஷ்வரின் படித்துறைகளும், நர்மதை ஆற்றின் அலைகளும், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியமும் அவரது குறிப்பிடத்தக்க மரபு சார்ந்த பெருமைகளைத் தொடர்ந்து போற்றும் வகையில் அமைந்துள்ளன. அவர் ஒரு சக்திவாய்ந்த, செல்வாக்கு மிக்க பெண்மணியாக திகழ்ந்து, இந்தூர் கிராமத்தை தற்போது அற்புதமான நகரமாக வெற்றிகரமாக மாற்றியவர்.
அஹில்யாபாய் ஹோல்கரின் மரபு
‘தத்துவஞானியாக' திகழும் ராணி என்று பிரபலமாக அறியப்பட்ட அவர், ஆகஸ்ட் 13, 1795 அன்று தனது எழுபதாவது வயதில் காலமானார். அவரது மரபு இன்றும் நிலைத்திருக்கிறது. மேலும், அவரால் மேற்கொள்ளப்பட்டு வந்த பல்வேறு கோயில்கள் கட்டுமானம், தர்மசாலைகள் அமைத்தல் மற்றும் பொதுப் பணிகள் அனைத்தும், அவர் எத்தகைய மாபெரும் வீராங்கனை என்பதற்குச் சான்றாக திகழ்கின்றன. அஹில்யாபாயின் மரபு, அவர் எழுப்பியுள்ள கோட்டைகள் மூலமாகவும், அவர் முன்னெடுத்த சீர்திருத்தங்கள் மற்றும் விழுமியங்கள் மூலமாகவும் மேலும் நிலைத்திருக்கிறது. அவரது வாழ்க்கை, சமூகத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறது. விஸ்வநாதர் கோயில் அழிக்கப்பட்டபோது, அஹில்யாபாய் ஹோல்கர் அதை மீண்டும் கட்டி எழுப்பினார் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
***
PKV/SV/PD
(Features ID: 158077)
आगंतुक पटल : 12
Provide suggestions / comments