Technology
ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைகள் இந்தியாவின் பசுமை மாற்றத்திற்கு வலுசேர்க்கின்றன
2070 -ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜியம் என்ற இலக்குடன் கூடிய குறைந்த செலவிலான நிலைத்தன்மை
Posted On:
16 SEP 2025 10:05AM
முக்கிய அம்சங்கள்
• சூரிய மின் சக்தி, காற்று மற்றும் அது சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, மூலதனச் செலவுகள் குறைந்துள்ளன.
• 2005 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கு இடையே, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) உமிழ்வு அடர்த்தி 36 சதவீதமாக குறைந்துள்ளது. இது, வளர்ச்சிக்கும், உமிழ்வுகளுக்கும் இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது.
• பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் (சிஇடிபி) சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
• மக்கும் பைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதால், விலை குறைந்த, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளிலிருந்து மாறுவதற்கான நிலை அதிகரித்து, அதன் பயன்பாடு குறைவதற்கான நடைமுறைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.
• பேருந்துகள் (10-க்கும் அதிகமான இருக்கைகள் கொண்டவை) மற்றும் வர்த்தக சரக்கு வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக, வாகனப் போக்குவரத்து நவீனமயமாக்கப்படுவதுடன், உமிழ்வுகள் குறைக்கப்படும். மேலும் இதன் காரணமாக, பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பங்கள், கழிவு மேலாண்மை சேவைகள், மக்கும் பொருட்கள், பசுமைப் போக்குவரத்து ஆகியவற்றின் மீதான வரி விகிதங்களை அதிகாரப்பூர்வமாகக் குறைக்கும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீரமைப்பின் மூலம், நிலைத்தன்மை மற்றும் பருவநிலை நடவடிக்கைக்கான இந்தியாவின் அர்ப்பணிப்புணர்வு வலுப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய தலைமையின் கீழ், இந்தச் சீர்திருத்த நடவடிக்கைகள், தூய்மையான எரிசக்தியைப் பயன்படுத்துவதை விரைவுபடுத்தவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த உற்பத்தியை ஊக்குவிக்கவும், கழிவு சுத்திகரிப்பு உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும், நீடித்த போக்குவரத்துத் தீர்வுகளை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
வளர்ச்சியடைந்த இந்தியா 2047, மற்றும் லைஃப் இயக்கம் போன்ற தேசிய அளவிலான முன் முயற்சிகளுடன் இணைந்து, இத்தகைய சீர்திருத்த நடவடிக்கைகள் இந்தியாவின் நிகர பூஜ்ஜியம் 2070 என்ற இலக்கை அடைவதற்கு வலு சேர்க்கின்றன. மேலும், பசுமை எரிசக்தி மாற்றத்திற்கான நடவடிக்கைகள் நுகர்வோர் மற்றும் தொழில்துறையினருக்கு குறைந்த விலையில், எளிதில் கிடைக்கக்கூடிய எரிசக்தியாக மாற்றுவதன் மூலம், பாரிஸ் ஒப்பந்தத்திற்கான இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டிற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.
நவம்பர் 2021-ம் ஆண்டில் நடைபெற்ற ஐநா அவையின் பருவநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு குறித்த உடன்படிக்கையின் 26-வது உறுப்பு நாடுகளின் மாநாட்டில், 2070-ம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய நிலையை எட்ட வேண்டும் என்ற தனது இலக்கை இந்தியா அறிவித்தது. இந்த உத்தி நான்கு தூண்களை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவின் குறைந்தபட்ச வரலாற்று பூர்வ உமிழ்வுகள், அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகள், குறைந்த கார்பன் பயன்பாட்டை பின்பற்றுதல் மற்றும் பருவநிலை மீள்திறனை உருவாக்குதல்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பருவநிலை உத்தி
சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்தி சாதனங்கள் [ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கபட்டுள்ளது]
இதில்,
o சூரிய மின்சக்தி அடுப்புகள்
o உயிரி-எரிவாயு ஆலை
o சூரிய சக்தி அடிப்படையிலான சாதனங்கள்
o சூரிய மின் உற்பத்தி சாதனம்
o காற்றாலைகள், காற்றால் இயக்கப்படும் மின்சார ஜெனரேட்டர் (டபிள்யுஓஇஜி)
o கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்யும் ஆலைகள் / சாதனங்கள்
o சூரிய சக்தி விளக்கு / சூரிய மின்விளக்கு
o பெருங்கடல் அலைகள் / பேரலையிலிருந்து மின் உற்பத்தி செய்யும் சாதனங்கள் / ஆலைகள்
o ஒளிமின்னழுத்த செல்கள், அவை தொகுதிகளாக இணைக்கப்பட்டிருந்தாலும் அல்லது பேனல்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும் ஆகியவை அடங்கும்.
மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், அதிக செயல்திறன் கொண்ட சோலார் பிவி தொகுதிகளுக்காக ரூ 24,000 கோடி நிதி ஒதுக்கீட்டில், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. உயர் செயல்திறன் கொண்ட சூரிய சக்தித் தகடுகளை உற்பத்தி செய்ய, இந்தியாவில் பெரிய அளவிலான தொழிற்சாலைகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். இது தூய்மை எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கும், இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையைக் குறைப்பதற்கும், மேலும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதற்கும் உதவிடும்.
ஜிஎஸ்டி குறைப்பு, சூரிய சக்தி தகடுகள், பிவி செல்கள், காற்றாலைகள் மற்றும் அது தொடர்பான சாதனங்களின் மூலதனச் செலவுகளை நேரடியாகக் குறைக்கும்.
இந்த வரி விகிதக் குறைப்பு, சூரிய மற்றும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டங்களின் சாத்தியக்கூறுகளை மேம்படுத்தி, இறுதி நுகர்வோருக்கான கட்டணங்களைக் குறைக்கும்.
ஜிஎஸ்டி குறைப்புகள், உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகைத் திட்டங்களின் கீழ், இந்தியாவின் சூரிய மின்கலம் மற்றும் தொகுதி உற்பத்திச் சூழல் கட்டமைப்பை ஆதரிப்பதன் மூலம் உள்நாட்டு உற்பத்தியை வலுப்படுத்துவதுடன், மேலும் இறக்குமதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் பொருட்களை அதிக போட்டித்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு உதவிடும்.
இது சூரிய சக்தியில் இயங்கும் நீர் இறைப்பான்களை (பம்புகளை) மலிவு விலையில் கிடைப்பதற்கு உதவுவதுடன், நீர்ப்பாசனச் செலவுகளைக் குறைத்து, விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும்.
இந்தியாவில், நிறுவப்பட்டுள்ள சூரிய எரிசக்தி உற்பத்தித் திறன், 2014-ம் ஆண்டில் 2.82 ஜிகாவாட்டிலிருந்து [4] 2025 ஜூலை 31 - ம் தேதி நிலவரப்படி 119.54 ஜிகாவாட்டாக [5] 42 மடங்கிற்கும் கூடுதலாக அதிகரித்துள்ளது. இந்தியா, பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்திலிருந்து, பொருளாதார வளர்ச்சியைப் படிப்படியாகப் பிரித்து வருகிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வெளியேற்ற அடர்த்தி 2005 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கு இடையே 36 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.
ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் (ஜிடிபி) மொத்த பசுமைக் குடில் வாயு (ஜிஎச்ஜி) வெளியேற்றத்தைப் பிரிப்பதன் மூலம், வெளியேற்ற அடர்த்தி கணக்கிடப்படுகிறது.
கழிவு மேலாண்மை மற்றும் மாசு கட்டுப்பாடு
கழிவுநீர் சுத்திகரிப்பு (சிஇடிபி) [ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5% சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது]
பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தால் வழங்கப்படும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 12 சதவீதத்திலிருந்து 5% சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகள் மீதான வரிகளைக் குறைப்பது, மையப்படுத்தப்பட்ட கழிவு சுத்திகரிப்பு முறைகளைப் பயன்படுத்தும் தொழில்களை ஊக்குவிக்கும். இதன் விளைவாக, மாசு இல்லாத சூழல் உருவாகி, தொழிற்சாலைகள் நிறைந்துள்ளப் பகுதிகளில், நீடித்த வளர்ச்சிக்கு உதவிடும்.
கழிவுகளை நிர்வகிப்பதற்கான தூய்மை எரிசக்தி தீர்வுகளைச் செயல்படுத்துவதில், இது மாநகராட்சிகளுக்கு உதவிடும்.
இந்த ஜிஎஸ்டி வரிக் குறைப்பு நடவடிக்கைகள், கழிவுகளைப் பிரித்தல், ஆலை செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு போன்ற துறைகளில் பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
ஆகஸ்ட் 4, 2025 -ம் தேதி நிலவரப்படி, இந்தியா முழுவதும் மொத்தம் 222 பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் (சிஇடிபி) இயங்கி வருகின்றன. அவற்றில் 53 பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், பல்வேறு மாநிலங்களில் அமைந்துள்ள பூஜ்ஜிய திரவ வெளியேற்றத்தை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. [7]
பிளாஸ்டிக் பொருளுக்கு மாற்று & மக்கும் தன்மை கொண்ட பொருட்கள்
மக்கும் தன்மை கொண்ட பைகள் மீதான ஜிஎஸ்டி வரிக் குறைப்பு (18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக)
மக்கும் தன்மை கொண்ட பைகள் மீதான ஜிஎஸ்டி வரிவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், அவை மலிவு விலையில் கிடைக்கின்றன. இது நுகர்வோரையும், சில்லறை விற்பனையாளர்களையும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிலிருந்து விலகிச் செல்ல ஊக்குவிப்பதுடன், பிளாஸ்டிக் மாசுபாட்டைக் குறைக்கவும் உதவுகிறது.
இது, 2022-ம் ஆண்டின் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகளை இந்தியா பின்பற்றுவதை ஆதரிப்பதுடன், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையையும் வலுப்படுத்துகிறது.
இது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீட்டை ஊக்குவிப்பதுடன், உயிரி-பாலிமர், ஸ்டார்ச் அடிப்படையிலான மற்றும் மக்கும் பொருட்களின் விரிவாக்கத்திற்கும் வழிவகுக்கும்.
மக்கும் தன்மை கொண்ட பைகளை விரைவாகப் பயன்படுத்துவது, ஆறுகள், மண் மற்றும் கடல் சூழல்களில் பிளாஸ்டிக் பொருட்களின் கசிவை வெகுவாகக் குறைக்கும்.
மக்கும் பை உற்பத்தியாளர்களில் பலர் சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அல்லது புத்தொழில் நிறுவனங்களாக இருப்பதால், குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி விகிதம் அவர்களின் சந்தை வாய்ப்புக்களை எளிதாக்கி, அவற்றிற்கான தேவையை அதிகரிக்கிறது.

பசுமைப் போக்குவரத்து மற்றும் நீடித்த போக்குவரத்து
பேருந்துகள் (10-க்கும் அதிகமான இருக்கை வசதி கொண்டது) [ஜிஎஸ்டி விகிதம் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது]
குறைக்கப்பட்ட வரி விகிதம், பேருந்துகள் மற்றும் சிறிய ரகப் பேருந்துகளின் (10-க்கும் அதிகமான இருக்கை வசதி கொண்டது) தொடக்ககால செலவுகளைக் குறைக்கும்.
இது வாகனக் குழும இயக்குநர்கள், பெருநிறுவனங்கள், பள்ளிகள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் மாநிலப் போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து அதற்கான தேவையை அதிகரிக்க உதவிடும்.
தனியார் வாகனங்களிலிருந்து பகிரப்பட்ட / பொதுப் போக்குவரத்துப் பயன்பாட்டை ஊக்குவித்து, போக்குவரத்து நெரிசலையும், மாசுபாட்டையும் குறைக்கும்.
இது வாகனக் குழும விரிவாக்கம் மற்றும் நவீனமயமாக்கலையும் ஊக்குவித்து, பழைய பேருந்துகளின் பயன்பாட்டைக் குறைக்கும்.
வர்த்தக சரக்குப் போக்குவரத்து வாகனங்கள் (லாரிகள், சரக்கு விநியோக வேன்கள் போன்றவை) [ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது]
இந்தியாவின் விநியோகச் சங்கிலியின் முதுகெலும்பாக திகழும் லாரிகள், 65%-70% சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்கின்றன.
ஜிஎஸ்டி குறைப்பு, வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையும் நவீனமயமாக்குவதையும் ஊக்குவிக்கும். இதன் மூலம், பழைய வாகனங்கள் படிப்படியாக பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டு, மாசுபாடு மற்றும் புகை வெளியேற்றம் குறையும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கழிவு மேலாண்மை, மக்கும் தன்மை கொண்ட பொருட்கள் மற்றும் பசுமைப் போக்குவரத்து ஆகியவற்றை மலிவானதாகவும், எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் மாற்றுவதன் மூலம், இந்தியாவின் பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கான முக்கிய உந்துசக்தியாக இந்த ஜிஎஸ்டி சீரமைப்பு அமைந்துள்ளது. செலவுகளைக் குறைப்பதன் மூலமும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலமும், நிலையான தொழில்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமும், இந்த மாற்றங்கள் தூய்மை எரிசக்தி மற்றும் மாசுபாட்டுக் கட்டுப்பாடுகளுக்கானத் தீர்வுகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளை விரைவுபடுத்தும். இதன் மூலம், பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் உறுதிமொழிகளை இது வலுப்படுத்துவதுடன், தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கான அடித்தளத்தையும் அமைக்கிறது.
***
PKV/SV/PD
(Features ID: 158076)
आगंतुक पटल : 18
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English